Rakshasha woman spoke to Bhima! | Adi Parva - Section 154 | Mahabharata In Tamil
(ஹிடிம்ப வத பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களைக் கொன்று இறைச்சியைக் கொண்டுவர ஹிடிம்பையை அனுப்பிய ஹிடிம்பன்; பீமனைக் கண்டு காமுற்ற ஹிடிம்பை; பீமனிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி, தன் தமயனிடம் இருந்து பாண்டவர்களைக் காப்பதாகச் சொன்னது; ராட்சசர்களால் தன் பலத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி ஹிடிம்பையைப் புறக்கணித்த பீமன்...
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு சால மரத்தில் {ஆச்சா மரம்} ஹிடிம்பன் {இடும்பன்} என்ற பெயர் கொண்ட ராட்சசன் ஒருவன் இருந்தான்.(1)
பெரும் ஆற்றலையும் வலிமையையும் கொண்ட அவன், மனித இறைச்சியை உண்ணும் கொடியவனாவான். அவனது முகம் கடுமையுடனும், அவனது பற்கள் நீண்டு கூர்மையாகவும் இருந்தன. அப்போது அவன் பசியோடும் மனித இறைச்சியை உண்பதற்கு ஏங்கிக் கொண்டும் இருந்தான். நீண்ட கால்களும், பெருத்த வயிறும் கொண்ட அவனது கேசமும், தாடியும் சிவப்பு நிறத்திலிருந்தன. அவனது தோள்கள் அகலமாக, மரத்தின் கழுத்துப் போல இருந்தன; அவனது காதுகள் கணைகளின் முனைகளைப் {அம்பு முனை} போன்று இருந்தன. அவனது தோற்றம் அச்சமேற்படுத்தும் வகையில் இருந்தது. கடும் முகமும், சிவந்த கண்களும் உடைய அந்த மிருகம் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த போது, தற்செயலாகப் பாண்டுவின் மகன்கள் அக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(2-4) அவன் பசியுடனும், மனித இறைச்சிக்காக ஏங்கிக் கொண்டும் இருந்தான். அவனது காய்ந்த கோரை மயிரை ஆட்டித் தனது விரல்களால் அதை மேல்நோக்கிக் கோதிவிட்டுக் கொண்ட அந்தப் பெரும் வாய் படைத்த மனித ஊனுண்ணி, ஆவலுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே திரும்பத் திரும்பத் தூங்கிக் கொண்டிருந்த பாண்டுவின் மகன்களைப் பார்த்தான். பெரும் உடலும், பெரும் பலமும், பெருமேகத்தின் நிறமும், கூர்மையான நீண்ட பற்களும், ஒருவிதமான பளபளப்புடன் கூடிய முகங்களும் கொண்ட அவன் எப்போதும் மனித இறைச்சியை விரும்புபவன் ஆவான்.(5-7)
அப்படிப்பட்ட அவன், மனித வாடையை முகர்ந்து கொண்டே, தனது தங்கையிடம், "ஓ தங்காய், வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஏற்ற உணவு என்னை அணுகியிருக்கிறது!(8) இப்படிப்பட்ட உணவின் சுவையை நினைத்தாலே, எனது வாயில் நீரூறுகிறது. எந்தப் பொருளும் தாங்கிக் கொள்ள முடியாத எனது கூர்மையான எட்டுப் பற்களுக்கு, வெகு நாளைக்குப் பிறகு, சுவையான இறைச்சியைக் கொடுக்கப் போகிறேன்.(9) அவற்றைக் கொண்டு மனிதத் தொண்டையைத் தாக்கி, நரம்புகளை அறுத்துப் புத்தம்புதிய சூடான மனித இரத்தத்தை (இன்று) நான் அதிகமாகக் குடிக்கப் போகிறேன். இக்கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அவர்கள் யார் என்பதை அறிந்து வா.(10,11) பிடித்தமான கடும் மனித வாடை எனது மூக்கைத் துளைக்கிறது. அந்த மனிதர்களைக் கொன்று, அவர்களை என்னிடம் கொண்டு வா.(12) அவர்கள் என் எல்லைக்குள் தூங்குகிறார்கள். நீ அவர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் இருவரும் சேர்ந்து அவர்களது உடல்களை மகிழ்ச்சியாகக் கிழித்து, அவர்களது இறைச்சியை உண்பதற்காக நான் சொன்னதைச் செய்வாயாக.(13,14) மனித இறைச்சியை நிறைவுடன் உண்ட பிறகு, நாம் இருவரும் பல வகைகளில் நடனமாடலாம்" என்றான்.
அந்த வனத்தில் ஹிடிம்பனால் இப்படிக் சொல்லப்பட்ட ஹிடிம்பை என்ற மனித ஊனுண்ணி {நர மாமிசம் உண்பவள்}, தனது தமையனின் கட்டளைக்கிணங்கி, ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயா}, பாண்டவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள்.(15,16) அங்கே சென்றதும், அவள் தங்கள் தாயுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், விழிப்புடன் அமர்ந்திருந்தவனும், வெல்லப்பட முடியாதவனுமான பீமசேனனையும் கண்டாள்.(17)
பலம் வாய்ந்த சால மரத்தைப் போன்ற அந்தப் பீமசேனனிடம் பூமியில் ஒப்பிடமுடியாத அழகைக் கண்ட அந்த ராட்சசி, உடனே அவனிடம் காதலில் விழுந்து, தனக்குத் தானே,(18) "புடம்போட்ட தங்கம் போன்ற நிறத்துடன், பெரும் கரங்களுடன், சிங்கம் போன்ற அகலமான தோள்களுடன், சங்கு போலக் கழுத்தில் மூன்று கோடுகளுடன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன் இருக்கும் இந்த மனிதர் எனக்குக் கணவனாக இருக்கத் தகுந்தவர்.(19) எனது தமையனின் கொடூர ஆணைக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன். ஒரு பெண் தனது சகோதரனிடம் கொண்டிருக்கும் பாசத்தைவிட, அவளது கணவனின் மீது கொண்டிருக்கும் காதல் வலுவானது.(20) இவரைக் கொல்வதால், எனது தமையனுக்கும் எனக்கும் கிடைக்கும் மனநிறைவு சில நொடிகளுக்கானதே. நான் இவரைக் கொல்லாதிருந்தால், இவருடன் எப்போதும் இன்பமாக இருக்க முடியும்" என்று சொல்லிக் கொண்டாள்.(21)
நினைத்த வடிவை அடையும் சக்தி கொண்ட அந்த ராட்சசி {ஹிடிம்பை}, அழகான பெண்ணின் வடிவத்தை ஏற்றுக் கொண்டு மெதுவாகப் பெரும் கரம் கொண்ட பீமனை நோக்கி முன்னேறினாள்.(22) தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, இதழ்களில் புன்னகையுடன் எளிமையாக நடந்து சென்று, பீமனிடம்,(23) "ஓ மனிதர்களில் காளையே, எங்கிருந்து நீர் இங்கு வந்தீர்? நீர் யார்? தெய்வீக அழகுடன் உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யாவர்?(24) ஓ பாவங்களற்றவரே, தனது அறையில் கிடப்பதைப் போல நம்பிக்கையாக இந்தக் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இந்த மேம்பட்ட அழகுடைய பெண்மணி யார்?(25) இக்கானகம் ஒரு ராட்சசனின் உறைவிடம் என்பதை நீர் அறியீரா? நான் உண்மையாகவே சொல்கிறேன். இங்கு ஹிடிம்பன் என்ற தீய ராட்சசன் வாழ்ந்து வருகிறான்.(26)
தெய்வீக அழகுடையவர்களே, நான் எனது தமையனான அந்த ராட்சசனால், உங்களைக் கொன்று உங்களை அவனது உணவாக்க அனுப்பப்பட்டேன்.(27) ஆனால் உண்மையைச் சொல்கிறேன். தெய்வீகப் பிரகாசத்துடன் இருக்கும் உம்மைக் கண்டதும், உம்மைத் தவிர வேறு எவரையும் கணவராக ஏற்க முடியாது என்று கருதி உம்மைக் காக்க நினைத்தேன்.(28) கடமைகளையும், நீதிகளையும் அறிந்த நீர், இவற்றையும் அறிந்து, எனக்கு எது சரியோ அதைச் செய்வீராக. எனது இதயமும், எனது உடலும் காமனால் (மன்மதனால்) (அவனது கணையால்) துளைக்கப்படுகின்றன. ஓ, நான் உம்மை அடைய விருப்பத்தோடிருப்பதால், என்னை உமதாக்கிக் கொள்வீராக.(29) ஓ பெரும் கரங்கள் கொண்டவரே! மனித ஊனுண்ணும் ராட்சசனிடம் இருந்து நான் உம்மைக் காக்கிறேன். சாதாரண மனிதர்கள் நுழைய முடியாத மலைகளின் சாரலில் நாம் வாழலாம்.(30) என்னால் காற்றில் பறக்க முடியும். நான் அதை என் மகிழ்வுக்காகச் செய்வேன். நீர் என்னுடன் அப்பகுதிகளில் மிகுந்த இன்பத்துடன் இருக்கலாம்" என்றாள் {ஹிடிம்பை}.(31)
அவளது இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமன், "ஓ ராட்சசப் பெண்ணே, ஒரு முனிவனைப் போலத் தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவனால், தனது தாயையும் மூத்த மற்றும் இளைய சகோதரர்களையும் எப்படிக் கைவிட்டுவிட்டு வர முடியும்?(32) தூங்கும் தாயையும், சகோதரர்களையும் ராட்சசனுக்கு உணவாகப் போகும்படி விட்டு, என்னைப் போன்ற எந்த மனிதன், தனது காமத்தைத் தணித்துக் கொள்ளச் செல்வான்?" என்றான்.(33)
அதற்கு அந்த ராட்சசப் பெண், "ஓ, இவர்களை விழிப்படையச் செய்வீராக. நான் உமக்கு ஏற்புடைய அனைத்தையும் செய்வேன்! நர மாமிசம் உண்பவனான என் தமையனிடம் இருந்து, நான் உங்கள் அனைவரையும் நிச்சயம் காப்பேன்!" என்றாள்.(34)
பீமன், "ஓ ராட்சசப் பெண்ணே, "உனது தீய தமையனிடம் இருக்கும் அச்சத்தால், இக்கானகத்தில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் எனது சகோதரர்களையும், எனது தாயையும் எழுப்ப மாட்டேன்.(35) ஓ மருட்சியுடையவளே, ராட்சசர்களால் எனது கரத்தின் பலத்தைத் தாங்க முடியாது. ஓ அழகான கண்களுடையவளே, மனிதர்களாலோ, கந்தர்வர்களாலோ, யக்ஷர்களாலோ எனது பலத்தைத் தாங்க முடியாது.(36) ஓ இனிமையானவளே, நீ இங்கே இருப்பதும் செல்வதும் உனது விருப்பமாகும். அல்லது நீ சென்று உனது தமையனையே கூட இங்கு அனுப்புவாயாக. ஓ கட்டுடல் கொண்டவளே நான் அதுபற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை" என்றான்".(37)

ஆங்கிலத்தில் | In English |