Discourse on morality! | Shanti-Parva-Section-54 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 54)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அறம் வினவும்படி யுதிஷ்டிரன் மற்றும் பிறரிடம் கேட்டுக் கொண்ட நாரதர்; கிருஷ்ணனே முதலில் கேட்க வேண்டும் என்று சொன்ன யுதிஷ்டிரன்; மன்னர்களுக்கு அறம்போதிக்கப் பீஷ்மரைக் கேட்டுக் கொண்ட கிருஷ்ணன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பெரும் தவசியே {வைசம்பாயனரே}, அற ஆன்மாவும், பெரும் சக்திகொண்டவரும், உண்மையை உறுதியுடன் பின்பற்றுபவரும், ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவரும், மங்காமகிமை கொண்டவரும், சந்தனு மற்றும் கங்கையின் மைந்தரும், தேவவிரதன், அல்லது பீஷ்மர் என்ற பெயரைக் கொண்டவருமான அந்த மனிதர்களில் புலி, தம்மைச் சுற்றி பாண்டு மகன்கள் அமர்ந்திருக்க, வீரர்களின் படுக்கையில் கிடந்தபோது, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு நேர்ந்த அந்த வீரர்களின் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1-3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, குருக்களின் தலைவரான பீஷ்மர், தமது கணைப்படுக்கையில் கிடந்தபோது, நாரதர் தலைமையிலான முனிவர்கள் மற்றும் சித்தர்கள் பலரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(4) (போரில் திரண்டு) கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், யுதிஷ்டிரனைத் தங்கள் தலைமையில் கொண்டவர்களுமான மன்னர்கள், திருதராஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகியோரும் அங்கே வந்தனர்.(5) ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலத் தெரிந்த பாரதர்களின் பாட்டனை {பீஷ்மரை} அணுகிய அந்த உயர் ஆன்ம மனிதர்கள், அவருக்காகப் புலம்பல்களின் ஈடுபட்டனர்.(6) அப்போது தேவ பண்புகளைக் கொண்ட நாரதர், சிறிது நேரம் சிந்தித்து, பாண்டவர்கள் அனைவரிடமும், கொல்லப்படாமல் எஞ்சியிருந்த மன்னர்களிடமும்,(7) "மறையும் நேரத்திலான சூரியனைப் போலக் கங்கையின் மைந்தர் மறையப் போவதால், நீங்கள் பீஷ்மரிடம் (அறம் மற்றும் அறநெறி தொடர்பான காரியங்களில்) கேள்வி கேட்பதற்கான நேரம் வந்துவிட்டதென நான் நினைக்கிறேன்.(8) அவர் {பீஷ்மர்} தன் உயிர் மூச்சை விடப்போகிறார். எனவே, நீங்கள் அனைவரும், உங்களிடம் உரையாடும்படி அவரிடம் வேண்டுங்கள். நால்வகைகளின் பல்வேறு கடமைகள் அனைத்தையும் அவர் அறிந்தவராவார்.(9) வயதால் முதிர்ந்த அவர், தமது உடலைக் கைவிட்டு உயர்ந்த அருள் உலகங்களை அடையப் போகிறார். எனவே, உங்கள் மனங்களில் இருக்கும் ஐயங்கள் தெளிவடையத் தாமதமில்லாமல் அவரை வேண்டுவீராக" என்றார்.(10)
நாரதரால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த இளவரசர்கள், பீஷ்மரை அணுகியும், அவரிடம் எதையும் கேட்க முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(11) அப்போது பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்}, "பாட்டனிடம் {பீஷ்மரிடம்} கேள்வி கேட்க தேவகியின் மகனை {கிருஷ்ணனைத்} தவிர வேறு எவனும் கிடையாது.(12) எனவே, ஓ! யது குலத்தில் முதன்மையானவனே, ஓ! மதுசூதனா, நீயே முதலில் கேட்பாயாக. ஓ! ஐயா, எங்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவனும், கடமைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தையும் அறிந்தவனும் ஆவாய்" என்றான்.(13) மங்கா மகிமை கொண்டவனும், சிறப்புமிக்கவனுமான கேசவன், பாண்டு மகனால் இவ்வாறு சொல்லப்பட்டு, வெல்லப்பட முடியாத பீஷ்மரை அணுகி, அவரிடம் பின்வருமாறு பேசினான்.(14)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, இரவை மகிழ்ச்சியாகக் கழித்தீரா? உமது புத்தி மயங்காதிருக்கிறதா? ஓ! பாவமற்றவரே, உள்ளொளியால் உமது அறிவு உம்மில் ஒளிவிடுகிறதா? உமது இதயம் இனியும் வலியை உணராது என்றும், உமது மனம் கலங்காது என்றும் நான் நம்புகிறேன்" என்றான்.(17)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே, எரிச்சல், திகைப்பு, களைப்பு, தளர்ச்சி, நோய் மற்றும் வலி ஆகிய அனைத்தும் ஒரே நாளில் உன் அருளால் என்னை விட்டு அகன்றுவிட்டன.(18) ஓ! ஒப்பற்ற காந்தியைக் கொண்டவனே, கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகிய அனைத்தையும் உள்ளங்கை {நெல்லிக்} கனியைப் போலத் தெளிவாகக் காண்கிறேன்.(19) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, வேதங்களில் அறிவிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும், வேதாந்தங்களில் விதிக்கப்பட்டிருப்பவை அனைத்தையும், நீ எனக்கு அருளிய வரத்தின் விளைவால் நான் தெளிவாகக் காண்கிறேன்.(20) கல்விமான்கள் மற்றும் அறவோர் அறிவித்திருக்கும் கடமைகள் என் நினைவில் வசிக்கின்றன. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குறிப்பிட்ட நாடுகள், குறிப்பிட்ட இனங்கள் மற்றும் குடும்பங்களில் நிலவும் கடமைகள் மற்றும் நடைமுறைகளையும் நான் அறிவேன்.(21) நால்வகை வாழ்வுமுறைகள் தொடர்பான அனைத்தும் என் நினைவுக்குத் திரும்பிவிட்டன. ஓ! கேசவா, ஆட்சித்திறம் தொடர்பான கடமைகளையும் நான் அறிவேன்.(22) ஓ! ஜனார்த்தனா, எந்தெந்த நேரங்களில் என்னென்ன சொல்லப்பட வேண்டும் என்பதை நான் சொல்வேன். உன் அருளால், மங்கலமான புத்தியை நான் அடைந்திருக்கிறேன்.(23) உன்னைத் தியானித்துப் பலமடைந்த நான், மீண்டும் இளைஞனாகிவிட்டதைப் போல உணர்கிறேன். ஓ! ஜனார்த்தனா, உன் ஆதரவினால், (உலகிற்கு) எது நன்மையானது என்பதைக் குறித்து உரையாடும் தகுதியை நான் அடைந்திருக்கிறேன்.(24) எனினும், ஓ! புனிதமானவனே, நன்மையான அனைத்தையும் பாண்டுவின் மகனுக்கு நீயே ஏன் உரைக்கவில்லை? இது குறித்து நீ என்ன விளக்கமளிக்கப் போகிறாய்? ஓ! மாதவா {கிருஷ்ணா}, எனக்கு விரைவாகச் சொல்வாயாக" என்றார்.(25)
வாசுதேவன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தவரே, புகழுக்கும், நன்மைக்கும் வழிகோலும் அனைத்துக்கும் நானே வேராவேன் என்பதை அறிவீராக. நல்லது, அல்லது யாவும் என்னிலிருந்தே உண்டாகின்றன.(26) நிலவு குளிர்ந்த கதிர்களைக் கொண்டது என்று சொன்னால் பூமியில் எவன் ஆச்சரியப்படுவான்? அதே போல, நானே புகழ் மொத்தமும் கொண்டவனெனச் சொல்லப்பட்டால் எவன் ஆச்சரியப்படப் போகிறான்?[1](27) எனினும், ஓ! பெரும் காந்தி கொண்டவரே, நான் உமது புகழை அதிகரிக்கத் தீர்மானித்திருக்கிறேன். ஓ! பீஷ்மரே, அதன் காரணமாகவே நான் உமக்குப் பெரும் நுண்ணறிவை வாய்க்கச் செய்திருக்கிறேன். ஓ! பூமியின் தலைவரே, இந்தப் பூமி நீடித்திருக்கும் வரையில், உமது புகழ் மங்கா ஒளியுடன் உலகங்கள் அனைத்திலும் பயணிக்கும்.(29) ஓ! பீஷ்மரே, உம்மை விசாரிக்கும் பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரரிடம்} நீர் சொல்லப் போகும் அனைத்தும், வேதங்களின் அறிவிப்புகளைப் போலத் தகுதி படைத்தவையாகப் பூமியில் கருதப்படப் போகின்றன.(30)
[1] "இங்கே சொல்லப்படும் பொருள் யாதெனில், புகழ் மொத்தமும் ஏற்கனவே கொண்டிருக்கும் நான் எதைச் செய்வதாலோ, சொல்வதாலோ எனக்கு என்ன புகழ் சேர்ந்துவிட முடியுமென்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உமது அறிவிப்புகளின்படி தன் நடத்தையை அமைத்துக் கொள்பவன், ஒவ்வொரு தகுதி வாய்ந்த செயலுக்குமான வெகுமதியை மறுமையில் பெறுவான்.(31) ஓ! பீஷ்மரே, பூமியில் உமது புகழ் மேன்மையடையும்பொருட்டே நான் உமக்குத் தெய்வீக அறிவைக் கொடுத்திருக்கிறேன்.(32) ஒரு மனிதனின் புகழ் இவ்வுலகில் நீடிக்கும்வரை, அவனது சாதனைகளும் வாழும் எனச் சொல்லப்படுகிறது.(33) (திரண்டு வந்த) மன்னர்களில் கொல்லப்படாமல் எஞ்சியோர், அறநெறி மற்றும் கடமை குறித்த உமது உரையாடலைக் கேட்கும் விருப்பத்தில் உம்மைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். ஓ! பாரதரே {பீஷ்மரே}, அவர்களிடம் பேசுவீராக.(34) நீர் வயதால் முதிர்ந்தவராக இருக்கிறீர். உமது நடத்தையும் சுருதிகளின் விதிகளுக்கு ஏற்புடைய வகையில் இருக்கிறது. மன்னர்களுக்கான கடமைகளையும், கடமை குறித்த வேறு பிற அறிவியல்களையும் நீர் நன்கறிந்திருக்கிறீர்.(35)
உமது பிறப்பிலிருந்தே, உம்மில் எந்த ஒரு சிறு மீறலையும் எவரும் கண்டதில்லை. அறநெறி மற்றும் கடமை குறித்த அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவர் நீர் என்பதை மன்னர்கள் யாவரும் அறிவார்கள்.(36) எனவே, ஓ! மன்னா, ஒரு தந்தை தன் மகன்களுக்குச் செய்வதைப் போல, உயர்ந்த அறநெறி குறித்து அவர்களிடம் உரையாடுவீராக. நீர் எப்போதும் முனிவர்களையும், தேவர்களையும் வழிபடுபவராவீர்.(37) அறநெறி மற்றும் கடமைகள் குறித்த உரையாடலைக் கேட்க விரும்பும் மனிதர்களுக்கு அக்காரியங்களை விரிவாக உரைப்பது உமது கடப்பாடாகும். ஒரு கல்விமான், குறிப்பாக நல்லோரால் வேண்டப்படும்போது அவை குறித்து அவர்களுக்கு உரைக்க வேண்டும். தவசிகள் இதை ஒரு கடமையாகவே அறிவித்திருக்கிறார்கள்.(38) ஓ! பலமிக்கவரே, நீர் இக்காரியங்களைக் குறித்துப் பேசவில்லையெனில் நீர் பாவமிழைத்தவராவீர். எனவே, ஓ! கல்விமானே, ஓ! பாரதர்களில் காளையே, (மனிதர்களின்) நித்திய கடமைகள் குறித்து உமது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளால் கேட்கப்பட்டு, அவை குறித்து அவர்களுக்கு நீர் உரைப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}".(39)
சாந்திபர்வம் பகுதி – 54ல் உள்ள சுலோகங்கள் : 39
ஆங்கிலத்தில் | In English |