Jealousy of Duryodhana | Adi Parva - Section 143 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : அரக்கு மாளிகை எரியூட்டப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்ன வைசம்பாயனர்; துரியோதனனுக்கும், திருதராஷ்டிரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
Jealousy of Duryodhana Adi Parva - Section 143 | Mahabharata In Tamil |
அதன் பொருட்டுப் பெரும் காற்றையும், கடும் அலைகளையும் சமாளிக்கும் ஒரு படகைக் கொணர்ந்த விதுரன், குந்தியிடம்,(5) "இந்தத் திருதராஷ்டிரர் (குரு) குலத்தின் பெருமைகளையும், வாரிசுகளையும் அழிக்கப் பிறந்திருக்கிறார். தனது தீய ஆன்மாவால், நித்தியமான அறத்தை அவர் கைவிடப்போகிறார்.(6) ஓ! அருளப்பட்டவளே, காற்றிலும், அலைகளிலும் நிலைத்து நிற்கும் ஒரு படகை இந்த நீரோட்டத்தில் தயாராக வைத்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மரணம் விரித்திருக்கும் வலையிலிருந்து, அப்படகில் ஏறி உனது மைந்தர்களுடன் தப்பித்துக் கொள்வாயாக" என்றார்.(7)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட சிறப்பு வாய்ந்த குந்தி, பெரிதும் துயரடைந்தாள். தனது மைந்தர்களுடன், அந்தப் படகில் அடியெடுத்து வைத்து, கங்கையில் சென்றாள்.(8) பாண்டவர்கள், விதுரனின் ஆலோசனைப்படி, அந்தப் படகைக் கைவிட்டு, தங்கள் எதிரிகள் (தாங்கள் வாரணாவதத்தில் இருந்த போது) கொடுத்த செல்வத்தை எடுத்துக் கொண்டு அடர்ந்த கானகத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்தனர்.(9) இருப்பினும், பாண்டவர்களின் அழிவுக்காகக் கட்டப்பட்டிருந்த அரக்கு வீட்டில், ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கு வந்திருந்த ஓர் அப்பாவி நிஷாதப் {வேடுவப்} பெண்மணி, தனது மைந்தர்களுடன் எரிந்து போனாள்.(10) {அந்த அரக்கு வீட்டைக் கட்டிய} மிலேச்சர்களில் இழிந்தவனான பாவி புரோச்சனனும் அந்த நெருப்பில் எரிந்து போனான். இப்படியே திருதராஷ்டிரனின் மைந்தர்கள் தங்கள் ஆலோசகர்களுடன், அவர்களது எதிர்பார்ப்புகளில் ஏமாற்றப்பட்டனர் {பாண்டவர்கள் எரிந்தார்கள் என்று நம்பி அவர்கள் ஏமாந்தனர்}.(11)
இப்படியே விதுரனின் ஆலோசனையால், சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள் தங்கள் தாயுடன் காக்கப்பட்டனர். ஆனால், (வாரணாவத) மக்கள், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறியவில்லை.(12) அரக்குவீடு எரிவதைக் கண்ட வாரணாவத மக்கள் (பாண்டவர்கள் எரிந்து இறந்துவிட்டதாகக் கருதி) பெரிதும் வருத்தப்பட்டனர்.(13) அவர்கள் மன்னன் திருதராஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் தெரியப்படுத்தத் தங்கள் தூதர்களை அனுப்பினர். அவர்கள் அந்த ஏகாதிபதியிடம் சென்று, "உமது இலக்கை நீர் அடைந்துவிட்டீர். இறுதியாக, பாண்டவர்களை நீர் எரித்துக் கொன்றுவிட்டீர்!(14) ஓ! குரு குல மன்னா {திருதராஷ்டிரரே}, உமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு, உ்மது பிள்ளைகளுடன் இந்த நாட்டை மகிழ்ச்சியாக அனுபவிப்பீராக" என்றனர். இதைக் கேட்ட திருதராஷ்டிரனும் அவனது பிள்ளைகளும், தங்கள் உறவினர்களையும், க்ஷத்திரியையும் (விதுரனையும்), குரு குலத்தில் முதன்மையான பீஷ்மரையும் சேர்த்துக் கொண்டு, தாங்கள் துக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, பாண்டவர்களுக்கு இறுதி மரியாதைகளைச் செய்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(15,16)
ஜனமேஜயன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, அரக்கு வீடு எரிந்த வரலாற்றையும், அதிலிருந்து பாண்டவர்கள் தப்பித்த வரலாற்றையும் நான் முழுவதுமாகக் கேட்க விரும்புகிறேன்.(17) தீயவரின் (கணிகரின்) ஆலோசனைகளைக் கேட்டு, செயல்பட்ட அவர்கள் செய்த (கௌரவர்கள்) செயல் கொடுஞ்செயலாகும். நடந்த வரலாறு அத்தனையும் எனக்குச் சொல்வீராக. நான் அதைக் கேட்கும் ஆர்வத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்" என்று கேட்டான்.(18)
வைசம்பாயனர் சொன்னார், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அரக்கு மாளிகை எரிந்ததையும், ஓ! ஏகாதிபதி! பாண்டவர்கள் தப்பியதையும் பற்றி நான் இப்போது உரைக்கக் கேட்பாயாக.(19) பலத்தால் பீமசேனனும், ஆயுதச் சாதனைகளால் அர்ஜுனனும் விஞ்சியிருப்பதைக் கண்ட தீய துரியோதனன் வருத்தத்துடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(20) சூரியனின் மகனான கர்ணனும், சுபலனின் மகனான சகுனியும் பல வழிகளில் பாண்டவர்களின் மரணத்திற்காக முயன்றனர்.(21) பாண்டவர்களும், ஒன்றன்பின் ஒன்றாக அவற்றைத் தடுத்துவிட்டு, விதுரனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவற்றைப் பற்றி எப்போதுமே பேசாமலிருந்தனர்.(22)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, பாண்டு மைந்தர்களின் சாதனைகளைக் கண்ட குடிமக்கள், பொது இடங்கள் அனைத்திலும் அவர்களைப் பற்றியே பேசத் தொடங்கினர்.(23) மாளிகை முற்றத்திலும், மற்ற இடங்களிலும் கூடிப் பாண்டுவின் மூத்த மகனே (யுதிஷ்டிரன்), நாட்டை ஆளும் தகுதியைப் பெற்றவன் என்று அவர்கள் பேசினர்.(24) அவர்கள், "திருதராஷ்டிரன், அறிவுக்கண் கொண்டவனாக இருந்தாலும் (பிறவியிலேயே) பார்வையற்றவனாக இருப்பதால், முன்பே அவனால் நாட்டை அடைய முடியவில்லை. எனவே, இப்போது அவனால் எப்படி அடைய முடியும்?(25) கடும் நோன்புகள் நோற்று, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் சந்தனுவின் மைந்தனான பீஷ்மர் முன்பே ஆட்சி உரிமையை நிராகரித்துவிட்டார். அவர் இப்போதும் அஃதை ஏற்கமாட்டார். (26) எனவே, நாம் இப்போது, பாண்டவர்களில் மூத்தவனை (அரியணையில்) உரிய சடங்குகளுடன் {மன்னனாக} அமர்த்தலாம். அவன் வேதமறிந்தவனாகவும், உண்மையானவனாகவும், அன்பானவனாகவும் இருக்கிறான்.(27) சந்தனுவின் மகனான பீஷ்மரையும், நீதிகள் அறிந்த திருதராஷ்டிரனையும் அவன் வழிபட்டு நிற்கிறான். அவன் முன்னவரையும், பின்னவரையும் அவர்களது பிள்ளைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியாக வைத்திருப்பான்" என்றனர்.(28)
யுதிஷ்டிரன் மீது அன்பு கொண்டவர்கள் இப்படிப் பேசிச் செல்வதைக் கேட்ட பாவியான துரியோதனன், மிகுந்த துன்பம் அடைந்தான்.(29) பெருந்துயர் கொண்ட அந்தத் தீய இளவரசனால் {துரியோதனனால்} அப்பேச்சுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொறாமையால் கொதிப்படைந்து, திருதராஷ்டிரனிடம் சென்று,(30) அவன் தனிமையாக இருப்பதைக் கண்டு, மரியாதையுடன் வணங்கி, யுதிஷ்டிரனை ஆதரிக்கும் குடிமக்களால் வெறுப்புண்டு, அந்த ஏகாதிபதியிடம்,(31) “ஓ! தந்தையே, கலைந்து செல்லும் குடிமக்கள் தீய சகுனத்தைக் காட்டும் வார்த்தைகளை உச்சரிப்பதைக் கேட்டேன். உம்மையும், பீஷ்மரையும் கூடக் கடந்து, அவர்கள் பாண்டுவின் மகனை மன்னனாக்க விரும்புகின்றனர்.(32) பீஷ்மர் இந்த நாட்டை ஆளமாட்டார். எனவே அவர் இதை ஏற்றுக் கொள்வார். குடிமக்கள் நமக்குப் பெருந்தீங்கு செய்ய முனைகின்றனர் என்றே தெரிகிறது.(33) பாண்டு, தமது மூதாதையர் நாட்டைத் தமது அறத்தின் சாதனைகளால் அடைந்தார். ஆனால் நீரோ, நாட்டைப் பெற முழுத் தகுதி இருந்தும், உமது குருட்டுத்தன்மையால், அஃதை அடைய முடியவில்லை.(34) பாண்டுவின் வாரிசு என்ற முறையில் பாண்டுவின் மகன் இந்நாட்டை அடைந்தால், அவனுக்குப் பிறகு அவனது மகனும், அதற்குப் பிறகு அவனது மகனின் மகனுமே பாண்டுவின் வழியில் அதைப் பெறுவார்கள்.(35) அவ்வழக்கத்தின் பயனாக, ஓ! உலகத்தின் மன்னா! நாமும், நமது சந்ததியும் அரச குலத்திலிருந்து விலக்கப்பட்டு, மனிதர்கள் அனைவராலும் நிச்சயம் அவமதிக்கப்படுவோம்.(36) எனவே, ஓ! ஏகாதிபதி! நிலைத்த துயரத்திற்கு நாம் ஆளாகாதவாறும், உணவுக்காக மற்றவர்களை நம்பியிருக்கும் நிலை நமக்கு ஏற்படாதவாறும், தகுந்த ஆலோசனைகளைப் பெறுவீராக.(37) ஓ! மன்னா, நீர் ஏற்கனவே அரசுரிமையைப் பெற்றுவிட்டீர், எனவே எவ்வளவுதான் மக்கள் நமக்குச் சாதகமாக இல்லையெனினும் நாமே அரசாட்சியைத் தொடர வேண்டும்" என்றான் {துரியோதனன்}".(38)
ஆதிபர்வம் பகுதி 143ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |