The glory said by goddess Earth! | Anusasana-Parva-Section-34 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 34)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மை குறித்துக் கிருஷ்ணனிடம் பேசிய பூமாதேவியின் உரையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் எப்போதும் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அவர்கள் சோமனைத் தங்கள் மன்னனாகக் கொண்டவர்கள், அவர்களால் பிறருக்கு மகிழ்ச்சியையும், துன்பத்தையும் தர முடியும்.(1) ஓ! மன்னா, ஒருவன் தன் தந்தைமாரையும், பாட்டன்மாரையும் எவ்வாறு பேணிப் பாதுகாப்பார்களோ அதே போன்று இவர்களும் பேணிப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு, உணவு மற்றும் ஆபரணக் கொடைகளையும், அவர்கள் விரும்பும் அனுபவிக்கத்தக்க பொருட்களையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தேவர்களின் தலைவனான வாசவனிடம் இருந்து அனைத்து உயிரினங்களுக்கும் பாயும் அமைதியும் மகிழ்ச்சியும் போல, பிராமணர்கள் இவ்வாறு மதிக்கப்படும் நாட்டில், அமைதியும் மகிழ்ச்சியும் பாயும்.(2) தூய ஒழுக்கம் கொண்டவர்களும், பிரம்ம ஒளி கொண்டவர்களுமான பிராமணர்கள் ஒரு நாட்டில் பிறக்க வேண்டும். (ஒரு நாட்டில் வந்து குடியேறுபவர்களுக்கு மத்தியில்) அற்புதமான தேர்வீரர்களும், எதிரிகள் அனைவரையும் எரிக்க வல்லவர்களுமான க்ஷத்திரியர்களும் விரும்பப்பட வேண்டும்.(3) இது நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! மன்னா, நற்குடி பிறப்பு, அறம் மற்றும் நெறிகள் குறித்த அறிவு ஆகியவற்றைக் கொண்டவனும், சிறந்த நோன்புகளை உறுதியுடன் நோற்பவனுமான ஒரு பிராமணனை ஒருவன் தன் மாளிகையில் வசிக்கச் செய்வதைவிட வேறு உயர்ந்தது ஏதுமில்லை. அத்தகைய செயல் அனைத்துவகை அருளையும் உண்டாக்கவல்லது.(4) பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் வேள்விக் காணிக்கைகள், அவற்றை ஏற்கும் தேவர்களையே சென்றடைகின்றன. பிராமணர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாராவர். ஒரு பிராமணனைவிட உயர்ந்தது ஏதுமில்லை.(5)