The glory said by goddess Earth! | Anusasana-Parva-Section-34 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 34)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மை குறித்துக் கிருஷ்ணனிடம் பேசிய பூமாதேவியின் உரையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் எப்போதும் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அவர்கள் சோமனைத் தங்கள் மன்னனாகக் கொண்டவர்கள், அவர்களால் பிறருக்கு மகிழ்ச்சியையும், துன்பத்தையும் தர முடியும்.(1) ஓ! மன்னா, ஒருவன் தன் தந்தைமாரையும், பாட்டன்மாரையும் எவ்வாறு பேணிப் பாதுகாப்பார்களோ அதே போன்று இவர்களும் பேணிப் பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு, உணவு மற்றும் ஆபரணக் கொடைகளையும், அவர்கள் விரும்பும் அனுபவிக்கத்தக்க பொருட்களையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தேவர்களின் தலைவனான வாசவனிடம் இருந்து அனைத்து உயிரினங்களுக்கும் பாயும் அமைதியும் மகிழ்ச்சியும் போல, பிராமணர்கள் இவ்வாறு மதிக்கப்படும் நாட்டில், அமைதியும் மகிழ்ச்சியும் பாயும்.(2) தூய ஒழுக்கம் கொண்டவர்களும், பிரம்ம ஒளி கொண்டவர்களுமான பிராமணர்கள் ஒரு நாட்டில் பிறக்க வேண்டும். (ஒரு நாட்டில் வந்து குடியேறுபவர்களுக்கு மத்தியில்) அற்புதமான தேர்வீரர்களும், எதிரிகள் அனைவரையும் எரிக்க வல்லவர்களுமான க்ஷத்திரியர்களும் விரும்பப்பட வேண்டும்.(3) இது நாரதரால் எனக்குச் சொல்லப்பட்டது. ஓ! மன்னா, நற்குடி பிறப்பு, அறம் மற்றும் நெறிகள் குறித்த அறிவு ஆகியவற்றைக் கொண்டவனும், சிறந்த நோன்புகளை உறுதியுடன் நோற்பவனுமான ஒரு பிராமணனை ஒருவன் தன் மாளிகையில் வசிக்கச் செய்வதைவிட வேறு உயர்ந்தது ஏதுமில்லை. அத்தகைய செயல் அனைத்துவகை அருளையும் உண்டாக்கவல்லது.(4) பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் வேள்விக் காணிக்கைகள், அவற்றை ஏற்கும் தேவர்களையே சென்றடைகின்றன. பிராமணர்களே அனைத்து உயிரினங்களின் தந்தைமாராவர். ஒரு பிராமணனைவிட உயர்ந்தது ஏதுமில்லை.(5)
ஆதித்தியன் {சூரியன்}, சந்திரமாஸ் {சந்திரன்}, காற்று {வாயு}, நீர், பூமி, வானம், திசைப்புள்ளிகள் ஆகிய அனைத்தும் பிராமணனின் உடலுக்குள் நுழைந்து, பிராமணன் உண்பவற்றை எடுத்துக் கொள்கின்றன[1].(6) எந்த வீட்டில் பிராமணர்கள் உண்பதில்லையோ, அங்கே பித்ருக்களும் உண்ண மறுப்பார்கள்.(7) பிராமணர்களை வெறுக்கும் இழிந்தவனின் வீட்டில் தேவர்கள் ஒருபோதும் உண்பதில்லை. பிராமணர்கள் நிறைவடையும்போது, பித்ருக்களும் நிறைவடைகின்றனர்.(8) பிராமணர்கள் நிறைவடையும்போது, தேவர்களும் நிறைவடைகின்றனர். இதில் ஐயமேதும் இல்லை. பிராமணர்களுக்கு வேள்வி ஹவிஸைக் கொடுப்பவர்கள் (இம்மையிலும் மறுமையிலும்) நிறைவை அடைகின்றனர்.(9) அத்தகைய மனிதர்கள் அழிவை அடைவதில்லை. உண்மையில் அவர்கள் உயர்ந்த கதிகளையே அடைகின்றனர்.
[1] "அதாவது, பிராமணருக்கு உண்ணக் கொடுக்கும் எதுவும் உண்மையில் தேவர்களாலேயே உண்ணப்படுகின்றன என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணர்களை நிறைவடையச் செயவதற்காகக் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட வேள்வி காணிக்கைகள்,(10) பித்ருக்கள் மற்றும் தேவர்கள் ஆகிய இருவரையும் நிறைவடையச் செய்கின்றன. உயிரினங்கள் அனைத்தும் எங்கே தோன்றினவோ அந்த வேள்வியின் காரணன் பிராமணனே.(11) இந்த அண்டம் எதனில் உண்டாகிறதென்பதையும், அழிவில் இருந்து மீண்டும் எப்போதும் வெளிப்படையாகத் திரும்புகிறது என்பதையும் அறிந்தவன் பிராமணன். உண்மையில், சொர்க்கத்திற்கு வழிவகுக்கும் பாதையையும், எதிரிடத்திற்கு வழிவகுக்கும் மறுபாதையையும் பிராமணன் அறிவான்.(12) நடந்தது, நடக்கப் போவது என அனைத்தையும் பிராமணன் அறிவான். இருகால் உயிரினங்கள் அனைத்திலும் பிராமணனே முதன்மையானவனாவான். ஓ! பாரதர்களின் தலைவா, பிரமாமணன் தன் வகைக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முழுமையாக அறிந்தவனாவான்.(13) பிராமணர்களைப் பின்பற்றும் மனிதர்கள் ஒருபோதும் வீழ்வதில்லை. இவ்வுலகில் இருந்து செல்லும்போது அவர்கள் ஒருபோதும் அழிவையடைவதில்லை. உண்மையில், வெற்றி எப்போதும் அவர்களுடையதே.(14) பிராமணர்களின் உதடுகளில் இருந்து உதிரும் சொற்களை ஏற்பவர்களும், தங்கள் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தியவர்களுமான உயர் ஆன்ம மனிதர்கள், ஒருபோதும் வீழ்வதில்லை. வெற்றி எப்போதும் அவர்களுடையதாகவே இருக்கிறது.(15)
தங்கள் சக்தியாலும், வலிமையாலும் அனைத்தையும் எரிக்கும் க்ஷத்திரியர்களின் சக்தி, பிராமணர்களுடன் மோதும்போது தணிவடைகிறது {அழிவை அடைகிறது}.(16) {பிராமண} பிருகுக்கள், {க்ஷத்திரிய} தாலஜங்கர்களை வென்றனர். அங்கிரஸின் மகன்கள் நிபர்களை வென்றனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பரத்வாஜர் வீதஹவ்யர்களையும், ஐலர்களையும் வென்றார்.(17) இந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் பல்வேறு வகை ஆயுதங்களைப் பயன்படுத்தவல்லவர்களாக இருந்தும், கருப்பு மான் தோலை மட்டுமே தங்களது சின்னமாகக் கொண்டவர்களும், அதையே பெயராகக் கொண்டவர்களுமான பிராமணர்கள் அவர்களை வென்று பயனடைந்தனர். பிராமணர்களுக்குப் பூமியை அளித்து, அத்தகைய செயலின் மூலம் {இம்மை, மறுமை என்ற} இரண்டு உலகங்களுக்கும் ஒளியூட்டும் ஒருவன், இறுதியாக அனைத்தும் பொருட்களின் கதியை அடைவதில் வெல்வான்[2].(18) மரத்திற்குள் மறைந்திருக்கும் நெருப்பைப் போல, இவ்வுலகில் சொல்லப்படும், அல்லது கேட்கப்படும், அல்லது, படிக்கப்படும் அனைத்தும் பிராமணனில் அடங்கிக் கிடக்கிறது.(19) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இது தொடர்பாக வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல் பழைய வரலாற்றில் தென்படுகிறது.(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "விசித்திர ஆயுதங்கள் பிடித்த அரசர்களையும் மான்தோல் கொடி போட்ட இந்தப்ராம்மணர்கள் வென்றனர். எவனும் கலசங்களை ஸ்தாபித்துக் கரை சேர்க்கும் கருமத்தைச் செய்யத் தொடங்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் போர்வீரர்கள் அனைவரும் போரில் வண்ணம் நிறைந்தவர்களாக இருந்தாலும், கருப்பு மான் தோலால் ஆன கொடிகளைக் கொண்டோர் அவர்களை வீழ்த்தினர். அவர்கள் தங்கள் நீர்க்குடங்களைச் சுழற்றவல்லர்களாகவும், கடக்கவல்லவர்களாகவும், தாக்கவல்லவர்களாகவும் இருக்கின்றனர்" என்றிருக்கிறது. கங்குலி மற்றும் பிபேக்திப்ராய் ஆகிய இருவரும் இந்த ஸ்லோகம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது என்றே அடிக்குறிப்பில் தெரிவிக்கின்றனர்.
வாசுதேவன், "ஓ! உயிரினங்களின் தாயே, ஓ! மங்கலத் தேவியே, என்னுடைய இந்த ஐயத்திற்கான தீர்வை நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன். இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தை} நோற்கும் மனிதன் எச்செயலைச் செய்வதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைவதில் வெல்கிறான்" என்று கேட்டான்.(21)
பூமி, "ஒருவன் பிராமணர்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். இந்த ஒழுக்கமே தூய்மையடையச் செய்வதும், சிறந்ததுமாகும். பிராமணர்களிடம் மதிப்புடன் தொண்டாற்றும் மனிதனின் மாசுகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன.(22) இதிலிருந்தே (இந்த ஒழுக்கத்தில் இருந்தே) செழிப்பு எழுகிறது. இதிலிருந்து புகழ் எழுகிறது. இதிலிருந்தே புத்தியும், ஆன்ம அறிவும் எழுகிறது. இந்த ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு க்ஷத்திரியன் வலிமைமிக்க ஒரு தேர்வீரனாகவும், எதிரிகளை எரிப்பவனாகவும் ஆகி, பெரும் புகழை ஈட்டுவதில் வெல்கிறான்.(23) "அனைத்து வகைச் செழிப்பையும் அடைய விரும்பும் ஒருவன், நற்குடியில் பிறந்தவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனும், சாத்திரங்களை அறிந்தவனுமான ஒரு பிராமணனை எப்போதும் மதிக்க வேண்டும்" என்பதையே நாரதர் என்னிடம் சொன்னார்.(24) உயர்ந்த அல்லது தாழ்ந்த மனிதர்கள் அனைவருக்கும் மேலாகக் கருதப்படுபவர்களுக்கும் உயர்ந்த பிராமணர்களால் புகழப்படும் மனிதன் நிச்சயம் செழிப்பில் வளர்வான்.(25)
சுடப்படாத மண்ணாங்கட்டி கடலில் இடப்படும்போம் அழிவையடைவது போலவே பிராமணர்களைக் குறித்துத் தவறாகப் பேசும் மனிதனும் விரைவில் தோல்வியையும், ஏமாற்றத்தையும் அடைகிறான்.(26) இதே வகையில் பிராமணர்களைத் துன்புறுத்தும் செயல்கள் அனைத்தும் நிச்சயம் தோல்வியையும், அழிவையும் கொண்டு வரும். நிலவில் கரும்புள்ளிகளையும், பெருங்கடலில் உப்பையும் காண்பீராக[3].(27) பெரும் இந்திரனே ஒருமுறை மேனியெங்கும் ஆயிரம் பாலினக்குறிகளை {பெண்குறிகளை} அடைந்தான். பிறகு பிராமணர்களின் சக்தியின் மூலமே அவை ஆயிரம் கண்களாக மாற்றமடைந்தன.(28) ஓ! மாதவரே, இவை யாவும் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் காண்பீராக. ஓ! மதுசூதனரே, புகழ், செழிப்பு, மறுமையின் பல்வேறு இன்பலோகங்கள் ஆகியவற்றை விரும்புபவனும், தூய நடத்தையும், தூய ஆன்மாவையும் கொண்டவனுமான ஒரு மனிதன், பிராமணர்களின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாக வாழ வேண்டும்" என்றாள் {பூமாதேவி}.(29)
[3] "நிலவின் கரும்புள்ளிகள் தக்ஷனின் சாபத்தால் நேர்ந்தவை. பெருங்கடலில் உள்ள நீரின் உப்புத்தன்மை ஒரு முனிவரின் சாபத்தால் உண்டானது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குரு குலத்தோனே, பூமாதேவியின் இச்சொற்களைக் கேட்ட மதுசூதனன், "நல்லது, நல்லது" என்று சொல்லி உரிய வடிவில் அந்தத் தேவியைக் கௌரவித்தான்.(30) ஓ! பிருதையின் மகனே, பூமாதேவிக்கும், மாதவனுக்கும் இடையில் நடந்த இந்த உரையாடலைக் குவிந்த ஆன்மாவோடு கேட்ட நீ, மேன்மையான பிராமணர்கள் அனைவரையும் வழிபடுவாயாக. இதைச் செய்வதன் மூலம் நீ விரைவில் உனக்கான் உயர்ந்த நன்மையை அடைவாய்".(31)
அநுசாஸனபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |