Vena's son Prithu! | Shanti-Parva-Section-59b | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 59)
பதிவின் சுருக்கம் : சிவன், இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் சுக்கிராச்சாரியரால் சுருக்கப்பட்ட பிரம்மனின் தண்டநீதி; உலகில் உள்ள மனிதர்களை ஆள ஒரு மன்னனைக் கொடுக்கும்படி விஷ்ணுவிடம் வேண்டிய தேவர்கள்; விரஜஸை உண்டாக்கிய விஷ்ணு; அதிபலனுக்கும், மிருத்யுவின் மகளான சுநீதைக்கும் பிறந்த வேனன்; வேனனைக் கொன்ற முனிவர்கள்; வேனனின் தொடையில் இருந்து உண்டான நிஷாதர்களும், மிலேச்சர்களும்; வேனனின் வலக்கரத்தில் இருந்து உண்டான பிருது; பூமியைச் சமமாக்கிய மன்னன் பிருது; ராஜன், க்ஷத்திரியன் ஆகிய சொற்கள் உண்டானதன் வரலாறு; பிருதுவின் பெருமை; தேவர்களுக்கு நிகராக மன்னன் மதிக்கப்படுவதற்கான புதிராதிக்கம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "அதன் {பிரம்மன் தண்ட நீதியைத் தொகுத்த} பிறகு, தெய்வீகமானவனும், அகன்ற கண்களைக் கொண்டவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்டவனும், அருள் அனைத்தின் இருப்பிடமும், உமையின் தலைவனுமான சிவன், அதை முதலில் கற்று, தேர்ச்சி பெற்றான்.(80) இருப்பினும், அந்தத் தெய்வீக சிவன், படிப்படியாகக் குறைந்து வந்த மனிதனின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு, பிரம்மனால் தொகுக்கப்பட்டதும், முக்கியமான கருத்துகளைக் கொண்டதுமான அந்த அறிவியலைச் சுருக்கினான்[1].(81) பத்தாயிரம் {10,000} பாடங்களைக் கொண்ட வைசாலாக்ஷம் என்றழைக்கப்பட்ட அந்தச் சுருக்கம், பிரம்மனுக்கு அர்ப்பணிப்புள்ளவனும், பெரும் தவத்தகுதி கொண்டவனுமான இந்திரனால் பெறப்பட்டது.(82) அந்தத் தெய்வீக இந்திரனும் அந்த ஆய்வை ஐயாயிரம் {5,000} பாடங்களைக் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பாஹுதந்தகம் என்று அழைத்தான்.(83) அதன்பிறகு பலமிக்கவரும், நுண்ணறிவு கொண்டவருமான {தேவகுரு} பிருஹஸ்பதி, அந்த ஆய்வைக் கொண்ட படைப்பை மூவாயிரம் {3,000} பாடங்கள் கொண்டதாகச் சுருக்கி, அதைப் பார்ஹஸ்பத்தியம் என்றழைத்தார்.(84) அடுத்ததாக, யோகத்தின் ஆசானும், பெரும் புகழைக் கொண்டவரும், அளவிலா ஞானம் கொண்டவருமான {அசுர குரு} கவி {சுக்கிரன்}, அந்தப் படைப்பை ஆயிரம் {1000} பாடங்களைக் கொண்டதாக மேலும் சுருக்கினார்.(85) மனிதனின் வாழ்நாள் காலத்தின் குறைவையும், (அனைத்திடமும் காணப்படும்) பொதுவான குறைவையும் கருத்தில் கொண்டே அந்தப் பெரும் முனிவர்கள் அந்த அறிவியலை இவ்வாறு சுருக்கினர்.(86)
[1] கும்பகோணம் பதிப்பில், இதற்கிடையில் கங்குலியில் இல்லாத சில குறிப்பிடப்படுகின்றன. அவை பின்வருமாறு: "ஆதியும், அந்தமும் அற்றவரும், பலரூபங்களுள்ளவரும், ஞானசக்தி முதலிய சக்திகளுடன் கூடினவரும், தாரகவித்தை முதலிய எல்லா வித்தைகளுக்கும் பதியும், நித்தியமான அணிமா முதலிய அஷ்டைஸ்வரியம் பொருந்தினவரும், நித்தியரும், உமாபதியும் விசாலாக்ஷரும், ஸுகத்தைச் செய்கிறவரும், தேவருமான சிவபெருமான அந்த நீதி நூலை முதலில் கிரகித்தார். உலகங்களுக்குப் பதியும் அழிவற்றவருமான சங்கரர் உலகத்தைப் படைக்கும் வித்தையைப் பிரம்ம தேவருக்கு அளித்துப் பிரம்மாண்டத்தை உண்டுப்பண்ணின பிரபுவாயிருந்தும் பிரம்மதேவரின் ஸந்தோஷநிமித்தமாகத் தம்புத்திரரான அவரை, பிதாவாக வைத்துப் பிதாவான தாம் அவருக்குப் புத்திரராக அவர் நெற்றியிலிருந்து வெளிவந்து குழந்தை வடிவமாய்க் கொடுமையாகக் கூச்சலிட்டார். அவருக்கு வேண்டிய எல்லா உலகங்களையும் படைத்தவரும், உலகங்களுக்குப் பிதாமஹருமான பிரம்மதேவர் பொன்மயமான அன்னபக்ஷியாய்த் தோன்றினார். எண்ணற்ற ஆயிரக்கணக்கான ருத்திரர்களுக்கு அழிவற்ற இடமானவரும், எல்லாப் பிராணிகளுக்கும் தேவரும் நித்தியரும், மஹாதேவருமான அந்தச் சிவபிரான் ஒவ்வொரு யுகங்களிலும் பிராணிகளின் ஆயுளின் குறைவை அறிந்து பிரம்மதேவரியற்றியதும் பெரிய அஸ்த்ர வித்தைகளுள்ளதுமான அந்நீதிசாஸ்திரத்தைப் பதினாயிரம் அத்தியாயமுள்ளதாகச் சுருக்கினார். வைசாலாக்ஷமென்று பிரஸித்தமான அந்தச் சுருக்கத்தை மிக்கத் தவம் பொருந்தியவனும், பிராம்மணர்களுக்கு மிக்க நன்மையைக் கருதுபவனுமான தேவேந்திரன் தேவரான மஹேஸ்வரரிடமிருந்த கற்றான்" என்றிருக்கிறது.
பிறகு தேவர்கள், உயிரினங்களின் தலைவனான விஷ்ணுவை அணுகி, அவனிடம், "ஓ! தேவா, உலகின் மனிதர்களுக்கு மத்தியில் உள்ளோர் அனைவரிலும் எவன் மேன்மையடையத்தக்கவனோ {எவன் எஞ்சியிருப்போரனைவரையும் ஆள்வானோ} அவனைக் குறிப்பிடுவீராக" என்றனர்.(87) பலமிக்கவனும், தெய்வீகமானவனுமான நாராயணன், சிறிது நேரம் சிந்தித்து, அதிகக் காந்தியுள்ள விரஜஸ் என்ற பெயருடைய ஒரு மகனைத் தன் சக்தியின் மூலம் உண்டாக்கினான்.(88) எனினும், உயர்ந்த அருளைக் கொண்ட அந்த விரஜஸ் பூமியின் அரசுரிமையை விரும்பவில்லை. ஓ! பாண்டுவின் மகனே, அவனது மனம் துறவு வாழ்வையே நாடியது.(89) விரஜசுக்கு கீர்த்திமான என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அவனும் {கீர்த்திமானனும்} கூட மகிழ்ச்சியையும், இன்பத்தையும் துறந்தான். கீர்த்திமானுக்குக் கர்த்தமன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். அந்தக் கர்த்தமனும் கடும் தவங்களைப் பயின்றான்.(90) உயிரினங்களின் தலைவனான கர்த்தமன், அனங்கன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். பக்தியோடு கூடிய நடத்தை கொண்டவனும், தண்ட அறிவியலை முற்றாக அறிந்தவனுமான அந்த அனங்கனே உயிரினங்களின் பாதுகாவலனானான்.(91)
அனங்கன், அரச கொள்கைகளை நன்கறிந்த அதிபலன் என்ற பெயருடைய ஒரு மகனைப் பெற்றான். அவன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஒரு பரந்த பேரரசை அடைந்து, தன் ஆசைகளுக்கு அடிமையானவன் ஆனான்.(92) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மிருத்யுவுக்கு {மிருத்யு தேவிக்கு}, தன் மனத்தில் பிறந்த ஒரு மகள் இருந்தாள். சுநீதை என்ற பெயரிடப்பட்டு, மூவுலகங்களில் கொண்டாடப்பட்ட அவள், (அதிபலனை மணந்து கொண்டு) வேனன் என்ற பெயருடைய ஒரு மகனை ஈன்றெடுத்தாள்.(93) கோபத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமையாக இருந்த வேனன், அனைத்து உயிரினங்களிடமும் அநீதியாக நடந்து கொண்டான். பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள், மந்திரங்களால் ஈர்க்கப்பட்ட குசப்புற்களால் {அவற்றையே ஆயுதமாகக் கொண்டு} அவனைக் {வேனனைக்} கொன்றனர்.(94) மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்த அம்முனிவர்கள் வேனனின் வலது தொடையைத் துளைத்தனர். அப்போது அந்தத் தொடையில் இருந்து, இரத்தச் சிவப்பான கண்களுக்கும், கருப்பு முடியும் கொண்டவனும், தீயால் கருகிய பந்தத்திற்கு ஒப்பானவனுமான ஒரு குள்ளமான மனிதன் பூமியில் தோன்றினான். அந்தப் பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், "இங்கே நிஷீத {அமர்வாயாக}" என்றனர்.(95,96) மலைகளையும், காடுகளையும் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தீய இனமான நிஷாதர்களும், விந்திய மலைகளில் வசிக்கும் மிலேச்சர்கள் என்றழைக்கப்படும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிறரும் அவனில் இருந்தே உண்டாகினர்.(97)
பிறகு அந்தப் பெரும் முனிவர்கள், வேனனின் வலக்கரத்தைத் துளைத்தனர். அதிலிருந்து இரண்டாவது இந்திரனின் வடிவிலான ஒரு மனிதன் தோன்றினான்.(98) கவசம், வாள்கள், விற்கள், கணைகள் ஆகியவற்றைத் தரித்தவனும், ஆயுத அறிவியலை நன்கறிந்தவனுமான அவன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் முற்றாக அறிந்தவனாக இருந்தான்.(99) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தண்டனை அறிவியலுக்கான விதிகள் அனைத்தும் (தங்கள் உடல் கொண்ட வடிவங்களில்) அந்தச் சிறந்த மனிதனிடம் வந்தன. பிறகு, அந்த வேனனின் மகன், அந்தப் பெரும் முனிவர்களிடம் கூப்பிய கரங்களுடன்,(100) "மிகக் கூரியதும், அறம் நோற்க உதவுவதுமான அறிவை நான் அடைந்திருக்கிறேன். அதைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக. எந்தப் பயனுள்ள பணியை நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அஃதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நான் நிறைவேற்றுவேன்" என்றான்.(102)
இவ்வாறு அவனால் சொல்லப்பட்டதும், அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் அவனிடம், "எவற்றில் அறம் வசிக்கிறதோ அந்தப்பணிகள் அனைத்தையும் அச்சமில்லாமல் நிறைவேற்றுவாயாக.(103) உனக்கு அன்பானதையும், அல்லாததையும் அலட்சியம் செய்து, வேறுபாடில்லாத கண்களுடன் அனைத்து உயிரனங்களையும் காண்பாயாக. காமம், கோபம், பேராசை, கௌரவம் ஆகியவற்றைத் தொலைவாக வீசி,(104) அறவிதிகளையே எப்போதும் நோற்று, கடமையின் பாதையிலிருந்து வழுவும் எந்த மனிதனையும் உன் கரங்களாலேயே தண்டிப்பாயாக.(105) வேதங்களால் பூமியில் ஆழப் பதிக்கப்பட்ட அறத்தை, உன் மனம், சொல், செயல் ஆகியவற்றில் எப்போதும் கட்டிக்காப்பதாக உறுதியேற்பாயாக.(106) மேலும், வேதங்களால் விதிக்கப்பட்ட கடமைகளை, தண்டனை அறிவியலின் துணையோடு அச்சமில்லமால் கட்டிக்காப்பதாகவும், உறுதியற்ற செயலை ஒருபோதும் செய்வதில்லை எனவும் உறுதியேற்பாயாக.(107) ஓ! பலமிக்கவனே, பிராமணர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக, வர்ணக்கலப்பு ஏற்படாமல் உலகைப் பாதுகாப்பதாகவும் உறுதியேற்பாயாக" என்றனர்.(108)
இவ்வாறு சொல்லப்பட்ட வேனன் மகன், முனிவர்களின் தலைமையிலான தேவர்களிடம், "மனிதர்களில் காளையரான அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பிராமணர்கள் என்னால் எப்போதும் வழிபடப்படுவார்கள்" என்று மறுமொழி கூறினான்.(109) அப்போது பிரம்மத்தை ஓதுபவர்கள் அவனிடம், "அப்படியே ஆகட்டும்" என்றனர். பிறகு, பிரம்மத்தின் பரந்த கொள்ளிடமான சுக்கிரன் அவனது புரோகிதரானார்.(110) வாலகில்யர்கள் அவனது அமைச்சர்களானார்கள், சாரஸ்வதர்கள் அவனது தோழர்களானார்கள். பெரிய சிறப்புமிக்க முனிவர் கர்க்கர், அவனது சோதிடரானார்.(111) தற்போது மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும் சுருதிகளின் உயர்ந்த அறிவிப்பில் {வேனனின் மகனான} அந்தப் பிருதுவே, விஷ்ணுவின் எட்டாம் வடிவமாக இருக்கிறான்.
அதற்குச் சற்று முன், சூதன், மாகதன் என்ற பெயர் கொண்ட இரு மனிதர்கள் தோன்றினர். அவர்கள், அவனது பாணர்களாகவும், வந்திகளாகவும அமைந்தனர்.(112) பேராற்றலைக் கொண்டவனும், வேனனின் அரசமகனுமான பிருது மனம் நிறைந்தவனாக, கடற்கரையருகே இருக்கும் {அநூபம் என்ற நாட்டை} நிலத்தைச் சூதனுக்கும், அப்போதிலிருந்து மகதம் என்றறியப்படும் நாட்டை மாகதனுக்கும் அளித்தான்.(113) முன்பு பூமியின் பரப்பானது சமமற்றதாக இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். இந்தப் பிருதுவே பூமியின் பரப்பை சமமாக்கியவனாவான்.(114) ஒவ்வொரு மன்வந்தரத்தின் போதும் பூமி சமமற்றதாக ஆனது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேனன் மகன் {பிருது}, சுற்றிலும் கிடந்த பாறைத்திரள்களையும், பாறைகளையும்,(115) தன் வில்லின் நுனியால் அகற்றினான். இந்த வழிமுறையால் மலைகள் பெரிதாகின.
பிறகு, விஷ்ணு, இந்திரனுடன் கூடிய தேவர்கள்,(116) முனிவர்கள், லோகபாலர்கள், பிராமணர்கள் ஆகியோர் பிருதுவுக்கு (உலகின் மன்னனாக) முடிசூட்ட ஒன்றுதிரண்டனர். ஓ! பாண்டுவின் மகனே, தன் உடல்வடிவத்துடன் கூடிய பூமாதேவி, ரத்தினங்கள் மற்றும் தங்கக் கொடைகளுடன் அவனிடம் வந்தாள்.(117) ஓ! யுதிஷ்டிரா, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், மலைகளின் மன்னனான இமயம், சக்ரன் ஆகியோர் வற்றாத செல்வத்தை அவனுக்கு அளித்தனர்.(118) மனிதர்களின் தோள்களில் சுமக்கப்பட்டவனும், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் தலைவனுமான தெய்வீகக் குபேரன்,(119) அறம், பொருள் மற்றும் இன்பத்திற்கான தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்குச் செல்வத்தை அவனுக்கு அளித்தான். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, வேனனின் மகன் {பிருது} நினைத்தவுடன், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவையும் மனிதர்களும் கோடிக்கணக்கில் உயிர்பெற்று வந்தனர். அந்தக் காலத்தில் (பூமியில்) முதுமையோ, பஞ்சமோ, பேரிடரோ, நோயோ ஏதுமில்லாதிருந்தது.(120, 121) அந்த மன்னன் வழங்கிய பாதுகாப்பின் விளைவாக, ஊர்வன, கள்வர்கள் மற்றும் வேறு எந்த ஆதாரத்திடம் இருந்தும் எவரும் எந்த அச்சத்தையும் அடையவில்லை.(122)
அவன் {பிருது} கடலுக்குள் சென்றால், அதன் நீர் உறுதியடைந்து கல்லானது. மலைகள் அவனுக்கு வழிவிட்டன, அவனது கொடிமரமானது எங்கும் ஒருபோதும் தடுக்கப்படவில்லை.(123) பசுவில் இருந்து பாலைக் கறப்பவன் போல அவன், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள் மற்றும் பிற உயிரினங்களின் உணவுக்காகப் பூமியில் இருந்து பதினேழு வகைப் பயிர்களையும்[2] கறந்தெடுத்தான்.(124) அந்த உயர் ஆன்ம மன்னன் {பிருது}, அனைத்து உயிரினங்களையும், அறமே அனைத்திலும் உயர்ந்ததென உணரவைத்தான். மேலும் அவன் {பிருது} மக்கள் அனைவரையும் மனம் நிறையச் செய்தான் என்பதால் அவன் ராஜன் என்று அழைக்கப்பட்டான்[3].(125) மேலும் அவன் {பிருது} பிராமணர்களின் காயங்களை ஆற்றியதால் அவன் க்ஷத்திரியன்[4] என்ற பெயரையும் ஈட்டினான். (அவனது ஆட்சிக்காலத்தில்) பூமியானவள் அறப்பயிற்சிக்காகக் கொண்டாடப்பட்டதால், அவள் பிருத்வி என்று பலரால் அழைக்கப்பட்டாள்[5].(126) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அழிவில்லா விஷ்ணு, "ஓ! மன்னா {பிருதுவே}, எவனால் உன்னை விஞ்ச முடியாது" என்று அவனிடம் சொல்லி அவனது சக்தியை உறுதி செய்தான்.(127) பிறகு அந்தத் தெய்வீக விஷ்ணு அந்த ஏகாதிபதியின் தவத்தின் விளைவாக அவனது உடலுக்குள் நுழைந்தான். இந்தக் காரணத்தினால், இந்த மொத்த அண்டத்திலும், மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக[6] பிருதுவுக்கு தெய்வீக வழிபாடு செய்யப்பட்டது.(128)
[2] "பதினேழு என்ற எண்ணிக்கையை இவையே என வரையறுப்பது கடினமாக இருக்கிறது. நெல்போன்ற தானியங்கள், அவரைப் போன்ற விதைகள், எள் போன்றவை, கோதுமை போன்றவை, உளுந்து போன்றவை என ஐவகைகள் பொதுவாக அறியப்பட்டிருக்கின்றன" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.[3] "வடமொழியில் அரசன் என்ற சொல்லுக்கு இணையானது ராஜன் என்ற சொல்லாகும். ரஞ்சிதம் என்பது நிறைவடைதல், மகிழ்ச்சி அடைதல் என்ற பொருளைக் கொண்டதாகும். அவன் குடிமக்களை மனம்நிறைச் செய்ததால், ரஞ்ச் என்ற வேர்ச்சொல்லில் இருந்து ராஜன் என்று அறியப்பட்டான்" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.[4] "க்ஷத்தம் Kshata என்றால் காயம் என்பது பொருள், திரனா trana என்றால் பாதுகாத்தல் என்று பொருள்" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார். க்ஷத்திரியன் என்றால் காயத்திலிருந்து பாதுகாப்பவன் என்பது பொருள்.[5] "பிரதிதம் Prathita என்றால் பரந்த அல்லது புகழ்பெற்ற என்பது பொருளாகும். பூமிக்குப் பிருத்வி என்று அமைந்த பெயரானது அந்தச் சொல்லுடனே இணைக்கப்படுகிறது" எனப் பிபேக்திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.[6] "மனித தேவர்களின் எண்ணிக்கையில் ஒருவனாக என்பது மன்னர்களுக்கு மத்தியில் பெரும் மன்னனான என்ற பொருள் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். "மன்னர்கள் மனித வடிவிலான தேவர்களாவர், மன்னன் வைனியனும் {பிருதுவும்} அவர்களில் ஒருவனாவான்" எனப் பிபேக் திப்ராய் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உன் நாடு, தண்டனை அறிவியலின் {தண்ட நீதியின்} துணை கொண்டே எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். உன் ஒற்றர்களின் நடமாட்டம் மூலம் கவனமாகக் கண்காணிப்புச் செய்து, எவனாலும் உன் நாட்டிற்குத் தீங்கு செய்ய முடியாத வகையில் நீ அதைப் பாதுகாக்க வேண்டும்.(129) ஓ! மன்னா, அனைத்து நற்செயல்களும், (அந்த ஏகாதிபதியின்) நன்மைக்கே வழிவகுக்கும். ஒரு மன்னனின் நடத்தையானது, அவனது சொந்த நுண்ணறிவின் மூலமும், வாய்ப்புகள் மற்றும் எதிர்வரும் வழிமுறைகளின் மூலமும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.(130) ஓர் ஏகாதிபதியின் தெய்வீகத்தன்மையையன்றி வேறு எந்தக் காரணத்தின் விளைவால் ஒரு பெருங்கூட்டம் அவனுக்கு அடிபணிந்து நடக்கக்கூடும். அந்நேரத்தில் விஷ்ணுவின் புருவத்தில் இருந்து ஒரு தங்கத் தாமரை தோன்றியது.(131) அந்தத் தங்கத் தாமரையில் ஸ்ரீதேவி பிறந்தாள். அவள், பெரும் நுண்ணறிவு கொண்ட தர்மத்தின் துணைவியானாள். ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தர்மம் அந்த ஸ்ரீயிடம் அர்த்தத்தை {பொருளை} ஈன்றது.(132) தர்மம், அர்த்தம் மற்றும் ஸ்ரீ ஆகிய மூன்றும் அரசில் நிறுவப்பட்டன[7]. தன் தகுதி {புண்ணியம்} தீர்ந்த ஒருவன், சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு விழுந்து,(133) தண்டனை அறிவியல் அறிந்த ஒரு மன்னனாகப் பிறக்கிறான். அத்தகு மனிதன் பெருமையை அடைந்தவனாக உண்மையில் பூமியில் விஷ்ணுவின் பாகமாகவே {அவதாரமாகவே} ஆகிறான். பெரும் நுண்ணறிவைக் கொள்ளும் அவன், பிறரின் மேல் ஆதிக்கத்தை அடைகிறான்.(134) தேவர்களால் நியமிக்கப்பட்டவனை எவனாலும் விஞ்சமுடியாது. இதன் காரணமாகவே அனைவரும் அவனுக்குக் கீழ்ப்படிந்து செயல்படுகின்றனர், இதன் காரணமாகவே உலகத்தால் அவனுக்குக் கட்டளையிடமுடியாது.(135)
[7] கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது, ஸ்ரீ விஷ்ணுபகவானுடைய நெற்றியிலிருந்து பொற்கமலம் ஒன்று உண்டாயிற்று. ஏ! பாண்டவ! பிறகு, அந்தக் கமலத்தினின்றும் தர்மதேவதையான லக்ஷ்மிதேவி தோன்றினாள். லக்ஷ்மி தேவியிடமிருந்து தர்மத்திற்குரிய பொருள் உண்டாயிற்று. பிறகு, அப்பொருளும், தர்மமும், லக்ஷ்மியும் ராஜ்யத்தில் ஸ்தாபிக்கப்பட்டார்கள்" என்றிருக்கிறது.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நற்செயல்கள் நன்மைக்கே வழிகோலுகின்றன. இதன் காரணமாகவே, இந்த உலகைச் சார்ந்தவனாக இருப்பினும், தங்களைப் போன்ற அங்கங்களைக் கொண்டவனாகவே இருப்பினும், அவனது வார்த்தைகளுக்கு மக்கள்கூட்டம் கீழ்ப்படிந்து நடக்கிறது.(136) பிருதுவின் இனிய முகத்தைக் கண்ட எவனும் உடனே அவனுக்குக் கீழ்ப்படிந்தவனானான். அதுமுதல் அவன் {பிருது} தன்னை அழகானவனாகவும், செல்வம் படைத்தவனாகவும், உயர்ந்த அருளைக் கொண்டவனாகவும் கருதத் தொடங்கினான்[8].(137) அவனது செங்கோலின் வலிமையின் விளைவால், அறம் மற்றும் நீதியைப் பயிலும் நடைமுறை பூமியில் தெளிவாகக் காணப்பட்டது. அதன் காரணத்தாலேயே பூமி அறத்தால் கவிந்து பரவியிருந்தது.(138) ஓ! யுதிஷ்டிரா, இவ்வாறே, கடந்த கால நிகழ்வுகளின் வரலாறுகள், பெரும் முனிவர்களின் தோற்றம், புனித நீர்நிலைகள், கோள்கள், விண்மீன்கள், நட்சத்திரக்கூட்டங்கள், நால்வகை வாழ்வினரின் கடமைகள், நால்வகை ஹோமங்கள், நால்வகை மனிதர்களின் பண்புகள், கல்வியின் நால்வகைக் கிளைகள் ஆகியவற்றைக் குறித்த அனைத்தும் (பெரும்பாட்டனின் {பிரம்மனின்}) அந்தப் படைப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(139,140)
[8] "இந்தச் சுலோகத்தை நீலகண்டர் தவறாகப் பொருள் கொள்கிறார். அவர், ‘தன் முகத்தை இனிமையானதாக, செழிப்பானதாக, அருள் நிறைந்ததாகக் காணும் ஒரு மனிதனுக்கு மன்னன் கீழ்ப்படிகிறான்’ எனப் பொருள் கொள்கிறார். இங்கே ஒரு மனிதனை மொத்த உலகமும் ஏன் துதிக்கிறது என்ற யுதிஷ்டிரனின் கேள்விக்குப் பீஷ்மர் பதிலளித்துக் கொண்டிருக்கிறார். மன்னனின் அழகிய முகத்தைக் காணும் ஒவ்வொரு மனிதனும், ஒரு புதிரான ஆதிக்கத்தின் காரணமாக அவனுக்கு மரியாதை செலுத்துகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அழகான உருவமுள்ளவனும், நல்ல பாக்கியமுள்ளவனும், பிரபுவுமான அரசனைக் கண்டு அவன் முகத்தைப் பார்த்த மனிதர் யாவரும் அவனுக்கு வசப்படுவார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவனது அமைதி நிறைந்த முகத்தைக் காண்போர் எவனும் அவனது கட்டுப்பாட்டுக்குள் வந்தான். அவன் மிகப் பெரிய பேறு பெற்ற, செழிப்பான, அழகான ஒருவனைக் காண்கிறான்" என்று இருக்கிறது.
ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் உள்ள பொருட்கள் யாவும் பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அந்த ஆய்வில் சொல்லப்பட்டிருந்தன. வரலாறுகள், வேதங்கள், நியாய அறிவியல், தவங்கள், அறிவு, அனைத்துயிர்களுக்கும் தீங்கிழையாமை, உண்மை, பொய்மை, உயர்ந்த அறநெறி ஆகியவை அனைத்தும் அதில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்தன.(141,142) வயதில் முதிர்ந்தோரை வணங்குதல், கொடைகள், தூய நடத்தை, உழைப்புக்கு ஆயத்தமாக இருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் கருணை ஆகியவையும் முழுமையாக அதில் விளக்கப்பட்டிருந்தன.(143) இஃதில் எந்த ஐயமுமில்லை. ஓ! ஏகாதிபதி, அந்தக் காலத்திலிருந்தே, கல்விமான்கள், மன்னனுக்கும், தேவனுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று சொல்லத் தொடங்கினர்.(144) நான் இப்போது மன்னர்களின் பெருமை குறித்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதர்களின் தலைவா, நான் அடுத்ததாக என்ன உரைக்க வேண்டும்?" என்று கேட்டார் {பீஷ்மர்}".(145)
சாந்திபர்வம் பகுதி – 59அ வில் உள்ள சுலோங்கள் : 1-79/145
சாந்திபர்வம் பகுதி – 59ஆ வில் உள்ள சுலோங்கள் : 80-145/145
ஆங்கிலத்தில் | In English |