The victorious march of Bhima! | Sabha Parva - Section 29 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பீமனின் கிழக்குத் திசைப் போர்ப்பயண விவரிப்பு; பீமசேனன் வெற்றியுடன் இந்திரப்ரஸ்தம் திரும்பியது…
இதே வழியில் அந்த பாரத குலத்தின் காளை {பீமன்} பல நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். பலம் வாய்ந்த மனிதர்களில் முதன்மையான அந்த பெரும் சக்தி படைத்த பாண்டுவின் மகன் {பீமன்}, அடுத்து பல்லாட நாட்டையும், பல்லாடத்தின் அருகில் உள்ள சுக்திமந்தா {சக்திமான்} மலையையும் வெற்றி கொண்டான்.(5) பிறகு நீண்டு கரங்களுடைய பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், பின்வாங்காத காசி மன்னன் ஸுபாஹுவை வீழ்த்தி அவனை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(6)
பிறகு அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது படைபலத்தால் ஸுபார்ச்வ நாட்டு பெரும் மன்னனான கிரதன் என்பவனைப் போரில் வீழ்த்தினான். பிறகு அந்தப் பெரும் சக்தி கொண்டவன் {பீமன்}, மத்ஸ்யர்களையும், பெரும் பலம் வாய்ந்த மலதர்களையும், எந்த அச்சமும் ஒடுக்குதலும் இல்லாத {அநக நாட்டையும், அபய நாட்டையும்} பசுபூமி என்ற நாட்டையும் வீழ்த்தினான். பிறகு, அந்த நீண்ட கரன் கொண்ட வீரன் {பீமன்}, அந்தப் பூமியை விட்டு மதஹரா, மஹிதரா {மததாரம்},(7-9) ஸோமதேயம் ஆகிய பகுதிகளை வெற்றி கொண்டு, தனது பாதச்சுவடுகளை வடக்கு திசை நோக்கித் திருப்பினான்.(10)
பிறகு, அந்தப் பெரும் பலம் வாய்ந்த குந்தியின் மகன் {பீமன்}, தனது படை பலத்தைக் கொண்டு வத்சபூமி என்ற நாட்டையும், பர்க்கர்களின் மன்னனையும், நிஷாத ஆட்சியாளனையும், மனிமத்தையும் {மணிமானையும்} எண்ணிலடங்கா பல மன்னர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(11) பிறகு, சிறிதும் களைப்பறியாதவனான அந்த பீமன், விரைவாக தென் மல்லர்களையும் {தக்ஷிணமல்லர்களையும்}, போகவான் மலைகளையும் வெற்றி கொண்டான்.(12) அடுத்ததாக அந்த வீரன் {பீமன்}, சர்மகர்கள் மற்றும் வர்மகர்கள் ஆகியோருடன் உடன்பாடு காண்பதில் வென்றான். பிறகு அந்த மனிதர்களில் புலி {பீமன்}, பூமியின் அதிபதியான விதேஹ மன்னன் ஜனகனை எளிதாக வீழ்த்தினான். பிறகு அந்த வீரன் {பீமன்}, தனது யுக்தியைக் கொண்டு சகர்கள், மற்றும் அந்தப் பகுதியின் நாடோடிகளை {பர்ப்பரர்களைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(13,14) பாண்டுவின் மகன் {பீமன்} விதேஹ நாட்டில் இருந்து கொண்டு தனது துருப்புகளை அனுப்பி, இந்திர மலையில் உள்ள கிராதர்களின் ஏழு மன்னர்களை வெற்றி கொண்டான்.(15)
பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {பீமன்}, அளவில்லா சக்தியுடன், ஸுமஹர்களையும், பரஸுமஹர்களையும் போரில் வீழ்த்தினான்., அவர்களைத் தனது பக்கம் வெற்றி கொண்ட குந்தியின் மகன் {பீமன்} பெரும் பலத்துடன் மகதத்தை எதிர்த்து படை நடத்தினான். அப்படியே தான் செல்லும் வழியில் தண்டன் மற்றும் தண்டதாரன் என்ற பெயர்களைக் கொண்ட ஏகாதிபதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பிறகு அந்த ஏகாதிபதிகளையும் இணைத்துக் கொண்டு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கிரிவ்ரஜத்தை நோக்கி படை நடத்தினான்.(16,17)
உடன்படிக்கையின் மூலம் ஜராசந்தனின் மகனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அந்த வீரன் {பீமன்}, அவனைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்து, அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் உடன் அழைத்துக் கொண்டு கர்ணனை[1] எதிர்த்து படை நடத்தினான்.(18) பிறகு அந்தப் பாண்டவர்களில் முதன்மையானவன் {பீமன்}, பூமிகள் நடுங்க தனது நால்வகைப் படைகளையும் நடத்திச் சென்று எதிரிகளைக் கொல்லும் கர்ணனை எதிர்த்துப் போரிட்டான்.(19) ஓ பாரதா, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {பீமன்}, கர்ணனை அடக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதன்பிறகு மலை பகுதிகளின் பலம்வாய்ந்த மன்னனை வீழ்த்தினான்.(20)
[1] இந்த இடத்தில் கங்குலியின் புத்தகத்தில் கர்ணன் என்று வர வேண்டியது, எழுத்தப்பிழையாக கம்சன் என்று வந்துவிட்டது என்று நினைக்கிறேன். மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் மற்றும் கும்பகோணம் பதிப்புகளில் இந்த இடத்தில் கர்ணன் என்றே வருகிறது. கங்குலியிலேயே கூட 18ம் ஸ்லோகத்தில் கம்சன் என்று வருவது, 19ம் ஸ்லோகத்தில் கர்ணன் என்றே இருக்கிறது. எனவே இந்த இடத்தில் நாமும் கர்ணன் என்றே கொள்கிறோம்.
கரத்தின் பலம் கொண்ட பாண்டுவின் மகன் {பீமன்}, ஒரு கடும் போரில் மோதாகிரியில் வசித்த பெரும் பலம்வாய்ந்த மன்னனை வீழ்த்தினான்.(21) பிறகு அந்தப் பாண்டவன் {பீமன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, கடும் ஆற்றலும், பலமும் கொண்ட புண்ட்ர நாட்டு மன்னன் வாசுதேவன் மற்றும் கௌசிகக்கச்சத்தை ஆண்ட மன்னன் மஹௌஜஸன் ஆகியோரை வீழ்த்திய பிறகு வங்க நாட்டைத் தாக்கினான்[2].(22,23) பிறகு, ஸமுத்திரஸேனன், மன்னன் சந்திரஸேனன், தாம்ரலிப்தன், கர்வடர்களின் மன்னன்,(24) ஸும்ஹத்தின் {ஸும்ஹ நாட்டின்} ஆட்சியாளன், கடற்கரையில் வசித்த மிலேச்ச மன்னர்கள் ஆகியோரை வெற்றி கொண்டான் அந்த பாரதர்களில் காளை {பீமன்}.(25)
[2] கும்பகோணம் பதிப்பில், "அதன்பிறகு, புண்ட்ரதேசத்தரசனும், வீரனுமான அந்தப் பௌண்ட்ரக வாஸுதேவனென்னும் அரசன் கிருஷ்ணனுடைய கைகளின் பயத்தினால், "நான் இப்போது யாதவ வீரனான கிருஷ்ணனுடன் யுத்தஞ்செய்யேன்" என்று சொல்லிக் கப்பங்கொடுத்தான். கௌசிகி நதிக்கரையில் உள்ள மஹௌஜஸன் என்னும் அரசனையும் சந்தித்தான்" என்றிருக்கிறது.
இவ்வாறு காற்று தேவனின் {வாயு தேவனின்} பலம்பொருந்திய மகன் {பீமன்} இப்படி பல்வேறு நாடுகளை வென்று, அவர்களிடம் இருந்து கப்பம் பெற்று லௌஹித்யத்தை {லௌஹித்யமென்னும் நதத்தை} நோக்கி முன்னேறினான்.(26) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, கடற்கரையில் உள்ள சதுப்பு நிலப்பகுதிகளில் வசித்த மிலேச்ச மன்னர்களை கப்பம் கட்ட வைத்து, பல்வேறு செல்வங்களையும்,(27) சந்தனக்கட்டைகளையும், நறுமண கற்றாழைகளையும் {அகில்}, ஆடைகளையும், ரத்தினங்களையும், முத்துகளையும், சால்வைகளையும், பொன், வெள்ளி மற்றும் மதிப்புமிக்க பவழங்களையும் பெற்றுக் கொண்டான்.(28) மிலேச்ச மன்னர்கள் குந்தியின் சிறப்புவாய்ந்த மகனிடம் பொற்காசுகளையும், ரத்தினங்களையும் கோடிக்கணக்காகக் கொடுத்தனர்.(29) பிறகு, பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், இந்திரப்பிரஸ்தம் திரும்பி, மொத்த செல்வத்தையும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(30)
ஆங்கிலத்தில் | In English |