Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Friday, March 27, 2015

சாரு நிவேதிதா அவர்களுக்கும் புதிய தலைமுறை இதழுக்கும் நன்றி!

புதிய தலைமுறை இதழில் முழுமஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்களுக்கு நன்றி...

**************************************************

சாரு அவர்கள் புதிய தலைமுறை இதழில் "வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்" என்ற தொடரை எழுதிவருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில், 26 மார்ச் 2015 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் "மஹாபாரதத்தை மறக்கலாமா?" என்ற தலைப்பின் கீழ் நமது முழு மஹாபாரதத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.
அவர் முழுமஹாபாரதம் குறித்து அறிமுகப்படுத்தியிருக்கும் பாராக்களை மட்டும் தட்டச்சு செய்து கீழே இடுகிறேன்...

**************************************************

நூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் 18 தினங்கள் இரவு முழுவதும் அமர்ந்து பாரதம் பார்த்தார்கள்.

அதையே 21-ஆம் நூற்றாண்டிலும் செய்தால் சரியா? தெருக்கூத்துக்குப் பதிலாக இப்போது தொலைக்காட்சி மகாபாரதம்.

இந்த நிலை மாறி மகாபாரதத்தை எப்போது வாசிக்கப் போகிறோம்?

அப்படி வாசிக்க வேண்டுமானால் என்ன செய்யலாம்?

ம.வீ.ரா., பதிப்பில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று மணிப்பிரவாள நடை. இன்னொன்று, 18 பர்வங்களும் மறுபதிப்பு இன்னும் தயாராகவில்லை.

இந்நிலையில், செ.அருட்செல்வப்பேரரசன் முழு மகாபாரதத்தையும் வியாசர் எழுதியபடியே தமிழில் மொழிபெயர்த்து அதை இணையதளத்திலும் (http://mahabharatham.arasan.info) வெளியிட்டு வருகிறார்.

பகலில் DTP வேலையும், இரவில் மகாபாரத வேலையுமாக ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் / சமஸ்கிருதப் பேராசிரியர்களும் செய்ய வேண்டிய வேலை.

இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த மகாபாரதத்தை லட்சக்கணக்கான மக்களிடம் எடுத்துச் செல்ல நம் பதிப்பகங்கள் முன் வர வேண்டும்.

அருட்செல்வப்பேரரசனின் தமிழ் சாமானிய மனிதனுக்கும் புரியக் கூடியதாக இருக்கிறது.

நன்றி : 26 மார்ச் 2015 தேதியிட்ட புதிய தலைமுறை இதழ்....

**************************************************

தான் பங்காற்றிவரும் பல்வேறு தளங்களின் மூலம் தனது வாசகர்கள் அனைவருக்கும் நமது முழுமஹாபாரதத்தை அறிமுகப்படுத்திவரும் திரு.சாரு அவர்களுக்கு கோடனுகோடி நன்றிகள்.

Thursday, October 31, 2013

சுவடுகளைத் தேடி.... (திரௌபதி சிரித்தாள்)

செப்டம்பர் 9, 2013 அன்று சபா பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கினேன். அன்று விநாயகர் சதுர்த்தி. சபா பர்வத்தில் கதையோட்டம் அதிகம் இருக்காது, கதாபாத்திரங்கள் பேசும் மொழிகளே அதிகம் இருக்கும். பல புரியாத சொற்களுக்கு அகராதியைத் தேடி மொழி பெயர்க்க வேண்டியிருக்கும். ஆகையால், சபாபர்வத்தை ஆரம்பித்த போது, இதை முடிக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று எண்ணினேன்.

Sunday, September 08, 2013

வந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறேன்!


சுவடுகளைத் தேடி! 



கடந்து வந்த பாதையின் சுவடுகளைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எழுத அமர்ந்திருக்கிறேன். இது நீண்ட நாளாக நான் செய்ய நினைத்தது. வாசகர்களுடன் ஒரு உரையாடல் செய்து, தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். சரி ஆதிபர்வம் முடியட்டும். மனதில் இருப்பதை வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். இதோ ஆதிபர்வம் முடிந்துவிட்டது....

எப்படி இந்த மஹாபாரத மொழியாக்கம் தொடங்கியது? நினைவுகளைச் சுழற்றிப் பார்க்கிறேன்...

Thursday, August 08, 2013

சம்வர்ணனும் தபதியும் - ஆதிபர்வம் பகுதி 173

Samvarana and Tapati | Adi Parva - Section 173 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி...

அர்ஜுனன், "நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்?'' என்று கேட்டான்".(2)

Monday, August 05, 2013

அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172

Angaraparna and Arjuna | Adi Parva - Section 172 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : கங்கைக் கரைக்கு வந்த பாண்டவர்கள்; மனைவியருடன் நீராடிக் கொண்டிருந்த கந்தர்வன்; கந்தர்வனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையிலான மோதல்; கந்தர்வனின் மனைவியுடைய வேண்டுதலாலும், யுதிஷ்டிரனின் ஆணையினாலும் ஏவிய ஆயுதத்தைத் திரும்பப் பெற்ற அர்ஜுனன்; நல்ல புரோஹிதரை அடையும்படி பாண்டவர்களை அறிவுறுத்திய கந்தர்வன்...

வைசம்பாயனர் சொன்னார், "வியாசர் சென்ற பிறகு, அந்த மனிதர்களில் காளைகளான பாண்டவர்கள், வந்த பிராமணரை {வியாசரை} வழியனுப்பிவிட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் தங்கள் தாயைத் {குந்தியைத்} தங்களுக்கு முன்பு விட்டு (பாஞ்சாலம் நோக்கி) முன்னேறிச் சென்றனர்.(1) அந்த எதிரிகளை அழிப்பவர்கள், தங்கள் இலக்கை அடைய வடக்கு நோக்கி இரவும் பகலுமாகப் பயணித்தனர். புருவத்தில் பிறைக் குறித் தாங்கியிருக்கும் சிவனின் புனிதமான நகரத்தை அடையும்வரை பயணித்தனர்.(2) மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மைந்தர்கள், கங்கையின் கரையை வந்தடைந்தனர். பெரும் தேர் வீரனான தனஞ்சயன் {அர்ஜுனன்} கையில் பந்தத்துடன் முன் நடந்து அவர்களுக்குப் பாதையைக் காட்டி, அவர்களைப் (காட்டு விலங்குகளிடம் இருந்து) பாதுகாத்துச் சென்றான்.(3) அப்போது, அந்தக் கங்கையின் நீரில் தனிமையான அந்தச் சூழ்நிலையில், செருக்குடன் கூடிய ஒரு கந்தர்வன் தனது மனைவியருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.(4) அந்த ஆற்றை அணுகும் பாண்டவர்களின் பாத அடியோசைகள் அந்தக் கந்தர்வ மன்னனுக்குக் கேட்டது. பாத அடியோசையைக் கேட்ட அந்தப் பெரும்பலம் வாய்ந்த கந்தர்வன் மிகுந்த சினம் கொண்டு,(5) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பாண்டவர்களைக் கண்டான்.

Wednesday, July 31, 2013

அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! - ஆதிபர்வம் பகுதி 168

Drona and Drupada story said by the Brahmana! | Adi Parva - Section 168 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்...

பிராமணர், "கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)

Sunday, July 21, 2013

ஹிடிம்பனைக் கொன்றான் பீமன்! - ஆதிபர்வம் பகுதி 156

Bhima Killed Hidimva! | Adi Parva - Section 156 | Mahabharata In Tamil

(ஹிடிம்ப வத பர்வம் - 3)

பதிவின் சுருக்கம் : உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த குந்தியும், பாண்டவர்களும்; ஹிடிம்ப பீம மற்போரைக் குறித்து ஹிடிம்பை மூலமாக அறிந்த கொண்ட பாண்டவர்கள்; பீமனைக் கேலி செய்த அர்ஜுனன்; ஹிடிம்பனைக் கொன்ற பீமன்; பீமனைக் கொண்டாடிய அர்ஜுனன்...

வைசம்பாயனர் சொன்னார், "தங்கள் தாயுடன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவர்களான அந்த மனிதர்களில் புலிகள், ஹிடிம்பையின் இயல்புக்குமிக்க அழகைக் கண்டு வியந்தனர்.(1) குந்தி, அவளது அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அவளிடம் இனிமையாகவும், உறுதியேற்படுத்தும் வகையிலும்(2) "ஓ தேவர்களின் மகளைப் போல இருப்பவளே, நீ யாருடையவள்? யார் நீ? ஓ அழகான நிறம் கொண்டவளே, என்ன காரியமாக நீ இங்கே வந்திருக்கிறாய்? எங்கிருந்து வந்திருக்கிறாய்?(3) நீ கானக தேவதையாகவோ, அப்சரஸாகவோ இருப்பின், உன்னைப் பற்றி முழுமையாகச் சொல்வாயாக. நீ ஏன் இங்கிருக்கிறாய் என்பதையும் சொல்வாயாக" என்று கேட்டாள்.(4)

Tuesday, July 02, 2013

தூக்கமிழந்த திருதராஷ்டிரன் - ஆதிபர்வம் பகுதி 141

Dhritarashtra lost his sleep | Adi Parva - Section 141 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 77)

பதிவின் சுருக்கம் : இளவரசனாகப் பட்டமேற்றுக் கொண்ட யுதிஷ்டிரன்; பலராமனிடம் கதாயுத்தம் பயின்ற பீமசேனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மசிரஸ் என்ற ஆயுதத்தைக் கொடுத்த துரோணர்; திக்விஜயம் செய்த பீமார்ஜுனர்கள்; பாண்டவர்களின் வளர்ச்சியைக் கண்டு தூக்கமிழந்த திருதராஷ்டிரன்...

Dhritarashtra lost his sleep 
Adi Parva - Section 141
Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஒரு வருடம் சென்றதும், திருதராஷ்டிரன், மக்கள் மீது அன்பு கொண்டு, பாண்டுவின் மகனான யுதிஷ்டிரனை, அவனது உறுதிக்காகவும், மேலும், மனோபலம், பொறுமை, கருணை, வெளிப்படைத்தன்மை, மற்றும் நேர்மையான இதயம் ஆகியவற்றுக்காகவும் தன் அரசின் இளவரசனாக நிறுவினான்.(1,2) குறுகிய காலத்திற்குள், அந்தக் குந்தி மைந்தன் யுதிஷ்டிரன் தனது நன்னடத்தையாலும், நல்ல குணங்களாலும், கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்ததாலும், பாண்டுவின் செயற்கரிய செயல்களை மறையச் செய்தான்.(3) இரண்டாவது பாண்டவனான விருகோதரன் {பீமன்}, சங்கர்ஷனரிடம் (பலராமனிடம்) வாட்போரிலும், கதாயுத்தத்திலும், தேர்ப்போரிலும் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்தான்[1].(4) பீமனின் பயிற்சிக் காலம் முடிந்ததும், தியுமத்சேனனைப் போன்ற பலம் பெற்றுத் தொடர்ந்து தனது சகோதரர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து, தனது வீரத்தைப் பெருக்கத் தொடங்கினான்.(5)
[1] பாண்டவர்களுக்கு பலராமனும், கிருஷ்ணனும் ஏற்கனேவே அறிமுகமாகிவிட்டனர் என்பது இங்கே தெரிகிறது.

Sunday, June 30, 2013

துருபதன் சிறை பிடிக்கப்பட்டான் - ஆதிபர்வம் பகுதி 140

Drupada captured | Adi Parva - Section 140 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 76)

பதிவின் சுருக்கம் : துரோணருக்கு தக்ஷிணையாக துருபதனை சிறைபிடித்துவரச் சென்ற கௌரவர்கள்; கௌரவர்களை விரட்டிய பாஞ்சாலன்; கௌரவர்கள் திரும்பியதும், துருபதனைப் பிடிக்கச் சென்ற நான்கு பாண்டவர்கள்; துருபதனை உயிருடன் கைப்பற்றிய அர்ஜுனன்; துருபதனின் பாதி நாட்டை எடுத்துக் கொண்டு, மீதி நாட்டைக் கொடுத்த துரோணர்; துரோணரைக் கொல்லும் மகனைப் பெறுவதற்காக முயற்சி செய்த துருபதன்...

Drupada captured | Adi Parva - Section 140 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகனின் ஆயுதத் தேர்ச்சியைக் கண்ட துரோணர், தனது கூலியைக் {தக்ஷிணையைக்} கேட்கும் தருணம் வந்ததெனக் கருதினார்.(1) ஓ! மன்னா, ஆசானான துரோணர், ஒரு நாள், தனது சீடர்களை அழைத்து, அவர்கள் அனைவரிடம் இருந்தும் தன் தக்ஷிணையைப் பெறும் வகையில்,(2) "பாஞ்சால மன்னன் துருபதனிடம் போரிட்டு அவனைச் சிறைபிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள். அஃதுவே உங்களிடம் எனக்குக் கிடைக்கும் மிக ஏற்புடைய கூலியாக இருக்கும்" என்று கூறினார்.(3) அந்த வீரர்களும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, ஆசானுக்குக் தங்கள் காணிக்கையைக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்துக் கொண்டு வேகமாகத் தங்கள் தேர்களில் ஏறிப் புறப்பட்டனர்.(4) அந்த மனிதர்களில் காளைகள், போகும் வழியெங்கும் பாஞ்சாலர்களை தாக்கியபடியே சென்று, பெரும் பலம்வாய்ந்தவனான அந்தத் துருபதனின் நகரத்தை முற்றுகையிட்டுத் தாக்கினர்.(5)

Saturday, June 29, 2013

அர்ஜூனன் மாயாஜாலம் - ஆதிபர்வம் பகுதி 137

Arjuna showed his profound skill | Adi Parva - Section 137 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 73)

பதிவின் சுருக்கம் : சினம் கொண்ட பார்வையாளர்கள் துரியோதனனுக்கு ஆதரவாகவும், பீமனுக்கு ஆதரவாகவும் பிரிந்து நின்றது; பீமதுரியோதன மோதலை நிறுத்திய துரோணர்; அர்ஜுனன் செய்து காட்டிய மாயாஜாலத்தில் மயங்கிய மக்கள்; வாயிலில் கரவோசையைக் கேட்டுத் திரும்பிய மக்கள்; பரபரப்புடன் எழுந்து நின்ற துரியோதனன்...

Arjuna showed his profound skill | Adi Parva - Section 137 | 
Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "பலம் பொருந்திய குரு மன்னனும், பீமனும் அரங்கத்தினுள் நுழைந்ததும், பார்வையாளர்கள் தங்கள் மனவேற்றுமையால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இருபிரிவாகப் பிரிந்தனர்.(1) சிலர், "குருக்களின் வீர மன்னனைப் பாருங்கள்", சிலர், "பீமனைப் பாருங்கள்!" என்றும் கூவினர். இப்படிப்பட்ட கூவல்களின் காரணமாக அங்கே திடீரெனப் பெருங்கூச்சல் எழுந்தது.(2) அந்த இடம் ஒரு கலங்கிய கடலைப் போலக் காட்சி அளித்ததைக் கண்ட புத்திசாலியான பரத்வாஜர் {துரோணர்}, தனது மகன் அஸ்வத்தாமனை அழைத்து,(3) "பயிற்சியில் தேர்ந்தவர்களும்,  பெரும்பலம் கொண்டவர்களுமான இவ்விரு வீரர்களையும் தடுத்து நிறுத்துவாயாக. பீமனுக்கும், துரியோதனனுக்குமான இந்த மோதலால் கூட்டத்தின் கோபம் தூண்டப்படக் கூடாது" என்றார்”.(4)


Friday, June 28, 2013

பிரம்மாயுதத்தைப் பெற்ற அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 135

Arjuna gained Brahmastra | Adi Parva - Section 135 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 71)

பதிவின் சுருக்கம் : மற்ற பிள்ளைகளைப் போலவே குறியை அடிக்க அர்ஜுனனையும் அழைத்த துரோணர்; அர்ஜுனனின் பதிலால் அகமகிழ்ந்தது; குறியை அடித்த அர்ஜுனன்; நீராடச் சென்ற துரோணரை பிடித்துக் கொண்ட முதலை; முதலையைக் கொன்று துரோணரை விடுவித்த அர்ஜுனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மாஸ்திரத்தைத் தந்த துரோணர்...

Arjuna gained Brahmastra | Adi Parva - Section 135 | 
Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "அனைவரும் தோற்றதும், துரோணர் புன்னகையுடன் அர்ஜுனனை அழைத்து, "உன்னால் அக்குறி அடிக்கப்பட வேண்டும்; எனவே, உனது பார்வையை அதில் செலுத்துவாயாக.(1) நான் உத்தரவிட்டதும் நீ உனது கணையை ஏவ வேண்டும். எனவே, ஓ! மகனே, வில் மற்றும் கணையுடன் ஒரு கணம் இங்கே நிற்பாகயாக" என்றார்.(2)

இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அர்ஜுனன், குருவின் விருப்பப்படித் தனது வில்லை வளைத்து அப்பறவைக்குக் குறி வைத்து நின்றான்.(3) ஒரு நொடிக்குப் பிறகு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது போல, “ஓ! அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா?" என்று கேட்டார்.(4)

அதற்கு அர்ஜுனன், "நான் அப்பறவையை மட்டுமே காண்கிறேன். உம்மையோ, அம்மரத்தையோ நான் காணவில்லை" என்றான்.(5)

Thursday, June 27, 2013

ஏகலவ்யன், துரோணர், அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 134

Ekalavya, Drona and Arjuna | Adi Parva - Section 134 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 70)

பதிவின் சுருக்கம் : தமது மகனுக்கும், சீடர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டிய துரோணர்; அஃதை அறிந்து கொண்ட அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு இரவில் உணவிட வேண்டாம் என்று சமயற்காரனிடம் சொன்ன துரோணர்; இரவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுனன்; துரோணரின் அன்பைப் பெற்ற அர்ஜுனன்; ஏகலவ்யனைச் சீடனாக ஏற்காத துரோணர்; ஏகலவ்யனின் திறமையைக் கண்ட இளவரசர்கள்; கட்டைவிரலைக் கூலியாகக் கேட்ட துரோணர்; துரோணர் தன் சீடர்களுக்கு வைத்த சோதனை...

Ekalavya_Adi Parva - Section 134 | Mahabharata In Tamil

வைசம்பாயனர் சொன்னார், "இப்படிப் பீஷ்மரால் வழிபடப்பட்டவரும், மனிதர்களில் முதன்மையானவரும், பெரும் சக்தியைக் கொண்டவருமான துரோணர், குரு குலத்தவரின் வசிப்பிடத்திலேயே தங்கி, அங்கேயே புகழுடன் வாழ ஆரம்பித்தார்.(1) அவர் சிறிது காலத்திற்கு ஓய்வெடுத்த பின், பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளான கௌரவர்களை அழைத்து, அவருக்குச் சீடர்களாகக் கொடுத்தார். துரோணருக்குப் பல மதிப்புமிக்கப் பொருட்களையும் பரிசாகக் கொடுத்தார் பீஷ்மர்.(2) அந்தப் பெரும்பலசாலி (பீஷ்மர்) பரத்வாஜரின் மகனுக்கு {துரோணருக்கு} நெல் மற்றும் பலவித செல்வங்கள் நிறைந்ததும், அழகானதும், தூய்மையானதுமான வீடு ஒன்றையும் கொடுத்தார்.(3) அதன்பின், வில்லாளிகளில் சிறந்த துரோணர் மகிழ்ச்சியுடன், பாண்டு மற்றும் திருதராஷ்டிரனின் மைந்தர்களான அந்தக் கௌரவர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(4)

Thursday, January 03, 2013

மஹாபாரதம்



        என்னை வேறு மனிதனாக்கிய காவியம். இது எத்தனை பேரின் மனங்களை மாற்றியிருக்கும்! அதன் கதைக்களம், கதை சொல்லும் பாங்கு, கிளைக் கதைகள், கதைகளுக்குள் முடிச்சு. கதையின் நீளம் என்று எதைப் பார்த்தாலும் பிரம்மிப்பாக இருந்தது.
        ஆனால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் எத்தனை பேர் இதைப் படிப்பார்கள் என்ற கவலையும் உள்ளது. என் இளவயதில் எனது தாயார் எதற்கெடுத்தாலும் மஹாபாரதக் கதை சொல்லியே ஒரு செயலை விளக்குவார். அப்போதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கும். 'என்னடா எதற்கெடுத்தாலும் ஒரு கதையா?' என்று நினைப்பேன்.
        என் அதிர்ஷ்டம் தூர்தர்ஷனில் 1988ல் மஹாபாரதம் தொடராக வந்தது. அப்போதெல்லாம் இரண்டே சேனல்கள்தானே, வேறு வழியே இல்லை இந்தியாக இருந்தாலும் அத்தொடரைப் பார்த்துத்தான் ஆகவேண்டும்.

அந்தத் தொடரில் வரும் துரியோதனன், பீஷ்மர், அர்ஜூனன், கிருஷ்ணன் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டன. அதன் பிறகு எனது தாய் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதெல்லாம் அஃதை ஆர்வமாகக் கேட்கத்தொடங்கினேன். ஞாயிற்றுக்கிழமையானால் எப்போது மஹாபாரதம் போடுவார்கள் என்று ஏங்கத் தொடங்கினேன்.
    அப்போதெல்லாம் என் தந்தை துக்ளக் பத்திரிகை வாங்குவார். அந்த பத்திரிக்கையைச் சீண்டக்கூட மாட்டேன். திடீரென்று ஒருநாள் அந்த பத்திரிக்கையின் ஒரு பக்கம் விரிந்து கிடந்தது. அதில் டி.வி. தொடர் தமிழ் வசனங்களுடன் அப்படியே இருந்தது. அதையும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பள்ளிப் புத்தகங்களைத் தவிர்த்து வேறு புத்தகங்களைப் படித்தது அதுவே முதல் முறை. அந்தத் தொடரில் திரு.சோ அவர்கள் ஆங்காங்கே வியாச பாரத்தில் இப்படியிருக்கும், ஆனால் இந்த டி.வி. தொடரில் இப்படி இருக்கிறது என்று கோடிட்டுக் காட்டுவார். 'ஆகா! வியாச பாரதம் தானே மூலம். அதை நம்மால் படிக்க முடியவில்லையே' என்று நினைக்க ஆரம்பித்தேன்.

       
ராஜாஜியின் மகாபாரதம்
அட்டைப்படம்
ஒரு நாள் பள்ளிக்கு என் தந்தையுடன் செல்லும்போது, தெருவோரத்தில் ஒரு புத்தகக்கடையில் ராஜாஜி எழுதிய மஹாபாரதம் என் கண்களைக் கவர்ந்தது. என் தந்தையிடம் எனக்கு அது வேண்டும் என்று கேட்க பயம். வீட்டிற்குச் சென்று என் தாயாரிடம் கேட்டேன். "நீ எல்லாம் அது படிக்க முடியாதுப்பா. வளந்த பிறகு அம்மா வாங்கித் தரேன்'', என்றார் என் தாயார். எனக்கு வருத்தமாகிவிட்டது.

        டிப்ளமா முதல் ஆண்டு சேர்ந்தேன். இப்போது என் கைகளில் பேருந்து மற்றும் உணவு செலவுக்காக வீட்டில் கொடுக்கும் பணம் சேர ஆரம்பித்தது. ஒரு நாள் ஒரு புத்தகக் கடையில் மகாபாரதம் பளிச்சிட்டது. நான் யோசிக்கவே இல்லை, வாங்கிவிட்டேன். அதைப் படித்த பிறகும் திருப்தி ஏற்படவில்லை. முழுவதும் அறிய முடியவில்லையே என்ற ஏக்கம்.
        பின்னர் துக்ளக்-ல் சோ அவர்களே புதிய தொடராக "மஹாபாரதம் பேசுகிறது" எழுத ஆரம்பித்தார். வாராவாரம் அதைப் படிக்க ஆரம்பித்தேன். 'சே! என்னடா இந்தவாரம் இவ்வளவு சுருக்கமா போயிடுச்சேன்னு' நினைப்பேன். பிறகு "மஹாபாரதம் பேசுகிறது'' என்று புத்தகங்களாகவே இரண்டு வால்யூமாக வெளியிட்டார் சோ. எங்கு கிடைக்கும்; தேடினேன்; கிடைக்கவில்லை. மயிலாப்பூர் அலயன்ஸ் கம்பெனியில் கிடைக்கும் என்று துக்ளக்கில் விளம்பரம் வந்தது. விலை ரூ.500/- என்று நினைக்கிறேன். என் தாயாரிடம் கேட்டேன். "கண்ணா! அவ்வளவுலாம் செலவிடக்கூடாதுப்பா" என்றார்கள். இரண்டு நாள் அடம்பிடித்து, கைகளில் பணத்தை வாங்கிக் கொண்டு, மையிலாப்பூர் சென்று புத்தகங்களை  வாங்கிவிட்டேன். நோபல் பரிசு பெற்றது போன்ற உணர்வு.
        அதைப்படித்து, 'டிவி மஹாபாரதத்திற்கும், ஒரிஜினல் மஹாபாரதத்திற்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது' என்று நினைத்தேன். ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். என் தாயாரே ஆச்சரியப்பட்டார். மஹாபாரதத்தில் சில கதைகள் பற்றி நானும் என் தாயாரும் வாதிட ஆரம்பித்தோம். என் தாயார் "என்னை விட உனக்கு அதிகமாகத் தெரிகிறதே" என்று பெருமிதமாகச் சொன்னார். ஆனால், திரு.சோ அவர்களும் இது வெறும் சுருக்கம்தான், முழுமையானது அல்ல என்று குறிப்பிட்டுவிட்டார். சுருக்கமே ரூ.500/-, முழுமையானது என்றால் 'ஆகா! இந்த ஜென்மத்துல படிச்சு முடிக்க மாட்டோம்'னு நினைத்தேன்.     
கிசாரி மோகன் கங்குலியின்
மஹாபாரதம்
அட்டைபடம்
      பல வருடங்களுக்குப் பிறகு என் வீட்டில் கம்ப்யூட்டர் வந்தது, இன்டர்நெட் வந்தது. ஏதோ தேடப் போக, Sacredtexts வலைத்தளத்தில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் "மஹாபாரதம்" ஆங்கில மொழி பெயர்ப்பு இலவசமாக முழுமையானப் பதிப்பாகக் கிடைத்தது. ஒவ்வொரு பதிவாக என் கோப்பில் சேகரித்தேன். A4 அளவு பக்கத்தில், 9 புள்ளி எழுத்துருவில் 2222 பக்கங்கள் வந்தது. பெயர்க்குறிப்புகள் வரும் இடம் எல்லாம் எனக்கு சுவாரசியமாக இல்லாததால். அவை வரும்போதெல்லாம் அப்பக்கங்களைத் தவிர்த்துவிட்டு கதைக்குள் சென்றுவிடுவேன். கதையின் பிரம்மாண்டத்தை உணர்ந்தேன். எத்தனைக் கிளைக் கதைகள் அத்தனைக்கும் ஆசிரியரின் முடிச்சு. அப்பப்பா, இனி எந்த ஒரு புத்தகமும் இதன் உச்சத்தை எட்ட முடியாது என்று நினைக்கத் தோன்றியது.

        நாம் ஆரம்பித்து முடிக்கவே 20 வருடங்கள் பிடித்தனவே. இனி வரும் இளைய தலைமுறை இதை எப்படிப் படிக்கும். சுருங்கச் சொல்வதில் பலனில்லை. முழுவதுமான தமிழ் மொழிபெயர்ப்பு என்றால் (இருக்கிறதா என்று கூட எனக்குத் தெரியாது) [1] அது எவ்வளவு விலையிருக்கும். வாங்கிப் படிப்பார்களா? இப்படியே மறைய வேண்டியதுதானா இப்படி ஒரு ஞானப் பொக்கிஷம். எனக்கு இப்போது திரு.சோவை நினைக்க நினைக்க கோபமாக வந்தது. ஏன் சுருங்கச் சொல்லவேண்டும். முழுவதும் சொல்லியிருந்தால் எத்தனை பேர் இதற்குள் (துக்ளக் எப்படியும் வாங்கத்தான் போகிறார்கள்) இலவசமாக மஹாபாரதம் தெரிந்திருப்பார்கள்.

[1] கும்பகோணம் பதிப்பைப் பற்றி ஆதிபர்வம் முக்கால்வாசி மொழிபெயர்ப்பை முடித்த பிறகு தெரிந்து கொண்டேன். ஏற்கனவே ஒரு பெரும்படைப்பு இருக்கும் போது நாமும் இதைச் செய்ய வேண்டுமா? இப்பணியைக் கைவிட்டுவிடலாம் என்று நினைத்தேன். "நம் மொழிபெயர்ப்பு இணையத்தில் என்றும் இலவசமாக இருக்கும். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்" என்று சொன்ன நண்பர் ஜெயவேலன் அவர்களின் வார்த்தைகளுக்குப் பிறகே மீண்டும் உற்சாகமாக மொழிபெயர்க்க ஆரம்பித்தேன்.

        எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ், ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். என் சிற்றறிவுக்கு எட்டியவரை மஹாபாரதத்தை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மாற்ற முடிவு செய்திருக்கிறேன். இது என்னால் முடியுமா தெரியவில்லை. பரமன் மீது பாரத்தைப் போட்டு ஆரம்பிக்கிறேன். "நீ என்ன அவ்வளவு பெரிய ஆளாடா?" என்று கேட்காதீர்கள். நான் பாமரன்தான், என்னைவிடவும் பாமரர்கள் இலவசமாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேத் தொடங்குகிறேன்.

        பெரியவர்கள், மஹாபாரத அறிஞர்கள் என்னனை மன்னிக்க வேண்டும். பிழையிருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்த முயல்கிறேன். ஆதிபர்வம் பகுதி 1 ஒரு வருடத்திற்கு முன் சும்மா விளையாட்டாக மொழிபெயர்ப்பு செய்தேன். அதைத் திரும்பவும் இந்தப் பதிப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். வேண்டாம் என்று அப்படியே தருகிறேன். இனி வரும் பகுதிகளில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தி மொழி பெயர்க்க முயல்கிறேன். இனிதான் மொழிபெயர்க்க வேண்டும். நன்றி!

- செ.அருட்செல்வப் பேரரசன்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்