Duties of household mode! | Anusasana-Parva-Section-97 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 97)
பதிவின் சுருக்கம் : இல்லறத்தானின் கடமைகள், பலிக்காணிக்கைகள், மதுபர்க்கத்துடன் கூடிய விருந்தோம்பல், அவற்றுக்குரிய பலன்கள் குறித்து வாசுதேவனுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இல்லற வகையின் கடமைகள் {கிருஹஸ்தாஸ்ரமத் தர்மங்கள்}அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. மேலும், இவ்வுலகில் செழிப்பையடைவதற்காக ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாக வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பூமாதேவி ஆகியோரைக் குறித்த பழைய கதையை உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) ஓ! பாரதக் குலத்தின் சிறந்த இளவரசே, பலமிக்கவனான வாசுதேவன், பூமாதேவியைப் புகழ்ந்து பாடிய பிறகு, இதே கேள்வியை அவளிடம் கேட்டான்.(3)
வாசுதேவன் {கிருஷ்ணன், பூமாதேவியிடம்}, "இல்லறத்தான் என்ற நிலையைப் பின்பற்றும் நானும் என் போன்றோரும் என்ன செயல்களைச் செய்ய வேண்டும்? அத்தகைய செயல்கள் எவ்வாறு நன்மைபயக்கும்?" எனக் கேட்டான்.(4)
பூமாதேவி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவரே, ஓர் இல்லறத்தானால் முனிவர்கள், தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் ஆகியோர் வழிபடப்பட வேண்டும், வேள்விகளும் செய்யப்பட வேண்டும்.(5) தேவர்கள் வேள்விகளாலும், மனிதர்கள் விருந்தோம்பலாலும் எப்போதும் நிறைவடைகிறார்கள் என்பதை என்னிடம் இருந்து அறிந்து கொள்வீராக. எனவே, இல்லறத்தான் அவர்கள் விரும்பும் பொருட்களால் அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.(6) ஓ! மதுசூதனரே, அத்தகைய செயல்களின் மூலம் முனிவர்களும் நிறைவடைகிறார்கள். ஓர் இல்லறத்தான், நாள் தோறும் உணவுண்ணும் முன்னர், தன் புனித நெருப்பையும், தன் வேள்விக் காணிக்கைகளையும் கவனிக்க வேண்டும்[1].(7) ஓ! மதுசூதனரே, தேவர்கள் இத்தகைய செயல்களால் நிறைவடைகின்றனர். ஓர் இல்லறத்தான் நாள்தோறும் பித்ருக்களை நிறைவடையச் செய்வதற்காக, உணவு மற்றும் நீர் மற்றும் உணவுக் காணிக்கைகளையோ,(8) கனிகள், கிழங்குகள் மற்றும் நீர்க்காணிக்கைகளையோ அளித்து விஷ்வேதேவர்களுக்கு வெந்த உணவையும், அக்னி, சோமன் மற்றும் தன்வந்தரி ஆகியோருக்கு தெளிந்த நெய்யையும் காணிக்கையளிக்க வேண்டும்.(9,10)
[1] கும்பகோணம் பதிப்பில், "விருப்பத்துடன் நித்ய யாகம் செய்வதினால் தேவர்களையும், நித்யமாக விருந்தளிப்பதினால் மனிதர்களையும் நித்தியமாகத் தர்ப்பணம் செய்வதனால் பித்ருக்களையும் மனிதர்க்ள ஆராதிக்க வேண்டும். குற்றமற்றவரே, அப்படியே பிரம்மசரிய விரதத்தினால் ரிஷிகள் ஸந்தோஷமடைகின்றனர். தினந்தோறும் அக்நியைப் பூஜிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னமே பூதபலியையும், தேவதா பூஜையையும் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்கள் வேள்விகளிலும், மனிதர்கள் விருந்தோம்பலிலும் எப்போதும் நிறைவடைகிறார்கள். ஒருவன் கொடுப்பதற்குத் தகுந்தவற்றை எப்போதும் மகிழ்ச்சியுடன் கொடுக்க வேண்டும். ஓ மதுசூதனா, இதனால் பெரும் எண்ணிக்கையிலான முனிவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஓ மதுசூதனா, உண்பதற்கு முன்பே ஓர் இல்லறத்தான் வேள்வி நெருப்பை மூட்டி, காணிக்கை அளிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
அவன் தனிப்பட்டவையும், தனித்துவம் வாய்ந்தவையுமான காணிக்கைகளைப் பிரஜாபதிக்கு {பிரம்மனுக்கு} அளிக்க வேண்டும். அவன் தென்பகுதியில் யமனுக்கும், மேற்குப் பகுதியில் வருணனுக்கும், வடக்குப் பகுதியில் சோமனுக்கும், வீட்டுக்குள்ளேயே பிரஜாபதிக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்குமென முறையான வரிசையில் வேள்விக் காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(12) வீட்டின் வாயிலில் அவன் மனிதர்களுக்கு உணவுக்காணிக்கை அளிக்க வேண்டும்[2]. ஓ! மாதவரே, இவையே பலிக் காணிக்கைகள் என்றறியப்படுகின்றன. மருத்துகளுக்கும், தேவர்களுக்கும் ஒருவனுடைய வீட்டிற்குள்ளேயே பலிக்காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13) விஷ்வேதேவர்களுக்கு அது திறந்தவெளியிலும் {ஆகாயத்திலும்}, ராட்சசர்களுக்கும், பூதங்களுக்கும் இரவிலும் கொடுக்கப்பட வேண்டும்.(14) இந்தக் காணிக்கைகளை அளித்த பிறகு அந்த இல்லறத்தான், பிராமணர்களுக்குக் காணிக்கை அளிக்க வேண்டும். பிராமணர்கள் எவரும் இல்லையென்றால் உணவின் முதல் பகுதி நெருப்பில் வீசப்பட வேண்டும்.(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஒவ்வொரு நாளும் அன்ன முதலியவற்றினாலும், தர்ப்பண ஜலத்தினாலும், பால், கிழங்கு, கனிகளாலும் சிராத்தம் செய்து பித்ருக்களைத் திருப்தி செய்ய வேண்டும். பாகம் செய்த அன்னத்திலிருந்து அக்நியில் வைசுவதேவமென்னும் ஹோமத்தை முறைப்படி செய்ய வேண்டும். ஆக்நீஷோமம், வைசுவதேவம், தான்வந்தர்யம், அதன் பிறகு பிரம்ம தேவருக்கு ஹோமம் என்று தனித்தனியே விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த முறைப்படியே அன்னபலியையும் போட வேண்டும். மாதவரே, தெற்கில் யமனுக்கும், மேற்கில் வருணனுக்கும், வடக்கில் சந்திரனுக்கும், நடுவீட்டில் பிரம்மதேவருக்கும், வடகிழக்கில் தன்வந்தரிக்கும், கிழக்கில் இந்திரனுக்கும் வீட்டின் வாயிலில் மனிதர்களுக்கும் என்று சொல்லிப் பலிபோட சொல்லுகின்றனர்" என்றிருக்கிறது.
ஒரு மனிதன் தன் மூதாதையருக்குச் சிராத்தம் அளிக்க விரும்பினால் அவன், சிராத்தச் சடங்கை நிறைவு செய்யும்போது, தன் மூதாதையர்களை நிறைவடையச் செய்து, முறையான வரிசையில் பலிக்காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(16) அதன் பிறகு அவன் விஷ்வேதேவர்களுக்குக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். அடுத்ததாக அவன் பிராமணர்களை அழைத்து, தன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு உணவுடன் விருந்தளிக்க வேண்டும்.(17) ஓ! இளவரசே, இச்செயலால் விருந்தினர்கள் நிறைவடைவார்கள். எவன் நீண்ட காலம் வீட்டில் தங்காமல், வந்த குறுகிய காலத்தில் சென்றுவிடுவானோ அவனே விருந்தினன் என்றழைக்கப்படுகிறான்.(18) ஓர் இல்லறத்தான், தன் ஆசான், தந்தை, நண்பன் மற்றும் விருந்தினனிடம், "என் வீட்டில் உமக்குக் கொடுக்க இன்னது வைத்திருக்கிறேன்" என்று சொல்ல வேண்டும். மேலும் அதன்படியே அவன் ஒவ்வொரு நாளும் அதைக் கொடுக்க வேண்டும்.(19,20)
அந்த இல்லறத்தான் அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்ய வேண்டும். இதுவே நிறுவப்பட்ட வழக்கமாகும். ஓ! கிருஷ்ணா, அந்த இல்லறத்தான், அவர்கள் அனைவருக்கும் உணவளித்த பிறகு இறுதியாகவே உணவை உட்கொள்ள வேண்டும்.(21) அந்த இல்லறத்தான், தன் மன்னன், புரோகிதர், ஆசான், மாமனார், ஸ்நாதகப் பிராமணர்கள் ஆகியோர் ஒரு வருடம் முழுவதும் தன் வீட்டில் தங்கினாலும் மதுபர்க்கக் காணிக்கைகளுடன் அவர்களை வழிபட வேண்டும்.(22) காலையிலும், மாலையிலும் நாய்கள், ஸ்வபசர்கள் {சக்கிலியர்கள்}, பறவைகளுக்குத் தரையில் உணவு காணிக்கையிடப்பட வேண்டும். இது வைஷ்வேதேவ காணிக்கை என்றழைக்கப்படுகிறது[3].(23) இந்தச் சடங்குகளைப் பேரார்வத்துடன் கூடிய தெளிந்த மனத்துடன் செய்யும் இல்லறத்தான் இவ்வுலகில் {இம்மையில்} முனிவர்களின் அருளையும், இறந்த பிறகு {மறுமையில்} சொர்க்கலோகங்களையும் அடைகிறான்" என்றாள் {பூமாதேவி}.(24)
[3] "இவர்களை நாய்களுக்குச் சமைப்பவர்கள், நாய்களுடன் திரிபவர்கள்; மிக இழிந்த வகையைச் சார்ந்தவர்கள் எனக் கொள்ளலாம்"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பக்ஷிகளுக்கும் தரையில் அன்னம் போட வேண்டும். இதுவும் வைச்வதேவம் என்பது. இது காலையும், மாலையும் விதிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பூமாதேவியிடம் இருந்து இவை யாவற்றையும் கேட்ட பலமிக்க வாசுதேவன் {கிருஷ்ணன்} அதன்படியே செயல்பட்டான். நீயும் அதே வழியிலேயே செயல்படுவாயாக.(25) ஓ! மன்னா, ஓர் இல்லறத்தானின் கடமைகளான இவற்றைச் செய்வதன் மூலம் நீ இவ்வுலகில் புகழை அடைந்து, இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவாய்" {என்றார் பீஷ்மர்}.(26)
அநுசாஸனபர்வம் பகுதி – 97ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |