Nakula's Westward Journey! | Sabha Parva - Section 31 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : நகுலன் மேற்கு நோக்கி படையெடுப்பது; நகுலன் அடக்கிய நாடுகளின் விபரம்…
அந்த வீரன் {நகுலன்} முதலில் (தேவர்ப்படைத் தளபதி) கார்த்திகேயனுக்கு {முருகனுக்குப்} பிடித்தமான மலைநாடான ரோஹீதகத்தைத் தீவிரமாகத் தாக்கினான். அந்த நாடு காண்பதற்கு இனிமையாகவும், செழிப்புடனும், பசுக்கள் நிறைந்து, அனைத்துவிதமான செல்வங்களும், உற்பத்திகளும் நிறைந்தாக இருந்தது.(4) அந்த நாட்டின் மத்தமயூரகர்களுடன் பாண்டுவின் மகன் {நகுலன்} நடத்திய போர் கடுமையாக இருந்தது. அதன்பிறகு, அந்த சிறப்புமிகுந்த நகுலன், பல பொருட்களால் நிறைந்த சைரீஷகம் என்ற முழு பாலைவனப் பகுதியையும் அதே போன்ற மற்றொன்றான மஹேத்தத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அரசமுனியான ஆக்ரோசன் என்பவனுடன் அந்த வீரன் கடும்போர் புரிந்தான்.(5,6)
பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, அந்த நாட்டின் அப்பகுதியை விட்டு அகன்று தசார்ணர்களையும், சிபிக்களையும், திரிகர்த்தர்களையும், அம்பஷ்டர்களையும், மாலவர்களையும், கர்ப்படர்களின் ஐந்து இனக்குழுக்களையும், இரு பிறப்பாளர்களான {பூணூல் அணிந்த} மத்தியமகேயர்களையும் வாடதானர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வளைந்த சுற்றுகளைக் கொண்ட தனது பயணத்தில் அந்த மனிதர்களில் காளை, உத்ஸவ-ஸங்கேதகர்கள் என்ற (மிலேச்ச) இனக்குழுக்களை வெற்றி கொண்டான். அந்தச் சிறப்பு மிகுந்த வீரன் {நகுலன்}, கடற்கரையில் வசித்த பெரும் பலம் வாய்ந்த கிராமணீயர்கள்,(7-9) சூத்திரர்கள், சரஸ்வதி நதிக்கரையில் இருந்த ஆபிரர்கள், மீன்பிடி தொழில் செய்த அனைத்து இனக்குழுக்களையும், மலைகளில் வசித்தவர்களையும்,(10) ஐந்து ஆறுகளின் பெயரால் {பஞ்சநதம் என்று} அழைக்கப்படும் நாட்டையும், அமர மலையையும், உத்தரஜ்யோதிஷம் என்ற நாட்டையும், திவ்யகடம் என்ற நகரத்தையும், துவாரபாலர்கள் என்ற ஒருவகை இனக்குழுவையும் விரைவாகத் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்}, ராமடர்களையும், ஹாரஹூணர்களையும் {ஹாரர்களையும், ஹூணர்களையும்}, மேற்கிலிருந்த பல்வேறு மன்னர்களையும் வீழ்த்தினான்.(11-12)
அங்கே அப்படி தங்கியிருந்த போது நகுலன், ஓ பாரதா {ஜனமேஜயா}, வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குத்) தூதுவர்களை அனுப்பினான்.(13) யாதவர்கள் அனைவருடன் சேர்ந்து வாசுதேவன் {கிருஷ்ணன்} அவனது {நகுலனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான். அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {நகுலன்}, மத்ர நாட்டு நகரமான சாகலத்துக்குச் சென்று,(14) தனது மாமன் சல்லியனைப் பாண்டவர்களின் கட்டுப்பாட்டை அன்பினால் ஏற்க வைத்தான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, விருந்தோம்பலுக்கும், சல்லியனின் உபசரிப்புக்கும் தகுதியுடைய அந்த சிறப்பு வாய்ந்த இளவரசன் {நகுலன்}, தனது மாமனால் {சல்லியனால்} நன்கு உபசரிக்கப்பட்டான்.(15) போரில் திறன்பெற்ற அந்த இளவரசன் {நகுலன்}, சல்லியனிடம் இருந்து பெரும் எண்ணிக்கையிலான நகைகளையும், ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு அவனது நாட்டை விட்டு அகன்றான்.
பிறகு அந்த பாண்டுவின் மகன் {நகுலன்}, கடற்கரையில் வசித்த மிலேச்சர்களையும்,(16) முரட்டு இனக்குழுக்களான பஹ்லவர்களையும், {பர்ப்பரர்களையும்}, கிராதர்களையும், யவனர்களையும், சகர்களையும் தனது பலத்தால் அடக்கினான்.(17) இப்படி பல்வேறு ஏகாதிபதிகளை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்ட வைத்த குருக்களில் முதன்மையான நகுலன், செல்வங்களை நிறைத்துக் கொண்டு, தனது சுவடுகளைப் பின்பற்றித் தனது சொந்த நகரத்திற்குத் திரும்பினான். ஓ மன்னா {ஜனமேஜயா}, பத்தாயிரம் ஒட்டகங்கள் மிகவும் சிரமத்துடன் சுமந்து வரக்கூடிய அளவுக்குப் பெரும் செல்வத்தை அவற்றின் முதுகில் ஏற்றிக்கொண்டு வந்தான் நகுலன்.(18) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த அந்த மாத்ரியின் அதிர்ஷ்டக்கார வீர மகன் {நகுலன்}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் யுதிஷ்டிரனிடம் கொடுத்தான்.(19)
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே முன்பொரு காலத்தில் வாசுதேவனால் {கிருஷ்ணனால்} அடக்கப்பட்ட வருண தேவனின் திசையான மேற்கிலிருந்த நாடுகளை நகுலனும் வென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)
ஆங்கிலத்தில் | In English |