The Nupital Feast is ready! | Adi Parva - Section 195 | Mahabharata In Tamil
(வைவாஹிக பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னன் சொன்ன விவரங்களைக் கேட்ட துருபதன், உண்மையை உறுதி செய்ய ஒரு புரோகிதரை அனுப்பியது; யுதிஷ்டிரன் புரோகிதரைக் கடிந்து கொண்டது; துருபதன் மற்றொரு தூதுவரை அனுப்பியது...
வைசம்பாயனர் சொன்னார், "தனது தந்தையால் இப்படிச் சொல்லப்பட்ட சந்திரகுல இளவரசர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னன், மகிழ்ச்சியுடன் தனது தந்தையிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, யாரால் கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்பட்டாள் என்பதையும் சொன்னான்.(1) அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, "மான் தோலுடுத்திப் பெரிய சிவந்த கண்களுடனும், தெய்வீக அழகுடனும், அந்த முதன்மையான வில்லுக்கு நாணேற்றி, உயரத்தில் இருந்த குறியை தரையில் வீழ்த்திய இளைஞன், தான் செய்த சாதனைக்காக தன்னைக் கொண்டாடிய பிராமணர்களில் முதன்மையானவர்களால் வேகமாகச் சூழப்பட்டான். அவன், எதிரிகளைக் காணப் பொறுக்காமலும், பெரும் சக்தியுடன் கூடிய செயல்பாடுகளுடனும் தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினான். தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியான இந்திரன் போல, பிராமணர்களாலும், முனிவர்களாலும் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டிருந்தான்.(2,3) கூட்டத்தின் தலைவனைப் பின் தொடரும் பெண் யானையென, கிருஷ்ணை {திரௌபதி}, அந்த இளைஞன் உடுத்தியிருந்த மான்தோலைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பின்தொடர்ந்து சென்றாள். அக்காட்சியைக் காணப் பொறுக்காத ஏகாதிபதிகள் கோபத்துடன், போரிட முன்னேறினர்.(4) அங்கே மற்றொரு வீரன் மரத்தைப் பிடுங்கி, அந்த மன்னர் கூட்டத்திடம் விரைந்து, உயிரினங்களை அடிக்கும் யமனைப் போல அவர்களை {அம்மரத்தைக் கொண்டு} இடமும், வலமுமாக அடித்தான்.(5)
ஓ ஏகாதிபதி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கிருஷ்ணையை அழைத்துக் கொண்டு சூரியனையும், சந்திரனையும் போல அரங்கத்தைவிட்டுச் சென்ற அந்த இரு வீரர்களும் புறநகரில் {நகருக்கு வெளியே} இருக்கும் ஒரு குயவனின் இல்லத்துக்குச் சென்றனர்.(6) அந்தக் குயவனின் இல்லத்தில் நெருப்பின் தழல் என ஒரு பெண் {குந்தி} அமர்ந்திருந்தாள். அவளை அவர்களின் தாய் என்று நினைக்கிறேன். அவளைச் சுற்றிலும் இன்னும் மூன்று மனிதர்களில் முதன்மையானவர்கள் நெருப்பைப் போல அமர்ந்திருந்தார்கள்.(7) அந்த இரு வீரர்களும் அவளை அணுகி அவளது பாதம் பணிந்து வணங்கி, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அவ்வாறே செய்யப் பணித்தனர். பிறகு கிருஷ்ணையை அவளிடம் {குந்தியிடம்} ஒப்படைத்துவிட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், பிச்சை எடுக்க வெளியே ஒரு சுற்றுக்குச் சென்றனர்.(8) சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பினார்கள். கிருஷ்ணை அவர்களிடம் இருந்து பிச்சையைப் பெற்றுக் கொண்டு, ஒரு பகுதியை தேவர்களுக்கும், ஒரு பகுதியை பிராமணர்களுக்கும் கொடுத்தாள். மீதம் இருந்ததில் ஒரு பகுதியை அந்த மதிப்புக்குரிய பெண்ணுக்கும் {குந்திக்கும்} கொடுத்துவிட்டு, அதில் மீந்ததை மனிதர்களில் முதன்மையான மற்ற ஐவருக்கும் கொடுத்தாள். அதிலும் அவளுக்கென சிறிது எடுத்துக் கொண்டு, இறுதியாக அவளும் உண்டாள்.(9) பிறகு, ஓ ஏகாதிபதியே, அவர்கள் உறங்குவதற்காகத் தங்களைக் கிடத்திக் கொண்டார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவர்களின் பாத வரிசையில் அவர்களின் காலணையாகப் படுத்துக் கொண்டாள். அவர்கள் படுத்த படுக்கை குசப் புற்களால் {தர்ப்பை புல்லால்}ஆனது. அதன் மேல் மான் தோலை விரித்து அதில் அவர்கள் படுத்துக் கொண்டனர்.(10)
அவர்கள் உறங்குவதற்கு முன் கரிய மேகங்களைப் போன்ற உரத்த குரலில் பல்வேறு காரியங்களைக் குறித்துக் கலந்தாலோசித்தனர். அவர்களின் பேச்சு வைசியன் போலவோ, சூத்திரன் போலவோ, பிராமணன் போலவோ இல்லை.(11) ஓ ஏகாதிபதி, அவர்கள் க்ஷத்திரியக் காளைகளே என்பதில் ஐயமில்லை. அவர்கள் பேச்சு முழுவதும் ராணுவத்தை {படைகளைக்} குறித்தே இருந்தது. ஓ தந்தையே, நமது நம்பிக்கையின் விதையே கனி கொடுத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். குந்தியின் மகன்கள் அனைவரும் அந்த அரக்கு மாளிகை எரிப்பில் இருந்து தப்பியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.(12) அந்த இளைஞனால் குறி வீழ்த்தப்பட்ட விதமும், வில்லில் நாண் ஏற்ற அவன் பயன்படுத்திய பலமும், அவர்கள் பேச்சின் தன்மையும், ஓ ஏகாதிபதியே, அவர்கள் மாற்றுருவில் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள் என்பதையே உறுதிசெய்கின்றன" என்றான் {திருஷ்டத்யும்னன்}.(13) தன் மகனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, உண்மையில் அவர்கள் சிறப்புமிகுந்த பாண்டுவின் மகன்கள்தானா என்பதை உறுதிசெய்ய ஒரு புரோகிதரை அவர்களிடம் அனுப்பினான்.(14) இப்படி அனுப்பப்பட்ட மன்னனின் புரோகிதர், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்று, அவர்களைப் பாராட்டி, மன்னனின் செய்தியை அவர்களுக்கு உரைத்தார்,(15)
அவர், "அனைத்தையும் முதலுரிமை கொண்டாட தகுதிவாய்ந்தவர்களே, பூமியின் மன்னனான வரம் கொடுக்கும் துருபதன் நீங்கள் யார் என்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அக்குறியை வீழ்த்திய இவனைக் கண்டு, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்.(16) உங்கள் குடும்பம் மற்றும் குலம் {இனம்} குறித்த தகவல்களைக் கொடுத்து, எதிரிகளின் தலைகளில் உங்கள் பாதங்களை வைத்து, பாஞ்சால மன்னனின் இதயத்தையும், எனது இதயத்தையும் மகிழ்ச்சி கொள்ள வைப்பீராக.(17) மன்னர் பாண்டு துருபதனின் அன்புக்குரிய நண்பராக இருந்தார். துருபதனும் அவரைத் தன்னைப் போலவே கருதினார். நீண்ட காலமாகத் துருபதன் தனது மகளைப் பாண்டுவுக்கு மருமகளாக அளிக்க விருப்பம் கொண்டிருந்தார்.(18) குறையற்ற வீரர்களே, பலம்வாய்ந்த நீண்ட கரங்களை உடைய அர்ஜுனன், தனது மகளை உரிய விதிப்படி மணந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் வளர்த்தார்.(19) அதுவே உண்மையானால், அதைவிடச் சிறந்ததும், நன்மையானதுமாக எதுவும் இருக்க முடியாது; துருபதனைப் பொறுத்தவரை அதைவிடப் புகழைத்தரக்கூடிய அறம்சார்ந்த எதுவும் இருக்க முடியாது" என்றார் {புரோகிதர்}.
இதைச் சொன்ன அந்தப் புரோகிதர், ஒரு பதிலுக்காக அமைதியாகக் காத்திருந்தார். அவர் அப்படி அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அருகில் அமர்ந்திருந்த பீமனை அழைத்து,(20) "இந்த பிராமணருக்குப் பாதம் கழுவ நீரும், ஆர்க்கியமும் கொடுப்பாயாக. இவர் மன்னர் துருபதனின் புரோகிதர், எனவே நமது மரியாதைக்கு உகந்தவர். நாம் இவரைச் சாதாரணமாக அல்லாமல் உயர்வாக மதித்து வழிபட வேண்டும்" என்றான்.(21) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, கேட்டுக்கொண்டபடியே பீமனும் செய்தான். அவர்களின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்ட பிராமணர் இதயத்தால் மகிழ்ந்து வசதியாக அமர்ந்தார். பிறகு யுதிஷ்டிரன்,(22) "மன்னர் பாஞ்சாலர் {துருபதன்}, சிறந்த வகையிலான ஒரு மணக்கொடையை {பந்தயத்தை} நிச்சயம் செய்து, தனது மகளைத் தன் குல வழக்கப்படி கொடுத்திருக்கிறாரே அன்றி, சாதாரணமாகக் கொடுத்துவிடவில்லை. இந்த வீரன் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றியே இளவரசியை வென்றான்.(23) எனவே மன்னர் துருபதருக்கு, அந்த அருஞ்செயலைச் செய்தவனின் குலம், இனம், குடும்பம், மனநிலை ஆகியவற்றைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உண்மையில், அந்த வில்லில் நாணேற்றி, அக்குறியைத் தரையில் வீழ்த்தி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தாகிவிட்டது.(24) அவர் சொன்னதை {துருபதன் சொன்னதை} நிறைவேற்றிய இந்தச் சிறப்புமிகுந்த வீரன் {அர்ஜுனன்}, அங்குக் கூடியிருந்த மன்னர்களிடம் இருந்து கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கொண்டு வந்திருக்கிறான். இச்சூழ்நிலையில், வருத்தமளிக்கக்கூடிய காரியங்களில் சந்திர குல மன்னன் {துருபதன்} ஈடுபடக்கூடாது. இறுதியாக அவருக்குப் பொருந்தாத இவ்விஷயத்தில் அது மகிழ்ச்சிக் குறைவை மட்டுமே ஏற்படுத்தும்.(25)
மன்னன் துருபதன் நீண்டகாலமாக அனைத்து நற்குறிகளையும் கொண்ட இந்த இளவரசியைக் {திரௌபதியைக்} குறித்து மனத்தில் விரும்பியது ஈடேறும்.(26) பலவீனமான ஒருவனால் அந்த வில்லில் நாண் பொருத்த முடியாது. சாதாரணப் பிறப்பு பிறந்தவர்களாலும், ஆயுதத் தேர்ச்சி இல்லாதவர்களாலும் அக்குறியை கீழே வீழ்த்தியிருக்க முடியாது.(27) எனவே, பாஞ்சால மன்னன் அவரது மகளைக் குறித்து இன்று வருந்தத் தேவையில்லை. இனி இவ்வுலகில் யாரும், குறியை கீழே வீழ்த்தி அச்செயலை மாற்ற முடியாது. எனவே, மன்னன் {துருபதன்} இக்காரியத்தில் துயர் கொள்ளாமல், காரியம் நடக்கும் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(28)
யுதிஷ்டிரன் இவையாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாஞ்சால மன்னனிடம் {துருபதனிடம்} இருந்து மற்றுமொரு தூதுவன் விரைவாக வந்து, "(திருமண) விருந்து தயாராக இருக்கிறது" என்றான்.(29)

ஆங்கிலத்தில் | In English |