Monday, December 25, 2017

பிரம்மனின் தண்டநீதி! - சாந்திபர்வம் பகுதி – 59அ

Brahma's science of chastisement! | Shanti-Parva-Section-59a | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 59)


பதிவின் சுருக்கம் : இரண்டாவது நாளாக பீஷ்மரிடம் போதனை கேட்கச் சென்ற பாண்டவர்களும், யாதவர்களும்; அரசன் என்ற சொல் உண்டானது எவ்வாறு, அரசனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது எனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அரசோ மன்னனோ அற்றிருந்த உலகில் மெல்ல அறம் வீழத் தொடங்கியது; அதை நிலைநிறுத்த தண்ட நீதியைத் தொகுத்த பிரம்மதேவன்; பிரம்மதேவன் தொகுத்த தண்டநீதியின் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் விவரித்த பீஷ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அடுத்த நாள் தங்கள் படுக்கையில் இருந்து எழுந்து, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி காலைச் சடங்குகளைச் செய்த பாண்டவர்களும், யாதவர்களும், கோட்டைகளுடன் கூடிய நகரங்களுக்கு ஒப்பான தங்கள் தேர்களில் ஏறி (பீஷ்மர் கிடந்த இடத்திற்குப்) புறப்பட்டுச் சென்றனர்.(1) குருவின் களத்திற்கு {குருக்ஷேத்திரத்திற்குச்} சென்று, பாவமற்ற பீஷ்மரை அணுகிய அவர்கள், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} இரவை மகிழ்ச்சியாகக் கழித்தாரா என்பதை விசாரித்தனர்.(2) முனிவர்கள் அனைவரையும் வணங்கி, பதிலுக்கு அவர்களால் ஆசி கூறப்பட்ட இளவரசர்கள், பீஷ்மரைச் சுற்றி அமர்ந்தனர்.(3) அப்போது பெரும் சக்தி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், முறையாகப் பீஷ்மரை வணங்கிய பிறகு, கூப்பிய கரங்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(4)


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா {பீஷ்மரே}, ஓ! பாரதரே, பூமியில் {தற்போது} பயன்படுத்துவதைப் போல ராஜன் என்ற சொல் எப்போதிருந்து உண்டானது? ஓ! எதிரிகளை எரிப்பவரே, இதை எனக்குச் சொல்வீராக.(5) பிறரைப் போலவே, கரங்கள், தோள்கள், கழுத்து, புத்தி, புலன்களைக் கொண்டவனும், பிறரைப் போலவே ஒரே வகை இன்ப துன்பங்களை அனுபவிப்பவனும், உலகில் உள்ள பிறரைப் போலவே முதுகு, வாய் மற்றும் வயிற்றைக் கொண்டவனும்,(6) பிறரைப் போலவே உயிர் நீர், எலும்புகள், மஜ்ஜை, சதை, குருதி ஆகியவற்றைக் கொண்டவனும், பிறரைப் போலவே மூச்சை உள்ளிழுத்து, வெளிவிடுபவனும், உயிர் மூச்சைக் கொண்டவனும், பிற மனிதர்களைப் போலவே உடல்களைக் கொண்டவனும்,(7) பிறப்பு, இறப்பு ஆகியவை ஒத்திருப்பவனும், உண்மையில் மனிதப் பண்புகள் அனைத்திலும் பிறருக்கு ஒப்பாகவும் இருக்கும் ஒரு {சாதாரண} மனிதனான மன்னன், என்ன காரணத்தினால், உலகில் பெரும் நுண்ணறிவும், துணிச்சலும் மிக்கப் பல மனிதர்களை ஆள்கிறான்?(8) துணிச்சல் மிக்கவர்களும், சக்தி மிக்கவர்களும், நன்னடத்தைக் கொண்ட உயர்குடி பிறப்பாளர்களும் நிறைந்த இந்தப் பரந்த உலகை ஒரு மனிதன் ஆள்வது எவ்வாறு? மனிதர்கள் அனைவரும் அவனது ஆதரவை அடைய முயல்வது ஏன்?(9) ஒரு மனிதன் மகிழ்ச்சியடைந்ததும், மொத்த உலகும் மகிழ்ச்சியடைவதும், ஒரு மனிதன் தொல்லைக்குட்பட்டால் மொத்த உலகும் தொல்லைக்குள்ளாவதும் ஏன்?(10) ஓ! பாரதக் குலத்தின் காளையே, நான் இதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இது குறித்து என்னுடன் முழுமையாக உரையாடுவீராக.(11) ஓ! மன்னா, தேவனைப் போல மொத்த உலகமும் ஒருவனை வணங்குவது காணப்படுவதால் இவை அனைத்திற்கும் முக்கியக் காரணம் இல்லாமல் இருக்காது" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(12)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னர்களில் புலியே, கிருத யுகத்தில் முதலில் அரசுரிமை தோன்றியது எவ்வாறு என்பதைக் குவிந்த கவனத்துடன் விரிவாகக் கேட்பாயாக.(13) முதலில் அரசுரிமையோ, மன்னனோ, தண்டனையோ, தண்டனை வழங்குபவனோ ஏதும், எவரும் கிடையாது. மனிதர்கள் அனைவரும் நீதியுடன் ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டனர்.(14) ஓ! பாரதா, இவ்வாறு ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொண்டு அவர்கள் வாழ்ந்து வரும் போது, (சில காலத்திற்குப் பிறகு) அந்தப் பணி வலிநிறைந்ததாக இருப்பதைக் கண்டனர். பிறகு அவர்களது இதயங்களைப் பிழைகள் பீடிக்கத் தொடங்கின.(15) ஓ! இளவரசே, பிழையால் பீடிக்கப்பட்ட மனிதர்களின் அறிவும் குழப்பமடைந்த பிறகு அறம் வீழத் தொடங்கியது.(16) ஓ! பாரதர்களின் தலைவா, அறிவு மங்கி, மனிதர்கள் பிழைக்கு ஆட்பட்ட போது, அவர்கள் அனைவரும் பேராசை கொண்டோராக மாறினர்.(17) தங்களிடம் இல்லாத பொருட்களை மனிதர்கள் அடைய விரும்பியதால், மற்றொரு ஆசையான காமம் அவர்களைப் பற்றியது.(18) அவர்கள் காம வசப்பட்டபோது கோபம் என்ற பெயர் கொண்ட மற்றொரு ஆசை விரைவில் அவர்களை வீழ்த்தியது. கோபவசப்பட்டதும், அவர்கள் அனைவரும் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதை மறந்தனர்.(19) கட்டுப்பாடில்லாத காம ஈடுபாடு பெருகியது. மனிதர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்ததைப் பேசத் தொடங்கினர். தூய மற்றும் தூய்மையற்ற உணவு, அறம் மற்றும் மறம் ஆகியவற்றுக்கிடையான வேறுபாடுகள் காணாமல் போயின[1].(20)

[1] கும்பகோணம் பதிப்பில், "ஆதியில் கிருதயுகத்தில் அரசனும், ராஜ்யமும், தண்டமும், தண்டிப்பவனுமில்லாமல் பிரஜைகளனைவரும் தர்மத்தாலேயே ஒருவரையொருவர் ரக்ஷித்துவந்தார்கள். ஏ! பாரத! அவ்விதம் தர்மத்தால் ஒருவருக்கொருவர் ரக்ஷிக்கப்பட்டு வரும் மனிதர்கள் மிக்கத் தைன்யத்தை அடைந்தார்கள். சிரமமடைந்த அந்த மனிதர்களை அவிவேகம் பிடித்துக் கொண்டது. அந்த மனிதர்கள் மோகத்துக்கு வசப்பட்டார்கள். மனிதஸ்ரேஷ்டனே! அவிவேகத்தால் அறிவு குறைந்தவுடன் அவர்களுடைய தர்மம் நாசமடைந்தது. பரதஸ்ரேஷ்டனே! தர்மக்குறைவாலும், அறிவின் குறைவாலும் மோகத்திற்கு வசப்பட்ட மனிதர்கள் யாவரும் அப்பொழுது தம்மிடமில்லாத பொருளை அடைய வேண்டுமென்னும் லோபமுள்ளவர்களானார்கள். பிரபுவே! விருப்பமுள்ள வஸ்துக்களை அடைய முயற்சி செய்ய வேண்டுமென்னுங்காமம் லோபத்திற்குள்ளான மனிதர்களைத் தன் வசமாக்கிக் கொண்டது. காமத்திற்குள்ளான அந்த ஜனங்களை ராகமென்னும் போகவிடாயும் கைப்பற்றிக் கொண்டது. இவ்விதம் மேன்மேலும் ஆசைபிடித்து மனிதர்கள் யாவரும் இன்னது செய்யத்தக்கது, இன்னது செய்யத்தகாததென்னும் பகுத்தறிவற்றவர்களானார்கள். ஓ! அங்ஙனமே சேரத்தகாத மடந்தையர்களைச் சேர்ந்தார்கள்; பேசத்தக்கது பேசத்தகாதது புஜிக்கத்தக்கது, புஜிக்கத்தகாதது, குற்றமுள்ளது, குற்றமில்லாதது ஆகிய இவையனைத்தையும் கைப்பற்றினார்கள். இம்மானிடவுலகம் இப்படித் தர்மவரம்பு அற்றுத் தடுமாறுதலும், வேதம் அக்காலத்தில் ஒழிவடைந்தது" என்றிருக்கிறது.

மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் குழப்பம் ஏற்பட்டபோது, வேதங்கள் மறைந்தன. வேதங்கள் மறைந்ததும், அறம் காணாமல் போனது.(21) வேதங்களும், அறமும் தொலைந்ததும், தேவர்கள் அச்சமடைந்தனர். ஓ! மனிதர்களில் புலியே, அச்சமடைந்த தேவர்கள் பிரம்மனின் பாதுகாப்பை நாடினார்கள்.(22) அண்டத்தின் தெய்வீகப் பெரும்பாட்டனை நிறைவு செய்த தேவர்கள், துயரால் பீடிக்கப்பட்டு, கூப்பிய கரங்களுடன் அவரிடம்,(23) "ஓ! தேவா, பேராசை மற்றும் குற்றங்களில் ஈடுபடும் உலகின் மனிதர்களால் நித்தியமான வேதங்கள் பீடிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.(24) ஓ! உயர்ந்த தலைவா, வேதங்கள் தொலைந்ததன் மூலம் அறமும் தொலைந்திருக்கிறது. ஓ! மூவுலகங்களின் தலைவா, இதன் காரணமாக நாங்கள் மனிதர்களின் அளவுக்குக் கீழிறங்கப் போகிறோம்.(25) மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிவதும், நாங்கள் கீழ்நோக்கிப் பொழிவதும் இதுவரை வழக்கமாக இருந்தது. எனினும், மனிதர்களுக்கு மத்தியில் பக்திச் சடங்குகள் அனைத்தும் நின்று போனதன் விளைவால், பெரும் துயரம் எங்களுடையதானது[2].(26) ஓ! பெரும்பாட்டனே, உமது சக்தியால் படைக்கப்பட்ட இந்த அண்டம் அழிவடையாமல் இருக்க, எங்களுக்கு நன்மையானதை நினைப்பீராக" என்று கேட்டனர்.(27)

[2] "மனிதர்கள், வேள்வி நெருப்புகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கைகளாக ஊற்றி தேவர்களுக்கு உணவூட்டினர். தேவர்கள் அந்தக் காணிக்கைகளை உண்டு, மனிதர்களின் வாழ்வுக்கு ஆதாரமாகப் பூமியில் மழையைப் பொழிந்தனர். எனவே, மனிதர்கள் மேல்நோக்கிப் பொழிந்தனர், தேவர்கள் கீழ்நோக்கிப் பொழிகின்றனர் என்று சொல்லப் படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தான்தோன்றியான அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்} இவ்வாறு சொல்லப்பட்டதும், அவன் அவர்களிடம், "அனைவருக்கும் எது நன்மையைப் பயக்குமென நான் சிந்திக்கிறேன். தேவர்களில் முதன்மையானோரே, உங்கள் அச்சம் விலகட்டும்" என்றான்.(28) பிறகு அந்தப் பெரும்பாட்டன், தன் நுண்ணறிவைக் கொண்டு, நூறாயிரம் பாடங்களை {ஒரு லட்சம் அத்தியாயங்களைக்} கொண்ட ஓர் ஆய்வை {சாஸ்திரத்தைத்} தொகுத்தான். அஃதில் அறம், பொருள், மற்றும் இன்பம் ஆகியன விரிவாக உரைக்கப்பட்டிருந்தன.(29) அந்தத் தான்தோன்றி அவற்றை {திரிவர்க்கம் என்றழைக்கப்படும்} மூன்று திரட்டுகளாக அமைத்திருந்தான். மேலும் அவன், இவற்றிலிருந்து பொருளும், பண்புகளும் வேறுபட்ட வீடு {மோட்சம்} என்றழைக்கப்படும் நான்காவது திரட்டையும் அமைத்தான்.(30) நல்ல குணம் {சத்வ குணம்}, ஆசை குணம் {ரஜோ குணம்}, இருள் குணம் {தாமச குணம்} என்ற பண்புகளின் படி வீடும் {மோட்சமும்} மூன்று திரட்டுகளாகவும், மற்றொன்றும் (நான்காவதாகப் பேரின்பத்தில், அல்லது இவ்வுலகிலோ, மறுவுலகிலோ வெகுமதி கிடைக்குமென்ற நம்பிக்கையில்லாமல் கடமை பயில்வது) அதில் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாத்தல், வளர்ச்சி மற்றும் அழிவு ஆகியவற்றைக் கொண்ட தண்டனையோடு தொடர்புடைய மேலும் மூன்று திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.[3](31)

[3] "வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் செல்வத்தைப் பாதுகாத்தல், தவசிகளின் தவங்களில் வளர்ச்சி, கள்வர்கள் மற்றும் தீயவர்களின் அழிவு ஆகியவையே இவை. இவை அனைத்தும் தண்டனையைச் சார்ந்திருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "லக்ஷம் அத்தியாயமுள்ள சாஸ்திரத்தைத் தமது புத்தியால் இயற்றினர். அதில் த்ரிவர்க்கமென்று பிரஸித்தி பெற்ற அறம்பொருளின்பங்கள் அவரால் விரிவாகவுரைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றைத் தவிர நான்காவதாக மோக்ஷமென்பது வேறென்றும் அதன் காரணமும் பயனும் வேறென்றும் ஸத்வம், ரஜஸ், தமஸென்னும் அதைச் சேர்ந்த திரிவர்க்கம் வேறென்றும் அதில் சொல்லப்படும். ஸமநிலை, வளர்ச்சி, குறையென்னும் த்ரிவர்க்கம், தண்டநீதிக்குரியதாகும்" என்றிருக்கிறது.

மனிதர்களின் இதயங்கள் {மனங்கள்}, இடம், காலம், வழிமுறைகள், கருத்தினைக் காட்டும் செயல்கள், கூட்டணிகள், காரணங்கள் ஆகிய மேலும் ஆறு திரட்டுகளும் அதில் அமைக்கப்பட்டிருந்தன.(32) மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் அறச்சடங்குகள், அறிவு, வாழ்வைத் தாங்குவதற்கு அவசியமான செயல்கள் (உழவு மற்றும் வணிகம் போன்றவை) ஆகியவையும், ஓ! பாரதக் குலத்தின் காளையே, தண்டனை விதிக்கும் சட்டங்களும் {தண்டநீதியும்} அதில் விதிக்கப்பட்டிருந்தன.(33) ஓ! மன்னா, அமைச்சர்களுடன் நடந்து கொள்ளும் முறை, ஒற்றர்கள், இளவரசர்களின் அறிகுறிகள், பல்வேறு வழிமுறைகளுக்கான இரகசிய முகவர்கள், தூதர்கள், பிறவகை முகவர்கள் ஆகியவையும்,(34) மனவேற்றுமை நீக்கல் {சமரசம்}, முரண்களில் ஒத்திசைவு, கொடைகள், தண்டனை, ஐந்தாவதாகப் பொறுமை ஆகியவை அதில் விரிவாக முழுமையாகச் சொல்லப்பட்டிருந்தன.(35) அனைத்து வகையான ஆழமான ஆய்வுகள், வேற்றுமையை உண்டாக்கும் ஆலோசனைகள், ஆய்வின் பிழைகள், வெற்றியின் விளைவுகள் அல்லது ஆலோசனைகளின் தோல்விகள், அச்சமூட்டவது, பதவிச் செல்வாக்குக் கொடுப்பது, செல்வத்தைக் கொடையளிப்பது ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்ட மூவகையிலான நல்ல, மத்திம மற்றும் தீய ஆய்வுகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(36,37)

பயணங்கள் செய்வதற்கான நால்வகைக் காலங்கள், நேர்மையாக அடையப்பட்டவை, செல்வத்தால் வெல்லப்பட்டவை, வஞ்சகமாக அடையப்பட்டவை என்ற மூன்று வகை வெற்றிகள் ஆகியன அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(38) (அமைச்சர்கள், நாடு, கோட்டை, படை மற்றும் கருவூலம் ஆகிய) ஐந்து திரட்டுகளின் மூன்று வகைகளிலான தீய, மத்திம, மற்றும் நல்ல பண்புகளும் அதில் சொல்லப்பட்டிருந்தன.(39) வெளிப்படையான மற்றும் மறைமுகமான இருவகைத் தண்டனைகளும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. எட்டு வகையான வெளிப்படை தண்டனைகளும், எட்டு வகையான மறைமுகத் தண்டனைகளும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(40) ஓ! பாண்டுவின் மகனே, ஓ! கௌரவ்யா {யுதிஷ்டிரா}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பணிக்குழு, (படைகளில்) ஊதியம் வாங்கும் ஊழியர்கள், போர்ப்பகுதிகள் இருக்கும் நாட்டில் இருந்து கொள்ளப்படும் வழிகாட்டிகள் ஆகியோர் வெளிப்படையான தண்டனையின் கருவிகள் அல்லது வெளிப்படையாகச் செயல்படும் சக்திகள் ஆவர்.(41) {மறைமுகத் தண்டனை என்பது} உடை உடுத்துதல், உணவு மற்றும் மந்திரங்கள் ஆகிய மூவகைப் பொருட்களைப் பொறுத்தவரையும் அசையும் மற்றும் அசையாத நஞ்சை பயன்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதும் குறிப்பிடப்படுகிறது[4]. எதிரிகள், கூட்டாளிகள், நடுநிலையாளர்கள் குறித்தும் இதில் விளக்கப்படுகிறது.(42,43)

[4] கும்பகோணம் பதிப்பில், "ரஹஸ்யமான தண்டனை ஸர்ப்ப முதலிய ஜங்கவிஷம், வற்சநாப முதலிய ஸ்தாவர விஷம் மற்றும் பல விஷப் பொடிகள், ஆடையாபரண முதலி வஸ்துக்களிலும், அன்ன முதலிய புஜிக்கத்தக்கவைகளிலும், பிரயோகிக்கத்தக்க முறைகள் மற்றும் ஆபிசாரங்கள் எனப் பலவிதமென்றும் விரிவாகக் கூறப்படுகின்றன" என்றிருக்கிறது. இதற்குப் பிறகும் கங்குலியில் இல்லாதவை கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமிருக்கிறது. அவை பின்வருமாறு, "விளையாட்டுச் சண்டையிலும், சூதாட்டத்திலும், நம்பிக்கையுடன் கூடியதும் ஒன்பதாவது உபாயமென்று வித்வான்களால் சொல்லப்பட்டதுமான கள்ளத்தனமும், அறம்பொருளின்பங்களைக் கெடுப்பதும் இஷ்டம் அனிஷ்டமென்னும் இவ்விரு விஷயங்களிலுமுள்ளதுமான உபேக்ஷையும், இந்திரஜால முதலிய மாயையும், சுபாசுபங்களைக் குறிப்பிடும் பல சகுனங்களும், வேஷத்தை அடைந்து பகையாளிகளிடம் உபயோக்கத் தக்க டம்பமும், வஞ்சகமும், ஸித்த தோஷத்தால் கெடுப்பதும், சேஷ்டையில்லாமல் செய்வதும் அதில் சொல்லப்படுகின்றன.

(நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிறவற்றைச் சார்ந்து பயணப்படும்) சாலைகளின் பல்வேறு பண்புகள், (முற்றுகை இடப்படும்) மண்ணின் தன்மைகள், தற்பாதுகாப்பு, தேர்கள், போருக்கான பிற உபகரணங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் கண்காணிப்பு, அவற்றை {தேர்கள் மற்றும் போர் உபகரணங்களைப்} பயன்படுத்துதல்,(44) மனிதர்கள், யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தும் பல்வேறு வழிமுறைகள், பல்வேறு வகையான போர் அணிவகுப்புகள் {வியூகங்கள்}, திட்டங்கள், போர் நகர்வுகள் {அசைவுகள்},(45) தீமையை முன்னறிவிக்கும் கோள்களின் சந்திப்புகள், (நிலநடுக்கங்கள் போன்ற) கடும்துயரை விளைவிக்கும் மேற்பார்வைத் தேர்வாய்வுகள், போர்முறைகளில் மற்றும் பின்வாங்குவதில் திறன் நிறைந்த வழிமுறைகள், ஆயுதங்களின் அறிவு, அவற்றை உரிய முறையில் பாதுகாத்தல்,(46) துருப்புகளின் ஒழுங்கின்மை, அவற்றை {துருப்புகளின் ஒழுங்கின்மையைக்} களைவது, படைக்கு மகிழ்ச்சியையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கவல்ல வழிமுறைகள், நோய்கள், துயர்மிகுந்த ஆபத்தான காலங்கள், போரில் காலாட்படையினரை வழிநடத்தும் அறிவு,(47) ஆபத்தை அறிவிக்கும் ஒலிமுறைகள், குறிப்பாணைகள், கொடிமரங்களை வெளிப்படுத்தி எதிரியை அச்சமூட்டுவது, கள்வர்கள் மற்றும் கடும் காட்டு இனக்குழுக்கள், நெருப்பை வீசுபவர்கள், நஞ்சூட்டுபவர்கள், மோசடி செய்பவர்கள் ஆகியவர்களின் மூலம் எதிரியின் நாட்டைப் பீடிக்கும் பல்வேறு வழிமுறைகள், பகைவர் படையின் முக்கிய அதிகாரிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை உண்டாக்குவது, பயிர்களையும், செடிகளையும் வெட்டி வீழ்த்துவது,(48,49) எதிரி யானைகளின் திறனை அழிப்பது, பீதியை உண்டாக்குவது, படையெடுத்துச் செல்பவனிடம் நல்ல எண்ணம் கொண்ட எதிரியின் குடிமக்களைக் கௌரவிப்பது, எதிரிக்கு நம்பிக்கையளிப்பது,(50) அரசின் ஏழு அடிப்படைத் தேவைகளின்[5] அழிவு, வளர்ச்சி மற்றும் ஒற்றுமை, (எதிர்பார்க்கப்படும்) வேலைத்திறன், அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகள், நாட்டை விரிவுபடுத்தும் வழிமுறைகள்,(51) பகைவரின் ஆட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுடைய நம்பிக்கையை வெல்லும் வழிமுறைகள், தண்டனை, பலமிக்கவர்களை அழிக்கும் முறை,(52) நீதியைச் சரியாக நிர்வகிக்கும் முறை, தீயவர்களை அழிப்பது, மற்போர், கணையேவுதல், ஆயுதங்களை வீசுதலும், ஏவுதலும், கொடைகளை அளிக்கும் வழிமுறைகள், தேவையான பொருட்களைச் சேமிக்கும் வழிமுறை,(53) உணவில்லாதவர்களுக்கு உணவூட்டுவது, உணவளிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பது, சரியான காலத்தில் செல்வத்தைக் கொடையளிப்பது, வியசனங்கள் என்றழைக்கப்படும் தீமைகளில் இருந்து விடுபட்டு இருப்பது,(54) மன்னர்களின் பண்புகள், படை அதிகாரிகளின் தகுதிகள், மூன்று தேவைகளின் மூலங்கள், அவற்றின் தகுதிகள் மற்றும் குறைகள்,(55) பல்வேறு வகையான தீய நோக்கங்கள், ஆதரவில் வாழ்வோரின் நடத்தை, அனைவரிடமும் ஐயங்கொள்வது, அலட்சியத்தைத் தவிர்த்தல்,(56) அடையாத பொருட்களை அடைவது, ஏற்கனவே அடையப்பட்ட பொருட்களை மேம்படுத்துவது, அவ்வாறு மேம்படுத்தப்பட்டவற்றைத் தகுந்த நபர்களுக்குக் கொடையளிப்பது,(57) பக்தி நோக்கங்கள், இன்ப நுகர் பொருட்களை அடைவது, ஆபத்து மற்றும் துயரை அகற்றுவது ஆகியவற்றுக்காகச் செல்வத்தைச் செலவு செய்வது, ஆகியவை குறித்தும் அந்த ஆய்வில் {பிரம்மனின் சாத்திரத்தில்} குறிப்பிடப்பட்டிருந்தது.(58)

[5] "மன்னன், படை, அமைச்சர்கள், கூட்டாளிகள், கருவூலம், கோட்டைகள் மற்றும் நாட்டின் புவியியல் பரப்பளவு ஆகியனவே இவை" எனப் பிபேக்திப்ராயின் பதிப்பில் குறிப்பிருக்கிறது.

ஓ! குருக்களின் தலைவா {யுதிஷ்டிரா}, கோபத்தில் இருந்து உண்டாகுபவையும், காமத்திலிருந்து உண்டாகுபவையுமான பத்து வகைக் கடும் தீமைகளும் அந்த ஆய்வில் குறிப்பிட்டப்பட்டிருந்தன.(59) காமத்திலிருந்து பிறப்பதாகக் கல்விமான்களால் சொல்லப்படும் நான்கு வகைத் தீமைகள், வேட்டை, சூது, குடி, பாலியல் ஈடுபாடு ஆகியன எனத் தான்தோன்றியின் {பிரம்மனின்} அந்தப் படைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.(60) கடுஞ்சொல், கொடூரத்தனம், கடும் தண்டனை, உடலுக்கு வலியை அளிப்பது, தற்கொலை, தன் நோக்கங்களையே தடுப்பது ஆகிய இந்த ஆறு வகைக் குற்றங்களும் கோபத்தில் இருந்து பிறக்கின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது[6].(61) பல்வேறு வகை இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் அதில் விளக்கப்பட்டிருந்தன. பகைவரின் ஆட்சிப்பகுதிகளைப் பாழாக்குதல், எதிரிகளைத் தாக்குவது, எளிதில் அடையாளங்காணக்கூடிய நிலக்குறியீடுகளை {நிலத்தின் சின்னங்களை} அழித்தல் மற்றும் நீக்கல், பிற குறிப்புகள்,(62) (எதிரிகளும், எதிரிகளின் குடிமக்களும் நிழலில் புத்துணர்ச்சி பெறாமல் இருக்க) பெரிய மரங்களை வெட்டி வீழ்த்துவது, கோட்டைகளை முற்றுகையிடுவது, உழவைக் கண்காணிப்பது, பிற பயனுள்ள செயல்பாடுகள், (துருப்புகளுக்குத்) தேவையான பொருட்கள், ஆடைகள் மற்றும் துணிகளை) சேகரிப்பது, அவற்றை உற்பத்தி செய்யும் சிறந்த வழிமுறைகள் ஆகியன அனைத்தும் அதில் விளக்கப்பட்டிருந்தன.(63)

[6] கும்பகோணம் பதிப்பில், "வேட்டை, சொக்கட்டான், குடி, பெண்டிர்கள் என்னும் நான்குவித காமவ்யஸனங்கள், கடுஞ்சொல், குரூரத்தன்மை, கடுந்தண்டம், அநீதியான சரீர தண்டனை, பொருளை அபகரித்தல், தேசம்விட்டு விலக்குவது என்னும் ஆறுவிதமான கோபவ்யஸனங்கள்" என்று இருக்கிறது.

ஓ! யுதிஷ்டிரா, பனவங்கள், ஆனகங்கள், சங்குகள், பேரிகைகள் ஆகியவற்றின் தன்மைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது, (ரத்தினங்கள், விலங்குகள், நிலங்கள், ஆடைகள், பெண் பணியாட்கள், தங்கம் ஆகிய) ஆறுவகைப் பொருட்கள், (ஒருவன் தனக்காக) அவற்றை அடையக்கூடிய வழிமுறைகள், (எதிரிக்குத் தீங்கிழைப்பதற்காக) அவற்றை அழிப்பது,(64) புதிதாக அடையப்பட்ட ஆட்சிப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது, நல்லோரைக் கௌரவிப்பது, கல்விமான்களுடன் நட்பை வளர்ப்பது, கொடைகள் மற்றும் ஹோமம் போன்ற அறச்சடங்குகளின் விதிகளில் ஞானம் கொள்வது,(65) மங்கலப் பொருட்களைத் தீண்டல், உடலைக் கவனித்தல் மற்றும் அலங்காரம், உணவைச் சமைப்பது மற்றும் பயன்படுத்தும் பாங்கு, கடவுள்பற்றுடன் கூடிய நடத்தை,(66) ஒரு வழியைப் பின்பற்றிச் செழிப்பை அடைவது, பேச்சில் உண்மை, பேச்சில் இனிமை, விழாக்காலங்கள் மற்றும் சமூக அவைகளில் செய்யப்பட வேண்டிய செயல்கள், வீட்டில் செய்யப்பட வேண்டிய செயல்கள்,(67) சந்திக்கும் இடங்கள் அனைத்திலும் நபர்கள் செய்யக்கூடிய வெளிப்படையான, மறைமுகமான செயல்கள், மனிதர்களின் நடத்தையை நிலையாகக் கண்காணிப்பது, பிராமணத் தண்டனைக்கு எதிர்ப்பு, நியாயமான தண்டனைகளைக் கொடுப்பது, உறவுமுறை மற்றும் தகுதியின் அடிப்படையில் சார்ந்திருப்போருக்குக் கௌரவங்களை அளிப்பது,(68,69) குடிமக்களைப் பாதுகாப்பது, நாட்டை விரிவாக்கும் வழிமுறைகள், பனிரெண்டு மன்னர்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மன்னன், நால்வகை எதிரிகள், நால்வகைக் கூட்டாளிகள் மற்றும் நால்வகை நடுநிலைவாதிகள் ஆகியவர்களைப் பொறுத்தவரை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனைகள்,(70) பாதுகாப்பு, பயிற்சி, உடல் தேர்ச்சி, குறிப்பிட்ட நாடுகளின் நடைமுறைகள், இனங்கள் மற்றும் குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆகியவற்றைக் குறித்த எழுபத்திரண்டு {72} அறச் செயல்கள்[7] ஆகியனவும் அந்தப் படைப்பில் முறையாக விளக்கப்பட்டிருந்தன.(71)

[7] "மன்னர்களுக்கிடையிலான சிக்கலான உறவுமுறைகளையே இந்த எண்கள் சுட்டுகின்றன. மையமாக மன்னனும், அவனது கூட்டாளியும், கூட்டாளியின் கூட்டாளியும் இருக்கின்றனர். மையமான மன்னனுக்கு ஒரு நண்பன், ஒரு பகைவன், ஒரு நடுநிலையாளன் ஆகியோர் இருக்கின்றனர். மைய மன்னனின் நாட்டுக்கு, புவியியல் சார்ந்து அடுத்து இருக்கும் நாட்டின் மன்னனும், எதிரிகளும், நடுநிலைவாதிகளும் இதில் குறிப்பிடப்படுகின்றனர். மூன்றை நான்கால் பெருக்கினால் பனிரெண்டு {3x4=12}. ஒரு நாட்டுக்கு ஆறு முக்கிய அங்கங்கள் - மன்னன், அமைச்சர்கள், நாட்டுப்புறம், கோட்டையுடன் கூடிய நகரம், கருவூலம் மற்றும் படையாகும். பனிரெண்டை ஆறால் பெருக்கினால் எழுபத்திரண்டு {12x6=72} வருகிறது" எனப் பிபேக்திப்ராயின் பதிப்பில் குறிப்பிருக்கிறது.

ஓ! அபரிமிதமான கொடைகளை அளிப்பவனே {யுதிஷ்டிரனே}, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவையும் அதில் விளக்கப்பட்டிருந்தது. பல்வேறு ஈட்டல் முறைகள், பல்வேறு வகைச் செல்வங்களின் மீது விருப்பம்,(72) உழவின் முறைகள், வருவாய்க்கான முக்கிய ஊற்றாக அமையும் பிற செயல்முறைகள், மாயைகளை உண்டாக்கவும், பயன்படுத்தவும் கூடிய பல்வேறு வழிமுறைகள், {ஏரி, குளம் போன்று} தேங்கும் நீரைக் கெடுக்கும் வழிமுறைகள் ஆகியனவும் அதில் விதிக்கப்பட்டிருந்தன.(73) ஓ! மனிதர்களில் புலியே, அறம், நேர்மை ஆகிய பாதைகளிலிருந்து மனிதர்கள் வழுவாமல் இருக்கும் வழிமுறைகள் அனைத்தும் அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தன.(74)

மிக உயர்ந்த அந்த ஆய்வைத் தொகுத்த பிறகு, அந்தத் தெய்வீகத் தலைவன் {பிரம்மன்}, இந்திரனின் தலைமையிலான தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(75) "உலகின் நன்மைக்காகவும் (அறம், பொருள், இன்பம் ஆகிய) மூன்று திரட்டுகளை நிறுவுவதற்காகவும், இந்த அறிவியலை {சாத்திரத்தை} அழகிய உரைநடையில் தொகுத்திருக்கிறேன்.(76) தண்டனையின் துணையால் இந்த அறிவியல் உலகத்தைப் பாதுகாக்கும். இந்த அறிவியலானது, வெகுமதிகள் மற்றும் தண்டனைகளைச் சொல்லி மனிதர்களுக்கு மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும்.(77) மனிதர்கள் தண்டனையின் மூலமே (தங்கள் இருப்புக்கான பொருட்களை அடைய) வழிநடத்தப்படுகிறார்கள், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், தண்டனையே அனைத்துக்கும் வழிவகுக்கிறது, அல்லது அனைத்தையும் ஆட்சி செய்கிறது, எனவே, இந்த அறிவியலானது தண்டநீதி (தண்டனையின் அறிவியல்) என மூவுலகங்களிலும் அறியப்படும்.(78) ஆறு திரட்டுகளின்[8] பண்புகள் அனைத்தையும் விவரிக்கும் இந்த அறிவியல், உயர் ஆன்ம மனிதர்களால் எப்போதும் பெரிதாக மதிக்கப்படும். அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவை அனைத்தும் இதில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன" {என்றான் பிரம்மன்}.(79)

[8] இவை, "மன்னன், அமைச்சர்கள், நாட்டுப்புறம், கோட்டையுடன் கூடிய நகரம், கருவூலம் மற்றும் படை" எனப் பிபேக்திப்ராயின் பதிப்புக் குறிப்பிடுகிறது.

சாந்திபர்வம் பகுதி – 59அ வில் உள்ள சுலோகங்கள் : 1-79/145

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்