Let Pandava's go Varanavata | Adi Parva - Section 144 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டிய துரியோதனன்; அதிலுள்ள பாதகங்களை எடுத்துக்கூரிய திருதராஷ்டிரன்; சாதகங்களை எடுத்துச் சொன்ன துரியோதனன்....
Let Pandava's go Varanavata Adi Parva - Section 144 | Mahabharata In Tamil |
தனது மகனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், சிறிது நேரம் யோசித்துவிட்டுத் துரியோதனனிடம்,(5) "பாண்டு எப்போதும் அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தான். அவன் எப்போதும் தனது உறவினர்களிடம் கடமையுணர்வுடனேயே இருந்தான். குறிப்பாக என்னிடம் மிகுந்த கடமையுணர்ச்சியுடன் இருந்தான்.(6) அவன் உலக இன்பங்களைப் பெரிதாகக் கருதாமல், நாடு உட்பட அனைத்தையும் எனக்குத் தந்துவிட்டான்.(7) அவனது மகனும், அவனைப் போலவே அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்து, எல்லா நற்செயல்களும் புரிகிறான். அவன் உலகப்புகழை அடைந்து, மக்களின் அன்புக்குரியவனாகவும் இருக்கிறான்.(8) பல கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் அவனை, தந்தைவழியில் அவனுக்கு வந்த நாட்டிலிருந்து எப்படி விரட்ட முடியும்?(9) அமைச்சர்களும், (நாட்டின்) படைவீரர்களும், அவர்களது பேரன்களும் பாண்டுவால் நன்கு பேணிப் பராமரிக்கப்பட்டவர்கள்.(10) ஓ! மகனே, இப்படிப் பழங்காலத்தில் பாண்டுவால் நன்மையடைந்த குடிமக்கள், யுதிஷ்டிரனுக்காக, நம்மை நமது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்த்துக் கொன்றுவிட மாட்டார்களா?" என்றான்.(11)
அதற்குத் துரியோதனன், “ஓ! தந்தையே, நீர் சொல்வது அனைத்தும் உண்மையே. நமது எதிர்காலத்தின் மீது விழுந்திருக்கும் தீமையைக் கணக்கில் கொண்டு, நாம் மக்களுக்குச் செல்வத்தையும், மரியாதைகளையும் கொடுத்தோமென்றால், அவர்கள் நமது அதிகாரத்தைக் கண்டு நம் பக்கமே நிற்பார்கள். ஓ! மன்னா, பொக்கிஷமும், நாட்டின் அமைச்சர்களும் இந்த நொடியில் நமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றனர்.(12,13) எனவே, நீர் ஏதாவது நல்ல வழிமுறைகளைக் கையாண்டு, பாண்டவர்களை இங்கிருந்து வாரணாவத நகரத்திற்கு வெளியேற்றிவிடுவீராக.(14) ஓ! மன்னா, ஆட்சி உரிமைகள் அனைத்தும் என்னிடம் வந்தபிறகு, குந்தி அவளது மைந்தர்களுடன் அவ்விடத்தில் இருந்து இங்கே திரும்பி வரட்டும்" என்று பதிலுரைத்தான்.(15)
திருதராஷ்டிரன், “ஓ! துரியோதனா, இதே சிந்தனைதான் என் மனத்திலும் இருக்கிறது. ஆனால், அது பாவம் நிறைந்த செயலெனவே, நான் அதை வெளியிடவில்லை.(16) பாண்டவர்கள் நாடுகடத்தப்படுவதைப் பீஷ்மரோ, துரோணரோ, க்ஷத்திரியோ {விதுரரோ}, கௌதமரோ (கிருபரோ) ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.(17) ஓ! அன்பு மகனே, அவர்களின் பார்வையில், கௌரவர்களான நாமும், பாண்டவர்களும் இணையானவர்களே. ஞானமுள்ள அறம்சார்ந்த மனிதர்கள் இரு தரப்புகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமாட்டார்கள்.(18) எனவே, நாம் பாண்டவர்களிடம் இப்படி நடந்து கொண்டால், ஓ! மகனே, நாம் குரு குலத்தவர் கைகளாலும், இந்தச் சிறப்புவாய்ந்தவர்கள் கைகளாலும், இந்த முழு உலகத்தின் கைகளாலும் மரணிக்க மாட்டோமா? {அவர்கள் நம்மைக் கொல்லாமல் விடுவார்களா?}" என்று கேட்டான்.(19)
துரியோதனன், "பீஷ்மருக்கு இரு தரப்பிடமும் அளவு கடந்த பாசமெல்லாம் கிடையாது, எனவே அவர் (சச்சரவு வரும்போது) நடுநிலையே வகிப்பார். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} என் பக்கம் இருக்கிறான். மகன் எங்கிருக்கிறானோ அங்கேதான் தந்தையும் இருப்பார் என்பதில் ஐயம் கிடையாது.(20) துரோணரும், அஸ்வத்தாமரும் இருக்கும் பக்கத்தில் தான் சரத்வானின் மகனான கிருபரும் இருக்க முடியும். அவரால் துரோணரையும், தனது தங்கையின் மகனையும் (அஸ்வத்தாமனையும்) புறக்கணிக்க முடியாது.(21) க்ஷத்திரி (விதுரன்), ரகசியமாக நமது எதிரிகள் பக்கத்தில் இருப்பினும், அவரது வாழ்வை நடத்த நம்மையே நம்பியிருக்கிறார். அவர் பாண்டவர்கள் பக்கம் நின்றாலும், அவர் ஒருவரால் மட்டுமே நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது.(22) எனவே, எந்த அச்சமும் கொள்ளாமல் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு நாடுகடத்துவீராக. அவர்கள் இந்நாளிலேயே அங்கே செல்லத் தக்க நடவடிக்கைகளை எடுப்பீராக.(23) ஓ! தந்தையே, இச்செயலால் சுடர்விட்டெரியும் நெருப்பு உட்கொள்வதுபோல என்னை உட்கொள்ளும் துயரை அணைப்பீராக. அத்துயரம், எனது உறக்கத்தைக் களவாடுகிறது. பயங்கரமான கணை போல எனது இதயத்தைத் துளைக்கிறது" என்றான் {துரியோதனன்}.(24)
ஆதிபர்வம் பகுதி 144ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |