Kripa became the Guru of the princes! | Adi Parva - Section 129 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 65)
பதிவின் சுருக்கம் : பீமனைக் காணாமல் தவித்த யுதிஷ்டிரன்; குந்தி அடைந்த துயரம்; எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பீமன்; செய்திகளனைத்தையும் அறிந்தும் அமைதிகாத்த பாண்டவர்கள்; மீண்டும் விஷம் கலந்த துரியோதனன்; விஷத்தைச் செரித்துவிட்ட பீமன்; பாண்டவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி; பிள்ளைகளின் குருவாகக் கிருபரை நியமித்த திருதராஷ்டிரன்...
வைசம்பாயனர் சொன்னார், "அதே நேரத்தில் கௌரவர்களும், பாண்டவர்களும் விளையாடி முடித்துவிட்டு, பீமன் இல்லாமலேயே நகரம் திரும்பினர்.(1) சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், சிலர் ரதங்களிலும் மற்ற வாகனங்களிலும் ஹஸ்தினாபுரம் சென்றடைந்தனர். வழியிலேயே ஒருவருக்கொருவர், "பீமன் நமக்குமுன் சென்றிருப்பான்" என்று சொல்லிக் கொண்டனர்.(2) தீய துரியோதனன் பீமன் தொலைந்ததால் இதயத்தில் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் நகரத்துக்குள் நுழைந்தான்.(3) தீயவை அறியாத அறம்சார்ந்த யுதிஷ்டிரன், மற்றவர்களையும் தன்னைப் போல் நேர்மையாக நினைத்துக் கொண்டான்.(4)
அந்தப் பிருதையின் மூத்த மகன், தனது தம்பியின் மீதுள்ள அன்பால், தனது தாயிடம் சென்று, அவளை வணங்கி, "ஓ தாயே, பீமன் வந்துவிட்டானா?(5) ஓ நற்றாயே, அவனை எங்கேயும் நான் காணவில்லை. அவன் எங்கே சென்றிருக்கிறான்? அவனை நந்தவனத்திலும், அழகான சோலையிலும் நீண்ட நேரமாக நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.(6) ஆனால் அவனை எங்கும் காணவில்லை. இறுதியாக நாங்கள் அந்த வீரப்பீமன் எங்களுக்கு முன்பே இங்கே வந்திருப்பான் என்று நினைத்தோம்.(7) ஓ சிறப்புமிக்க பெருமாட்டியே, நாங்கள் இங்கே பெரும் கவலையுடன் வந்தோம். அவன் இங்கு வந்திருந்தால், இப்போது எங்குச் சென்றுவிட்டான்? அவனை நீ எங்கேயும் அனுப்பியிருக்கிறாயா?(8) பலசாலியான அந்தப் பீமனைக் குறித்து எந்தத் தெளிவும் எனக்கு இல்லை. {நிறைய சந்தேகங்களுடன் இருக்கிறேன்}.(9) அவன் தூங்கிக்கொண்டிருந்தான், இங்கும் அவன் வரவில்லை. அதனால் அவன் (உயிருடன்) இல்லை என்றே நான் நினைக்கிறேன்" என்றான்.(10)
பெரும் புத்திசாலியான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட குந்தி அதிர்ச்சியால் உரக்கக்கூவியபடி, "அன்பு மகனே, நானும் பீமனைக் காணவில்லை. அவன் என்னிடம் வரவில்லை.(11) ஓ... விரைவாக உனது தம்பிகளுடன் சென்று அவனைக் கவனமாகத் தேடுவாயாக" என்றாள்.
துயரத்தால் குந்தி தனது மூத்த மகனிடம் இப்படிச் சொல்லிவிட்டு,(12) விதுரனை அழைத்து, "ஓ சிறப்புமிக்க க்ஷத்ரி {விதுரா}, பீமசேனனைக் காணவில்லை. அவன் எங்குச் சென்றுவிட்டான்?(13) அவனது மற்ற சகோதரர்கள் அனைவரும் நந்தவனத்திலிருந்து திரும்பிவிட்டனர். பெரும் கரம் கொண்ட பீமன் மட்டும் இன்னும் வீடு வரவில்லை.(14) துரியோதனன் அவனை விரும்பவில்லை. அந்தக் கௌரவன் {துரியோதனன்} கபடக்காரன், வீண் வழக்காடுபவன், தாழ்ந்த மனதுடையவன் மற்றும் விவேகமற்றவனுமாவான். அரியணையின் மீது வெளிப்படையான துராசையைக் கொண்டுள்ளான்.(15) அவன் கோபத்தால் எனது அன்புக்குரியவனைக் கொன்றுவிட்டானோ என்று அஞ்சுகிறேன். இஃது எனக்குக் கடும் துன்பத்தை விளைவிக்கிறது. நிச்சயமாக இஃது எனது இதயத்தை எரிக்கிறது" என்றாள்.(16)
விதுரன், "அருளப்பட்ட பெருமாட்டியே, அப்படிச் சொல்லாதே. உனது மற்ற மகன்களைக் கவனத்துடன் காத்துக் கொள்வாயாக. அந்தத் தீய துரியோதனனை குற்றஞ்சாட்டினால், அவன் உனது மற்ற மகன்களையும் கொன்று விடக்கூடும்.(17)அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, உனது மகன்கள் அனைவரும் நீண்டநாட்களுக்கு வாழ்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். எனவே, பீமன் கண்டிப்பாகத் திரும்பி வந்து உனது இதயத்துக்கு மகிழ்வூட்டுவான்" என்று மறுமொழி கூறினான்".(18)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த ஞானமுள்ள விதுரன் குந்தியிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். குந்தி பெரும் துயரத்துடன் தனது இல்லத்திலேயே தங்கியிருந்தாள்.(19) அதேவேளையில், பீமசேனன் எட்டு நாட்களுக்குப் பிறகு, தனது துயிலிலிருந்து எழுந்து, தான் அருந்திய ரசம் முழுவதும் செரித்திருந்ததால், பெரும் பலவானாகத் தன்னை உணர்ந்தான். அவன் விழித்ததைக் கண்ட நாகர்கள் அவனுக்கு ஆறுதலளித்து உற்சாகமூட்டியபடியே,(20,21) "ஓ பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனே, பலத்தைக் கொடுக்கும் இந்த ரசத்தை நீ குடித்ததனால், அஃது உனக்குப் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது உன்னை யாராலும் போரில் வெல்லமுடியாது.(22) ஓ குரு குலக் காளையே, மங்கலமானதும், புனிதமானதுமான இந்த நீரில் நீராடி வீடு திரும்புவாயாக. நீ இல்லாததால் உனது சகோதரர்கள் அமைதியை இழந்தவர்களாக இருக்கின்றனர்" என்றனர்.(23)
அதன்பிறகு பீமன் அந்த நீரில் நீராடி தன்னைத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை தரித்துக் கொண்டான். வெண்மலர்களாலான பூமாலைகளைச் சூடிக் கொண்டு, நாகர்களால் கொடுக்கப்பட்ட பரமான்னத்தை (அரிசியும், சர்க்கரையும் கலந்த கூழ்) உண்டான். பிறகு அந்த எதிரிகளை அடக்குபவன், பல்வேறு தெய்வீக ஆபரணங்களையும் பூண்டு, பாம்புகளின் வாழ்த்துகளையும், துதிகளையும் பெற்றுக் கொண்டு, பதிலுக்குத் தனது மரியாதையையும் செலுத்திப் பாதாள லோகத்திலிருந்து எழுந்து வந்தான்.(24-26) நாகர்கள் அந்தத் தாமரைக் கண் கொண்ட பாண்டவனை நீரிலிருந்து தூக்கி, அவன் விளையாடிக் கொண்டிருந்த அதே நந்தவனத்தில் இறக்கிவிட்டு, அவன் கண் எதிரிலேயே மறைந்தனர்.(27,28)
பூமியின் பரப்புக்குத் திரும்பிய பலசாலியான பீமன், தனது தாயிடம் மிக வேகமாக ஓடிச் சென்றான்.(29) அவளுக்கும், தனது மூத்த சகோதரனுக்கும் தலைவணங்கி, தனது இளைய சகோதரர்களின் உச்சியை முகர்ந்து பார்த்த {தலையை மணத்திப் பார்த்து} அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {பீமன்},(30) அவனது தாய் மற்றும் மனிதர்களில் காளைகளைப் போன்ற தனது சகோதரர்களின் அணைப்புக்குள் சென்றான். அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன், திரும்பத் திரும்ப, "இன்று நக்கென்ன மகிழ்ச்சி! இஃது என்ன ஒரு மகிழ்ச்சி!" என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(31)
பிறகு, பெரும் பலமும், வீரமும் கொண்ட பீமன் நடந்தது அத்தனையும் தனது சகோதரர்களிடம் தெரிவித்தான். துரியோதனின் தீச்செயல், நாகர்களின் உலகத்தில் கிடைத்த நற்பேறு மற்றும் கெடுபேறுகளைக் {துரதிர்ஷ்டங்களைக்} கொண்ட நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்தான்.(32,33) அத்தனையும் கேட்ட யுதிஷ்டிரன், "இக்காரியத்தில் அனைவரும் அமைதியாக இருங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேசாதீர்கள்.(34) இன்றிலிருந்து, ஒருவருக்கொருவர் உங்களைக் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னான். நேர்மையான யுதிஷ்டிரனால் இப்படி எச்சரிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து மிகுந்த விழிப்புணர்வு கொண்டனர். குந்தியின் மகன்களுக்கு அப்படி எந்தக் கவனக்குறைவும் ஏற்படாதவண்ணம், விதுரன் நல்ல ஆலோசனைகள் வழங்கினான்.(35,36)
சில காலம் கழித்து, மறுபடியும் துரியோதனன் பீமனின் உணவில் புத்தம்புதிய கடும் விஷத்தைக் கலந்தான்.(37) ஆனால், பாண்டவர்கள் மீது யுயுத்சு (திருதராஷ்டிரனுக்கு வைசிய மனைவியின் மூலம் பிறந்தவன்) கொண்ட நட்பினால், அந்தக் காரியத்தை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டான். இருப்பினும் விருகோதரன் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை விழுங்கி, முழுவதுமாகச் செரித்தும் விட்டான்.(38) அந்தக் கடும் விஷத்தால் பீமனிடம் {அவன் அதைச் செரித்துவிட்டதால் அவனிடம்} எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.(39) பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன்[1] மற்றும் சகுனி ஆகியோர் கூடிப் பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர்.(40) அந்தத் திட்டங்கள் அனைத்தையும் பாண்டவர்கள் அறிந்தாலும், விதுரனின் ஆலோசனைப்படித் தங்கள் கடுஞ்சீற்றத்தை அடக்கிக் கொண்டனர்[2].(41)
அதே நேரத்தில் மன்னன் (திருதராஷ்டிரன்), குரு இளவரசர்கள் சோம்பலுடன், குறும்புத்தனங்கள் நிரம்பி வளர்வதைக் கண்டு, கௌதமரை அவர்களுக்குக் குருவாக நியமித்தான். அவர்களை {இளவரசர்கள்} அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாணற்புதரில் பிறந்த கௌதமர் {கௌதமரின் பேரனான கிருபர்}, வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். குரு இளவரசர்கள் அவரிடம் ஆயுதக் கல்வியைக் கற்கத் தொடங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(42-44)

[1] கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் பதிப்புகளில் இங்கே கர்ணன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே கர்ணனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த இடத்தோடு இந்தப் பகுதி முடிந்து விடுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே முடிகிறது. ஆனால் கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் பின்வரும் செய்தியும் இருக்கிறது. பின்வரும் செய்தி மூன்று ஸ்லோகங்களில் அடங்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையில், (42-44) என ஸ்லோக எண்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
அதே நேரத்தில் மன்னன் (திருதராஷ்டிரன்), குரு இளவரசர்கள் சோம்பலுடன், குறும்புத்தனங்கள் நிரம்பி வளர்வதைக் கண்டு, கௌதமரை அவர்களுக்குக் குருவாக நியமித்தான். அவர்களை {இளவரசர்கள்} அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாணற்புதரில் பிறந்த கௌதமர் {கௌதமரின் பேரனான கிருபர்}, வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். குரு இளவரசர்கள் அவரிடம் ஆயுதக் கல்வியைக் கற்கத் தொடங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(42-44)
ஆங்கிலத்தில் | In English |