Krishna ran out of his city | Sabha Parva - Section 14 B | Mahabharata In Tamil
(ராஜசூய ஆரம்ப பர்வம்)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
யாதவர்கள் மதுராவில் இருந்து
துவாரகைக்கு ஏன் வந்தனர் என்பதற்கு காரணத்தைக் கிருஷ்ணன் சொல்லல்;
ஜராசந்தன் சிறையில் அடைத்து வைத்திருக்கும் மன்னர்களைப் பற்றிச் சொல்லல்;
ராஜசூயம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று
சொல்லல்;
ஜராசந்தனுக்கு பயந்து கிருஷ்ணன் துவாரகைக்கு ஓடுதல் |
பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.
மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். ஓ குரு குலத்தின் புலியே {யுதிஷ்டிரரே}, மலைகளில் முதன்மையான அந்த மலையைக் கடக்க முடியாது என்று கருதியும், ஜராசந்தனின் மீதிருந்த பயத்தைக் கடந்து வந்துவிட்டோம் என்று கருதியும், மதுவின் வழித்தோன்றல்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இப்படியே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பலமும் சக்தியும் பெற்றிருந்தாலும், ஜராசந்தனின் ஒடுக்குதலால், நாங்கள் மூன்று யோஜனை நீளம் கொண்ட கோமந்தா மலையை அடைய பணிக்கப்பட்டோம். ஒவ்வொரு யோஜனையின் இடைவெளியிலும் நூறு{100} வளைவுகளில் நூறு{100} வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு யோஜனையிலும் இருபத்தியோரு{21} வகையான ஆயுதம் தாங்கிய வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வாயிலும் வீரமிக்க வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. பதினெட்டு யாதவ பிரிவுகளில் வரும் இளையவர்கள், இந்தப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ஓ
மன்னா {யுதிஷ்டிரரே}, எங்கள் குலத்தில் பதினெட்டாயிரம் {18000}
சகோதரர்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். அஹூகனுக்கு நூறு{100} மகன்கள்
இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் (வீரத்தில்) தேவர்களைப் போல
இருக்கின்றனர். சாருதேஷ்ணன், அவனது சகோதரன் சக்கரதேவன், சாத்யகி, நான்
{கிருஷ்ணன்}, ரோகிணியின் மகன் பலதேவன் {பலராமன்}, எனக்குச் சமமான எனது மகன்
சம்பன் ஆகிய ஏழுபேரும் அதிரதர்கள் ஆவோம். எங்களைத் தவிர்த்து, மற்ற பலரும்
இருக்கின்றனர். ஓ மன்னா, அவர்களின் பெயர்களையும் இப்போது சொல்கிறேன்.
கிருதவர்மன், ஆனந்ததிருஷ்டி, சமிகன், சமிதின்ஜயன், கங்கன், சங்கு, குந்தி
ஆகிய எழுவரும் மஹாரதர்கள். அந்தக போஜனின் இரு மகன்களும், அந்த முதிர்ந்த
மன்னனும் சேர்ந்த அந்த பெரும் சக்தி மிக்க வீரர்கள், ஒவ்வொருவரும் இடியை
ஒத்தவர்களாவர். இந்த மஹாரதர்கள் அனைவரும் மத்திய நாட்டைத் தேர்ந்தெடுத்து,
விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.
துவாரகா,குசஸ்தலி நகரம் {Kusasthali} |
ஓ
பாரத குலத்தில் வந்த சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நீர் ஒருவரே மாமன்னன்
{சக்கரவர்த்தி} ஆகும் தகுதி படைத்தவர். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நீர் உமது
ஆட்சியை அனைத்து க்ஷத்திரியர்கள் மூலம் நிறுவ வேண்டும். ஆனால் இது எனது
அனுமானமே. ஓ மன்னா, நீர் ராஜசூய வேள்வியைச் செய்ய வேண்டுமானால், பெரும்
பலம் வாய்ந்த ஜராசந்தன் உயிருடன் இருக்கும் வரை அது ஈடேறாது. மலைகளின்
மன்னனுக்கு உள்ளிருக்கும் ஒரு குகையில் கொல்லப்பட்ட பெரும் யானைகளின்
உடல்களை சிங்கம் வைத்திருப்பது போல, ஒரு மலைக்கோட்டையில் பல எண்ணிலடங்கா
ஏகாதிபதிகள், அவனால்{ஜராசந்தனால்} அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஓ அனைத்து
எதிரிகளையும் கொல்பவரே {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், ஒரு வேள்வியில்,
தனது கடும் தவத்திற்கு அலங்காரமாக, அந்த நூறு மன்னர்களை உமையின் கணவனும்
தேவர்களுக்குத் தேவனுமான சிறந்தவருக்குப் {சிவனுக்குப்} பலி கொடுக்க விரும்பி
அடைத்து வைத்திருக்கிறான். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, அவன்
{ஜராசந்தன்} வேள்வி சம்பந்தமான தனது நோன்பை நிறைவேற்றவே இப்படிச்
செய்துவருகிறான். மன்னர்களை அவர்களது படைகளுடன் சேர்த்து தோற்கடித்து,
அவர்கள் அனைவரையும் கைதிகளாக்கித் தனது நகருக்குக் கொண்டு வந்து, அந்தக்
கூட்டத்தை பலவாகப் பெருக வைத்திருக்கிறான். ஓ மன்னா, ஜராசந்தனிடம் உள்ள
பயத்தின் காரணமாக, ஒரு காலத்தில் நாங்களும் மதுராவை விட்ட ஓட வேண்டி வந்து,
துவாராவதிக்கு {துவாரகைக்கு} வந்து சேர்ந்தோம். ஓ பெரும் மன்னா
{யுதிஷ்டிரரே}, நீர் வேள்வியைச் செய்ய நினைத்தால், ஜராசந்தனால் அடைத்து
வைக்கப்பட்டிருக்கும் மன்னர்களை விடுவித்து, அவனது {ஜராசந்தனது} சாவுக்கு
ஒரு வழி செய்ய வேண்டும். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரரே}, அல்லது உமது
பணி நிறைவடையாது. ஓ புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே},
உம்மால் ராஜசூயம் செய்யப்பட வேண்டுமானால், நீர் இதன்படியே செய்ய வேண்டும்.
வேறு வழியில்லை. இது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது பார்வையில்
சொல்லப்பட்டது. ஓ பாவமற்றவரே, நீர் நினைப்பதைச் செய்யும். இந்தச்
சூழ்நிலையில், ஓ மன்னா, அனைத்தையும் சிந்தித்துப் பார்த்து, காரணங்களை
குறித்துக் கொண்டு, எது சரி என்று நீர் நினைக்கிறீரோ அதை எங்களுக்குச்
சொல்லும்," என்றான் {கிருஷ்ணன்}.