The children of Pandavas! | Adi Parva - Section 223 | Mahabharata In Tamil
(ஹரணா ஹரணப் பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : யாதவர்கள் பரிசுகளுடனும் சீர்வரிசைகளுடனும் இந்திரப்பிரஸ்தம் வருதல், பிறகு யாதவர்கள் அனைவரும் திரும்பிப் போதல்; கிருஷ்ணன் மட்டும் இந்திப்பிரஸ்தத்திலேயே தங்குதல்; அபிமன்யு பிறந்தது; திரௌபதியிடம் பாண்டவர்களுக்கு ஐந்து மகன்கள் பிறத்தல்; பிள்ளைகள் வளர்ந்து ஆயுதங்களில் தேர்ச்சி பெற்று வீரர்களாக விளங்குவதைக் கண்டு பாண்டவர்கள் மகிழ்தல்…
வைசம்பாயனர் சொன்னார், "இதுபோலவே விருஷ்ணி குலத்தவர் {யாதவக் குலத்தவர்} அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது, வாசுதேவன், அறத்துக்கு இணையான ஆழ்ந்த பொருள் கொண்ட சொற்களைச் சொன்னான்.(1)
அவன் {கிருஷ்ணன்}, "குடகேசன் (உறக்கத்தை வென்றவன் (அ) சுருள் முடி கொண்டவன்) {அர்ஜுனன்}, தான் செய்த செயலால், நமது குடும்பத்தை அவமதிக்கவில்லை.(2) அவன் நமது கௌரவத்தை அதிகரித்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை. சத்வத குலத்தைச் சார்ந்த நாம் {பொருளாசை கொண்ட} கூலிப்படையினர் இல்லை என்பதைப் பார்த்தன் {அர்ஜுனன்} அறிந்திருக்கிறான். பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} சுயம்வரத்தின் முடிவில் ஐயம் கொண்டிருக்கிறான்.(3) ஏதோ ஒரு விலங்கைப் பரிசாக ஏற்பது போல மணப்பெண்ணைத் தானமாக {கன்னிகா தானம்} கொடுத்தால் எவன் ஏற்றுக் கொள்வான்? தனது வாரிசை விற்கும் மனிதன் என்று யார்தான் உலகத்தில் இருக்கிறான்?(4) மேற்கண்ட முறைகளில் உள்ள இந்தக் குறைகளை எல்லாம் கண்ட அர்ஜுனன் விதிப்படியே மங்கையைக் கடத்தியிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன்.(5)
இது சரியான சம்பந்தம்தான். சுபத்திரை புகழ்பெற்றவள் ஆவாள். பார்த்தனும் {அர்ஜுனனும்} புகழ் பெற்றவனே ஆவான். இதையெல்லாம் நினைத்துப் பார்த்து, அர்ஜுனன் அவளைக் கடத்திச் சென்றதையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.(6) பாரதக் குலத்திலும், புகழ்பெற்ற சந்தனுவின் குலத்தில் பிறந்தவனும், குந்திபோஜனின் மகளுக்கு {குந்திக்கு} மகனுமான அர்ஜுனனை நண்பனாக ஏற்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?(7) முக்கண் மகாதேவனைத் தவிர, இந்திரனையும் ருத்திரர்களையும் கொண்ட எல்லா உலகத்திலும் பார்த்தனைப் {அர்ஜுனனைப்} போரில் வீழ்த்தவல்ல ஒருவனை நான் காணவில்லை. அவனது தேர் புகழ்பெற்றது. அந்த தேரில் பூட்டப்பட்டிருப்பவை என்னுடைய குதிரைகளாகும். போர்வீரனாகப் பார்த்தன் {அர்ஜுனன்} புகழ்பெற்றவன்; தனது கரங்களின் நளினத்திற்காக அவன் {அர்ஜுனன்} புகழ்பெற்றவன். அவனுக்கு நிகராக யார் இருக்கிறான்? நீங்கள் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனைப் {அர்ஜுனனைப்} பின்தொடர்ந்து சென்று அவனிடம் {அர்ஜுனனிடம்} அமைதியாகச் சிறந்த நல்ல வார்த்தைகளுடன் பேசி அவனைத் திருப்பி அழைத்து வருவதுதான் சிறந்தது. இஃது எனது கருத்து.(8-10) நம்மை அவனுடைய பலத்தால் வீழ்த்தி அவனது நகரத்திற்குச் சென்றுவிட்டான் என்றால், நமது புகழ் ஒழிந்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள். அமைதியாகச் செல்வதில் எந்த அவமதிப்பும் கிடையாது" என்றான் {கிருஷ்ணன்}.(11)
வாசுதேவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் {யாதவக் குலத்தவர்கள்}, அவன் வழிகாட்டியபடியே நடந்தனர். அவர்களால் தடுக்கப்பட்ட அர்ஜுனன் துவாரகைக்குத் திரும்பி, சுபத்திரையுடன் திருமணத்தில் இணைத்து வைக்கப்பட்டான்.(12) விருஷ்ணி குல மைந்தர்களால் கொண்டாடப்பட்ட அர்ஜுனன், ஒரு முழு வருடம் மகிழ்ச்சியாகத் துவாரகையில் இருந்தான்.(13) அவனது வனவாச காலத்தின் கடைசி வருடத்தை அவன் {அர்ஜுனன்} புஷ்கரை என்ற புனிதமான இடத்தில் கழித்தான். வனவாச காலமான பனிரெண்டு வருட காலமும் முடிந்ததும் அவன் காண்டவப்பிரஸ்தம் திரும்பினான்.(14) முதலில் மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகி வணங்கிய அவன், பிராமணர்களையும் மரியாதையுடனும் கவனத்துடனும் வணங்கினான். இறுதியில் அந்த வீரன் {அர்ஜுனன்} திரௌபதியிடம் சென்றான்.(15)
பொறாமை கொண்ட திரௌபதி அவனிடம் {அர்ஜுனனிடம்}, "ஏன் இங்குத் தாமதிக்கிறீர் ஓ குந்தியின் மகனே? சாத்வத குல மகள் எங்கிருக்கிறாளோ அங்குச் செல்வீராக!(16) கட்டிலிருக்கும் இரண்டாவது முடிச்சு எப்போதும் முதல் முடிச்சைத் தளர்த்தும்" என்றாள். கிருஷ்ணை {திரௌபதி} இந்தத் துன்பத்தால் மிகவும் புலம்பினாள். ஆனால் தனஞ்சயன் அவளைத் தொடர்ச்சியாகச் சமாதானம் செய்து, அவளிடம் {திரௌபதியிடம்} மன்னிப்புக் கோரினான். சிவப்புப் பட்டு உடுத்தி இருந்த சுபத்திரை இருந்த இடத்திற்கு சென்ற அர்ஜுனன், அவளை {சுபத்திரையை} ராணியைப் போல அல்லாமல் இடையர் பெண் போல ஆடை மாற்றச் செய்து, உள் அறைக்குள் {அந்தப்புரத்திற்குள்} அனுப்பிவைத்தான்.(17-19) ஆனால் அந்த அரண்மனைக்குள் வந்த அந்தப் புகழ்பெற்ற சுபத்திரை அந்த ஆடையில் முன்பை விட அழகாக இருந்தாள். கொண்டாடப்பட்ட நீண்ட சிவந்த கண்களைக் கொண்ட அந்தப் பத்திரா {சுபத்திரை} முதலில் பிருதையை {குந்தியை} வழிபட்டாள்.(20)
குந்தி மிகுந்தப் அன்புடன் குற்றங்குறையற்ற அவளது {சுபத்திரையின்} உச்சியை முகர்ந்து, அளவற்ற அருளை அருளினாள்.(21) நிலவைப் போன்ற முகம் கொண்ட அந்தப் பெண் {சுபத்திரை}, விரைவாகத் திரௌபதியிடம் சென்று அவளை வழிபட்டு, அவளிடம், "நான் உனது பணிப்பெண் ஆவேன்" என்றாள்.(22) கிருஷ்ணை {திரௌபதி} விரைவாக எழுந்து, மாதவனின் தங்கையைப் {சுபத்திரையை} பாசத்துடன் அணைத்துக் கொண்டு, "உனது கணவர் {அர்ஜுனன்} எதிரிகள் இல்லாமல் இருக்கட்டும்!" என்று வாழ்த்தினாள்.(23) பத்திரை {சுபத்திரை} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், "அப்படியே ஆகட்டும்!" என்றாள். அந்த நேரத்திலிருந்து, ஓ ஜனமேஜயா! அந்தப் பெரும் போர்வீரர்களான பாண்டவர்கள், இன்பமாக வாழத் தொடங்கினர். குந்தியும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள்.(24)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "தூய ஆன்மாவும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்டவனும், பகைவர்களைப் பொசுக்குபவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களில் முதன்மையான அர்ஜுனன் தனது அற்புதமான நகரமான இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே அவன் {கிருஷ்ணன்} ராமனுடனும் {பலராமனுடனும்}, மற்ற விருஷ்ணி குல, அந்தகக் குல வீரர்களுடனும், சகோதரர்கள், மகன்கள் மற்றும் வீரம் மிகுந்த மற்ற வீரர்களுடனும் அங்கே வந்தான்.(25-28) அங்கே வந்த எதிரிகளை ஒடுக்கும் சௌரியுடன் {கிருஷ்ணனுடன்}, மிகுந்த புத்திசாலியும், பெரும் தாராளவாதியுமான புகழ்பெற்ற விருஷ்ணி குல வீரருமான விருஷ்ணிகளின் தலைமைத் தளபதியுமான அக்ரூரரும் வந்திருந்தார். அங்கே பெரும் வீரம் கொண்ட அனாதிருஷ்டியும், புகழ்பெற்ற, பெரும் புத்திசாலியான, உயர்ந்த ஆன்மாவும் பிருஹஸ்பதியின் சீடருமான உத்தவரும் வந்தனர். சத்யகன், சல்லியகன், கிருதவர்மன், சாத்வதன்,(29,30) பிரத்யும்னன், சம்பன், நிசதன், சங்கு, சாருதேஷ்னன், பெரும் வீரம் கொண்ட ஜில்லி, விப்ருது, பெரும் பலம் வாய்ந்த சரணன், கற்றறிந்தவரில் முதன்மையான கதன் ஆகியோரும் வந்திருந்தனர்.(31) இவர்கள் தவிர வேறு பல விருஷ்ணிகளும், போஜர்களும், அந்தகர்களும் இந்திரப்பிரஸ்தத்திற்குத் திருமணப் பரிசுகளுடன் வந்திருந்தனர்.(32)
மாதவன் {கிருஷ்ணன்} வந்ததை அறிந்த மன்னன் யுதிஷ்டிரன், அவனை எதிர்கொண்டு அழைக்க இரட்டையர்களை {நகுல சகாதவனை} அனுப்பினான்.(33) அவர்களால் வரவேற்கப்பட்ட பெரும் வளமை கொண்ட அந்த விருஷ்ணி குலத்தவர், கொடிகளாலும், கொடிக்கம்பங்களாலும் அலங்கரிக்கப்பட்ட காண்டவப் பிரஸ்தத்திற்குள் நுழைந்தனர்.(34) வீதிகள் நன்கு கூட்டப்பட்டு, நீர் தெளித்து, மலர்களால் இரைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் சந்தன நீரும் தெளித்து அந்த இடமே நறுமணத்துடனும் குளிர்ச்சியாகவும் இருந்தது.(35) நகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அகில்புகையின் இனிமையான நறுமணம் சூழ்ந்து இருந்தது. நகரம் முழுவதும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமான மனிதர்களாலும், வணிகர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.(36)
மனிதர்களில் சிறந்த பலம்வாய்ந்த கரம் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்}, ராமனுடனும் {பலராமனுடனும்} வேறுபல விருஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் போஜர்களுடனும் நகரத்திற்குள் நுழைந்து, குடிமக்களாலும் ஆயிரக்கணக்கான பிராமணர்களாலும் வழிபடப்பட்டனர். இறுதியாகக் கேசவன் {கிருஷ்ணன்}, இந்திரனின் மாளிகையைப் போல இருந்த மன்னனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(37,38) ராமனைக் {பலராமனைக்} கண்ட யுதிஷ்டிரன், அவனை உரிய சடங்குகளுடன் வரவேற்றான். மன்னன் {யுதிஷ்டிரன்} கேசவனின் {கிருஷ்ணனின்} தலையை முகர்ந்து பார்த்து அவனை அணைத்துக் கொண்டான்.(39) வரவேற்பால் நிறைவடைந்த கோவிந்தன் {கிருஷ்ணன்} தாழ்மையுடன் யுதிஷ்டிரனை வழிபட்டான். அவன் மனிதர்களில் புலியான பீமனுக்கும் மரியாதை செலுத்துனான்.(40)
குந்தியின் மகனான யுதிஷ்டிரன் விருஷ்ணி குல, அந்தகக் குல முக்கிய மனிதர்களை உரிய சடங்குகளுடன் வரவேற்றான்.(41) யுதிஷ்டிரன் தனக்கு மூத்தோரை மரியாதையுடன் வணங்கி, சமமானவர்களை வரவேற்றான். சிலரைப் பாசத்துடனும், சிலரை மரியாதையுடனும் வரவேற்றான்.(42) பெரும் புகழ்பெற்ற ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, மணமகன் {அர்ஜுனன்} உறவினர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்தான். அப்போது, சுபத்திரையிடம், அவளது உறவினர்கள் கொடுத்தனுப்பிய மணக்கொடைகளைக் கொடுத்தான்.(43)
கிருஷ்ணன் பாண்டவர்கள் ஒவ்வொருவருக்கும் மணிகளால் வரிசையாக அலங்கரிக்கப்பட்ட ஆயிரம் தங்க தேர்களையும், ஒவ்வொரு தேருடனும் நான்கு குதிரைகளையும், நல்ல பயிற்சியைக் கொண்ட தேரோட்டிகளையும் கொடுத்தான்.(44) மேலும் அவன் {கிருஷ்ணன்} மதுரா நாட்டின் அழகிய வண்ணங்களில் இருந்த, பால் கொழுத்திருக்கும், பத்தாயிரம் பசுக்களையும் கொடுத்தான்.(45) பெரும் மனநிறைவு கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} தங்கச் சேணத்துடன் கூடியவையும், சந்திரனைப் போன்றவையும், வெண் நிறத்தாலானவையுமான ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தான்.((46) மேலும் அவன் வெண்ணிறம் கொண்டவையும், கருப்பு பிடரிமயிர் கொண்டவையும் காற்றின் வேகம் கொண்டவையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்டவையுமான ஆயிரம் கோவேறு கழுதைகளையும் கொடுத்தான்.(47) தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அவன், குளியலுக்குத் துணை புரியவும், குடிப்பதற்குத் துணை புரியவும் திறன்கொண்டவர்களும், வயதால் இளமையானவர்களும், முதல் பருவத்தில் இருந்தவர்களுமான கன்னிகளையும் கொடுத்தான். அவர்கள் அனைவரும் அழகான நிறத்துடன் இருந்தனர்.(48) அவர்கள் நன்கு உடுத்தி, ஒவ்வொருவரும் தங்கள் கழுத்தில் மட்டும் நூறு வகைகளில் தங்கம் ஆபரணங்களை அணிந்திருந்தனர். அவர்களது தோல் மினுமினுப்பாக இருந்தது. அவர்கள் அனைத்து ஆபரணங்களும் பூண்டு, தனிப்பட்ட சேவைகள் அனைத்திலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.(49)
பாஹ்லீக நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட நூறாயிரம் {ஒரு லட்சம்} இழுவைக் குதிரைகளையும் ஜனார்த்தனன், மணமகளின் சிறந்த மணக்கொடையாகக் கொடுத்தான்.(50) அந்தத் தசார்ண குலத்தில் முதன்மையானவன் {கிருஷ்ணன்} சுபத்திரைக்கு நெருப்பைப் போன்ற பிரகாசத்துடன், தூய்மையாக்கப்பட்ட மற்றும் தாது நிலையில் இருந்த முதல்தரமான தங்கத்தை விசேஷ குணம் கொண்ட பத்துப் பொதிகளில் கொடுத்தான்.(51) எப்போதும் வீரத்தையே விரும்புபவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்} அர்ஜுனனுக்குத் திருமணப் பரிசாக, மதக் கண் (நெற்றிப்பொட்டுகள், காதுகள், மலவாய்) திறந்து {நீர் வெளிப்பட்டு} மும்மதமும் பெருகுகின்ற மலைக்குன்றுகள் போன்ற போரில் வெல்லப்பட முடியாத ஆயிரம் யானைகளை, தங்க ஆபரணங்களாலும் மணிகளாலும் அலங்கரித்து, அதனதன் முதுகுகளில் ஓர் அரியணையையும் இணைத்துக் கொடுத்தான்.(52-54) ஆடைகளையும், விரிப்புகளையும் நுரைகளாகவும், யானைகளைத் தங்கள் முதலைகள் மற்றும் சுறாக்களாகவும், கொடிகளை மிதக்கும் பாசிகளாகவும், கொண்டவையும், யாதவர்களால் கொடுக்கப்பட்டவையுமான பெரும் தனக்குவியல் ஒரு கடலைப்போலத் தெரிந்தது. இவ்வாறு பெருமளவில் பொங்கும் கடலானது, பாண்டவர்களின் செல்வம் எனும் பெருங்கடலில் கலந்தது. அது அவர்களுடைய {பாண்டவர்களுடைய} எதிரிகள் அனைவரையும் பெருங்கவலையில் நிறையச் செய்தது.(55,56)
யுதிஷ்டிரன் அந்தப் பரிசுகள் அனைத்தையும் ஏற்று, அந்த விருஷ்ணி குல, அந்தகக் குல பெரும் வீரர்கள் அனைவரையும் வழிபட்டான்.(57) அந்தச் சிறப்பு மிகுந்த குரு குல வீரர்களும், விருஷ்ணி குல அந்தகக் குல வீரர்களும் தங்கள் நாட்களை விண்ணுலகில் இருக்கும் (இறந்த பிறகு சென்ற) அறம் சார்ந்த மனிதர்கள் போல இன்பமாகக் கடத்தினர்.(58) குருக்களும் விருஷ்ணிகளும் இதயம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சத்தமிட்டும் கைதட்டியும் இன்பமாக இருந்தனர்.(59) இப்படி இன்பமாகவும் விளையாடிக்கொண்டும் பல நாட்களைக் குருக்களுடன் கழித்த பெரும் சக்தி கொண்ட அந்த விருஷ்ணி குல வீரர்கள், தங்கள் நகரான துவாரவதிக்குத் {துவாரகைக்குத்} திரும்பினர்.(60)
விருஷ்ணி குல, அந்தகக் குல வீரர்கள், ராமனுடனும் {பலராமனுடன்}, தேர்களில் குரு குலத்தின் முதன்மையானவர்கள் கொடுத்த தூய கதிர்களை வெளியிடும் ரத்தினக் குவியல்களுடனும் சென்றனர்.(61) ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சிகரமான நகரமான இந்திரப்பிரஸ்தத்தில் அர்ஜுனனுடன் தங்கினான்.(62) சிறப்பு மிகுந்த அவன் {கிருஷ்ணன்}, யமுனைக் கரையில் மான்களைத் தேடி அலைந்தான். அர்ஜுனனுடன் சேர்ந்து மான்களையும் காட்டுப் பன்றிகளையும் தனது கணைகளால் துளைத்து விளையாடினான்.(63) கேசவனின் {கிருஷ்ணனின்} பிரியமான தங்கையான சுபத்திரை, புலோமாவின் மகள் (விண்ணுலகின் ராணி) ஜெயந்தனைப் பெற்றது போல ஒரு சிறப்பு மிகுந்த மகனைப் பெற்றெடுத்தாள்.(64) சுபத்திரையின் அந்த மகன், நீண்ட கரங்களுடனும், அகலமான மார்புடனும், காளையைப் போன்ற அகலமான கண்களுடனும் இருந்தான். எதிரிகளை ஒடுக்கும் அந்த வீரன் அபிமன்யு என்று அழைக்கப்பட்டான்.(65)
அர்ஜுனனின் மகன், எதிரிகளை அழிப்பவன், மனிதர்களில் காளை, பயமற்றுக் கோபம் கொண்டவனாக இருந்ததால் அபிமன்யு என்று அழைக்கப்பட்டான் {அபி = பயமற்றவன், மன்யு = கோபமானவன்}.(66) அந்தப் பெரும் வீரன் தனஞ்சயனால் சாத்வத குல மகளிடம் சமி பலகையை {அரணிக்கட்டையை} உரசி, வேள்வி நெருப்பை உண்டாக்குவது போலப் பெறப்பட்டான்.(67) இந்தக் குழந்தை பிறந்ததும், குந்தியின் பலம் வாய்ந்த மகனான யுதிஷ்டிரன், பிராமணர்களை அழைத்துப் பத்தாயிரம் பசுக்களையும், தங்கத்தால் ஆன நாணயங்களையும் கொடுத்தான்.(68) அந்தக் குழந்தை {அபிமன்யு} பிறந்ததிலிருந்து வாசுதவேனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, தந்தைக்கும் {அர்ஜுனனுக்கும்}, தந்தையின் சகோதரர்களுக்கும் {பெரியப்பா சித்தப்பாக்களுக்கும்} உலகத்தின் அனைத்து மக்களுக்குமான சந்திரனைப் போலப் பிடித்தமானவனாக இருந்தான்.(69) அந்தக் குழந்தை {அபிமன்யு} பிறந்ததும், குழந்தைக்கான முதல் சடங்குகள் அனைத்தையும் கிருஷ்ணனே செய்தான். குழந்தை {அபிமன்யு} வளர்பிறைச் சந்திரனைப் போல வளர்ந்து வந்தான்.(70)
எதிரிகளை அழிப்பவனான அவன், நான்கு கிளைகளுடனும் பத்துப் பிரிவுகளுடனும் தெய்வீக மற்றும் மனித ஆயுத அறவியலை வேதங்களை அறிந்தவனான அவனது தந்தையிடம் {அர்ஜுனனிடம்} இருந்து அறிந்தான்.(71) பெரும் பலம் வாய்ந்த அந்தப் பிள்ளை {அபிமன்யு} தன்னை நோக்கி ஏவப்படும் ஆயுதத்துக்குப் பதில் தாக்குதல் செய்யும் ஆயுதங்களையும் கற்றான். அவன் நளினத்துடனும், முன்பும் பின்பும் நகர்வதில் நளினத்துடனும் இருந்தான். சாத்திரம் மற்றும் சடங்குகளில் அபிமன்யு தனது தந்தை அர்ஜுனனைப் போலவே இருந்தான். தனது மகனைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். அர்ஜுனனைக் காணும் மகவத்தைப் {இந்திரனைப்} போல, அபிமன்யுவைக் கண்டு அர்ஜுனன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். (72,73) அனைத்து எதிரிகளையும் கொல்லும் தகுதி கொண்ட அபிமன்யு, தன்னிடம் அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் கொண்டிருந்தான். அவன் போரில் தன்னிகரற்று அகன்ற தோள் கொண்ட காளையைப் போல இருந்தான். பாம்பைப் (அதன் தலையைப்) போன்ற அகன்ற முகம் {நெற்றி} கொண்ட அவன் சிங்கத்தைப் போன்ற பெருமையுடன் இருந்தான்.(74) பெரும் வில்லைத்தாங்கிய அவன் வீரத்தால் மதங்கொண்ட யானையைப் போல இருந்தான். முழு நிலவைப் போன்ற அழகான முகம் கொண்ட அவன் {அபிமன்யு}, மேகம் போன்ற ஆழ்ந்த குரலைக் கொண்டிருந்தான். அவன் {அபிமன்யு} வீரத்திலும், அழகிலும், சக்தியிலும் மற்ற குணங்களிலும் கிருஷ்ணனைப் போல இருந்தான்.(75,76)
பெரும்பேறு கொண்ட பாஞ்சாலியும் {திரௌபதியும்} தனது ஐந்து கணவர்கள் மூலம், ஐந்து வீர மகன்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் அனைவரும் தகுதியில் முதன்மையானவர்களாகவும், போரில் மலை போன்ற அசைவற்றவர்களாகவும் இருந்தார்கள்.(77) பிரதிவிந்தியன் யுதிஷ்டிரனுக்கும், சூதசோமன் விருகோதரனுக்கும் {பீமனுக்கும்}, சுரூதகர்மன் அர்ஜுனனுக்கும், சதானீகன் நகுலனுக்கும், சுருதசேனன் சகாதேவனுக்கும் பிறந்தார்கள். ஆதித்யர்களைப் பெற்ற அதிதி போலப் பாஞ்சாலி {திரௌபதி} அந்த ஐந்து வீரர்களிடம் ஐந்து வீரர்களைப் பெற்றெடுத்தாள்.(78,79)
யுதிஷ்டிரனிடம் சில பிராமணர்கள் தங்கள் வருநலப் {தீர்க்கத்தரிசனப்} பார்வையால், இந்த மகன் விந்திய மலையைப் போலப் போர்க்களத்தில் ஆயுதங்களைத் தாங்கும் வல்லமை பெற்றுள்ளதால் பிரதிவிந்தியன் என்று அழைக்கப்பட வேண்டும்.(80) பீமசேனனால் திரௌபதி பெற்ற இந்தப் பிள்ளை, பீமன் ஆயிரம் சோம வேள்விகளைச் செய்த பிறகு பிறந்ததால் இவன் சூத சோமன் என்று அழைக்கப்படுவான்.(81) அர்ஜுனன் வனவாசத்திலிருந்து திரும்பிக் கடும் சாதனைகளை அடைந்ததால் இந்தப் பிள்ளை சுரூதகர்மன் என்று அழைக்கப்படுவான்.(82) நகுலனின் மகனுக்குச் சிறப்பு மிகுந்த குரு குலத்தில் வந்த அரச முனியான சதானீகனின் பெயர் சூட்டப்படுவான்.(83) திரௌபதியிடம் பிறந்த சகாதேவனின் பிள்ளை வாஹினி தேவதையின் {கிருத்திகை} நட்சத்திரத்தில் பிறந்ததால், தேவர்களுக்குத் தளபதியான சுருதசேனனின் (கார்த்திகேயனின்) {முருகனின்} பெயரால் அழைக்கப்படுவான்.(84) திரௌபதியின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு வருட இடைவெளியில் பிறந்தனர். அவர்கள் அனைவரும் புகழ்பெற்றவர்களாகவும், ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களாகவும் இருந்தனர்.(85)
ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா} அவர்களது முதற் சடங்குகளான சூதகரணமும், உபநயமும் (முதல் மொட்டை மற்றும் பூணூல் சூடுதலும்) விதிப்படி தௌமியரால் நடத்தப்பட்டது.(86) அற்புதமான குணங்களும் உறுதிகளும் கொண்ட அந்த அனைத்துப் பிள்ளைகளும் வேதங்களைக் கற்று, அர்ஜுனனிடம் தெய்வீக மற்றும் மனித ஆயுதங்களின் அறிவைப் பெற்றனர்.(87) ஓ மன்னர்களில் புலியே {ஜனமேஜனனே}, தேவர்களைப் போன்ற அகன்ற மார்புகளுடன் கூடிய பிள்ளைகளைப் பெற்ற பாண்டவர்கள், அவர்கள் வீரர்களாக வளர்ந்ததைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(88)

ஆங்கிலத்தில் | In English |