Dispel the clouded learning of the King! | Shanti-Parva-Section-51 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 51)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைத் துதித்த பீஷ்மர்; பீஷ்மரின் துதிகளை ஏற்று, அவரைப் புகழ்ந்து, மன்னன் யுதிஷ்டிரனின் அறிவு மயக்கத்தை விலக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், தன் சிரத்தை சற்றே உயர்த்தி, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(1)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தெய்வீகக் கிருஷ்ணா, உனக்கு வணக்கம். உலகங்கள் அனைத்தின் தொடக்கமும், முடிவும் நீயே. படைப்பாளன் நீயே, அழிப்பவனும் நீயே. ஓ! ரிஷிகேசா, எவராலும் வெல்லப்பட இயலாதவன் நீயே.(2) இந்த அண்டம் உன் கைத்திறனே. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்டம் எழுந்த பொருளும் நீயே. உன்னை வணங்குகிறேன். படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் முடிவு நீயே. ஐம்பூதங்களையும் விஞ்சியவன் நீயே.(3) மூவுலகங்களே ஆனவனும், மூவுலகங்களுக்கும் மேம்பட்டவனுமான உன்னை நான் வணங்குகிறேன். ஓ! யோகினிகளின் தலைவனே, அனைத்திற்கும் புகலிடமாக இருக்கும் உனக்கு என் வணக்கம்.(4) ஓ! உயிரினங்களில் முதன்மையானவனே, என்னைக் குறித்து நீ சொன்ன வார்த்தைகள், மூவுலகங்களில் வெளிப்படும் உன் தெய்வீகப் பண்புகளைக் காண இயன்றவனாக என்னை ஆக்கியிருக்கின்றன. ஓ! கோவிந்தா, (அந்தக்கருணையின் விளைவால்), நான் உன் அழிவற்ற வடிவத்தைக் காண்கிறேன்.(5,6)
அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே. உன் தலை ஆகாயத்தில் இருக்கிறது, உன் பாதங்கள் பூமியில் இருக்கின்றன.(7) திசைப்புள்ளிகள் உன்னிரு கரங்களாக இருக்கின்றன, சூரியன் உன் கண்களாகவும், சக்ரன் {சுக்ரன்} உன் ஆற்றலாகவும் இருக்கிறான். ஓ! மங்கா மகிமை கொண்டவனே, காயாம்பூவின் வண்ணத்திற்கு ஒப்பான மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்திய உன் மேனி, மின்னலின் கீற்றுகளால் சக்தியூட்டப்பட்ட ஒரு மேகத்தைப் போல எங்களுக்குத் தெரிகிறது. ஓ! தேவர்களில் சிறந்தவனே, ஓ! தாமரைக் கண்ணனே, உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், உனது பாதுகாப்பை நாடுபவனும், அருள்நிறைந்த முடிவை அடைய விரும்புபவனும், எளியவனுமான எனக்கு நன்மையை நினைப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.(8,9)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மர்}, "ஓ! மனிதர்களில் காளையே, ஓ!இளவரசரே {பீஷ்மரே}, நீர் என்னிடம் கொண்ட அர்ப்பணிப்பு {பக்தி} மிகப் பெரியதாக இருப்பதால், நான் என் தெய்வீக வடிவை உமக்கு வெளிப்படுத்தினேன்.(10) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, ஓ! பாரதரே, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொள்ளாதவனிடமோ, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா இல்லாதவனிடமோ நான் என்னை வெளிப்படுத்துவதில்லை.(11) நீர் என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், எப்போதும் அறம் நோற்பவராகவும் இருக்கிறீர். தூய இதயம் கொண்ட நீர் எப்போதும் தற்கட்டுப்பாடு கொண்டவராகவும், தவங்களையும், தானங்களையும் நோற்பவராகவும் இருக்கிறீர்.(12) ஓ! பீஷ்மரே, உமது சொந்த தவங்களின் மூலமே நீர் என்னைக் காணத் தகுந்தவரானீர். ஓ! மன்னா, திரும்பி வராத {மறுபிறவியை ஏற்படுத்தாத} உலகங்கள் உமக்காகக் காத்திருக்கின்றன.(13) ஓ! குருக்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, நீர் உயிர் வாழ இன்னும் ஐம்பத்தாறு {56} நாட்கள்[1] இருக்கின்றன.(14) நெருப்பின் வடிவிலான தேவர்கள் மற்றும் வசுக்கள் அனைவரும், சூரியன் வட பாதையில் நுழையும் காலம் வரை {கண்களுக்குப்} புலனாகாத நிலையில் உமக்காகக் காத்திருக்கின்றனர்.(15)
[1] கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் ஐம்பத்தாறு நாட்கள் என்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் வேறு வகையில் இருக்கிறது. அது பின்வருமாறு, "உமது தவத்தால் திரும்பவும் ஸம்ஸாரத்திற்கு வரத்தகாத உத்தம உலகங்கள் உமது வரவை எதிர்பார்க்கின்றன. ஓ! குருஸ்ரேஷ்டரே, உமது ஜீவ காலம் இன்று முதல் இன்னும் முப்பது நாட்களிருக்கின்றன. அவை நூறு நாட்களுக்குச் சமமானவை. அதன்பின், இந்தச் சரீரத்தைவிட்டு நீர் உமது நற்கர்மங்களின் பயனை அடைந்து விளங்கப் போகிறீர்" என்றிருக்கிறது. மேலும் இது சம்பந்தமான அடிக்குறிப்பாக, "பீஷ்மர், தாம் படுத்தது முதல் ஐம்பத்தெட்டு நாளென்று சொல்லப்போகிறார். அவைகளில் இதுவரைசென்ற நாட்கள் இருபத்தெட்டு; விவரம் வருமாறு: பீஷ்மர் படுத்த பின்பு யுத்தம் நடந்த நாள் எட்டு; பிறகு துரியோதனன் இறந்த ஆசௌசதினம் பதினாறு; இருபத்தைந்தாவது நாள் ஸ்ராத்தம்; இருபத்தாறாவது நாள் பட்டணப்பரவேசம்; இருப்பத்தேழாவது தினம் பட்டாபிஷேகம்; இருபத்தொன்பதாவது நாள் பீஷ்மரிடம் வந்தது; அன்று முதல் மிச்சம் முப்பது நாள் என்றறிக" என்றிருக்கிறது.
ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, அண்டத்தின் காலத்திற்குக்கட்டுப்பட்டு, சூரியன் வடபாதைக்குத் திரும்பும்போது, இந்தப் பூமிக்கு எப்போதும் திரும்பிவராத அறிவுடையோரின் பகுதிகளுக்கு {ஞானிகளின் உலகங்களுக்கு} நீர் செல்வீர்.(16) ஓ! பீஷ்மரே, நீர் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது, இங்குள்ள ஞானங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இதன்காரணமாகவே, இந்த மனிதர்கள் யாவரும் கடமை மற்றும் அறநெறிகள் குறித்த உமது உரையைக் கேட்க உம்மை அணுகியிருக்கின்றனர்.(17) உண்மையில் உறுதியுடன் இருப்பவரும், தன் உறவினர்களைக் கொன்றதன் காரணமாக அறிவு மறைக்கப்பட்டவருமான யுதிஷ்டிரரிடம், அறம், பொருள் மற்றும் யோகம் குறித்த உண்மையான வார்த்தைகளைப் பேசி, அதன் காரணமாக அவரது துயரை விலக்குவீராக" என்றான் {கிருஷ்ணன்}.(18)
சாந்திபர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |