The Story told by Vasishta to Parasara! | Adi Parva - Section 180 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 14)
பதிவின் சுருக்கம் : வசிஷ்டரின் பேரனாகப் பராசரர் பிறந்தது; தன் தந்தை கொல்லப்பட்டதைக் கேட்டு உலகத்தை அழிக்க நினைத்த பராசரர்; பராசரருக்கு வசிஷ்டர் சொன்ன கதை; செழிப்புடன் வாழ்ந்த பிராமணர்கள்; ஏழ்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்; பிராமணர்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்த க்ஷத்திரியர்கள்; ஒரு பிராமணப் பெண்ணின் தொடையில் இருந்து பிறந்த ஔர்வரின் பிரகாசத்தால் குருட்டுத் தன்மையை அடைந்த க்ஷத்திரியர்கள்...
கந்தர்வன் தொடர்ந்தான், "ஓ பார்த்தா, வசிஷ்டரின் ஆசிரமத்தில் வசித்து வந்த அதிருசியந்தி, சக்திரியின் குலத்தைத் தழைக்க வைக்க ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அந்த மகன் இரண்டாவது சக்திரியைப் போன்றே அனைத்திலும் இருந்தான்.(1) ஓ பாரதர்களில் முதன்மையானவனே, அந்த முனிவர்களில் சிறந்தவரான வசிஷ்டர், தானே தமது பேரனின் பிறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளைச் செய்வித்தார்.(2) தற்கொலை எண்ணத்திலிருந்த முனிவர் வசிஷ்டர், குழந்தை இருக்கிறது என்று அறிந்ததும் அதிலிருந்து விலகியதால், பிறந்த அந்தக் குழந்தை பராசரன் {இறந்தவரை உயிர் மீட்பது என்று பொருளாம்} என்று அழைக்கப்பட்டான்.(3) அந்த அறம்சார்ந்த பராசரர், தான் பிறந்த நாளிலிருந்து, வசிஷ்டரையே தனது தந்தையாக அறிந்து, அவரிடம் அப்படியே நடந்து கொண்டார்.(4) ஒரு நாள், ஓ குந்தியின் மகனே, அக்குழந்தை தனது தாய் அதிருசியந்தியின் முன்னிலையில், பிராமண முனிவர்களில் முதன்மையான வசிஷ்டரை "தந்தையே" என்று அழைத்தான்.(5)