"You sinner, are you innocent?" said Krishna! | Sabha Parva - Section 22 | Mahabharata In Tamil
(ஜராசந்த வத பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : தான் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ததாக நினைவில்லை என்று ஜராசந்தன் கூறல்; கிருஷ்ணன் சிறையில் அடைபட்டிருக்கும் மன்னர்களைக் குறித்துச் சொல்லல்; மனிதபலியை உலகம் கண்டதில்லை என்று கூறல்; க்ஷத்திரியர்களின் கடமையை ஜராசந்தன் நினைவூட்டல்; மன்னர்களை விடுவிக்க முடியாதெனவும், மோதுவதற்குத் தயார் எனவும் ஜராசந்தன் கூறல்…
கிருஷ்ணன், "ஓ வலிய கரங்களை உடையவனே {ஜராசந்தனே}, ஒரு குலத்தின் பெருமையைத் தாங்கி நிற்கும் ஒரு குறிப்பிட்ட தலைவருடைய உத்தரவின் பேரில் நாங்கள் உன்னை எதிர்த்து வந்திருக்கிறோம்.(7) ஓ மன்னா {ஜராசந்தா}, நீ பல க்ஷத்திரியர்களைக் கைதிகளாக (உனது நகரத்தில்) வைத்திருக்கிறாய். இவ்வளவு பெரிய தீங்கு {குற்றம்} செய்திருக்கும் நீ எப்படி உன்னை அப்பாவியாகக் கருதிக் கொள்கிறாய்?(8) ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {ஜராசந்தா}, அறம் சார்ந்த மன்னர்களுக்கு நீ எப்படித் தீங்கு செய்யலாம்? ஓ மன்னா, பிற மன்னர்களைக் கொடுமையாக நடத்தி, ருத்திர தேவன் வேள்வியல் அவர்களைப் பலியிடப் போகிறாய்.(9) ஓ பிருஹத்ரதனின் மகனே {ஜராசந்தனே}, உன்னால் இழைக்கப்படும் பாவம் எங்களையும் தீண்டலாம். நாங்கள் அனைத்து செயல்களையும் அறத்தன்மையுடன் செய்து வருகிறோம். நாங்கள் அறத்தைக் காக்கும் தகுதியுடனேயே இருக்கிறோம்.(10)
தேவர்களுக்கு மனிதனை பலியாகக் {நர பலி} கொடுக்கும் முறை எங்குமே காணப்படுவதில்லை. தேவனான சங்கரருக்கு மனிதர்களைப் பலியாகக் கொடுக்க ஏன் நீ விரும்புகிறாய்?(11) உனது வகை சார்ந்த மனிதர்களை நீ {வேள்விப் பலியாகத் தகுதியுடைய} விலங்குகளாகவே மதிக்கிறாய். ஓ ஜராசந்தா, உன்னைப் போன்ற மூடனைத் தவிர வேறு யாரால் இப்படிச் செயல்பட முடியும்?(12) ஒருவன் எந்தச் சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்திருந்தாலும், அதற்கான கனிகளை அவன் நிச்சயம் அடைவான்.(13) எனவே, எங்கள் உறவினர்களைக் கொன்றவனான உன்னை, துயரில் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையிலும், எங்கள் குலத்தின் செழிப்புக்காகவும் நாங்கள் கொல்ல வந்திருக்கிறோம்.(14) க்ஷத்திரியர்களில் (உனக்குச் சமமாக) எந்த ஆண்மகனும் இல்லை என நீ நினைக்கிறாய். இது உனது பங்குக்கு நீ செய்யும் பிழையாகும்.(15)
ஓ மன்னா, பெருமையுடைய ஆன்மாவும், தாய்தகப்பன் வழியில் மதிப்பும் கொண்ட எந்த க்ஷத்திரியன், வெளிப்படையான போரில் ஈடுபடுவதால் நிலையான நல்லுலக {சொர்க்க} வாழ்வை அடையாமல் போகிறான்?(16) ஓ மனிதர்களில் காளையே {ஜராசந்தனே}, க்ஷத்திரியர்கள் விண்ணுலகை நோக்கமாகக் கொண்டு எப்போதும் தங்களைப் போரிலும், வேள்வியிலும் ஈடுபடுத்திக் கொண்டு முழு உலகையும் வெற்றி கொள்வார்கள்.(17) வேத கல்வி, பெரும்புகழ், தவ நோன்புகள், போர்க்களத்தில் மரணம் ஆகிய செயல்கள் அனைத்தும் நல்லுலகை {சொர்க்கத்தை} நோக்கி அழைத்துச் செல்லும். மற்ற மூன்று வழிகளில் நல்லுலகம் கிடைப்பது ஐயம் என்றாலும், போர்க்கள மரணம் நிச்சயம் அதைத் தரும்.(18) போர்க்களத்தில் மரணம் என்பது இந்திரனின் அரண்மனையை அடையும் வழியாகும். அது பல நல்ல தகுதிகளால் அருளப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) தனது குறிப்பிடும்படியான தகுதிகளுடன் இருந்து, அனைத்து அசுரர்களையும் வீழ்த்தி அண்டத்தை ஆண்டு வருகிறான். பெரும் பலத்தில் செருக்குள்ள மகத வீரனான உன்னைத்தவிர வேறு எவரிடம் பகைமை கொண்டால் நிச்சயமாக நல்லுலகை அடைய முடியும்?(19,20)
ஓ மன்னா {ஜராசந்தா}, பிறரை அவமதிக்க நினைக்காதே. மனிதர்கள் அனைவரிடமும் ஆற்றல் இருக்கிறது. ஓ மனிதர்களின் மன்னா {ஜராசந்தா}, உனது ஆற்றலுக்கு இணையான, மேன்மையான ஆற்றலைக் கொண்ட பல மனிதர்கள் இருக்கிறார்கள்.(21) இவர்கள் அனைவரும் அறியப்படும் வரை, நீயே ஆற்றலுக்காக அறியப்படுவாய். ஓ மன்னா {ஜராசந்தா}, உனது ஆற்றலை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும்.(22) அதனாலேயே நான் இவ்வாறு பேசுகிறேன். ஓ மகத மன்னா {ஜராசந்தா}, உனக்குச் சமமானவர்கள் முன்னிலையில் உனது மேன்மையான நிலையையும், செருக்கையும் கைவிடுவாயாக. ஓ மன்னா {ஜராசந்தா}, உனது பிள்ளைகளுடனும், அமைச்சர்களுடனும், படைகளுடனும் சேர்ந்து யமலோகத்திற்குச் செல்லாதே.(23) தம்போத்பவன், கார்த்தவீரியன், உத்தரன், பிருஹத்ரதன் ஆகிய மன்னர்களும் மேன்மையானவர்களை அவமதித்ததற்காக தங்கள் படைகளோடு சேர்ந்து அழிவைச் சந்தித்தார்கள்.(24) உன்னிடம் கைதிகளாக இருக்கும் ஏகாதிபதிகளை மீட்க விரும்பி இங்கே வந்திருக்கும் நாங்கள் நிச்சயமாக பிராமணர்கள் அல்ல என்பதை அறிந்து கொள்வாயாக. நான் ரிஷிகேசன் {கிருஷ்ணன்). சௌரி என்றும் நான் அழைக்கப்படுகிறேன். இந்த இரு வீரர்களும் பாண்டுவின் மகன்களாவர்.(25) ஓ மகத மன்னா {ஜராசந்தா}, நாங்கள் உன்னை அறைகூவி ஆழைக்கிறோம். உறுதியோடு எங்களுடன் போரிடுவாயாக. ஒன்று ஏகாதிபதிகள் அனைவரையும் விடுவி அல்லது யமனின் உலகத்தைச் சென்றடைவாயாக" என்றான் {கிருஷ்ணன்}[1].(26)
[1] இவ்விடத்தில் கும்பகோணம் பதிப்பில் ஒரு நீண்ட பகுதி இருக்கிறது. அது கங்குலியின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இடம்பெறவில்லை. அந்தப் பகுதி பின்வருமாறு, "ஜராஸந்தன் இதைக் கேட்டுக் கோபங்கொண்டு பேசத் தொடங்கினான். "நான் கம்ஸனல்லேன்; பிரலம்பனல்லேன்; பாணனல்லேன்; முஷ்டிகனல்லனே; நரகனல்லேன்; இந்த்ரதபனனல்லேன்; கேசியல்லேன்; பூதனையுமல்லேன்; காலயவனனுமல்லேன்; அவர்களல்லரோ உன்னால் யுத்தத்தில் கொல்லப்பட்டவர். நீ இடைக்குலத்திற் பிறந்தவன். உன் முன் ஜாதியை நினை. நீ நம்மிடம் பயந்தோடி நாடோடி மனிதனைப் போலப் பிறப்பிடமான மதுரையை விட்டுக் கடல் தீவைச் சார்ந்தாயன்றோ? கிருஷ்ணா, அப்படிப்பட்ட நீ, இப்போது கார்காலம் கடந்த பிறகு மேகம் கர்ஜிப்பது போல வீணாக கர்ஜிக்கிறாய். மாதவா, உன்னைக் கொன்று என் மருமகனும், உக்ரஸேனன் புத்ரனும், சிறந்த புத்திமானுமாகிய கம்ஸன் கடனை இப்போதே தீர்க்கப் போகிறேன். உன்னையும்,உனக்கு வேண்டினவர்களையும் கொல்வதற்காக உன்னுடன் யுத்தஞ்செய்ய எனக்கு நெடுநாளாக விருப்பமிருந்தது. நல்ல காலமாதலால் இந்திராதிதேவர்க்ள என் ஆரம்பத்தைப் பயன்படச் செய்தனர். கோவிந்தா, இந்தப் பீமஸேனனும், அர்ஜுனனுமாகிய இருவரும் அசக்தர்கள். நான் இவர்களை யுத்தத்தில் பிடித்து ஒரு சிங்கம் சிறு மிருகங்களைக் கொல்வது போலக் கொல்வேன்" என்றான். அப்போது ஸ்ரீ பகவான், "ஜராஸந்தா, ஏன் கர்ஜிக்கிறாய்? நீ சொல்வதைச் செய்கையால் நடத்து. ராஜாக்களுள் இழிவானவனே, அமைச்சர்களுடனும், புத்திரர்களுடனும் உன்னை நான் இப்போது சண்டையில் எனது கட்டளையைச் செய்பவர்களான இவ்விரு பாண்டவர்களால் கொல்லுவிக்கப் போகிறேன். நீ எப்பாடு பட்டாலும் உயிரோடு உன் நகரத்தில் பிரவேசிக்க மாட்டாய்" என்று சொன்னார்" என்றிருக்கிறது. அதன் பிறகு கும்பகோணம் பதிப்பிலும் கங்குலியின் பதிப்பில் உள்ளதைப் போலவே தொடர்கிறது. அடுத்த அத்தியாயத்துடன் சேர்த்துப் பார்க்கும்போது இந்தப் பகுதி இங்கே சரியாக ஒட்டவில்லை.
ஜராசந்தன், "எந்த மன்னனையும் வீழ்த்தாமல், அவனைக் கைதியாக நான் கொள்வதில்லை. என்னிடம் வீழாத எவரை நான் இங்கே வைத்திருக்கிறேன்?(27) ஆற்றலைக் காட்டி மற்றவர்களைத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து அடிமைகளாக நடத்துவது என்பது க்ஷத்திரியர்கள் தொடர வேண்டிய கடமையாகும்.(28) க்ஷத்திரியர்களின் கடமைகளை உங்களுக்கு எடுத்துரைத்த இத்தருணத்தில், ஓ கிருஷ்ணா, வேள்வியில் தேவர்களுக்கு பலியிடக் கைப்பற்றப்பட்ட இந்த ஏகாதிபதிகளை, இன்று அச்சத்தால் விடுதலை செய்வேனா?(29) துருப்புகளுக்கு எதிராக துருப்புகளை அணிவகுத்துப் போரிடலாமா? அல்லது தனியாக ஒருவரோடொருவர் நேருக்குநேர் போரிடலாமா? அல்லது ஒரே நேரத்தில் இருவருக்கோ, மூவருக்கோ எதிராக போரிவா? அல்லது மூவரிடம் தனித்தனியாகப் போரிடவா? எப்படி வேண்டுமானாலும் நான் தயாராக இருக்கிறேன்" என்றான் {ஜராசந்தன்}.(30)
வைசம்பாயனர் சொன்னார், "கடுஞ்சாதனைகளைச் செய்த அந்த வீரர்களுடன் போரிட விரும்பிய ஜராசந்தன், இவ்வாறு பேசிவிட்டு, (தனது மகன்) சகதேவனை {ஸஹதேவனை} அரியணையில் அமர்த்தினான்.(31) பிறகு ஓ பாரத குலத்தின் காளையே, அந்த மன்னன், போரிடும் முன்னர், தன் தளபதிகளான கௌசிகன் மற்றும் சித்திரசேனனை நினைவுகூர்ந்தான்.(32) இந்த இருவரைத்தான், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்த உலகத்திலுள்ள அனைவரும் முன்பு மரியாதையுடன் ஹம்சன், டிம்பகன் என்று அழைத்தார்கள்.(33) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பலமிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், மனிதர்களில் சிறந்தவனும், மதுவைக் கொன்றவனும் {மது என்ற அசுரனைக் கொன்றவனும் / மதுசூதனனும்}, வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனும், ஹலாதரன் தம்பியும், தற்கட்டுப்பாடுதைய தேவனுமான சௌரி {கிருஷ்ணன்}, மகத மன்னன் போரில் பீமனால் கொல்லப்படவே விதிக்கப்பட்டிருக்கிறானேயன்றி மதுவை அழித்தவனாலல்ல என்பதை அறிந்து, பலமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், புலி போன்ற பலத்தைக் கொண்டவனும், பயங்கர வீரம் கொண்ட போர்வீரனுமான மன்னன் ஜராதசந்தனைத் தானே கொல்ல விரும்பவில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(34,35)
ஆங்கிலத்தில் | In English |