Pandu became King! | Adi Parva - Section 109 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 45)
பதிவின் சுருக்கம் : குருஜாங்கல நாட்டின் சிறப்பு; இளவரசர்களான திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள்; பாண்டு குருஜாங்கலத்தின் மன்னனானது...
வைசம்பயானர் சொன்னார், "அந்த மூன்று குழந்தைகளின் பிறப்பால் (திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்) குருஜாங்கலர்களும், குருக்ஷேத்திரர்களும், குருக்களும் செழிப்படைந்தனர்.(1) பூமியில் ஏராளமாக விளைந்து அறுவடையானது. பயிர்களும் நல்ல சுவையுடன் இருந்தன. காலாகாலத்திற்கு மேகங்கள் மழையைப் பொழிந்தன. மரங்களில் பழங்களும் மலர்களும் நிறைந்திருந்தன.(2) கால்நடைகளும், பறவைகளும் மற்ற ஊனுண்ணும் பிற விலங்குகளும் மகிழ்ந்திருந்தன. மலர்கள் நறுமணத்தோடும், பழங்கள் இனிமையோடும் இருந்தன.(3) நகரங்களில் ஒவ்வொரு துறைசார்ந்த வணிகர்களும், கைவினைஞர்களும், வியாபாரிகளும், கலைஞர்களும் நிறைந்திருந்தனர். மக்கள் வீரம், கல்வி, நேர்மையோடிருந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.(4) அங்கே திருடர்களோ பாவிகளோ அங்கே யாருமில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பொன்னுலகைப் {சத்திய யுகத்தில் இருந்ததைப்} போல இருந்தன.(5)
மக்கள் அறச்செயல்களுக்கும், வேள்விகளுக்கும், சத்தியத்துக்கும் தங்களை அர்ப்பணித்து, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திப் பாசத்தோடு இருந்து வளமடைந்து இருந்தனர்.(6) அவர்கள் கர்வம், கோபம், பேராசை ஆகியவற்றை ஒழித்து, நல்ல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சியோடு இருந்தனர்.(7) குருக்களின் தலைநகரம் பெருங்கடலைப் போன்று நிறைந்திருந்தது. அது நூற்றுக்கணக்கான அரண்மனைகளையும், மாளிகைகளையும், மேகத்தைப் போன்ற கருமையான பெரும் வாயில்களையும், வளைவுகளையும் கொண்டு இன்னொரு அமராவதி போல இருந்தது. மனிதர்கள் நதிகளிலும், ஏரிகளிலும், கிணறுகளிலும், நந்தவனங்களிலும், அழகான சோலைகளிலும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்தனர்.(7,8) தெற்கு குருக்கள், வடபுல குருக்களிடம் நல்லொழுக்கப் போட்டியால், சித்தர்களுடனும், சாரணர்களுடனும், முனிவர்களுடனும் இசைந்து இருந்தனர்.(10)
அந்த மகிழ்ச்சிகரமான நாட்டில், வளமை பெருகி, எதையும் தொலைத்தவர்கள் இல்லாமலும், கைம்பெண்கள் இல்லாமலும் குரு நாட்டு மக்கள் செழிப்புடன் இருந்தனர்.(11) கிணறுகளும் ஏரிகளும் எப்போதும் நிறைந்தே இருந்தன. சோலைகள் மரங்களால் நிறைந்திருந்தன. பிராமணர்களின் இல்லங்களிலும் அவர்களது வசிப்பிடங்களிலும் செல்வம் நிறைந்திருந்தது. முழு அரசாங்கமும் விழாக்கால மகிழ்ச்சியுடன் திளைத்திருந்தது.(12) ஓ மன்னா {ஜனமேஜயா}! பீஷ்மரால் அறம் சார்ந்து ஆளப்பட்ட அந்த நாடு நூற்றுக்கணக்கான வேள்விக் கம்புகளால் {ஸ்தம்பங்களால்} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(13) அறத்தின் சக்கரம் பீஷ்மரால் இயக்கப்பட்டது. மற்ற நாடுகளிலிருந்த மக்கள் தங்கள் நாட்டைத் துறந்து, இங்கு வந்து வசித்ததால், மக்கள் நெருக்கம் மிகுந்ததாக அந்நாடு இருந்தது.(14) சிறப்பு மிகுந்த இளவரசர்களின் இளமை ததும்பிய செயல்களாலும், சாதனைகளாலும் அந்த நாட்டின் குடிமக்களும் மற்ற மக்களும் அவர்களிடம் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.(15)
ஓ மன்னா, குருக்களின் தலைவர்களின் வீட்டில் "கொடுப்பாயாக" "உண்பாயாக" போன்ற வார்த்தைகளே எப்போதும் கேட்டுக் கொண்டிருந்தன.(16) திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் பெரும் புத்திசாலியான விதுரன் ஆகியோரை பீஷ்மர் தமது பிள்ளைகள் போலவே வளர்த்தார்.(17) அந்தப் பிள்ளைகள் தங்கள் கடமைகளைத் தங்கள் வகைப்படி சரியாகச் செய்து, நோன்புகளுக்கும் கல்விக்கும் தங்களை அர்ப்பணித்தனர். பின்னர் அவர்கள் வேதங்களிலும், பல வீர விளையாட்டுகளிலும் தேர்ச்சி அடைந்து நல்ல இளம் வாலிபர்களாக வளர்ந்தனர்.(18) அவர்கள் விற்பயிற்சியிலும், குதிரையேற்றத்திலும், கதாயுத்தத்திலும், வாள் மற்றும் கேடயச் சண்டைகளிலும், போரில் யானைகளைக் கையாளும் பயிற்சியிலும், நற்பண்புகளை வளர்க்கும் அறநெறிக் கல்வியிலும் தேர்ச்சி அடைந்தனர்.(19) வரலாறுகள், புராணங்கள், மற்றும் கல்வியின் அனைத்துப் பிரிவுகள், வேதங்களிலுள்ள உண்மைகள் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்து ஆழ்ந்த திறமைவாய்ந்த ஞானத்தை அடைந்தனர்.(20)
பெரும் ஆற்றலைக் கொண்டவனான பாண்டு, விற்போரில் எல்லோரிலும் விஞ்சி நின்றான். திருதராஷ்டிரன் உடல் பலத்தில் எல்லோரிலும் விஞ்சி நின்றான்.(21) அறம் மற்றும் அறவிதிகளின் ஞானத்தில் மூவுலகத்திலும் விதுரனுக்கு ஈடு யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.(22) அருகிப் போன சந்தனுவின் பரம்பரை, தழைத்ததைக் கண்டு, 'வீரர்களின் தாய் என்றால் காசி மன்னன் மகள்கள்தான் முதன்மையானவர்கள், நாடு என்றால் குருஜாங்கலமே முதன்மையானது, அறம்சார்ந்த மனிதர்களில் விதுரனே முதன்மையானவன். நகரங்களில் ஹஸ்தினாபுரமே முதன்மையானது' என்ற பேச்சு அனைத்து நாடுகளிலும் பேசப்பட்டது.(23, 24) திருதராஷ்டிரன் தனது குருட்டுத்தன்மையாலும், விதுரன், சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்ததாலும் நாட்டை அடையவில்லை; எனவே பாண்டு மன்னனானான். (25) கடமையாற்றுவதில் சிறந்த பீஷ்மர், ஒருநாள் விதுரனை அழைத்துத் தர்மத்தின் உண்மைகள் மற்றும் அறம் குறித்து விவாதித்தார். அந்தப் பேச்சுப் பின்வருமாறு அமைந்திருந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(26)
ஆங்கிலத்தில் | In English |