Bhishma began to disclose kingly duties! | Shanti-Parva-Section-56 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 56)
பதிவின் சுருக்கம் : ராஜநீதியை உரைக்குமாறு பீஷ்மரிடம் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; முயற்சி, விதி, உண்மைக்கு அர்ப்பணிப்பு, மென்மை மற்றும் கடும் நடத்தை ஆகியவற்றைச் சொல்லி, மனு, சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோர் பழங்காலத்தில் பாடிய சுலோகங்களைச் சொன்னது; ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும்; பணியாட்களிடம் நடந்து கொள்ளக்கூடாத முறை ஆகியவற்றைச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ரிஷிகேசனைப் {கிருஷ்ணனைப்} பணிந்து, பீஷ்மரை வணங்கி, அங்கே கூடியிருந்த பெரியோர் அனைவரிடமும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான் யுதிஷ்டிரன்.(1)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கடமை மற்றம் அறநெறி அறிந்த மனிதர்கள், அரச கடமைகளே கடமைகளின் உயர்ந்த அறிவியல் என்று சொல்கிறார்கள். அந்தக் கடமைகளின் சுமை மிகவும் கடிமானது என்று நானும் நினைக்கிறேன். எனவே, ஓ! மன்னா {பீஷ்மரே}, அந்தக் கடமைகளைக் குறித்து நீர் உரையாடுவீராக.(2) ஓ! பாட்டா, அரச கடமைகளைக் குறித்து விரிவாகப் பேசுவீராக. அரச கடமைகளைக் குறித்த அறிவியலே மொத்த உலக வாழ்வின் புகலிடமாகும்.(3) ஓ! குரு குலத்தவரே, அறம், பொருள், இன்பம் ஆகியவை அரச கடமைகளைச் சார்ந்தே இருக்கின்றன. முக்திக்கு வழிவகுக்கும் நடைமுறைகளும் அவற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(4)
குதிரைகளுக்குக் கடிவாளம் போலவும், யானைக்கு அங்குசத்தைப் போலவும், அரச கடமைகளின் அறிவியலானது {ராஜநீதி - அரசியல்} உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடிவாளமாகும்.(5) அரசமுனிகளால் நோற்கப்படும் கடமைகளில் ஒருவன் திகைப்படைந்தால், பூமியில் நிலையின்மை தோன்றி அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகும்.(6) சூரியன் உதித்து மங்கலமற்ற இருளை விலக்குவதைப் போல இந்த அறிவியல் {அரசியல்} உலகின் அனைத்து வகைத் தீய விளைவுகளையும் அழிக்கும்.(7) ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் நீரே முதன்மையானவர் என்பதால் என் பொருட்டு முதலில் அரச கடமைகளை உரைப்பீராக.(8) ஓ! எதிரிகளை எரிப்பவரே, நுண்ணறிவு கொண்டோர் அனைவரிலும் முதல்வராக உம்மையே வாசுதேவன் {கிருஷ்ணன்} கருதுகிறான். எனவே, நாங்கள் அனைவரும் உம்மிடம் இருந்து உயர்ந்த ஞானத்தை எதிர்பார்க்கிறோம்" என்றான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "உயர்ந்தவனான தர்மனையும் {தர்மத்தையும்}, பிரம்மத்தின் முழு வடிவமான கிருஷ்ணனையும், பிராமணர்களையும் வணங்கி (மனிதர்களின்) நித்திய கடமைகளை {அழிவில்ல நீதிகளைக்} குறித்து நான் உரையாடப் போகிறேன்.(10) ஓ! யுதிஷ்டிரா, துல்லியமான விபரங்களுடன் விளக்கப்படும் மொத்த அளவிலான அரச கடமைகளையும், மற்றும் நீ அறிய விரும்பும் பிற கடமைகளையும், குவிந்த கவனத்துடன் என்னிடமிருந்து கேட்பாயாக.(11) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, முதலிடத்தில், மன்னன் (தன் குடிமக்களை) நிறைவு செய்யும் விருப்பத்திலும், விதிக்கு எப்போதும் ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டு, தேவர்கள், பிராமணர்கள் ஆகியோரிடம் பணிவுடன் காத்திருக்க வேண்டும்.(12) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனே, தெய்வங்களையும், பிராமணர்களையும் மன்னன் வணங்குவதால், கடமை மற்றும் அறத்திற்குத் தான் பட்ட கடனைச் செலுத்தி, தன் குடிமக்களிடம் மதிப்பைப் பெறுகிறான்.(13) ஓ! மகனே, ஓ! யுதிஷ்டிரா, முயற்சி செய்ய {உழைப்பதற்கு} ஆயத்தமாகாமல் வெறும் விதி மட்டுமே மன்னர்களின் நோக்கங்களை நிறைவேற்றாது என்பதால், நீ எப்போதும் உழைப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.(14) முயற்சி, விதி ஆகிய இரண்டும் (தங்கள் செயலளவில்) இணையானவையே. முயற்சியோடு எது தொடங்கப்பட்டதோ, அதன் விளைவுகளின் மூலமே விதியானது உறுதி செய்யப்படுகிறது என்பதால், அவையிரண்டில் {முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டில்} முயற்சியையே நான் மேன்மையானதாகக் கருதுகிறேன்.(15)
தொடங்கப்பட்டது {ஏதோ ஒரு காரியம் தொடங்கப்பட்டு, அது} பேரழிவில் முடியுமென்றாலும் துயரில் ஈடுபடாதே. ஏனெனில், {அப்போதுதான்} நீ அதே காரியத்தை இரட்டிப்பு கவனத்துடன் முயற்சி செய்ய வேண்டும். இதுவே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும். (16) மன்னர்களின் வெற்றிக்கு உண்மையை {சத்தியத்தைப்} போல வேறெதுவும் பெருமளவில் பங்காற்றுவதில்லை. உண்மைக்கு அர்ப்பணிப்புள்ள மன்னன், இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையே கண்டடைகிறான்.(17) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, உண்மையே அவர்களது பெருஞ்செல்வமாகும். அதே போலவே, மன்னர்களைப் பொறுத்த வரையிலும், உண்மையைப் போல வேறெதுவும் அவர்களுக்குப் பெருமளவு நம்பிக்கையை ஊட்டாது.(18) அனைத்து சாதனைகளைக் கொண்டவனும், நன்னடத்தையுடன் கூடியவனும், தற்கட்டுப்பாடு, பணிவு, நேர்மை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், நற்பண்புகளைக் கொண்டவனும், தயாளனுமான ஒரு மன்னன் ஒருபோதும் தன் செழிப்பை இழப்பதில்லை.(19) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீதியை நிர்வகித்து, தன் பலவீனத்தை மறைப்பது, எதிரிகளின் பலவீனங்களை உறுதி செய்வது, தன் ஆலோசனைகளைக் கமுக்கமாக வைப்பது ஆகிய மூன்றையும் செய்து, நேரடியான வெளிப்படை நடத்தையோடு கூடிய மன்னன் செழிப்பை அடைகிறான்.(20)
மன்னன் மென்மையாக நடந்து கொண்டால் அனைவரும் அவனை அவமதிப்பார்கள். மறுபுறம் அவன் கடுமையாக இருந்தாலோ, அவனது குடிமக்கள் தொல்லைக்குள்ளாவார்கள். எனவே, நீ இரு வகை நடத்தைகளையும் கைக்கொள்வாயாக.(21) ஓ! முற்போக்காளர்களின் முதன்மையானவனே, ஓ! பாண்டுவின் மகனே, பூமியில் பிராமணனே முதன்மையானவன் என்பதால் பிராமணர்கள் ஒருபோதும் உன்னால் தண்டிக்கப்படக்கூடாது.(22) ஓ! மன்னர்களின் மன்னா, உயர் ஆன்ம மனு இரண்டு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! குருகுலத்தோனே, உன் கடமைகளைப் பொறுத்தவரையில் நீ அவற்றை உன் மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும்.(23) {அவ்விரண்டு சுலோகங்கள் [24 மற்றும் 25] பின்வருமாறு} "நெருப்பு நீரிலிருந்து உண்டானது, க்ஷத்திரியன் பிராமணனிலிருந்து உண்டானான், இரும்பு கல்லிலிருந்து உண்டானது. அம்மூன்றும் (நெருப்பு, க்ஷத்திரியன், இரும்பு என்ற மூன்றும்) தங்கள் பலத்தை அனைத்திலும் வெளிப்படுத்த முடியும். ஆனால் தங்கள் தங்கள் முன்னோரின் தொடர்பு அவற்றுக்கு ஏற்படும்போது, அவற்றின் சக்தி தணிவடைகிறது.(24) இரும்பானது கல்லைத் தாக்கும்போதோ, நெருப்பானது நீருடன் மோதும்போதோ, க்ஷத்திரியனொருவன் பிராமணனிடம் பகைமை பாராட்டும்போதோ அந்த மூன்றும் பலமிழக்கின்றன"[1].(25)
[1] மனு சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகளே கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கின்றன, "ஜலத்திலிருந்து அக்னியும், பிராம்மணனிடமிருந்து க்ஷத்திரியனும், கல்லிலிருந்து இரும்பும் உண்டானார்கள். அக்னி முதலிய இம்மூன்றுகளின் சக்தி எங்கும் செல்லத்தக்கதாயினும் தம் காரணங்களில் நாசமடையும். கல்லை அடிக்கச் சென்ற இரும்பும், ஜலத்தைக் கொளுத்தச் சென்ற அக்கினியும், பிராம்மணர்களை த்வேஷிக்க முயன்ற க்ஷத்திரியனும் அப்பொழுதே நாசமடைவார்கள்".
ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, பெரும் முனிவரான உசனஸ் {சுக்கிரன்}, பழங்காலத்தில் இரு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அவற்றைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக.(28) {அவ்விரண்டு சுலோகங்கள் [29 மற்றும் 30] பின்வருமாறு} "ஒரு பிராமணன், வேதங்களில் திறன்மிக்கவனாகவே இருப்பினும், உயர்த்திய ஆயுதத்துடன் அவன் போரிட வந்தால், தன் கடமைகளில் கவனமாக இருக்கும் நீதிமிக்க க்ஷத்திரியன் ஒருவன், அவனைத் தண்டிக்கவே வேண்டும்.(29) தண்டிப்பவனின் {மன்னனின்} கோபத்தை, தாக்குபவனின் {பிராமணனின்} கோபமே தீர்மானிக்கிறது என்பதால், கடமைகளை அறிந்தவனான க்ஷத்திரியன், மீறப்படும் நீதியை நிலைநிறுத்தும் அச்செயலால் பாவியாக மாட்டான்"[2].(30)
[2] சுக்கிரன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகளே கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கின்றன, "யுத்தத்தில் ஆயுதமெடுத்துத் தன்னை எதிர்த்து வரும் பிராம்மணன் வேதாந்தமறிந்தவனானாலும் தர்மத்தை விரும்பும் அரசன் அவனை ஆயுதத்தால் அடக்க வேண்டும். தர்மத்திற்குக்குக் குறைவுவராமல் பாதுகாக்கும் தர்மம் அறிந்த அரசன் அக்காரியத்தால் தர்மத்தைக் கெடுத்தவனாகமாட்டான். ஏனெனில், அந்தப் பிராம்மணன் கோபமே அரசனுடைய கோபத்தை உண்டுபண்ணுகிறது".
ஓ! மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டே பிராமணர்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றமிழைப்பவர்களானால், உன் ஆட்சிப்பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.(21) ஓ! மன்னா, தண்டனைக்குத் தகுந்தவர்களாகவே இருப்பினும், நீ அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். ஒரு பிராமணன், பிராமணக்கொலை செய்த குற்றவாளியானாலோ, தன் ஆசான் அல்லது மதிப்புக்குரிய பெரியோரின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனானாலோ, கருச்சிதைவுக்குக் காரணமானாலோ,(32) மன்னனுக்குத் துரோகமிழைத்தாலோ, அவனது தண்டனையானது உன் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருக்க வேண்டும். உடல்சார்ந்த தண்டனைகளேதும் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை.(33) பிராமணர்களிடம் மதிப்பு காட்டும் மனிதர்கள் (அரசு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு) உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும். பணியாட்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டுவதைக் காட்டிலும் மன்னர்களுக்குப் பெரும் மதிப்புமிக்கச் செல்வமேதும் இல்லை.(34)
சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வகை அரண்களில்[3], உண்மையில் குடிகளைக் கொண்ட அரணே (தொண்டாற்ற ஆயத்தமாக இருக்கும் அன்பு கொண்ட குடிமக்களைக் கொண்ட அரணே) கைப்பற்ற முடியாத அரணாகும்.(35) எனவே, அறிவுடைய மன்னன், நால்வகைக் குடிமக்களிடமும் எப்போதும் கருணை காட்ட வேண்டும். அற ஆன்மா கொண்டவனாகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவனாகவும் இருக்கும் மன்னன் தன் குடிமக்களை நிறைவு செய்வதில் வெல்கிறான்.(36) எனினும், ஓ! மகனே, சீற்றமில்லா யானை இழிந்ததாகக் கருதப் படுவதைப் போலவே மென்மையான மன்னனும் கருதப்படுகிறான் என்பதால், நீ எப்போதும் அனைவரிடமும் மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையோடு} நடந்து கொள்ளக்கூடாது.(37)
[3] இந்த ஆறு அரண்களும், "பூமி, நீர், பாலைவனம், காடு, மலை, மனிதர்கள்" என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
பிருஹஸ்பதி தொகுத்த சாத்திரங்களில், பழங்காலத்தில் இந்தக் காரியம் குறித்து ஒரு சுலோகம் பாடப்பட்டுள்ளது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(38) "ஒரு மன்னன் எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருப்பானானால், யானையோட்டும் பாகன் அதன் தலைமீது அமர்ந்து அந்த யானையை ஓட்டுவதைப் போலவே, மனிதர்களில் இழிந்தோரும் அவனை இணங்கச் செய்து மேலோங்குவார்கள்"[4].(39) எனவே ஒரு மன்னன் எப்போதும் மென்மையாக இருக்கக்கூடாது. அதேபோல அவன் எப்போதும் கடுமையாகவும் இருக்கக்கூடாது. அவன் அதிகக் குளிர்ச்சியும், வியர்வையை உண்டாக்கும் அதிக வெப்பமும் இல்லாத இளவேனில் சூரியனைப் போல இருக்க வேண்டும்.(40)
[4] பிருஹஸ்பதி சொன்னதாகச் சொல்லப்படும் இவ்வார்த்தைகளே கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கின்றன, "யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமையுள்ள அரசனை அவமதித்துத் தலையிலேற விரும்புவான்".
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, புலனுணர்வுகளின் நேரடி சாட்சிகள், கணிப்பு, ஒப்பீடுகள், சாத்திரங்களின் நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் நண்பர்களையும், எதிரிகளையும் பகுத்தறிய வேண்டும்.(41) ஓ! பெரும் முற்போக்காளனே, வியசனங்கள்[5] என்றழைக்கப்படும் தீய நடைமுறைகள் அனைத்தையும் நீ தவிர்க்க வேண்டும். அவற்றில் நீ ஒரு போதும் ஈடுபடலாகாது என்ற, தேவையேதும் இல்லை. இருப்பினும், நீ அவற்றில் பற்று கொள்ளாதிருப்பதே தேவையாகும்.(42) அந்த நடைமுறைகளில் பற்று கொண்டாரை அனைவரும் அடக்கி ஆள்வர். தன் மக்களிடம் அன்பேதும் பேணாத மன்னன் அவர்களைக் கவலையில் ஆழ்த்துவான்.(43)
[5] வ்யஸனங்கள் என்பன பதினெட்டு வகைப்படும் எனக் கும்பகோணம் பதிப்புச் சொல்கிறது, அவை பின்வருமாறு: "வேட்டை, சொக்கட்டான் {பகடை}, பகலிலுறக்கம், பிறரை நிந்தித்தல், பெண்மயக்கம், மதம், வீணான பாட்டு, கூத்து, வாத்தியங்கள், குடி இப்பத்தும் காமத்தாலுண்டாவன. தெரியாத குற்றத்தை வெளியிடுவது, குற்றமில்லாதவனைத் தண்டிப்பது, கபடமாகக் கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை, பிறர் குணங்களைத் தோஷமாகக் கூறுதல், பிறர் பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கொடுமையான தண்டம் இவ்வெட்டும் கோபத்தாலுண்டவன. இவைகளில் முதல் வகுப்பிலுள்ள குடி, சொக்கட்டான், பெண்மயக்கம், வேட்டை இந்நான்கும், இரண்டாவது வகுப்பில் பிறர்பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கடுமையான தண்டம் இம்மூன்றும் மிகக் கஷ்டமானவை. இவை மனுதர்மசாஸ்திரம் ஏழாவது அத்தியாயத்தில் நாற்பத்தைந்தாவது சுலோகமுதல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன" என்றிருக்கிறது.
ஒரு தாயானவள் தன் பிள்ளையைக் கருவில் தாங்குவதைப் போலவே, மன்னன் எப்போதும் தன் குடிமக்களைத் தாங்க வேண்டும். ஓ! ஏகாதிபதி, இஃது ஏன் விரும்பத்தக்கது என்பதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(44) ஒரு தாயானவள், தான் மிகவும் விரும்பும் பொருட்களை அலட்சியம் செய்து தன் பிள்ளையின் நன்மையை மட்டுமே நாடுவதைப் போல, மன்னர்களும் (தங்கள் குடிமக்களிடம்) நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.(45) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீதிமிக்க மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத் தனக்குப் பிடித்தமானவற்றைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.(46) ஓ! பாண்டுவின் மகனே, நீ ஒருபோதும் மனோவுறுதியைக் கைவிடக்கூடாது. மனோவுறுதி கொண்டவனும், தீங்கிழைப்பவர்களைத் தண்டனைகளால் பீடிப்பவனாக அறியப்படுபவனுமான ஒரு மன்னனுக்கு அச்சப்பட எந்தக் காரணமும் இருக்காது.(47)
ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, நீ உன் பணியாட்களிடம் கேலிப் பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. ஓ! மன்னர்களில் புலியே, அத்தகு நடத்தையின் பிழைகளைக் கேட்பாயாக.(48) தலைவன் பணியாட்களுடன் சாதாரணமாகக் கலந்திருந்தால், அவனை அவர்கள் அவமதிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் நிலையை மறந்து, உண்மையில் அந்தத் தலைவனை மீறிச் செயல்படுவார்கள்.(49) ஒன்றைச் செய்யப் பணிக்கப்பட்டால், அதைச் செய்யத் தயங்கி, தங்கள் தலைவனின் இரகசியங்களைப் பலரறியக் கூறுவார்கள்[6].(50) அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, தங்கள் தலைவனைவிடத் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். கையூட்டுகள் பெற்று, வஞ்சகம் பயின்று, அரசின் பணிக்குத் தடைசெய்யும் விதத்தில் அவர்கள் மன்னனை விட உயர்விடங்கொள்ளக்கூட முனைவார்கள்.(51)
[6] கும்பகோணம் பதிப்பில், "கட்டளையிட்டு அனுப்பினாலும் அக்காரியத்தில் ஸந்தேகப்படுவார்கள்; கேட்கத்தாகாத ரஹஸ்யத்தையும் கேட்பார்கள்; யாசிக்கத்தகாத வஸ்துவையும் யாசிப்பார்கள்; எஜமானன் புஜிக்கத்தக்க வஸ்துக்களைத் தின்பார்கள்" என்றிருக்கிறது.
பொய்கள் மற்றும் பொய்யாவணங்கள் மூலம் நிந்தித்து, அரசை அழிவடையச் செய்வார்கள்[7]. அரண்மனையின் பெண் பாதுகாவலர்களுடன் காதல் பழகி, தங்கள் தலைவனைப் போலவே உடைகளை உடுத்துவார்கள்.(52) ஓ மன்னர்களில் புலியே, ஏப்பம் மற்றும் அது போன்ற காரியங்களில் {கொட்டாவி போன்ற காரியங்களில்} வெட்கமில்லாமல் ஈடுபட்டு, தங்கள் தலைவன் முன்னிலையிலேயே காரி உமிழ்வார்கள். மேலும் அவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் வைத்து அவனை அலட்சியமாகப் பேசவும் அஞ்சமாட்டார்கள்.(53) மன்னன் மென்மையானவனாக நடந்து கொண்டு நையாண்டிப் பேச்சில் ஈடுபட்டால், அவனது பணியாட்கள் அவனை அலட்சியம் செய்து, மன்னர்களைப் போன்றே சிறந்த குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களைச் செலுத்துவார்கள்[8].(54) சபைகளில் திரளும் அவனது அமைச்சர்கள், "இஃது உமது சக்திக்கு மீறியது", "இது தீய முயற்சி" என்பது போன்ற பேச்சுகளில் வெளிப்படையாக ஈடுபடுவார்கள்.(55) மன்னன் கோபமடைந்தால் அவர்கள் சிரிப்பார்கள்; மேலும், வேறு பிற காரணங்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு {மன்னனால்} அளிக்கப்படும் ஆதரவில் மகிழமாட்டார்கள்.(56)
[7] கும்பகோணம் பதிப்பில், "அரசன் உத்தரவு போல் பொய்யான பத்திரிகைகளால் ராஜ்யத்தைப் பயனற்றதாகச் செய்துவிடுவார்கள்" என்றிருக்கிறது.[8] "மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தத் தகுந்த பொருட்கள் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்கள் தங்கள் தலைவனின் இரகசிய ஆலோசனைகளை வெளியிட்டு, மாறுபட்ட ஒலியுடன் {வேடிக்கையாக} அவனது தீய செயல்களைச் சொல்வார்கள். சிறு கவலையுமின்றி அவர்கள் மன்னனின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பார்கள்.(57) மன்னனின் நகைகளோ, உணவோ, அவனது குளியலுக்குத் தேவையானவையோ, நறுமணப் பொருட்களோ வரவில்லையென்றாலும், அவனது பணியாட்கள் அவனது முன்னிலையிலேயே சிறு கவலையும் அடையமாட்டார்கள்.(58) அவர்கள் தங்களுக்குச் சேரவேண்டியதை நியாயமாக எடுக்கமாட்டார்கள். மாறாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் நிறைவில்லாத அவர்கள் மன்னனின் உடைமைகளை எடுத்துக் கொள்வார்கள்.(59) அவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பறவையோடு விளையாடுவதைப்போல மன்னனுடன் விளையாட விரும்பி, மன்னன் தங்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அவர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருக்கிறான் என்று எப்போதும் மக்கள் புரிந்து கொள்ளுமாறு தங்களை வெளிப்படுத்துவார்கள்.(60) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் மென்மையானவனாக இருந்து, கேலி பேசிக் கொண்டிருந்தால், இவையும் இன்னும் பிற தீமைகளும் அஃதிலிருந்து எழும்" என்றார் {பீஷ்மர்}".(61)
சாந்திபர்வம் பகுதி – 56ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |