Digvijaya of the Pandavas! | Sabha Parva - Section 25 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் :பீமன், அர்ஜுனன், நகுல சகாதேவர் ஆகியோர் யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு தனித்தனியே நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஆளுக்கொரு திசையாகச் செல்வது; பாண்டவர்களின் போர்ப்பயணங்களை வைசம்பாயனர் சுருக்கமாகச் சொல்லல்…
வைசம்பாயனர் தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தனஞ்சயனின் {அர்ஜுனனின்} வார்த்தைளைக் கேட்டு, அனைத்து எண்ணங்களையும் திரட்டிய அமைதியான குரலில்,(5) "ஓ பாரத குலத்தின் காளையே {அர்ஜுனனே}, பிராமணர்களின் நல்வாழ்த்துகளைப் பெற்று, உன் பகைவர்களைத் துயரத்தில் ஆழ்த்துவாயாக. உனது நண்பர்களை மகிழ்ச்சியில் நிரப்புவாயாக. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, வெற்றி நிச்சயமாக உனதே. உன் விருப்பங்கள் ஈடேறப்பெற்றவனாக நீ இருப்பாய்" என்றான் {யுதிஷ்டிரன்}.(6,7)
இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன், பெரும் படைகள் சூழ, அக்னியிடம் இருந்து தான் பெற்றதும், அற்புத சாதனைகளைக் கொண்டதுமான தெய்வீக தேரில் ஏறி {படையெடுத்துப்} புறப்பட்டுச் சென்றான்.(8) பீமசேனனும், மனிதர்களில் காளைகளான இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, நீதிமானான யுதிஷ்டிரனை அன்புடன் வழிபட்டு, பெரிய படைகளுக்குத் தலைமையேற்றுப் புறப்பட்டுச் சென்றார்கள்.
பாகனைத் தண்டித்தவனின் மகன் {அர்ஜுனன்}, கருவூலத் தலைவனின் {குபேரனின்} திசையைத் தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தான்.(8,9) பீமசேனன் தனது படைபலத்தால் கிழக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான், சகாதேவன் தெற்கையும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்த நகுலன் மேற்கையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.(10) தன் தம்பிகள் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மேன்மையானவனும் நீதிமானானவனுமான யுதிஷ்டிரன் காண்டவப்பிரஸ்தத்திலேயே தங்கி, நண்பர்களுடனும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான்.(11)
[1]இதையெல்லாம் கேட்ட {பிராக்ஜோதிஷ நாட்டு மன்னன்} பகதத்தன், "ஓ குந்தியைத் தாயாகக் கொண்டவனே {அர்ஜுனா}, உன்னை மதிப்பது போலவே நான் யுதிஷ்டிரனையும் மதிக்கிறேன். இவை யாவும் நான் செய்வேன் {கொடுப்பேன்}. மேலும் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(12)
[1] கங்குலியில் உள்ள இந்தப் பனிரெண்டாம் ஸ்லோகம் மன்மநாததத்தரின் பதிப்பில் இல்லை. மாறாக அடுத்த அத்தியாயத்தில் இது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கங்குலியில் ஓர் அத்தியாயம் விடுபட்டிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் | In English |