The glory of Bhishma! | Shanti-Parva-Section-50 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 50)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரின் அருகாமையை அடைந்து அவரைச் சுற்றி அமர்ந்து கொண்ட கிருஷ்ணன், யுதிஷ்டிரன் மற்றும் பிறர்; பீஷ்மரைப் புகழ்ந்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ராமரின் {பரசுராமரின்} சாதனைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், ஆச்சரியத்தால் நிறைந்து, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்},(1) "ஓ! விருஷ்ணி குலத்தோனே, கோபத்தில் க்ஷத்திரயர்களிடம் இருந்து பூமியை விடுவித்த உயர் ஆன்ம ராமரின் {பரசுராமரின்} ஆற்றல் சக்ரனுக்கே {இந்திரனுக்கே} இணையானது.(2) க்ஷத்திரிய குலக்கொழுந்துகள், ராமர் {பரசுராமர்} மீது கொண்ட அச்சத்தால், பசுக்கள், பெருங்கடல், சிறுத்தை புலிகள் கரடிகள், குரங்குகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டனர் (மறைக்கப்பட்டு வளர்த்து வரப்பட்டனர்).(3) ஒரு பிராமணரால் அறச்சாதனை நிறைவேறும்போது, இவ்வுலகில் வசித்த மனிதர்கள் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவர்களாவர்" என்றான்.(4) இந்த உரையாடல் முடிந்த போது, மங்கா மகிமை கொண்ட கிருஷ்ணன் மற்றும் யுதிஷ்டிரன் ஆகிய அந்தச் சிறப்புமிக்க மனிதர்கள், பலமிக்கக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(5)
பிறகு அவர்கள், கதிர்களால் மறைக்கப்பட்ட மாலை சூரியனின் காந்திக்கு ஒப்பாகக் கணைப்படுக்கையில் நீண்டு கிடக்கும் பீஷ்மரைக் கண்டனர்.(6) நூறு வேள்விகளைச் செய்த சொர்க்கத்தின் தேவனை {இந்திரனைப்} போல அந்தக் குருவீரர் தவசிகள் பலரால் சூழப்பட்டிருந்தார். ஓகவதி ஆற்றின் கரையில் அமைந்திருந்ததான அவர் {பீஷ்மர்} கிடந்த இடம் மிகப் புனிதமானதாக இருந்தது.(7) தொலைவிலேயே அவரைக் கண்ட கிருஷ்ணன், தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, நான்கு பாண்டவர்கள் மற்றும் சரத்வான் {கிருபர்} தலைமையிலான பிறர் ஆகியோர் தங்கள் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி, குழப்பமான தங்கள் மனங்களை ஒன்றுதிரட்டி, தங்கள் புலன்களை அனைத்தையும் குவித்துக் கொண்டு அந்தப் பெரும் முனிவர்களை அணுகினர்.(8,9) கோவிந்தன் {கிருஷ்ணன்}, சாத்யகி மற்றும் பிறர், வியாசரின் தலைமையிலான அந்த முனிவர்களில் முதன்மையானோரை வணங்கிவிட்டு, கங்கையின் மைந்தரை அணுகினர்.(10)
மனிதர்களில் முதன்மையானோரான அந்த யது மற்றும் குரு இளவரசர்கள், பெரும் தவத்தகுதி கொண்ட கங்கையின் மைந்தரைக் கண்டு, அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(11) அணைந்து போகும் நெருப்பாகத் தெரிந்த பீஷ்மரைக் கண்ட கேசவன் {கிருஷ்ணன்}, உற்சாகமற்ற இதயத்துடன் பின்வருமாறு அவரிடம் பேசினான்.(12) கேசவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "உமது உள்ளுணர்வுகள் முன்பு போல இப்போது தெளிவாக இருக்கின்றனவா? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, உமது புத்தி மயங்காதிருக்கிறது என்று நான் நம்புகிறேன்.(13) கணைகளால் பீடிக்கப்பட்ட காயங்களில் இருந்து எழும் வலி உம்மைத் துன்புறுத்தவில்லை என நான் நம்புகிறேன். மனத்துயரால் உடல் பலவீனமடைகிறது.(14) ஓ! பலமிக்க வீரரே, அறவோரான உமது தந்தை சந்தனு உமக்களித்த வரத்தின் விளைவால், மரணமானது உமது விருப்பதைச் சார்ந்தே இருக்கிறது. நீர் அடைந்திருக்கும் இந்த வரத்தின் விளைவால் உண்டாகும் தகுதியை நான் அடையவில்லை.(15)
(உள்செலுத்தப்படும்) மிக நுண்ணிய ஊசி உடலுக்கு வலியை உண்டாக்கும். ஓ! மன்னா {பீஷ்மரே}, அவ்வாறிருக்கையில், நூற்றுக்கணக்கான கணைகளால் துளைக்கப்பட்டிருக்கும் உம்மிடம்என்ன கேட்க முடியும்?(16) வலி உம்மைப் பீடித்திருக்கிறது எனச் சொல்லமுடியாது என்பது நிச்சயம். ஓ! பாரதரே {பீஷ்மரே}, உயிரினங்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றைக் குறித்துத் தேவர்களுக்கே போதிக்க நீர் தகுந்தவர்.(17) பெரும் ஞானம் கொண்ட உமக்கு, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவை குறித்த அனைத்தும் உமக்கு நன்றாகத் தெரியும்.(18) ஓ! பெரும் ஞானியே, அறம் மற்றும் கடை ஆகியவற்றின் பெருங்கடலான நீ, படைக்கப்பட்ட உயிரினங்களின் அழிவு, அறவோருக்கான வெகுமதி ஆகியவற்றையும் நன்கறிவீர்.(19) நலமிக்க அங்கங்கள் மற்றும் முற்றான உடல் நலத்துடனும், பெருகும் அரசின் இன்பத்தில் நீர் வாழ்ந்த போது, பெண் தோழிகளால் சூழப்பட்டிருந்தாலும், பெண் உறவை நீர் மறுத்ததை நான் கண்டேன்.(20)
பெரும் சக்தியும், அறத்தில் உறுதியான அர்ப்பணிப்பும், வீரமும், அறத்தையே தமது தொடர்செயலாகக் கொண்டவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மரைத் தவிர, கணைகளின் படுக்கையில் கிடக்கும் மரணத் தருவாயிலும், தனது தவசக்தியின் மூலமாக மரணத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்கொண்ட வேறு எந்த மனிதனையும் மூவுலகிலும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(21,22) உண்மை, தவம், கொடை, வேள்விகள், ஆயுத அறிவியல், வேதங்கள், பாதுகாப்பு வேண்டுவோரைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இவ்வளவு அர்ப்பணிப்புடனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமலும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் ஈடுபாட்டுடனும் கூடிய உம்மைப்போன்ற பெரிய தேர்வீரர் எவரையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(23,24) தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களை ஒரே தேரில் சென்று அடக்கக்கூடியவர் நீர் என்பதில் ஐயமில்லை.(25)
ஓ! வலிய கரங்களைக் கொண்ட பீஷ்மரே, உம்மை ஒன்பதாவது வசு என்றே பிராமணர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எனினும், உமது நற்பண்புகளால் அவர்கள் அனைவரையும் விஞ்சி நிற்கும் நீர், வாசவனுக்கே இணையானவராவீர்.(26) ஓ! மனிதர்களில் சிறந்தவரே, ஓ! உயிரினங்களில் முதன்மையானவரே, உமது ஆற்றலுக்காகத் தேவர்களாலும் கூடக் கொண்டாடப்படுபவர் நீர் என்பதை நான் அறிவேன்.(27) ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் உள்ள மனிதர்களுக்கு மத்தியில், உம்மைப் போன்ற இத்தகு பண்புகளைக் கொண்ட வேறு எவரையும் நாங்கள் பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை.(28) ஓ! அரசவகையைச் சேர்ந்தவரே ஒவ்வொரு பண்பையும் பொறுத்தவரையில் நீர் தேவர்களையும் விஞ்சி நிற்கிறீர். உமது தவச் சக்தியின் மூலம் உம்மால் அசையும் மற்றும் அசையாத உயிரினங்களை உண்டாக்க முடியும். அவ்வாறிருக்கையில், உமது முதன்மையான நற்பண்புகளால் அருள் உலகங்கள் பலவற்றை நீர் அடைந்திருப்பதைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?(29) தமது உறவினர்களைக் கொன்றதால் உண்டான கவலையில் எரிந்து கொண்டிருக்கும் பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} துயரத்தை இப்போது அகற்றுவீராக.(30)
நால்வகையினரைப் பொறுத்தவரையில் அறிவிக்கப்பட்டிருக்கும் கடமைகள் அனைத்தையும், நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்தும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(31) ஓ! பாரதரே நால்வகை அறிவுக்கிளைகளில், நான்கு ஹோத்திரங்களில் அறிவிக்கப்பட்டவை அனைத்தும், யோகம் மற்றும் சாங்கிய தத்துவங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்திய கடமைகள்,(32) ஓ! பாரதரே {பீஷ்மரே}, ஓ! கங்கையின் மைந்தரே, நான்கு வகையினரின் கடமைகளையும், அறிவிக்கப்பட்டிருக்கும் அவர்களது நடைமுறைகளுக்குப் பொருந்தாத கடமைகளையும், அதனதன் விளக்கங்களோடு அறிந்தவர் நீர்.(33) நால் வகையினரின் கலப்பில் உதித்தவர்களுக்காக விதிக்கப்பட்ட கடமைகளையும், குறிப்பிட்ட நாடுகள், குலங்கள், குடும்பங்கள் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட, வேதங்களாலும், ஞானிகளாலும் அறிவிக்கப்பட்ட கடமைகள் யாவற்றையும் நன்கறிந்தவர் நீர்.(34) வரலாறுகளையும், புராணங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர் நீர். கடமை மற்றும் நடைமுறைகள் குறித்த சாத்திரங்கள் அனைத்தும் உமது மனத்திலேயே வசிக்கின்றன.(35) ஓ! மனிதர்களில் காளையே, உலகில் கற்கப்படும் அறிவைப் பொறுத்தவரையில் எழும் ஐயங்களை அகற்றக் கூடியவர் உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை.(36) ஓ! மனிதர்களின் இளவரசரே {பீஷ்மரே}, பாண்டு மகன் {யுதிஷ்டிரன்} உணரும் துயரை, உமது நுண்ணறிவின் உதவியைக் கொண்டு விரட்டுவீர். பெரியவையும், பலதரப்பட்டவையுமான இத்தகு அறிவைக் கொண்டோர், திகைப்படைந்த மனங்களைக் கொண்ட மனிதர்களைத் தேற்றுவதற்காகவே வாழ்கிறார்கள்" என்றான் {கிருஷ்ணன்}"[1].(37)
[1] Sacred Text வலைத்தளம், கங்குலியின் புத்தகம், மன்மதநாததத்தரின் புத்தகம் ஆகியவற்றில் பகுதி 34-50 வரை அத்தியாய எண்களில் முரண் இருக்கிறது. 51ல் அவை அனைத்தும் சீரடைகிறது. எனவே, பகுதி 34ல் இருந்து இந்த 50வது பகுதிவரை அத்தியாய எண்களில் மாற்றம் செய்து சீர்படுத்தியிருக்கிறேன். இப்போது நமது தளத்தில் இருக்கும் அத்தியாய எண்களே சரியானவையாக இருக்கும்.
சாந்திபர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |