Three worlds in clutch of Asuras! | Adi Parva - Section 212 | Mahabharata In Tamil
(ராஜ்யலாப பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : சுந்தனும், உபசுந்தனும் மூவுலகங்களையும் வென்றது; வேள்விகளும், பிதுர்காரியங்களும், இறைவணக்கமும் நின்றுபோனது; அசுரர்கள் கேளிக்கை விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது; குருக்ஷேத்திரத்தைத் தங்கள் வசிப்பிடமாக்கிக் கொண்டது…
நாரதர் தொடர்ந்தார், "கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு சகோதரர்களான சுந்தனும், உபசுந்தனும், மூன்று உலகங்களின் ஆட்சி உரிமையை விரும்பி, ஆலோசனை செய்து, தங்கள் படைகளை அணிதிரட்டக் கட்டளையிட்டனர்.(1) தங்கள் நாட்டின் அமைச்சர்கள், தைத்திய குல பெரியோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்றுப் புறப்படுவதற்கு முன்னர்ச் செய்ய வேண்டிய சில முதற்படியான சடங்குகளைச் செய்து, மகம் நட்சத்திரம் உச்சத்தில் {கிழக்கின் அடிவானில்} இருக்கும் அன்று இரவில் புறப்பட்டனர்.(2) அந்தச் சகோதரர்கள் கவசம்பூண்டு, கைகளில் கதைகளும், போர்க்கோடரிகளும், ஈட்டிகளும், கம்புகளும் கொண்ட பெரும் தைத்தியப் படையுடன் சென்றனர்.(3) அந்தத் தைத்தியப் படையினர் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன், சாரணர்களைக் {பாடகர்களைக்} கொண்டு தங்களது எதிர்கால வெற்றி குறித்தும், நற்பேறு குறித்தும் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டு சென்றனர்.(4) நினைத்த மாத்திரத்தில் விரும்பிய இடத்திற்குச் செல்லும் சக்தி பெற்ற அந்தத் தைத்திய சகோதரர்கள் மிகக் கடுமையாகப் போர் புரிந்து, வானத்திற்கு உயர்ந்து, தேவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர்.(5)
அவர்கள் வருவதை அறிந்த தேவர்கள், உயர்ந்த தேவனின் வரம் அருளப்பட்டதையும் அறிந்துகொண்டு, தேவலோகத்தைவிட்டுப் பிரம்ம லோகத்திற்குப் பாதுகாப்புக் கோரிச் சென்றனர்.(6) கடும் ஆற்றலைக் கொண்ட அந்தத் தைத்திய வீரர்கள், விரைவில் இந்திரலோகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, விதவிதமான யக்ஷ, ராட்சச இனங்களையும், விண்ணை அதிகாரம் செய்யும் அனைத்து உயிர்களையும் வென்று திரும்பினர்.(7) அடுத்ததாக, அந்தப் பெரும் தேர் வீரர்கள், பாதாள லோகத்தில் உள்ள நாகர்கள் உலகத்தையும், கடலில் வசிக்கும் உயிரினங்களையும், அனைத்து மிலேச்ச வகைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.(8)
அடுத்ததாக அவர்கள், முழு உலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தங்கள் படைவீரர்களுக்கும் கடும் கட்டளைகளை இட்டனர்.(9) "பிராமணர்களும், அரச முனிகளும், தங்கள் படையல்களாலும், பெரும் வேள்விகளில் கொடுக்கப்படும் உணவு வகைகளாலும், தேவர்களுக்குச் சக்தியையும், பலத்தையும், வளத்தையும் அளிக்கின்றனர்.(10) அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் அசுரர்களின் எதிரிகள் ஆவர். எனவே, நாம் அனைவரும் சேர்ந்து, அவர்கள் அனைவரையும் இந்த நிலத்தின் முகத்தில் கொன்று போட வேண்டும்" என்றனர்.(11)
இப்படியே அந்த அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்}, இந்தத் தீய முடிவைச் சூளுரைத்து, தங்கள் படை வீரர்களுக்குக் கட்டளையிட்டுப் பெருங்கடல் இருக்கும் கிழக்குக் கடற்கரைக்கும், திசைகள் அனைத்திற்கும் சென்றனர்.(12) வேள்விகள் செய்தவரையும், வேள்விகளுக்குத் துணை புரிந்த பிராமணர்களையும், அந்தச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} உடனடியாகக் கொன்றனர். அவர்களை அப்படிப் பயங்கரமாகக் கொன்று விட்டு, அந்த இடத்தை விட்டு வேறு இடத்திறகுச் சென்றனர்.(13) அந்தப் படை வீரர்கள், தங்கள் ஆன்மாவைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முனிவர்களின் ஆசிரமங்களில் எரியும் வேள்வி நெருப்புகளை எடுத்து நீரில் தூக்கி வீசினார்கள்.(14) கோபத்தால் சபித்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர்களின் சாபங்கள், அந்தச் சகோதரர்கள் (பிரம்மனிடம்) பெற்ற வரங்களால் செயலிழந்தன.(15)
தங்கள் சாபங்கள், கல்லின் மேல் அடிக்கப்பட்ட கணை போல ஒரு சிறு அசைவையும் ஏற்படுத்தாதைக் கண்டு, தங்கள் சடங்குகளையும் உறுதிகளையும் கைவிட்டு எல்லாத் திசைகளிலும் சிதறி ஓடினர்.(16) தங்கள் ஆன்மாவைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆன்ம வெற்றி பெற்ற முனிவர்கள் கூட அந்த அசுரச் சகோதரர்கள் மீதிருக்கும் பயத்தால், வினதையின் மகனைக் (பாம்புண்ணியான கருடனைக்) கண்ட பாம்புகள் போலப் பறந்து ஓடினர்.(17) அவர்களது புனிதமான ஆசிரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. புனிதமான கமண்டலங்களும், பாத்திரங்களும் உடைக்கப்பட்டன. அதில் இருந்த புனிதமானவைகள் தரையில் சிதறிக் கொட்டப்பட்டன.(18) உயிரினங்கள் எல்லாம் பேரழிவில் அழிந்தது போல, இந்த முழு அண்டமும் வெறுமையானது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்கள் எல்லாம் மறைந்து போய், அரூபமாக மாறிய பிறகு, இரு பெரும் அசுரர்களும் அவர்களை அழிக்க எண்ணி பல்வேறு உருவங்களை எடுத்தனர்.(19) குகைகளில் ஒளிந்திருந்த முனிவர்களை நோக்கி மதங்கொண்ட யானையாக மாறிச் சென்று யமனின் உலகுக்கு அனுப்பி வைத்தனர்.(20)
சில நேரங்களில் சிங்கங்களாகவும், சில நேரங்களில் புலிகளாகவும், அடுத்த நொடியே மறைந்தும், கொடுமையான வழிகளைக் கையாண்டும் கண்ட முனிவர்களையெல்லாம் கொன்றனர்.(21) கல்வியும், வேள்விகளும் நிறுத்தப்பட்டு; மன்னர்களும், பிராமணர்களும் கொல்லப்பட்டனர். முழு உலகமும் விழாக்களும், கோலாகலங்களும் அற்றுப் போயின.(22) அச்சமடைந்த மனிதர்களின் "ஓ", "ஐயோ", "அம்மா” என்ற ஓலமே எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது. வாங்குவதும், விற்பதுமான வணிகம் நின்று போனது. அனைத்து அறச் சடங்குகளும் நின்று போயின; இந்த உலகத்தில் புனிதமான விழாக்களும், திருமணங்களும் இல்லாமல் போயிற்று.(23) உழவு {விவசாயம்} ஒதுக்கப்பட்டது {நிறுத்தப்பட்டது}, விலங்குகள் {கால்நடைகள்} வளர்க்கப்படவில்லை. நகரங்களும், ஆசிரமங்களும் மனிதர்கள் அற்றுப் போயின. எங்கு பார்த்தாலும் எலும்புகளும், எலும்புக்கூடுகளும், சிதறிப் பூமியைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.(24)
பித்ருக்களுக்கு {முன்னோர்களுக்கு} மரியாதை செய்யும் விழாக்களெல்லாம் நின்று போயின. 'வஷத்' என்ற புனிதமான ஒலியும், நற்பேறுகளுக்கான அனைத்துச் சடங்குகளும் நின்று போயின. காண்பதற்குப் பூமி பயங்கரமானதாக ஆனது.(25) சுந்தன் மற்றும் உபசுந்தனின் இந்தச் செயல்களையெல்லாம் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்மீன் கூட்டங்கள், மற்றும் வானில் இருக்கும் அனைத்தும் சாட்சிகளாக நின்று பார்த்து, ஆழ்ந்த கவலையை அடைந்தன.(26) தேவலோகத்தின் எல்லா மூலைகளையும் தங்கள் கொடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} எதிரி என்று சொல்ல ஒருவனும் இல்லாமல், குருக்ஷேத்திரத்தைத் தங்கள் வசிப்பிடமாக்கினர்”.(27)

ஆங்கிலத்தில் | In English |