Jarasandha was broke into two! | Sabha Parva - Section 24 | Mahabharata In Tamil
(ஜராசந்த வத பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பீமன் ஜராசந்தனைக் கொன்றது; கிருஷ்ணன் மலைக்கோட்டையில் அடைபட்டிருந்த மன்னர்களை விடுவித்தது; ஜராசந்தனின் தெய்வீகத் தேரை எடுத்துக் கொண்டது; ஜராசந்தனின் மகனை அரியணையில் அமர்த்தியது; மன்னர்களின் பரிசையும், சகாதேவனின் {ஜராசந்தன் மகன்} பரிசையும் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டது. கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் இந்திரப்பிரஸ்தம் திரும்பியது; யுதிஷ்டிரன் மகிழ்ச்சி அடைந்தது; அந்தத் தெய்வீக தேரை கிருஷ்ணனுக்கு யுதிஷ்டிரன் கொடுப்பது; கிருஷ்ணன் துவராகைக்கு மனோவேகத்தில் திரும்பியது...
வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச் சொல்லப்பட்ட பீமன் ஜராசந்தனைக் கொல்வதில் உறுதி பூண்டு, யது குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனிடம், "ஓ யது குலத்தின் புலியே, ஓ கிருஷ்ணா, போதிய பலத்துடன் என்னுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாவியை நான் மன்னிக்க மாட்டேன்" என்றான்.(1,2) பீமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் புலியான கிருஷ்ணன், தாமதமில்லாமல் ஜராசந்தனைக் கொல்வதற்கு அந்த வீரனை {பீமனை} ஊக்குவிக்கும் வகையில், "ஓ பீமரே, நற்பேற்றின் காரணமாக (உமது தந்தையான) தேவன் மருத்தனிடம் {வாயுத்தேவனிடம்) நீர் அடைந்த பெரும் பலத்தை, ஜராசந்தனிடம் பயன்படுத்துவீராக" என்றான்.(3,4) இப்படி கிருஷ்ணனால் சொல்லப்பட்டவனும், எதிரிகளைக் கொல்பவனுமான பீமன், பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தனைக் காற்றில் உயரமாகத் தூக்கி சுழற்றத் தொடங்கினான்.(5) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படியே காற்றில் அவனை {ஜராசந்தனை} நூறு முறை சுழற்றி, ஜராசந்தனின் முதுகெலும்பில் தன் கால் முட்டியை வைத்த பீமன், அவனது உடலை இருகூறுகளாக உடைத்துப் போட்டான். இப்படி அவனை {ஜராசந்தனைக்} கொன்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்த விருகோதரன் பயங்கர முழக்கம் செய்தான்.(6) பீமன் அப்படி ஜராசந்தனை உடைத்துப்போட்டு பிறகு, அந்தப் பாண்டவனின் {பீமனின்} முழக்கம், ஜராசந்தனின் மரண ஓலம், பேரொலியாக எழுந்து அனைத்து உயிர்களின் இதயத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது.(7) மகதத்தின் குடிமக்கள் அனைவரும் இதைக் கண்ட பயங்கரத்தால் ஊமைகளாகினர். இதைக் கண்ட பல பெண்கள் தகுந்தகாலத்திற்கு முன்பே கருக்களை ஈன்றெடுத்துவிட்டனர்.(8) இந்த முழக்கங்களைக் கேட்ட மகத மக்கள், இமயம் பிளந்து பூமியில் விழுந்து இரண்டாகக் கிடக்கிறதோ என்று நினைத்தனர்.(9) பிறகு அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள், உறங்குவது போல கிடந்த மன்னனின் உயிரற்ற உடலை அரண்மனை வாயிலில் விட்டுவிட்டு அந்த நகரத்தை விட்டு வெளியே சென்றனர்.(10)
பிறகு கிருஷ்ணன் கொடிக்கம்பத்துடன் கூடிய ஜராசந்தனின் தேரை ஆயத்தமாக்கி, அதில் அந்தச் சகோதரர்களை பயணிக்கச் செய்து, (சிறையில் இருந்த) தனது உறவினர்களை விடுவித்தான்.(11) பெரும் அளவிலான தங்கத்தையும், செல்வங்களையும் கொண்ட அந்த மன்னர்கள், கொடூரமான விதியில் இருந்து காப்பாற்றப் பட்டதால், அவர்கள் கிருஷ்ணனை அணுகி பல பொன்னையும் ரத்தினங்களையும் அவனுக்குப் பரிசாக அளித்தனர்.(12) தன் எதிரியை வீழ்த்திய கிருஷ்ணன், ஆயுதங்களுடன் எந்தக் காயமும் இன்றி, (விடுவிக்கப்பட்ட) மன்னர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, (ஜராசந்தனின்) அந்தத் தெய்வீக தேரில் கிரிவ்ரஜத்தை விட்டு வெளியே வந்தான்.(13) இந்தப் பூமியில் எந்த ஏகாதிபதியாலும் வீழ்த்தப்பட முடியாதவனும், பேரழகனும், எதிரியைக் கொல்வதில் திறன் கொண்டவனும், தான் கொண்ட வில்லை இரு கைகளாலும் தாங்கக்கூடியவனும் (அர்ஜுனனும்), பெரும் பலங்கொண்டவனும் (பீமனும்), கிருஷ்ணன் தேரை ஓட்ட, பொல்லாங்கு நிறைந்த அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தனர்.(14)
வீரர்களான பீமனும் அர்ஜுனனும் பயணிக்க கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட, அந்த சிறந்த தேர் பேரழகு வாய்ந்ததாக இருந்தது.(15) பழங்காலத்தில் இந்த தேரில் நின்றே இந்திரனும் விஷ்ணுவும் (அசுரர்களுக்கு எதிராகப்) போரில் ஈடுபட்டனர். அந்தப் போருக்கு முக்கிய காரணமாகவும், பல கொலைகளுக்குக் காரணமாகவும் (பிருஹஸ்பதியின் மனைவி) தாரகை இருந்தாள். அந்த தேரை ஓட்டிக் கொண்டு வந்த கிருஷ்ணன் மலைக்கோட்டையை விட்டு வெளியே வந்தான்.(16) புடம்போட்ட பொன்னைப் போல பிரகாசித்து, வரிசையாக அலங்கரிக்கப்பட்ட மணிகள் குலுங்க, அதன் சக்கர ஒலி மேகத்தின் முழக்கத்தைப் போல இருக்க, போரில் வெற்றியை மட்டுமே தந்து, எவனுக்கு எதிராக செலுத்தப்படுகிறதோ அவனைக் கொல்லும் அந்த தேரில் இந்திரன், பழங்காலத்தில் தொண்ணூற்று ஒன்பது அசுரர்களைக் கொன்றிருக்கிறான். அந்த மனிதர்களில் காளைகள் (மூன்று மைத்துனர்களும்) அந்த தேரைப் பெற்றதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.(17,18) இரண்டு சகோதரர்களுடன் கூடியவனும், நீண்ட கரத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணன், (ஜராசந்தனின்) அந்த தேரில் அமர்ந்திருப்பதைக் கண்ட மகத மக்கள் மிகவும் வியப்படைந்தனர்.(19) ஓ பாரதா {ஜனமேஜயா), காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டிருந்த அந்த தேரில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் பேரழகுடன் காணப்பட்டான்.(20)
அந்தச் சிறந்த தேரில், பார்வைக்குப் புலப்படாத தெய்வீகக் கலை அம்சத்துடன் கொடிக்கம்பம் இணைக்கப்பட்டிருந்தது. வானவில்லின் பிரகாசம் கொண்ட அந்த அழகிய கொடிக்கம்பத்தை ஒரு யோஜனை தொலைவில் இருந்தும் காணலாம்.(21) கிருஷ்ணன் அதில் ஏறி வெளியே வரும்போது கருடனை நினைத்துக் கொண்டான். தன் தலைவனால் நினைக்கப்பட்ட கருடன், உடனே வந்து, கிராமங்களில் அனைவராலும் வழிபடப்படும் மரம் போல நின்றான்.(22) பாம்புகளை உண்டு வாழும் கனம் நிறைந்த உடல் கொண்ட கருடன், திறந்த வாயுடன் பயங்கரமாக முழங்கிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொண்ட அந்த அற்புதத்தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.(23) அதன் பிறகு அந்த தேர் ஆயிரம் கதிர்களால் சூழப்பட்ட நடுப்பகல் சூரியன் போல பார்ப்பதற்கு கூசும்படி இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த தெய்வீகக் கொடிக்கம்பம் எந்த மரத்தின் மீது மோதாதபடியும், மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாததாகவும், எந்த ஆயுதத்தாலும் தாக்கப்படாததாகவும் இருந்தது.(24,25) மனிதர்களின் புலியான அச்யுதன் {கிருஷ்ணன்}, மேக முழக்கம் புரியும் சக்கரங்களைக் கொண்ட அந்த தெய்வீக தேரில் பாண்டுவின் மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} பயணித்து, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தான்.(26)
கிருஷ்ணனால் செலுத்தப்பட்ட அந்தத் தேரானது வாசவனிடம் இருந்து மன்னன் வசுவால் பெறப்பட்டதும், வசுவிடம் இருந்து பிருஹத்ரதனால் பெறப்பட்டதும், பிறகு ஜராசந்தனிடம் வந்ததுமாக இருந்தது.(27) நீண்ட கரமும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களும், சிறப்புவாய்ந்த புகழும் கொண்டவன் {கிருஷ்ணன்}, கிரிவ்ரஜத்தைவிட்டு வெளியே வந்தும், நகருக்கு வெளியே ஒரு சம வெளியில் (சிறிது நேரம்) நின்றான்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்ட குடிமக்கள், அங்கே விரைந்து வந்து உரிய அறச்சடங்குகளுடன் வாழ்த்தினர்.(29) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னர்கள் அனைவரும் பெரும் மதிப்புடன் புகழும் வகையில் மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்},(30) "ஓ நீண்ட கரங்கொண்டவனே {கிருஷ்ணா}, ஜராசந்தனால் பீடிக்கப்பட்டு மிகுந்த துயரத்தில் இருந்த எங்களை இன்று நீ விடுவித்திருக்கிறாய். ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடி நீ சாதித்த இந்த அறச்செயல் இயல்புக்கு மீறிய சாதனையாகும்.(31,32) ஓ விஷ்ணுவே {கிருஷ்ணா}, ஜராசந்தனின் மலைக் கோட்டையில் அல்லலுற்ற எங்களை, நாங்கள் பெற்ற நற்பேற்றாலேயே விடுவித்தாய். இதனால், ஓ யது குலத்தின் மகனே {கிருஷ்ணா}, நீ செய்தற்கரிய செயலைச் செய்திருக்கிறாய்.(33) ஓ மனிதர்களில் புலியே, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடு. அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், உனது கட்டளையை அறிந்த நாங்கள், ஓ தலைவா {கிருஷ்ணா}, நிச்சயம் அதைச் சாதிப்போம்", என்று சொன்னார்கள்.(34)
இப்படி அந்த ஏகாதிபதிகளால் சொல்லப்பட்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அவர்களுக்கு {விடுவிக்கப்பட்ட மன்னர்களுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்துவிட்டு, அவர்களிடம் {விடுவிக்கப்பட்ட மன்னர்களிடம்}, "யுதிஷ்டிரர் ராஜசூய வேள்வி செய்ய நினைத்திருக்கிறார்.(35) அறத்தால் வழிநடத்தப்படும் அந்த ஏகாதிபதி, உயர்ந்த அதிகாரமுள்ள உண்மையான மதிப்பை அடைய விரும்புகிறார். என் மூலமாக இதை அறிந்து கொண்டு அவருக்கு அவரது காரியங்களில் உதவி செய்யுங்கள்" என்றான்.(36)
ஓ மன்னா {ஜனமேஜயா}, இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த அந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, "அப்படியே ஆகட்டும்!" என்றனர்.(37) இதைச் சொன்ன பூமியின் அந்தத் தலைவர்கள், பல நகைகளை தாசார்ஹ குலத்தவனுக்கு {கிருஷ்ணனுக்கு) பரிசாக அளித்தனர். பிறகு கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்களிடம் கொண்ட அன்பால், அவர்கள் கொடுத்த பரிசுகளில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டான்.(38)
பிறகு ஜராசந்தனின் மகனும், உயர்ந்த ஆன்மாவுமான சகதேவன், தனது உறவினர்களுடனும், தனது நாட்டின் முக்கிய அதிகாரிகளுடனும், புரோகிதரை தன் முன் கொண்டு அங்கே வந்தான்.(39) அந்த இளவரசன் {சகதேவன்}, பணிந்து வணங்கி, பெரும் பொற்குவியலையும், விலையுயர்ந்த கற்களையும் பரிசாகக் கொடுத்து, மனிதர்களில் தேவனான வாசுதேவனை {கிருஷ்ணனை} வழிபட்டான்.(40) பிறகு மனிதர்களில் சிறந்த கிருஷ்ணன் பயத்தில் இருந்த அந்த இளவரசனுக்கு {சகாதேவனுக்கு} அனைத்து உறுதிகளையும் கொடுத்து, பெருமதிப்பிலான அந்தப் பரிசுகளை ஏற்றுக் கொண்டான்.(41) மகிழ்ச்சியுடன் இருந்த கிருஷ்ணன் அந்த இளவரசனுக்கு மகதத்தின் ஆட்சியுரிமையைக் கொடுத்தான். அந்த மேன்மையான, மனிதர்களில் பலம் வாய்ந்த கரங்கள் கொண்ட, ஜராசந்தனின் சிறப்புவாய்ந்த மகன் {சகதேவன்}, அந்த நாட்டின் அரியணையில் அமர்த்தப்பட்டு, கிருஷ்ணனின் நட்பைப் பெற்று, பிருதையின் {குந்தியின்} மகன்களால் மதிப்புடன் நடத்தப்பட்டு, தனது தந்தையின் {ஜராசந்தனின்} நகருக்குள் மீண்டும் நுழைந்தான்.(42,43) பிருதையின் {குந்தியின்} மகன்களுடன் இருந்த பெரும் நற்பேறு பெற்ற மனிதர்களில் காளையான கிருஷ்ணன், எண்ணிலடங்கா நகைகளுடன் மகத நகரை விட்டு வெளியேறினான்.(44) பாண்டுவின் இரு மகன்களுடன் {பீமன், அர்ஜுனனுடன்} அச்யுதன் (கிருஷ்ணன்) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான். யுதிஷ்டிரனை மகிழ்ச்சியுடன் அணுகி, அந்த ஏகாதிபதியிடம்,(45) "ஓ மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேற்றின் நிமித்தமாக, பெரும் பலம் வாய்ந்த ஜராசந்தன் பீமரால் கொல்லப்பட்டான். (கிரிவ்ரஜ) சிறையில் அடைபட்டிருந்த மன்னர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.(46) மேலும் நற்பேற்றினால் பீமரும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்) அந்த நகரத்தில் காயமடையாமல் நலமுடன் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பியிருக்கின்றனர்" என்றான்.(47)
பிறகு யுதிஷ்டிரன், கிருஷ்ணனை அவனது தகுதிக்கேற்ப வழிபட்டு, பீமனையும் அர்ஜுனனையும் மகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக் கொண்டான்.(48) எதிரிகளற்ற அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளின் வெற்றியாலும், ஜராசந்தனின் மரணத்தாலும் மிகவும் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் அந்தச் சூழ்நிலையைக் கொண்டாடினான்.(49) பாண்டுவின் மகன்களில் மூத்தவன் (யுதிஷ்டிரன்), தனது தம்பிகளுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்த்ததிற்கு வந்திருந்த மன்னர்களை, அவர்களது வயதுக்குத் தகுந்தபடி உற்சாகப்படுத்தி வழிபட்டு விடை கொடுத்து அனுப்பினான்.(50) யுதிஷ்டிரனால் கட்டளையிடப்பட்ட அந்த மன்னர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நேரந்தாழ்த்தாமல் தங்கள் வாகனங்களில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.(51)
இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் புலியும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் எதிரியான ஜராசந்தனின் மரணத்துக்குக் காரணமாக இருந்து, யுதிஷ்டிரனிடமும், பிருதையிடமும் {குந்தியிடமும்}, திரௌபதியிடமும், சுபத்திரையிடமும், பீமசேனனிடமும், அர்ஜுனன் மற்றும் நகுல சகாதேவர்களிடமும் விடைபெற்றான். தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்தும் விடைபெற்று, யுதிஷ்டிரனால் தனக்குக் கொடுக்கப்பட்ட அந்த தெய்வீகத் தேரில் தனது நகரத்திற்கு (துவாரகைக்கு) மனோ வேகத்துடன் சுற்றுச்சூழலின் பத்து புள்ளிகளை அந்தத் தேரின் சக்கர ஒலியால் கலங்கச் செய்து சென்றான்.(52,55) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கிருஷ்ணன் புறப்படத் தயாராக இருந்த போது, யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள், அந்தக் களைப்பறியா முயற்சியுடைய மனிதர்களில் புலியை {கிருஷ்ணனை} வலம் வந்தனர்.(56)
தேவகியின் மகனான அந்தச் சிறப்பு வாய்ந்த கிருஷ்ணன், (இந்திரப்பிரஸ்தத்தை விட்டு) சென்ற பிறகு, பெரும் வெற்றியை அடைந்து, மன்னர்களின் பயத்தை விலக்கிய காரியம் செய்த அந்தப் பாண்டவர்கள் புகழுடன் இருந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்தப் பாண்டவர்கள் தங்கள் நாட்களை கடத்தி, திரௌபதியை மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் வைத்திருந்தனர். அந்த நேரத்தில் அறம், இன்பம், பொருள், ஆகியவற்றுக்குச் சரியாக மன்னன் யுதிஷ்டிரன் தனது குடிமக்களைக் காத்து வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(57-59)
ஆங்கிலத்தில் | In English |