Jarasandha tired out on fourteenth day! | Sabha Parva - Section 23 | Mahabharata In Tamil
(ஜராசந்த வத பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : ஜராசந்தன் மோதுவதற்கு பீமனைத் தேர்ந்தெடுத்தல்; கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் போர் தொடங்கல்; ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் நடந்த உக்கிரமான போர்; உணவு உறக்கம் இல்லாமல் நடந்த பதிமூன்று நாள் போர்; பதினாலாவது நாளில் ஜராசந்தன் களைத்துப் போதல்; அதை கிருஷ்ணன் பீமனுக்கு உணர்த்துதல்; பீமன் ஜராசந்தனைக் கொல்ல விரும்புதல்…
இப்படிக் கேட்கப்பட்டவனும், மகத ஆட்சியாளனும், பெரும் பிரகாசமிக்கவனுமான மன்னன் ஜராசந்தன், {கிருஷ்ணனை மாடு மேய்ப்பவன் என்றும், அர்ஜுனனைச் சிறுவன் என்றும் நினைத்து} தான் பீமனுடம் போரிட விரும்புவதாகத் தன் கருத்தை வெளிப்படுத்தினான்.(3) பிறகு புரோகிதர், கோரோசனையையும்[1], மலர் மாலைகளையும், பிற மங்கலப் பொருட்களையும், நினைவை மீட்டெடுக்கவும், காயங்களையும் வலியையும் ஆற்றவும் கூடிய பல மருந்துகளையும் கொண்டு வந்து, போருக்காக மூச்சிரைத்துக் கொண்டிருந்த ஜராசந்தனை அணுகினார்.(4) ஒரு சிறப்புமிக்க பிராமணரைக் கொண்டு தன் நன்மைக்கான சடங்குகளை முடித்த மன்னன் ஜராசந்தன், க்ஷத்திரியக் கடைமைகளை நினைவுகூர்ந்து, போருரிகளை உடுத்திக் கொண்டான்.(5)
[1] பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம். கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவது பாரதம் முழுவதும் வழக்கமாக இருந்தது.
மணிமுடியை அகற்றி, தலைமுடியை வாரிக் கட்டிக் கொண்ட ஜராசந்தன், கண்டங்களை {கரைகளை} வெடித்துச் சிதற வைக்கும் பெருங்கடலைப் போல நின்றான்.(6) பிறகு, பேராற்றல் கொண்ட அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்}, பீமனிடம், "நான் உன்னுடன் போரிடப் போகிறேன். மேன்மைமிக்க மனிதனால் வீழ்த்தப்படுவதே சிறந்தது" என்றான்.(7) இதைச் சொல்லிவிட்டு, அனைத்து எதிரிகளையும் ஒடுக்கும் ஜராசந்தன், தேவர்கள் தலைவனை நோக்கி விரையும் அசுரன் பலனைப் போல பீமனை நோக்கி விரைந்தான்.(8) கிருஷ்ணன் {மங்கலக் காரியங்களைச் செய்து} பீமனுக்காக தேவர்களை இருப்புக்கு அழைத்தான். கிருஷ்ணனின் மைத்துனனான பெரும் பலம் வாய்ந்த பீமசேனன் போரிடும் விருப்பத்துடன் ஜராசந்தனை நோக்கி முன்னேறினான்.(9)
மனிதர்களில் புலிகளும், பேராற்றல் கொண்டவர்களுமான அந்த வீரர்கள், வெறுங்கையையே தங்கள் ஆயுதமாகக் கொண்டு, ஒருவரையொருவர் வீழ்த்த விரும்பி உற்சாகமாக மோதலில் ஈடுபட்டனர்.(10) ஒருவர் கரங்களை அடுத்தவர் பற்றிக் கொண்டும், ஒருவருக்கொருவர் கால்களைப் பின்னிக் கொண்டும், தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டு மோதினர். அடிக்கடி ஒருவர் கழுத்தை மற்றவர் தங்கள் கரங்களால் பிடித்தும், இழுத்தும், வன்முறையுடன் தள்ளியும், ஒருவர் உடல் உறுப்புகளை மற்றவர் அழுத்தியும் தொடர்ந்து தங்கள் கக்கங்களைத் தட்டிக் கொண்டும் முழக்கமிட்டனர்.(11,12) ஓ மேன்மையானவனே {ஜனமேஜயா}, சில நேரங்களில் தங்கள் கரங்களை விரித்துக் கொண்டும், சில நேரங்களில் அருகில் இழுத்துக் கொண்டும் {சித்ரஹஸ்தங்களைச் செய்து கொண்டும்}, பிறகு உயர்த்தியும் தாழ்த்தியும், ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டனர். கழுத்தால் கழுத்தை மோதி, நெற்றியால் நெற்றியை மோதி, மின்னல் கீற்றுகளைப் போல நெருப்புப் பொறிகள் பறக்க வைத்தனர்.(13) பல வகைகளில் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து, உள்ளே இருக்கும் நரம்புகளும் பாதிக்கும் வண்ணம் வன்முறையுடன் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும், உள்ளங்கைகளை இறுக மூடி மற்றவர் மார்பில் குத்திக் கொண்டனர். வெறும் கையையே ஆயுதமாகக் கொண்டு முழங்கும் மேகங்களைப் போல கட்டிப்பிடித்து, மதம் கொண்ட இரு யானைகள் தங்கள் துதிக்கைகளைக் கொண்டு தாக்கிக் கொள்வது போல ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.(14,15)
ஒருவர் அடியை மற்றவர் வாங்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் இழுத்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், கோபம் கொண்ட சிங்கங்களைப் போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.(16) தனது உறுப்புகளால் மற்றவரின் அனைத்து உறுப்புகளையும் தாக்கியும், தன் கரத்தை மற்றவருக்கு எதிராகப் பயன்படுத்தியும், ஒருவர் மணிக்கட்டை மற்றவர் பிடித்தும், ஒருவரை ஒருவர் தொலைவாகத் தூக்கி வீசினர்.(17) மற்போரில் சாதித்தவர்களான அந்த இரு வீரர்களும் ஒருவர் கரத்தை மற்றவர் பிடித்து, தன்னை நோக்கி இழுத்து, ஒருவரை ஒருவர் வன்முறையுடன் நசுக்கினர்.(18) பிறகு அந்த வீரர்கள் மற்போரில் பிருஷ்டபங்கம் என்ற சாதனையைச் செய்ய தொடங்கினர். அச்சாதனையில், ஒருவரை, அவரது முகம் தரையை நோக்கி இருக்கும் வண்ணம் வைத்துத் தூக்கி எறிதலும், பின்பு எதிரியை அதே நிலையில் நீண்ட நேரம் தக்க வைத்தலும் ஒரு முறையாகும். தங்கள் கரத்தால் ஒவ்வொருவரும் சம்பூர்ண மூர்ச்சை மற்றும் பூர்ணகும்பம் ஆகிய சாதனைகளையும் செய்தனர்.(19) சில வேளைகளில் காய்கறிகளைக் கட்டும் கயிறைப் போல தங்கள் கரங்களை ஒருவருக்கு ஒருவர் பின்னினர் {திருணபீடம் செய்தனர்}. விரல்களை மடக்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர் {பூர்ணயோகம்}. ஒரு உறுப்பைத் தாக்குவது போல பாசாங்கு காட்டி உடலின் வேறு உறுப்பைத் தாக்கினர் {முஷ்டிகம்}. இப்படி அந்த வீரர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்[2].(20)
[2] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், பிருஷ்டபங்கம் = முதுகைத் தரையிற்படும்படி செய்வதனால் உண்டாகும் அவமானம், ஸம்பூர்ணமூர்ச்சை = வயிறு முதலான இடங்களில் கசக்குவதனாலுண்டாகும் மூர்ச்சை, திருணபீடம் = நார் முதலியவற்றினாற் கயிற்திரிப்பது போல ஒருவரோடொருவர் கைகால்களைப் பின்னிக் கொள்வது, பூர்ணயோகம் = தலை முதல் கால் வரையில் முழு உடம்பையும் சேர்த்தணைப்பது; அசதியடித்தல், முஷ்டிகம் = ஓரிடத்தில் குத்துவதாகக் காட்டி மற்றோரிடத்தில் குத்துவது" என்றிருக்கிறது.
ஓ மனிதர்களில் புலியே {ஜனமேஜயா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரைக் கொண்ட ஆயிரக்கணக்கான குடிமக்கள், ஏன் பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் கூட அங்கே வந்து கூடி அந்தப் போரைக் கண்டனர். அந்தக் கூட்டம் இடைவெளியில்லாமல் நெருக்கத்துடன் கூடியிருந்ததைப் பார்ப்பதற்கு ஒரு பெரும் திடமான பொருள் போல இருந்தது.(21,22) மற்போர் வீரர்கள் தங்கள் கரங்களைத் தட்டிக் கொள்ளும் ஒலியும், ஒருவரைக் கீழே வீழ்த்த மற்றவர் கழுத்தைப் பிடித்து இழுப்பதும், ஒருவர் காலை மற்றவர் பிடித்து, மோதிக் கொள்வதுமான ஒலிகள் அனைத்தும் கூடி மலை நொறுங்கி விழுவது போலவும், இடியின் முழக்கம் போலவும் இருந்தது.(23) பலம் வாய்ந்தவர்களில் முதன்மையானவர்களான அவர்கள் இருவரும் தங்களுக்குள் மோதிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பி, ஒருவரின் சிறு தவறையும் பயன்படுத்தி முன்னிலை பெற இருவரும் விழிப்புடன் இருந்தனர்.(24) மேலும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் பலம் வாய்ந்த பீமனும் ஜராசந்தனும் கடுமையாகப் போரிட்டு பழங்காலத்தின் விருத்திரன் மற்றும் வாசவனை நினைவுபடுத்தும் வகையிலான தங்கள் கரங்களின் அசைவுகளால் மக்கள் கூட்டத்தை விரட்டினர்.(25)
இப்படியே அந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் இழுத்து, பின்னுக்குத் தள்ளி, திடீரென வெட்டி இழுத்து, தலைகுப்புற தள்ளி, பக்கவாட்டில் தள்ளி, ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். சில நேரங்களில் தங்கள் கால் முட்டிகளை வைத்துத் தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் சத்தமாகத் திட்டிக் கொண்டு, விரல்களை இறுக மூடித் தாக்கிக் கொண்டு, பெரும் பாறை இறங்கி வருவதைப் போல அடியை ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டனர். அகலமான தோள்களும், நீண்ட கரங்களும் கொண்ட இரு மற்போர் வல்லுனர்களும், ஒருவரை ஒருவர் இரும்பு கதாயுதத்தைப் போன்ற தங்கள் நீண்ட கரங்களால் தாக்கிக் கொண்டனர்.(26-28) அந்த இரு வீரர்களுக்கிடையேயான அந்தப் போர், கார்த்திகை மாதத்தின் முதல் (சந்திர) நாளில் {பிரதமையில்} துவங்கியது. பிறகு அந்தச் சிறப்பு மிகுந்த வீரர்களால் இடைவெளியும் உணவும் இன்றி இரவு பகல் பாராமல் பதிமூன்றாவது சந்திர நாள் {திரியோதசி} வரை தொடர்ந்தது. பதினாலாவது சந்திர நாள் {சதுர்த்தசி} இரவில் மகத ஏகாதிபதி {ஜராசந்தன்} களைப்பால் விலகினான்.(30)
ஓ மன்னா, அந்த ஏகாதிபதி களைப்பாக இருப்பதைக் கண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, கடும் செயல்கள் செய்யும் பீமனிடம் அவனைத் தூண்டிவிடுவதற்காக,(31) "ஓ குந்தியின் மகனே {பீமரே}, களைப்பு மிகுதியால் இருக்கும் பகைவனை நசுக்கக் கூடாது, அப்படி நசுக்கினால் அவன் இறக்கவும் நேரிடலாம்.(32) எனவே, ஓ குந்தியின் மகனே {பீமரே}, இந்த மன்னன் உம்மால் ஒடுக்கப்படக் கூடாது. மறுபுறம், ஓ பாரத குலத்தின் காளையே, உமது பகைவனிடம் உமக்கு இணையானவனாக இருக்கும்வகையில் மட்டுமே உமது கரங்கொண்டு போரிடுவீராக" என்றான்.(33)
பிறகு, கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, ஜராசந்தனின் நிலையை உணர்ந்து, அவனது உயிரை எடுக்கத் தீர்மானித்தான்.(34) பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான அந்தக் குரு குல இளவரசன் {பீமன்}, இதுவரை போரில் தோல்வியுறாத ஜராசந்தனை வீழ்த்த விரும்பித் தன் பலம் மற்றும் ஆற்றலனைத்தையும் ஒருங்கே கூட்டினான் {பீமன்}" {என்றார் வைசம்பாயனர்}.(35)
ஆங்கிலத்தில் | In English |