Bhima started to cry | Adi Parva - Section 153 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 11)
பதிவின் சுருக்கம் : தன் தாயையும், சகோதரர்களையும் ஒரு ஆலமரத்தடியில் விட்டுவிட்டு நெடுந்தொலைவு சென்று நீர் கொணர்ந்து வந்த பீமன்; பஞ்சணையில் படுப்பவர்களான தனது தாயாரும், சகோதரர்களும் கட்டாந்தரையில் கிடப்பதைக் கண்டு புலம்பி அழுதது...
Bhima started to cry Adi Parva - Section 153 | Mahabharata In Tamil |
பாண்டவர்கள், கடக்கக் கடினமான நீரோட்டங்களை நீந்தி, திருதராஷ்டிரனின் மகன்களுக்குப் பயந்து, வழியில் மாறுவேடம் பூண்டு கொண்டு சென்றனர்.(6) சமமற்ற நதிகளின் கரைகளில், பீமன், நுட்பமான உணர்வுகள் கொண்டவளான தனது தாயைத் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றான்.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே, மாலை நெருங்கும் போது பீமன் (தனது சகோதரர்களையும் தாயையும் முதுகில் சுமந்து கொண்டே), பழங்களும், கிழங்குகளும் நீரும் அரிதாகவே கிடைக்கும் ஒரு பயங்கரமான கானகத்தை அடைந்தான். அந்தக் கானகத்தைச் சுற்றிலும் பறவைகள் மற்றும் விலங்குகளின் பயங்கரமான அலறல்கள் கேட்டுக் கொண்டே இருந்தன.(8) அந்தி சாய்ந்ததும், அவற்றின் அலறல்கள் கடுமையாகின. இருட்டு, அனைத்தையும் பார்வையில் இருந்து மறைத்தது. அகாலமான நேரத்தில் கடும் காற்று வீசிப் பெரிதும் சிறிதுமான பல மரங்களையும், கொடிகளையும், இலைகளையும், பழங்களையும் தரையில் சாய்த்தது.(9,10)
களைப்பாலும், தாகத்தாலும் அவதிப்பட்ட அந்தக் கௌரவ இளவரசர்கள் {பாண்டவர்கள்} கனத்த உறக்கத்தால் மேலும் முன்னேற முடியாமல் தவித்தனர்.(11) அவர்கள் அனைவரும் உணவும், நீரும் இன்றி அந்தக் கானகத்தில் அமர்ந்தனர். தாகத்தால் அவதிப்பட்ட குந்தி, தனது மகன்களிடம்,(12) "நான் ஐந்து பாண்டவர்களின் தாய். இப்போது அவர்கள் மத்தியிலேயே இருக்கிறேன். இருப்பினும் நான் தாகத்தால் அவதிப்படுகிறேன்" என்றாள். இதையே திரும்பத் திரும்பத் தனது மகன்களிடம் குந்தி சொன்னாள்.(13) இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமனின் இதயம், தாய் மீது கொண்ட பாசத்தால் இரக்கப்பட்டு வெந்தது. உடனே அவன் (முன்பு போலவே) {அனைவரையும் தூக்கிக் கொண்டு} புறப்படத் தீர்மானித்தான்.(14)
வாழும் ஆன்மா ஒன்றும் {ஒரு உயிரினமும்} இல்லாத அந்தப் பயங்கரமான பெரிய கானகத்தில், பீமன் முன்னேறி நடந்து, அகலமாகக் கிளைகள் பரவிய ஓர் அழகான ஆல மரத்தைக் கண்டான்.(15) ஓ! பாரதக் குலக் காளையே {ஜனமேஜயா}, அங்கே தனது சகோதரர்களையும், தாயையும் இறக்கிவிட்டு, அவர்களிடம், "இங்கே ஓய்வெடுங்கள், அதே வேளையின் நான் நீர் தேடிச் செல்லப் போகிறேன்.(16) நீர் வாழ் பறவைகளின் இனிய ஒலிகளைக் கேட்கிறேன். இங்கே ஒரு பெரிய குளம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றான்.(17) ஓ! பாரதா {ஜனமேஜயா}, "செல்வாயாக" என்று தனது மூத்த சகோதரனால் {யுதிஷ்டிரனால்} கட்டளையிடப்பட்ட பீமன், அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திக்கில் முன்னேறிச் சென்றான்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அவன் விரைவில் ஓர் தடாகத்தை வந்தடைந்தான். அங்கே குளித்து முடித்துத் தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால் தனது மேலாடையை நீரில் முக்கி, அதை அவர்களுக்குக் கொண்டு வந்தான். தான் சென்ற நான்கு மைல் வழியைத் தொடர்ந்து தனது தாய் இருக்கும் இடத்திற்கு வேகமாக வந்து, அவளைக் கண்டு பெரும் துன்பமடைந்து, பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டான்.(19,20)
விருகோதரன் {பீமன்}, தனது தாயும், சகோதரர்களும் வெறும் தரையில் படுத்துறங்குவதைக் கண்டு, துக்கத்தால் மன உளைச்சலடைந்து அழுது புலம்பத் தொடங்கினான். "ஓ!, சகோதரர்கள் வெறுந்தரையில் தூங்குவதைக் காணும் பாவியானேனே, இதைவிடப் பெரிய வலியைத் தர வேறு என்ன நிகழ வேண்டும்?(22) ஐயோ, வாரணவதத்தின் விலையுர்ந்த மென்மையான படுக்கையில் தூங்க முடியாதவர்கள், இப்போது வெறுந்தரையில் தூங்குகிறார்களே!(23) ஓ!, தாமரை இதழ்களைப் போன்ற மென்மை கொண்டவளான இந்தக் குந்தி, எதிரிப் படைகளைத் துவம்சம் செய்யும் வாசுதேவனின் தங்கையான இந்தக் குந்தி, குந்திராஜனின் மகளான இந்தக் குந்தி, அதிர்ஷ்டக் குறிகள் நிறைந்தவளான இந்தக் குந்தி,(24) விசித்திரவீரியனின் மருமகளும், சிறப்புமிக்கப் பாண்டுவின் மனைவியுமான இந்தக் குந்தி, எங்களின் (ஐந்து சகோதரர்கள்) தாயான இந்தக் குந்தி,(25) விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுதி வாய்ந்த இந்தக் குந்தி, வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட, வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்!(26)
ஓ!, தர்மன், இந்திரன், மருதன் {வாயு} ஆகியோரின் பிள்ளைகளை ஈன்றெடுத்து, அரண்மனையில் மட்டுமே உறங்கியவள், களைப்படைந்து வெறும் தரையில் உறங்குகிறாளே!(27) ஓ!, இந்த மனிதப் புலிகள் (எனது சகோதரர்கள்) வெறும் தரையில் தூங்குவதைக் காணும் காட்சியை விட வலி நிறைந்த காட்சி எது இருக்க முடியும்?(28) ஓ!, மூவுலகத்தையும் ஆளும் தகுதி கொண்ட அறவோனான இந்த யுதிஷ்டிரர், சாதாரண மனிதனைப் போலக் களைப்படைந்து தரையில் தூங்குகிறாரே!(29) மனிதர்களில் ஒப்பில்லாதவனும், நீல மேகங்களைப் போலக் கருநிறம் கொண்டவனுமான அர்ஜுனன், வெறுந்தரையில் சாதாரண மனிதனைப் போலத் தூங்குகிறானே! ஓ!, இதைவிட வலிநிறைந்தது எது இருக்க முடியும்?(30)
ஓ! அஸ்வினி இரட்டையர்களைப் போன்ற அழகுடன் தேவர்களைப் போல இருக்கும் இந்த இரட்டையர்கள் சாதாரணமானவர்கள் போல வெறும் தரையில் தூங்குகிறார்களே!(31) பொறாமை மற்றும் தீய எண்ணங்கொண்ட உறவினர்கள் யாரும் இல்லாதவன், கிராமத்தில் இருக்கும் ஒற்றை மரம் போல இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வான்.(32) அதே வகை மரங்கள் வேறு இல்லாமல், தனியாக இலைகளுடனும் கனிகளுடனும் கிராமத்தில் நிற்கும் மரம் புனிதமடைந்து, அனைவராலும் வழிபடப்பட்டுக் கொண்டாடப்பட்டு இருக்கும்.(33) நிறைய உறவினர்களுடனும், வீரத்துடனும், அறத்துடனும் இருப்பவர்களும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.(34) பலத்துடனும், வளமையில் வளர்ந்தும், எப்போதும் நண்பர்களையும் உறவினர்களையும் மகிழ்வூட்டுபவர்கள், ஒரே கானகத்தில் வளரும் நெடும் மரங்களைப் போல ஒருவரை ஒருவர் நம்பியே வாழ்கின்றனர்.(35)
நாம் தீய திருதராஷ்டிரனாலும் அவனது மகன்களாலும் நாடுகடத்தப்பட்டு, மரணத்திலிருந்து பெரும் சிரமத்திற்கிடையில் தப்பித்து வந்திருக்கிறோம்.(36) அந்த நெருப்பிலிருந்து தப்பித்து, இந்த மரத்தின் நிழலின் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே இவ்வளவு துன்பப்பட்ட பிறகு, இனி நாம் எங்கே செல்வது?(37) தொலைநோக்குப் பார்வை சிறிதும் அற்ற திருதராஷ்டிரன் மைந்தர்களே, நீங்கள் தீயவர்கள், உங்கள் தற்காலிக வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். தேவர்கள் உங்களுக்கு நற்பேற்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தீய பாவிகளே, நீங்கள் இன்னும் உயிரோடிருப்பது, யுதிஷ்டிரர் உங்களைக் கொல்ல எனக்குக் கட்டளையிடாமல் இருப்பதால்தான். இல்லையேல் கோபத்தால் நிறைந்திருக்கும் நான், இந்நாளிலேயே (ஓ! துரியோதனா) உன்னை, உனது பிள்ளைகள்[1], நண்பர்கள், சகோதரர்கள், கர்ணன் மற்றும் (சகுனியுடன்) சுபலனின் மகனோடு சேர்த்து யமனின் உலகத்திற்கு (புளூட்டோ கிரகம் என்கிறார் கங்குலி) அனுப்பியிருப்பேன். ஆனால், இழிந்த பாவிகளே, நான் என்ன செய்ய? பாண்டவர்களில் மூத்த அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், இன்னும் உங்களிடம் கோபம் கொள்ளவில்லையே?" என்று சொல்லி அழுதான்.(38-41)
[1] இக்காலத்திற்குள் துரியோதனனின் திருமணம் நடந்து முடிந்திருக்க வேண்டும் என்பதற்கு இவ்வரிகள் வலுசேர்க்கின்றன.
இப்படிச் சொன்னவனும், பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான பீமன், கோபத்தால் எரிந்து, தனது உள்ளங்கைகளைப் பிசைந்து கொண்டு, துக்கத்தால் ஆழ்ந்த பெருமூச்சு விட்டான்.(42) தனது சகோதரர்கள் வெறும் தரையில் நம்பிக்கையுடன் சாதாரண மனிதர்களைப் போலத் துயில்வதைக் கண்டே விருகோதரன் {பீமன்}, திடீரென்று கோபமடைந்தான். பீமன் தனக்குள்,(43) "இந்தக் கானகத்திற்கு அருகில் ஏதோ நகரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நான் விழிப்புடன் அமர்ந்து கொள்வேன்.(44) அவர்கள் உறக்கத்திலிருந்து எழுந்ததும், இது {நான் கொண்டு வந்த இந்த நனைந்த ஆடை} இவர்களது தாகத்தைத் தணிக்கும்" என்று சொல்லிக் கொண்டான். இப்படிச் சொல்லிக் கொண்ட, பீமன் விழிப்புடன் அமர்ந்து, தனது தாயையும், சகோதரர்களையும் பார்த்துக் கொண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(45)
ஆங்கிலத்தில் | In English |