Slaughter is war virtue! | Shanti-Parva-Section-55 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 55)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் கொண்டாடிய பீஷ்மர்; உறவினர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்ததால் யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் பேச நாணுவதாகத் தெரிவித்த கிருஷ்ணன்; போரில் கொலையே அறமெனச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரை வணங்கிய யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் சக்தியுடன் கூடியவரும், குருக்களைத் திளைக்கச் செய்பவருமான அவர் (பீஷ்மர்), "கடமைகள் {தர்மங்கள்} குறித்து நான் உரையாடப் போகிறேன். ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அனைத்துப் பொருளின் நித்திய ஆன்மாவாக நீயே இருப்பதால், உன் அருளின் மூலம் என் பேச்சும், மனமும் உறுதியடைந்திருக்கின்றன.(1) அற ஆன்மாவான யுதிஷ்டிரன், அறநெறி மற்றும் கடமை குறித்து என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும். அதனால் நிறைவடைந்து கடமைகள் அனைத்தையும் குறித்து நான் பேசுவேன்.(2)
எவன் பிறப்பால் விருஷ்ணிகள் அனைவரும் மகிழ்ச்சியில் நிறைந்தனரோ அந்த நல்ல பேரான்மா கொண்ட அரச முனியான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(3) குருக்கள் அனைவரின் மத்தியிலும், நன்னடத்தைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும், பெரும் புகழைக் கொண்டோர் அனைவரின் மத்தியிலும் எவனுக்கு இணையில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(4) நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, பிரம்மச்சரியம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நீதி, மனோபலம் மற்றும் சக்தி ஆகியன எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(5)
உறவினர்கள், விருந்தினர்கள், பணியாட்கள், தன்னை நம்பியிருக்கும் பிறர் ஆகியோரிடம் எப்போதும் நல்ல செல்வாக்கு எவனிடம் உண்டோ அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(6) உண்மை, ஈகை, தவம், வீரம், அமைதி, புத்தி, அச்சமின்மை ஆகியவை எவனிடம் உண்டோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(7) இன்பத்திலுள்ள விருப்பம், ஆதாயம், அச்சம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஒரு போதும் எவன் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லையோ அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(8) உண்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அறிவு ஆகியவற்றிற்கும், விருந்தினர்களுக்கும் எப்போதும் எவன் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, நல்லோருக்கு எப்போதும் எவன் கொடையளிக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்.(9) வேள்விகள், வேத கல்வி, அறநெறி நடைமுறை, கடமை ஆகியவற்றில் எப்போதும் எவன் ஈடுபடுகிறானோ, எவன் எப்போதும் அமைதி நிறைந்தனவோ, எவன் புதிர்கள் {சாத்திரங்கள்} அனைத்தையும் கேட்டிருக்கிறானோ, அந்தப் பாண்டுவின் மகன் என்னிடம் கேள்விகளைக் கேட்கட்டும்" என்றார் {பீஷ்மர்}.(10)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "நீதிமானான மன்னர் யுதிஷ்டிரர், பெரும் வெட்கமடைந்தும், (உமது) சாபத்திற்கு அஞ்சியும், உம்மை அணுகத் துணியவில்லை.(11) ஓ! ஏகாதிபதி {பீஷ்மரே}, அந்தப் பூமியின் தலைவர் {யுதிஷ்டிரர்}, பெரும் படுகொலைகளை ஏற்படுத்திவிட்டதால், (உமது) சாபத்திற்கு அஞ்சி உம்மை அணுகத் துணியவில்லை.(12) தமது வழிபாட்டிற்கு உரியோரையும், தம்மிடம் அர்ப்பணிப்புமிக்கோரையும், தமது ஆசான்களையும், தமது உறவினர்கள், சொந்தங்களையும், உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தோரையும் தமது கணைகளால் துளைத்திருப்பதால், அவர் உம்மை அணுகத் துணியவில்லை" என்றான்.(13)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, பிராமணர்களுக்கு ஈகை, கல்வி, தவம் ஆகியவை கடமையானதைப் போலவே, க்ஷத்திரியர்களுக்குப் போரில் தங்கள் உடல்களைக் கைவிடுவது கடமையாகும்.(14) நீதியற்ற முறையில் போரில் ஈடுபடும் தந்தைமார், பாட்டன்மார், சகோதரர்கள், ஆசான்கள், உறவினர்கள், சொந்தங்கள் ஆகியோரை ஒரு க்ஷத்திரியன் கொல்லவே வேண்டும். இஃது அவர்களுக்கான அறிவிக்கப்பட்ட கடமையாகும்.(15) ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாவம் நிறைந்தவர்களும், பேராசை கொண்டவர்களும், கட்டுப்பாடுகள் மற்றும் நோன்புகளில் அலட்சியம் நிறைந்தவர்களும் போர் தொடுத்து வந்தால், அவர்கள் தன் ஆசான்களேயானாலும், அவர்களைப் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(16)
பேராசையினால் நித்திய அறவரம்புகளை அலட்சியம் செய்யும் எந்த மனிதனையும் போரில் கொல்லும் க்ஷத்திரியன், தன் கடமையை அறிந்தவன் என்றே சொல்லப்படுகிறான்.(17) கொல்லப்பட்ட போர்வீரர்களின் தலை முடிகளையே புற்களாகவும், யானைகளைப் பாறைகளாகவும், கொடிமரங்களையே கரைகளின் மரங்களாகவும் கொண்ட குருதித் தடாகத்தைப் போரில் பூமியில் உண்டாக்கும் க்ஷத்திரியன் தன் கடமையை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(18) நியாயமான போர் சொர்க்கத்துக்கும், பூமியில் புகழுக்கும் வழிவகுக்கும் என மனு சொல்வதால், போருக்கு அறைகூவி அழைக்கப்படும் ஒரு க்ஷத்திரியன், எப்போதும் போரில் ஈடுபடவே வேண்டும்" என்றார் {பீஷ்மர்}".(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீஷ்மர் இவ்வாறு பேசியதும், தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும்பணிவுடன் அந்தக் குரு வீரரை அணுகி, அவரது பார்வைக்கெதிரில் நின்றான்.(20) அவன் பீஷ்மரின் பாதத்தைப் பற்றினான். அவர் பாசமிகு வார்த்தைகளால் அவனைப் பதிலுக்குத் திளைக்கச் செய்தார். பீஷ்மர் யுதிஷ்டிரனை உச்சிமுகர்ந்து அவனை அமரச் சொன்னார். பிறகு வில்லாளிகளில் முதன்மையான அந்தக் கங்கையின் மைந்தர், யுதிஷ்டிரனிடம், "ஓ! குருக்களில் சிறந்தவனே, அஞ்சாதே. ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, எந்தக் கவலையுமின்றி என்னிடம் கேள்வி கேட்பாயாக" என்றார்".(22)
சாந்திபர்வம் பகுதி – 55ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |