Means of Security! | Shanti-Parva-Section-58 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 58)
பதிவின் சுருக்கம் : நாட்டைப் பாதுகாக்கும் வழிமுறைகள்; முயற்சியின் முக்கியத்துவமும், அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமும்; மன்னனால் சமயத்திற்கேற்றவாறு கபடமும், கபடமற்ற நிலையும் ஏன் கைக்கொள்ளப்பட வேண்டும் என்பனவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; சூரியன் மறையப்போவதால் தன் ஐயங்களை அடுத்த நாள் கேட்பதாகச் சொன்ன யுதிஷ்டிரன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமைகளில் முக்கியமானது. தெய்வீகமான பிருஹஸ்பதி வேறு எந்தக் கடமையையும் (இந்த ஒன்றைப் போல்) மெச்சவில்லை.(1) அகன்ற கண்களைக் கொண்டவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான கவி (உசனஸ் {சுக்கிரன்}), ஆயிரங்கண் இந்திரன், பிரசேதஸின் மகன் மனு,(2) தெய்வீக பரத்வாஜர், தவசி கௌரசிரஸ் மற்றும் பிரம்மத்தை ஓதி, பிரமத்துக்கு அர்ப்பணிப்புடன் கூடிய அனைவரும் மன்னர்களின் கடமைகளைக் குறித்து உடன்படிக்கைகளைத் தொகுத்திருக்கிறார்கள்.(3) ஓ! அறவோரில் முதன்மையானவனே, அவர்கள் அனைவரும், மன்னர்களைப் பொறுத்தவரையில், பாதுகாப்பை வழங்கும் கடமையையே புகழ்ந்திருக்கின்றனர். ஓ! தாமரை இதழ்களைப் போன்றதும், தாமிர வண்ணம் கொண்டதுமான கண்களைக் கொண்டவனே, பாதுகாப்பை முயன்றடையும் வழிமுறைகளைக் குறித்துக் கேட்பாயாக.(4)
ஓ! யுதிஷ்டிரா, ஒற்றர்களையும், பணியாட்களையும் பணியமர்த்தல், அலட்சியமில்லாமல் அவர்களுக்குரியதைக் {கூலிகளைக்} கொடுப்பது, பிறர் நலத்தை எண்ணிப்பார்த்து வரிகளைத் தெளிவாக்குவது {அடைவது}, கணிக்க முடியாத அளவுக்கு (குடிமக்களிடம் இருந்து) காரணமில்லாமல் ஒருபோதும் எதையும் கைப்பற்றாமல் இருத்தல்,(5) (நிர்வாகக் காரியங்களைச் செயல்படுத்த) நேர்மையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தல், வீரம், திறம், (தொழில் பரிவர்த்தனையில்) புத்திக்கூர்மை, உண்மை, மக்களின் நன்மையை நாடுவது, நியாயமான மற்றும் நியாயமற்ற வழிமுறைகளில் எதிரிக்கு மத்தியில் வேறுபாட்டையும், ஒற்றுமையின்மையையும் உண்டாக்குவது,(6) பழைய, அல்லது விழும் நிலையில் உள்ள கட்டடங்களைச் செப்பனிடுவது, சமயத்திற்குத் தகுந்தவாறு ஒழுங்கமைக்கப்பட்ட அபராதங்களையும், உடல்சார்ந்த தண்டனைகளை அளிப்பது,(7) நேர்மையாளர்களைக் கைவிடாதிருப்பது, நற்குடியில் பிறந்தோருக்குப் பணியையும், பாதுகாப்பதையும் அளிப்பது, சேமிக்க வேண்டியதைச் சேமிப்பது, புத்திக்கூர்மை கொண்டோரிடம் தோழமை கொள்வது,(8) படைவீரர்களை நிறைவு செய்வது, குடிமக்களைக் கண்காணிப்பது வணிகப் பரிமாற்றங்களில் நிலைமாறா உறுதியோடு இருப்பது, கருவூலத்தை நிறைப்பது,(9) நகரக் காவலர்களிடம் குருட்டு நம்பிக்கை வைக்காமலிருப்பது, பகை நகரக் குடிமக்களிடம் பற்றுறுதியை {விசுவாசத்தைக்} குலையச் செய்வது, எதிரி நாடுகளுக்கு மத்தியில் வாழும் நண்பர்களையும் கூட்டாளிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வது,(10) பணியாட்களையும், அரசு அதிகாரிகளையும் கடுமையாகக் கண்காணிப்பது, நகரத்தைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள்வது, பணியாட்களை நம்பாமல் இருப்பது, உறுதிமொழிகளின் மூலம் எதிரிக்கு ஆறுதலளிப்பது,(11) கொள்கைவிதிகளில் உறுதியோடிருப்பது, செயல்பட ஆயத்தமாக இருப்பது, எந்த எதிரியையும் அலட்சியம் செய்யாதிருப்பது, தீயோரைக் கைவிடுவது ஆகியவையே {பாதுகாப்பை முயன்றடையும்} அந்த வழிமுறைகளாகும்.(12)
முயற்சியில் மன்னர்களின் ஆயத்தமானது அரச கடமைகளின் வேராகும். இது குறித்துப் பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். அவரால் பாடப்பட்ட வரிகளைக் கேட்பாயாக.(13) "முயற்சியாலேயே அமுதம் அடையப்பட்டது; முயற்சியாலேயே அசுரர்கள் கொல்லப்பட்டனர்; முயற்சியாலே இந்திரன் சொர்க்கம் மற்றும் பூமியின் அரசுரிமையை அடைந்தான்.(14) பேச்சில் வீரர்களை விட முயற்சியில் வீரன் மேன்மையானவனாவான். பேச்சில் வீரர்கள், முயற்சியில் வீரர்களை நிறைவு செய்து அவர்களை வழிபடுவார்கள்[1].(15) முயற்சியற்ற மன்னன், நுண்ணறிவைக் கொண்டவனாகவே இருந்தாலும், நஞ்சிழந்த பாம்பைப் போல எதிரிகளால் எப்போதும் வெல்லப்படுவான்.(16) பலங்கொண்ட ஒரு மன்னன், எதிரி எவ்வளவு பலவீனமாக இருப்பினும், அவனை ஒருபோதும் அலட்சியம் செய்யக்கூடாது. ஒரே ஒரு தீப்பொறியால் காட்டுத்தீயை உண்டாக்க முடியும், ஒரே ஒரு துளி நஞ்சும் கொல்லக்கூடும்.(17) பகைவன் ஒரே ஒரு வகைப் படையுடன் கோட்டைக்குள் இருந்தால், பலமிக்கச் செழிப்பான மன்னனின் மொத்த நாட்டையும் அவனால் பீடிக்க முடியும்.(18)
[1] "சாத்திரங்களைக் கற்றோரான நாநயமிக்கப் பிராமணர்களே இங்கே பேச்சில் வீரர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். பெரும் க்ஷத்திரிய மன்னர்கள் முயற்சியில் வீரர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முயற்சியில் சூரனான மனிதன் பண்டிதர்களுக்கு மேலாயிருக்கிறான். முயற்சியுள்ள வீரர்களைப் பண்டிதர்கள் ஸந்தோஷப்படுத்தி உபாஸிக்கிறார்கள்" என்றிருக்கிறது.
மன்னனின் இரகசியப் பேச்சுகள், வெற்றியை அடைய திரட்டப்படும் துருப்புகள், அவனது இதயத்தில் இருக்கும் கபட நோக்கங்கள், குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உண்டான அதே போன்ற நோக்கங்கள், (19) அவன் செய்யும், அல்லது செய்ய நினைக்கும் தீச்செயல்கள் ஆகியவை கள்ளங்கபடமற்ற தோற்றத்துடனே அவனால் {மன்னனால்} மறைக்கப்பட வேண்டும். தன் மக்களைத் தன் ஆளுகைக்குள் வைப்பதற்கு அவன் நியாயமாகச் செயல்பட வேண்டும்.(20) குறுகிய புத்தி கொண்டோரால் பரந்த பேரரசின் சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. மென்மையான மன்னனால், உழைப்பைக் கோரும் மேன்மையான தகுதியை அடைய முடியாது.(21) இறைச்சித் துண்டைப் போல அனைவராலும் பேராசை கொள்ளப்படும் நாட்டைக் கள்ளங்கபடமில்லாத, எளிமையான நடத்தையுடன் ஒருபோதும் காக்க முடியாது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ கள்ளங்கபடமில்லாமலும், கபடத்தோடும் என இரு வகைகளிலும் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும்.(22) குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒரு மன்னன் ஆபத்தில் விழ நேர்ந்தால் அவன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். அதுவே மன்னர்களின் நடத்தையாக இருக்க வேண்டும்.(23) மன்னர்களின் கடமைகளைக் குறித்த ஒரு பகுதியை மட்டும் நான் இப்போது உன்னிடம் சொல்லியிருக்கிறேன். ஓ! குருக்களின் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, நீ அறிய விரும்புவனவற்றை என்னிடம் சொல்வாயாக" என்றார் {பீஷ்மர்}".(24)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்தார், "சிறப்புமிக்க வியாசர், தேவஸ்தானர், அஸ்வர், வாசுதேவன் {கிருஷ்ணன்}, கிருபர், சாத்யகி, சஞ்சயன் ஆகியோர்(25) முற்றாக மலர்ந்த மலர்களுக்கு ஒப்பான முகங்களுடன் மகிழ்ச்சியால் நிறைந்து, "சிறப்பு! சிறப்பு!"" என்று சொல்லி மனிதர்களில் புலியும், அறவோரில் முதன்மையானவருமான பீஷ்மரைத் துதித்தனர்.(26) அப்போது குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன் உற்சாகமற்ற இதயத்துடனும், கண்ணீரால் குளித்த கண்களுடனும், மென்மையாகப் பீஷ்மரின் பாதங்களைத் தீண்டி,(27) "ஓ! பாட்டா, சூரியன் பூமியிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டு இன்று (இப்போது) மறையப் போகிறான் என்பதால் என் ஐயங்களை நான் நாளை கேட்கிறேன்" என்று சொன்னான்.(28) பிறகு, கேசவன், கிருபர், யுதிஷ்டிரன் மற்றும் பிறர், (அங்கே கூடியிருந்த) பிராமணர்களை வணங்கி, அந்தப் பெரும் ஆற்றின் மைந்தரை வலம் வந்து, உற்சாகமாகத் தங்கள் தேர்களில் ஏறினர்.(29) சிறந்த நோன்புகளை நோற்கும் அவர்கள் அனைவரும் திருஷத்வதியின் ஓடையில் {ஆற்றில்} நீராடினர். தங்கள் முன்னோருக்கு நீர்க்காணிக்கைகள் அளித்த அந்த எதிரிகளை எரிப்பவர்கள், அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதி, வேறு பிற மங்கலச் செயல்களையும் செய்து, மாலை சந்தியை உரிய சடங்குகளுடன் துதித்து, யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(30)
சாந்திபர்வம் பகுதி – 58ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |