The Southward campaign of Sahadeva! | Sabha Parva - Section 30 | Mahabharata In Tamil
(திக்விஜய பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் அனுமதி பெற்று சகாதேவன் தெற்கு நோக்கி படையெடுப்பது; சகாதேவன் அடக்கிய நாடுகளின் விபரம்…
அதன் பிறகு அந்த இளவரசன் {சகாதேவன்}, சுகுமாரனையும், மன்னன் சுமித்திரனையும், பிற மத்ஸ்யர்களையும், {கள்வர்களான} படச்சரர்களையும் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தான்.(4) பெரும் புத்திசாலித்தனம் கொண்ட அந்த குரு வீரன் {சகாதேவன்}, மிக விரைவாக நிஷாதர்கள் நாட்டை வெற்றி கொண்டான். மேலும், அவன் {சகாதேவன்} உயர்ந்த மலையான கோசிருங்கத்தையும், பூமியின் அதிபதி சிரேணிமத் {சிரேணிமான்} ஆகியோரையும் வெற்றி கொண்டான்.(5) பிறகு நவராஷ்டிரம் {நரராஷ்டிரம்} என்ற நாட்டை அடக்கிய அந்த வீரன், பிறகு குந்திபோஜனை நோக்கி தனது படையை நடத்தினான். குந்திபோஜன் பெரும் விருப்பத்துடன் வெற்றிவீரனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான்.(6)
அதன்பிறகு, சர்மண்வதி ஆற்றங்கரையில், முன்பு வாசுதேவனால் {கிருஷ்ணனால்} வீழ்த்தப்பட்ட மன்னன் ஜம்பகனின் மகனை எதிர்கொண்டான்.(7) ஓ பாரதா {ஜனமேஜயா}, ஜம்பகனின் மகன் சகாதேவனுடன் போரிட்டான். சகாதேவன் அந்த இளவரசனைத் தோற்கடித்து, தெற்கு நோக்கி படையை நடத்தினான்.(8) பிறகு அந்த பெரும் பலம் வாய்ந்த வீரன் ஸேகர்களையும் மற்றும் பிறரையும் {அபரஸேகர்களையும்} வீழ்த்தி அவர்களைத் தனக்கு ரத்தினங்களையும் பல செல்வங்களையும் கப்பமாகக் கட்ட வைத்தான்.(9) தான் வீழ்த்திய இனக்குழுகளை தனது கூட்டணியாக்கிக் கொண்டு, நர்மதை ஆற்றங்கரையில் அமைந்துள்ள நாடுகளை நோக்கி படை நடத்தினான்.[1] விந்தன், அனுவிந்தன் என்ற அவந்தி நாட்டு மன்னர்கள் இருவரை வீழ்த்திய அசுவினி இரட்டையரின் பெரும் பலம் பொருந்திய மகன் {சகாதேவன்}, அவர்களிடம் இருந்து பெரும் செல்வத்தைக் கப்பமாக அடைந்தான். பிறகு அந்த வீரன் {சகாதேவன்} போஜகடம் என்ற நகருக்குச் என்றான்.(10,11)
[1] கும்பகோணம் பதிப்பில், இதற்கடுத்து, "அங்கே நரகாஸுரன் மகனும், சிறந்த கைகளையுடையவனுமாகிய பகதத்தனென்னுமரசன் அர்ஜுனனுக்குக் கப்பங்கொடுத்ததாகக் கேட்டுத் திரும்பினான்" என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.
ஓ மங்காப் புகழுடைய மன்னா {ஜனமேஜயா}, அவனுக்கும் {சகாதேவனுக்கும்}, அந்த நாட்டு மன்னனுக்கும் {போஜகட நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கும்} இடையில் இரண்டு நாட்களுக்கு கடும் போர் நடந்தது. ஆனால் மாத்ரியின் மகன் {சகாதேவன்}, வெல்லப்படமுடியாத பீஷ்மகனை வீழ்த்தி,(12) கோஸல நாட்டு மன்னனையும், வேண்வா {வேணை} ஆற்றங்கரையில் அமைந்துள்ள பகுதிகளின் ஆட்சியாளனையும், கந்தரகர்களையும், கிழக்கு கோசலத்தின் மன்னர்களையும் வீழ்த்தினான்.(13)
பிறகு, அந்த வீரன், நாடகேயனையும், ஹேரம்பகனையும் போர்க்களத்தில் வீழ்த்தி, மாருத நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, முஞ்ச கிராமத்தை {ரம்மியக்ராமமென்னும் ஊர்களையும்} தனத் பலத்தால் ஒடுக்கினான். பிறகு, பாண்டுவின் மகன் {சகாதேவன்}, நாசீனர்கள், அர்ப்புகர்கள் ஆகியோரின் பெரும் பலம் வாய்ந்த ஏகாதிபதிகளையும், நாட்டின் அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு காட்டு மன்னர்களையும் வீழ்த்தினான். மேலும் வாதாதிபன் என்ற மன்னனை அந்தப் பெரும் பலம் கொண்ட வீரன் {சகாதேவன்} அடக்கினான்.(14,15) பிறகு, மேலும் தெற்கு நோக்கிப் படையெடுத்து புளிந்தர்களையும் அடக்கினான். அந்த நகுலனின் தம்பி {சகாதேவன்}, ஒரு நாள் முழுவதும் பாந்திரிய {பாண்டிய}[2] நாட்டு மன்னனுடன் போரிட்டான்.(16)
[2] கும்பகோணம் பதிப்பில், "சிறந்த கைவன்மையுள்ள அந்த ஸஹதேவன் பாண்டிய தேசத்தரசனோடு ஒரு நாள் போர் செய்து அவனை ஜயித்துத் தென்திசை மார்க்கமாகச் சென்று கிஷ்கிந்தையென்று உலகத்தில் பெயர் பெற்ற குகையை அடைந்தான்" என்றிருக்கிறது. கிஷ்கிந்தை பாண்டிய தேசத்திற்குத் தெற்கில் இருக்கவில்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் அவந்திக்ககு சென்று விந்தன் அனுவிந்தனை வீழ்த்தும் சகாதேவன் நேரடியாக மாஹிஷ்மதிக்கு வந்து மன்னன் நீலனுடன் போர்புரியும் இடத்திற்கு வர்ணனை சென்று விடுகிறது.
அந்த நீண்ட கரம் கொண்ட வீரன் அந்த ஏகாதிபதியை வீழ்த்திய பிறகு மேலும் தெற்கே சென்றான். அதன்பிறகு அவன், கொண்டாடப்படும் குகைகளான கிஷ்கிந்தியத்தைக் கண்டு, அங்கே ஏழு நாட்களுக்கு குரங்கு மன்னர்களான மைந்தன், துவிவிதனுடன் போர் புரிந்தான். இருப்பினும் அந்த சிறப்பு மிகுந்த மன்னர்கள், அந்தத் தாக்குதலில் களைப்படையாதிருக்கும் சகாதேவனால் மகிழ்ச்சி அடைந்தார்கள். பிறகு அவர்கள் மகிழ்ச்சியுடன் அந்த குரு இளவரசனிடம் {சகாதேவனிடம்},(17-19) "ஓ பாண்டு மகன்களில் புலியே {சகாதேவனே}, எங்கள் அனைவரிடம் இருந்தும் காணிக்கையாகக் கப்பம் பெற்றுக் கொண்டு செல்வாயாக. பெரும் புத்திகூர்மை கொண்ட மன்னன் யுதிஷ்டிரனின் காரியம் தடைபெறாமல் நடைபெறட்டும்" என்றனர்.(20) அவர்களிடம் இருந்து நகைகளையும், ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு மாஹிஷ்மதி என்ற நகரத்தை நோக்கி முன்னேறினான். அங்கே அந்த மனிதர்களில் காளை {சகாதேவன்} மன்னன் நீலனுடன் போரிட்டான்.(21)
மன்னன் நீலனுக்கும், பாண்டுவின் மகனான பெரும் பலம்வாய்ந்த சகாதேவனுக்கும் நடந்த மோதல் கடுமையானதும் காணப் பயங்கரமானதாகவும் இருந்தது.(22) அந்த மோதலில் பெருங்குருதி சிந்தப்பட்டது. அக்னி தேவன் மன்னன் நீலனுக்குத் துணைபுரிந்ததால், அந்த வீரனின் {சகாதேவனின்} வாழ்வே பெரும் ஆபத்தில் இருந்தது.(23) தேர்களும், வீரர்களும், யானைகளும், கவசமணிந்த படை வீரர்களுமாக சகாதேவனின் படையில் இருந்த அனைவரும் நெருப்பால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள்.(24) இதைக் கண்ட குரு குல இளவரசன் {சகாதேவன்} பெரும் துயர் கொண்டான். ஓ ஜனமேஜயா, இதைக் கண்ட ஆந்த வீரனால் {சகாதேவனால்} மேற்கொண்டு என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியவில்லை." {என்றார் வைசம்பாயனர்}.(25)
ஜனமேஜயன், "ஓ மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, வேள்வியை நிறைவேற்றும் பொருட்டுப் போரிட்டுக் கொண்டிருந்த சகாதேவனுக்கு எதிராக, அந்தப் போரில் ஏன் அக்னி தேவன் திரும்பினான்?" என்று கேட்டான்.(26)
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, அக்னிதேவன் மாஹிஷ்மதியில் வசித்து வந்தபோது, ஒரு காதலனாகப் புகழ்பெற்றான் என்று சொல்லப்படுகிறது[3].(27) மன்னன் நீலனுக்கு பேரழகு படைத்த ஒரு மகள் இருந்தாள். அவள் எப்போதும் வேள்வி நெருப்பின் அருகில் தனது தந்தையுடன் இருந்து, அதை {அக்னியை} வீரியத்துடன் சுடர்விட்டு எரிய வைத்தாள்.(28) மன்னன் நீலனின் வேள்வியில் நெருப்பு மூட்ட விசிறினாலும் எரியாமல், அந்த மங்கையின் அழகான இதழ்க் குவித்து ஊதிய மென்மையான காற்றினால் மட்டுமே அந்த அக்னி எரிந்தான்.(29) அக்னி அந்த அழகான மங்கையை தனக்கு மணமகளாக்கிக் கொள்ள விரும்பினான். அந்த மங்கையும் அவனை {அக்னியை} ஏற்றுக் கொண்டாள்.(30)
[3] கங்குலியின் பதிப்பில் Lover "காதலன்" என்றும், மன்மதநாததத்தரின் பதிப்பில் Adulterer "சோரன்" என்றும் சொல்லப்பட்டுள்ளது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "சிறப்புமிக்க நெருப்பு தேவன், மாஹிஷ்மதியில் வாழ்ந்துவந்த போது ஒருமுறை ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவனாக Act of adultery பிடிபட்டான்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "முன்னம் அக்னி பகவான் அந்த மாஹிஷ்மதி நகரத்தில் வாசஞ்செய்து கொண்டு பரஸ்திரீயினிடம் விருப்பம் வைத்தவனாகக் கண்டுபிடிக்கப்பட்டானென்று கேட்டிருக்கிறீரல்லவா?" என்றிருக்கிறது.
ஒரு நாள் அந்த அக்னிதேவன் ஒரு பிராமண வடிவை ஏற்றுக் கொண்டு, அந்த அழகானவளின் தோழமையை இன்பமாக அனுபவித்த போது மன்னன் நீலனால் கண்டறியப்பட்டான். எனவே, அந்த அறம்சார்ந்த மன்னன், அந்த பிராமணனைச் சட்டப்படி தண்டிக்க ஆணையிட்டான்[4].(31) இதனால் அந்த சிறப்பு வாய்ந்த தேவன் {அக்னி தேவன்} பெருங்கோபத்துக்குள்ளானான். இதைக் கண்ட அந்த மன்னன் மிகவும் வியந்து, தரையளவு சிரம் தாழ்த்தினான்.(32) பிறகு சிறிது காலம் கழித்து பிராமண வடிவில் வந்த அக்னி தேவனுக்கே தன் மகளை மணமுடித்துக் கொடுத்தான்.(33) அந்த தேவன் விபாவசு (அக்னி), மன்னன் நீலனின் மகளான அந்த அழகிய புருவம் கொண்டவளை ஏற்றுக் கொண்டு, அந்த ஏகாதிபதிக்கு {மன்னன் நீலனுக்கு} அருள் புரிந்தான்.(34) பிறகு, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுபவனான அக்னி, அம்மன்னனைத் {நீலனை} தன்னிடம் ஏதாவது வரத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னான். அந்த மன்னன் {நீலன்}, எப்போதும் போரில் தனது துருப்புகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்ற வரத்தைக் கேட்டான்.(35) அந்த நேரத்திலிருந்து, ஓ மன்னா {ஜனமேஜயா}, இதை அறியாமல் நீலனின் நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்த ஏகாதிபதிகள் அனைவரும் ஹுதாசனனால் {அக்னியால்} எரிக்கப்பட்டார்கள். (36)
[4] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "அக்னிபகவான் மானிட வடிவத்தோடு தன் விருப்பத்தை வாய்விட்டுச் சொன்னான். எல்லாருடைய கிருஹங்களிலும் இவ்வாறே சொன்னான். அந்தப் பெண்ணினாலும் அவன் அங்கீகரிக்கப்பட்டான். இது நீல ராஜனுக்குத் தெரியாது என்றும் வருவித்துக் கொள்க’ என்பதும் பழைய உரை" என்றிருக்கிறது.
ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே {ஜனமேஜயா}, அந்த நேரத்தில் இருந்து, மாஹிஷ்மதி என்ற அந்த நகரத்தில் இருந்த பெண்கள் மற்றவர்களால் (மனைவியாக) ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் நினைத்தவாறு நடந்து கொள்ளவும், ஒரு குறிப்பிட்ட கணவனுக்கு கட்டுப்படாமல் இருக்கவும், அக்னிதேவன் தன் வரத்தின் மூலம் அவர்களுக்குக் கலவியில் சுதந்திரம் {சைரினிகளாக / ஸ்வைரினிகளாக இருக்க சுதந்திரம்} அளித்தான்.[5](37,38) மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த நேரத்தில் இருந்து (மற்ற நாட்டு) ஏகாதிபதிகள், அக்னியின் மேல் கொண்ட அச்சத்தால் அந்த நகரத்தின் {மாஹிஷ்மதி நகரத்தின்} பக்கம் திரும்பாமல் இருந்தார்கள்.(39) அறம்சார்ந்த சகாதேவன், நெருப்பால் சூழப்பட்டு, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தனது துருப்பு வீரர்களைக் கண்டு, மலையென அசையாது இருந்தான். பிறகு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தண்ணீரைத் தொட்டு, அந்த வீரன் (சகாதேவன்) அனைத்தையும் தன்வசப்படுத்தும் அக்னியிடம் இந்த வார்த்தைகளில் பேசினான்:(40)
[5] கும்பகோணம் பதிப்பில், "அந்தக் காலத்தில் அந்த மாஹிஷ்மதி நகரத்துப் பெண்கள் அதிகக் கட்டுக்குட்படாதவர்களாய்த் தம்மனம் போனபடி இருந்தனர். பெண்களுக்குக் கட்டுப்பாடில்லாமலிருக்கும்படி அக்னி வரம் கொடுத்தான். அங்கே மங்கையர்கள் சுதந்திரர்களாகத் தங்கள் விருப்பப்படி நடப்பது வழக்கம்" என்றிருக்கிறது.
"ஓ, வந்து சென்ற தடத்தைப் புகையால் பதிப்பவனே, நான் உன்னை வணங்குகிறேன். இந்த எனது முயற்சிகள் எல்லாம் உனக்காகவே செய்யப்படுகின்றன. ஓ அனைத்தையும் தூய்மை செய்பவனே {அக்னியே}, நீயே தேவர்களுக்கு வாயாக இருக்கிறாய், நீயே வேள்வியாகவும் இருக்கிறாய்.(41) நீ அனைத்தையும் தூய்மையாக்குவதால் பாவகன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடத்தில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யைச் சுமந்து செல்வதால் நீ ஹவ்யவாஹனன் என்றும் அழைக்கப்படுகிறாய். உன்னிடம் பேசவே வேதங்கள் வந்தன. எனவே நீ ஜாதவேதன் என்று அழைக்கப்படுகிறாய்.(42) தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் நீ சித்திரபானு, அனலன், விபாவசு {சொர்க்கத்தின் வாயிலைத் திறப்பவன்}, ஹுதாசனன் {ஹோமங்களைப் புஜிப்பவன்}, ஜுவாலனன் {ஜ்வலிப்பவன்}, சிகி {தழலுள்ளவன்},(43) வைசுவானரன் {அனைவரிடமும் உள்ளவன்}, பிங்கேசன் {பசுமை நிறமுள்ளவற்றுள் சிறந்தவன்}, பிலவங்கன் {தாண்டிச் செல்பவன்}, பூரிதேஜன் {பேரொளியுள்ளவன்} என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறாய். குமரனுக்கு (கார்த்திகேயனுக்கு) {முருகனுக்கு} நீயே ஆதிமூலமாய் இருக்கிறாய். நீ புனிதமானவன், ருத்ரகர்ப்பனும், ஹிரண்யகிரீதனும் நீயே.(44) ஓ அக்னி, எனக்கு சக்தியைக் கொடு, வாயு எனக்கு உயிரைக் கொடுக்கட்டும், பூமி எனக்கு பலத்தையும் ஊட்டத்தையும் கொடுக்கட்டும், நீர் {தண்ணீர்} எனக்கு செழிப்பைக் கொடுக்கட்டும்.(45) ஓ அக்னி, நீர் பிறக்க முதன்மைக் காரணம் நீயே, பெரும் தூய்மை உடையவன் நீயே, தேவர்களில் முதன்மையானவன் நீயே, நீயே அவர்களுக்கு வாயாகவும் இருக்கிறாய். ஓ அக்னி, நீ என்னை உனது வாய்மையால் தூய்மைப்படுத்துவாயாக.(46) முனிவர்களும், பிராமணர்களும், தேவர்களும், அசுரர்களும், தினமும் தெளிந்த நெய்யை வேள்வியில் விதிப்படி ஊற்றுகின்றனர். அந்த வேள்விகளில் காட்சி அளிக்கும் உன்னிலிருந்து பிரகாசிக்கும் வாய்மைக் கதிர்கள் என்னைத் தூய்மையாக்கட்டும்.(47) புகையைக் கொடியாகக் கொண்டவனே, வாயுவால் ஏற்படும் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவிப்பவனே, நீ அனைத்து உயிர்களிலும் இருக்கிறாய். ஓ அக்னி, உனது உண்மைச்சுடர்களால் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக.(48) அப்படி உன்னால் தூய்மைப்படுத்தப்படும் நான், ஓ மேன்மையானவனே {அக்னியே}, உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓ அக்னி, நீ எனக்கு மனநிறைவு, செழிப்பு, அறிவு மற்றும் மகிழ்ச்சியை அருள்வாயாக", என்று வேண்டினான் {சகாதேவன்}".(49)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஒருவன் அக்னிக்குள் {நெருப்புக்குள்} தெளிந்த நெய்யை ஊற்றினால், அவன் எப்போதும் செழிப்பும், தனது முழுகட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆன்மாவும் அருளப்பட்டு, அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.(50)
சகாதேவன் மறுபடியும் அக்னியிடம், "ஓ ஆகுதிகளைச் சுமந்து செல்பவனே, நீ ஒரு வேள்வியைத் தடை செய்யாதிருப்பாயாக" என்றான்.(51)
மனிதர்களில் புலியான மாத்ரியின் மகன் {சகாதேவன்}, இதைச் சொல்லிவிட்டு, பீதியிலிருந்த தன் துருப்புகளின் முன்னிலையில், பூமியில் குசப்புற்களை விரித்து நெருப்பை எதிர்பார்த்து அதன் மேல் அமர்ந்தான்.(52) கண்டங்களை {கரைகளை} மீறாத கடலைப் போல அக்னி அவன் தலை மீது விழவில்லை. ஆனால் மறுபுறம் குருகுல இளவரசனும்,(53) மனிதர்களில் தேவனுமான அந்த சகாதேவனிடம் அக்னி அமைதியாக வந்து அனைத்து உறுதிமொழிகளையும் கொடுத்து, "ஓ குரு குலத்தவனே {சகாதேவா}, இந்த கோலத்திலிருந்து எழுந்திடுவாயாக. ஓ எழுவாயாக. நான் உன்னிடம் ஒரு முயற்சியையே செய்தேன் {உன்னை சோதித்துப் பார்த்தேன்}.(54) நான் உன் நோக்கத்தையும், தர்மன் மகனின் {யுதிஷ்டிரனது} நோக்கத்தையும் அறிவேன். ஆனால், ஓ பாரத குலத்தவரில் சிறந்தவனே {சகாதேவனே}, மன்னன் நீலனின் வழித்தோன்றல்களில் ஒருவன் இருக்கும்வரை, இந்த நகரம் என்னால் பாதுகாக்கப்பட்டிருக்கும். இருப்பினும், ஓ பாண்டுவின் மகனே {சகாதேவனே}, நான் உனது இதய விருப்பத்தை ஈடேற்றுகிறேன்" என்றான்.(55,56)
அக்னியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ஓ பாதர குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அந்த மாத்ரியின் மகன் இதயத்தில் மகிழ்ச்சியுடன் எழுந்தான். தனது கரங்களைக் குவித்து, சிரம் தாழ்த்தி அனைத்தையும் தூய்மையாக்கும் நெருப்பு தேவனை வணங்கினான்.(57) இறுதியாக அக்னி மறைந்ததும், அந்தத் தேவனின் கட்டளையால் மன்னன் நீலன் அங்கு வந்து மனிதர்களில் புலியான, போர்க்களத்தில் குருவான சகாதேவனை முறைப்படி வணங்கினான். சகாதேவன் அவனது வணக்கங்களை ஏற்றுக் கொண்டு, நீலனை தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(58,59) மன்னன் நீலனைத் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வெற்றியாளனான மாத்ரியின் மகன் {சகாதேவன்}, மேலும் தெற்கு நோக்கி சென்றான். அந்த நீண்ட கரம் கொண்ட வீரன் பெரும் சக்தி கொண்ட திரைபுரத்தின் மன்னனை {திரைபுரனைத்} தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.(60)
பிறகு தனது படைகளை பௌரவ நாட்டுக்கு எதிராகத் திருப்பி, அந்த ஏகாதிபதியை வீழ்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். பின்பு பெரும் முயற்சி செய்து சௌராஷ்டிராவின் {ஸுராஷ்டிரம்} மன்னன் அக்ரிதியையும், கௌசிகர்களின் குருவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்த அறம் சார்ந்த இளவரசன் {சகாதேவன்}, சௌராஷ்டிர நாட்டில் தங்கி இருந்த போது, போஜகடத்தின் பீஷ்மகனுக்கும், புத்திகூர்மையுள்ள, இந்திரனின் நண்பனான அவனது மகன் ருக்மிக்கும் ஒரு தூதுவனை அனுப்பினான்.(61-63) தனது மகனுடன் கூடிய அந்த ஏகாதிபதி {பீஷ்மகன்}, கிருஷ்ணனுடனான உறவை நினைத்துப் பார்த்து, பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான்.(64) பிறகு போர்க்களத்தின் குரு {சகாதேவன்}, மன்னன் ருக்மியிடம் இருந்து நகைகளையும், செல்வத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் தெற்கு நோக்கி படை நடத்தினான்.
பிறகு பெரும் சக்தியும் பலமும் கொண்ட அந்த வீரன் சூர்ப்பாரகனையும் தாலாகடனையும்,(65) தண்டகர்களையும் {தண்டகாவனத்தைச் சேர்ந்தவர்களையும்} அடக்கினான். பிறகு அந்த குரு வீரன், கடற்கரையில் வாழும் கணக்கிலடங்கா மிலேச்ச இனக் குழுக்களையும், (66) நிஷாதர்களையும், கர்ணபிராவணர்கள் என்ற மனித இறைச்சி உண்பவர்களையும், ராட்சதர்களும் மனிதர்களும் கலந்து பிறந்த காலமுகர்களையும்,(67) கோல மலையையும், ஸுரபிபட்டணம், தாமிரத்தீவு, ராமக மலை ஆகியவற்றை வென்றான்.(68) அந்த உயர் ஆன்ம வீரன், மன்னன் திமிங்கிலனையும், ஒற்றைக் கால் மனிதர்களான கேரகர்கள் என்ற காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் வென்றான்.(69) அந்தப் பாண்டுவின் மகன் {சகாதேவன்}, ஸஞ்சயந்தி என்ற நகரத்தையும், பாஷாண்டம், கரஹாடகம் என்ற நாடுகளுக்கும் தனது தூதுவர்களை மட்டுமே அனுப்பி, அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான்.(70) அந்த வீரன் {சகாதேவன்} பௌந்திரயர்களையும் {பாண்டியர்களையும்}, திராவிடர்களையும், உத்திர கேரளர்களையும் {வடகேரளர்களையும்}, {ஓட்ரர்கள், கேரளர்கள்},[6] ஆந்திரர்களையும், தாளவனர்களையும், கலிங்கர்களையும், உஷ்டிரகர்ணிகர்களையும்[7],(71) யவனர்களின் காண்பதற்கினிய அடவி நகரத்தையும் தனது கட்டுப்பாட்டில், கொண்டு வந்து அவர்களிடம் இருந்து கப்பம் வாங்கினான்.[8](72)
[6] பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த இடத்தில் சோத்ரர்கள் என்று இருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், இது ஒருவேளை சோழர்களாக இருக்கலாம் என்று விளக்கப்பட்டிருக்கிறது.
[7] கும்பகோணம் பதிப்பில், இவர்கள் "ஒட்டகக்காதர்கள்" என்ற அடிக்குறிப்பு இருக்கிறது
[8] கும்பகோணம் பதிப்பில், "அதன்பிறகு, தாம்ரபர்ணி நதிக்குச் சென்று கன்யாதீர்த்தத்தைக் கடந்து, தென்தேசமெல்லாம் ஜயித்த பின் ஸஹதேவன், அலைகள் நிரம்பின கடலின் வடகரையை அடைந்து பீமஸேனனுடைய புத்திரனான கடோத்கசனை நினைத்தான். நினைத்தவுடன் ராக்ஷஸனான கடோத்கசன் எதிரிற்காணப்பட்டான். பகைவரையழிப்பவனும், சிறந்த புத்திமானுமாகிய ஸஹதேவன் கடற்கரையிலுள்ள அந்தத் தாழ்வரையிலிருந்து கொண்டே மேரு மலைச் சிகரம் போல வந்த கடோத்கசனைப் பார்த்துத் தர்மராஜருடைய கட்டளைக்காக வர வேண்டுமென்று இன்சொல்லாகச் சொன்னான். உடனே கடோத்கசன் ராக்ஷஸச சேவகர்களோடு ஸஹதேவனை வணங்கி நின்றான். தர்மாத்மாவும், பகைவர ஜயிப்பவனுமாகிய ஸஹதேவன் அங்கிருந்து கொண்டே மிக்க தைரியமும், பயங்கரமாகிய உருவமுமுள்ளவனாகிய கடோத்கசனைப் புலஸ்திய குலத்தோரும் மஹாத்மாவுமாகிய விபீஷணருக்கு ஸ்நேஹத்தை முன்னிட்டுத் தூதுவிடுத்தான்" என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு வேறு எந்தப் பதிப்புகளிலும் இல்லை.
ஓ மன்னர் மன்னா {ஜனமேஜயா}, அந்த எதிரிகளைக் கொல்பவன் {சகாதேவன்}, மாத்ரியின் மகனான புத்திகூர்மையுள்ளவன் கடற்கரைக்கு வந்து, பெரும் உறுதிகள் கொடுத்து புலஸ்தியரின் பேரனனான சிறப்பு மிகுந்த விபீஷணனிடம் தனது தூதுவர்களை அனுப்பினான். காலத்தின் செயலை மதிப்புடன் நினைத்துப் பார்த்த அந்த மேன்மையான ஏகாதிபதி {விபீஷணன்} விருப்பத்துடன் பாண்டு மகனின் {சகாதேவனின்} கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டான்.(73,74) அவன் {விபீஷணன்}, பாண்டுவின் மகனுக்கு பல்வேறு நகைகளையும், ரத்தினங்களையும், சந்தனத்தையும், பல தரப்பட்ட தெய்வீக ஆபரணங்களையும்,(75) விலையுயர்ந்த ஆடைகளையும், விலையுயர்ந்த முத்துகளையும் அனுப்பி வைத்தான். புத்திசாலித்தனம் கொண்ட சகாதேவன், அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, தனது சொந்த நாட்டுக்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான்.(76)
ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே, அந்த எதிரிகளை அழிப்பவன் {சகாதேவன்}, சமாதானத்தாலும், போராலும் பல மன்னர்களை வீழ்த்தி, அவர்களைத் தனக்குக் கப்பம் கட்டச் செய்து தனது சொந்த நகரத்திற்குத் {இந்திரப்பிரஸ்தம்} திரும்பினான்.(77) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, தான் கொண்டு வந்த அனைத்து செல்வத்தையும் நீதிமானான யுதிஷ்டிரனிடம் கொடுத்து, தன்னை வெற்றியாளனாகக் கருதி, தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழத்தொடங்கினான் {சகாதேவன்}" {என்றார் வைசம்பாயனர்}[9].(78)
[9] கும்பகோணம் பதிப்பில் இதற்கு அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்களில், சோழ மற்றும் பாண்டிய நாட்டுகளுக்கு சகாதேவன் சென்றதும், சகாதேவனால் அனுப்பப்பட்ட கடோத்கசன் விபீஷணனிடம் சென்று காணிக்கை வாங்கி வந்தும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகே நகுலனின் மேற்றிசை பயணம் சொல்லப்படுகிறது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றுப் பிபேக்திப்ராய் பதிப்புகளில் மேற்கண்டவை சொல்லப்படவில்லை. அந்தத் தகவல்கள் சுவாரசியம் நிறைந்தவையாகவும், தமிழகம் மற்றும் இலங்கை சார்ந்தவையாகவும் இருப்பதால், வாசகர்கள் அதையும் அறிய வேண்டும் என்பதற்காக கும்பகோணம் பதிப்பில் உள்ளதை உள்வாங்கி வேறு சொற்களில் கீழே தருகிறேன். கங்குலியில் இல்லாதது என்பதால் அவற்றுக்கு ஸ்லோக எண்கள் தரவில்லை.
ஜனமேஜயன், "பிராமணர்களில் சிறந்தவரே, கடோத்கசன் வரவையும், அவன் இலங்கைக்குச் சென்றதையும், விபீஷணனைக் கண்டதையும், காவேரியைக் கண்டதையும் கேட்க விரும்புகிறேன். வரிசையாக எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.
வைசம்பாயனர் சொன்னர், "ஓ ஜனமேஜயா, சகாதேவனின் ஆற்றலையும், சக்தியையும் குறித்து நடந்தவாறே சொல்கிறேன் கேட்பாயாக. அவன் தன் ஆற்றலால் காடுகளிலும், தீவுகளில் உள்ளவர்களைப் போரில் வென்று, தென்திசையைக் கட்டுப்படுத்தி, சோழ நாட்டுக்குச் சென்றான். அப்போது அவன், பலவகை பறவைகளால் அடையப்பட்டதும், முனிவர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான காவிரி ஆற்றங்கரையை அடைந்தான். ஆச்சா, லோத்திரம், மருதம், வில்வம், நாவல், இலவு, முருக்கு, கடம்பு, ஏழிலைம்பாலை, குமிழ், நெல்லி, பெருங்கிளைகளைக் கொண்ட ஆல், புளி, அத்தி, வன்னி, பலாசம், அரசு, கருங்காலி, இலந்தை, அசவகர்ணம், மா, புண்டரகம், வாழை முதலிய மரங்கள் அங்கே நிறைந்திருந்தன. சக்ரவாகம், வாத்து, நீர்க்காக்கை, கடற்காக்கை, அன்றில், நீர்க்கோழி முதலிய நீர்ப்பறவைகளை கூட்டங்கூட்டமாக இருந்தன. முனிவர்கள் பலரின் ஆசிரமங்களாலும், வழிபடுவதற்குரிய மரங்களாலும் அது நிறைந்திருந்தது. வேதங்களிலும், வேதாங்கங்களிலும் கரைகண்ட தூய்மையான பிராமணர்கள் அங்கே நிறைந்ததிருந்தார்கள். சில இடங்களில் கரையில் முளைத்திருக்கும் மரங்கள் மிகுதியாக மலர்ந்திருப்பதனால் அது மாலைகளை அணிந்திருப்பது போன்றிருந்தது. சில இடங்களில் செங்கழுநீர், குவளை, செவ்வல்லி, ஆம்பல், தாமரை முதலியவைகள் மலர்ந்திருக்கும் ஆறுகளில் சிறந்த அந்தக் காவிரியைக் கண்ட சகாதேவன், "நம் நாட்டில் கங்கை சிறந்திருப்பது போல இங்கே காவேரி சிறந்திருக்கிறாள்" என்று மகிழ்ந்தான்.
அந்த ஆற்றைத் தன் துருப்புகளுடன் கடந்து தென்கரையை அடைந்தான். பாண்டவன் அந்நாட்டுக்கு வந்திருப்பதைக் கேட்டு அந்நாட்டு மக்கள் விருப்பத்துடன் அவனைக் காணச் சென்றனர். காண்பதற்கினிய திரமிடர்களில் {தமிழர்களில்} ஆடவரும், மங்கையரும் அங்கே சென்று அந்தப் பாண்டவனை மகிழ்ச்சியுடன் கண்டனர். மென்மையான உடலும், அகன்ற விழிகளைக் கொண்டவனும், பூமியில் தேவனுக்கு ஒப்பானவனும், வியத்தகு பேரழகனுமான சகாதேவன் போகும்போது அந்நாட்டினர் கண்ணிமைக்காமல் அவனைக் கண்டனர். குமாரக்கடவுளுக்கு ஒப்பான அந்த சகாதேவனை மங்கலப் பாடல்களுடன் துதித்து, விரும்பத்தக்க பற்பல உயர்ந்த பொருட்களையும், மற்றும் விரும்பத்தக்க பல வசதிகளையும் அளித்து அவர்கள் அவனை உபசரித்தனர்.
சிறந்த கரங்களைக் கொண்டவனான அந்த சகாதேவனும் மகிழ்ச்சியுடன் அவர்களைக் கண்டு, அவர்களுக்கு விடைகொடுத்தனுப்பி தென்திசைக்குப் புறப்பட்டான். அங்கே சோழ மன்னனைத் தன் தூதன் மூலம் விரைவாக வசப்படுத்தி, அவனிடமிருந்து ரத்தினங்களைப் பெற்றுக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்றான். சோழ நாட்டிலுள்ள மற்ற மனிதர்கள் சகாதேவனைக் காண்பதில் ஆசை தீராதவர்களாக அவனைப் பின்தொடர்ந்து சென்று பாண்டிய நாட்டை அடைந்தனர். ஓ ஜனமேஜயா, பிறகு சகாதேவன், காட்டில் திரியும் யானைகளையும், புலிகளையும், மான்களையும், பல விலங்குக் கூட்டங்களையும், கிளிகளையும், மயில்களையும், கழுகுகளையும், காட்டுக் கோழிகளையும் பார்த்துக் கொண்டே பாண்டிய நாட்டை அடைந்தான்.
அர்ஜுனனுக்கு மாமனாகிய பாண்டிய மன்னனிடம் தூதர்களை அனுப்பினான். பாண்டியன் மலயத்வஜன் சகாதேவனுடைய ஆணையை அன்புடன் அங்கீகரித்தான். அர்ஜுனன் மனைவியும், பாண்டிய அரசமகளும், அழகிற்சிறந்தவளும், நல்ல லக்ஷணங்கள் பொருந்தினவளும், பெண்களிற் சிறந்தவளுமாகிய சித்திராங்கதை சகாதேவன் வந்திருப்பதை அறிந்து பெரும் அளவிலான ரத்தினங்களை அன்புடன் அனுப்பினாள். அந்த நிகரற்ற மதிப்பைக் கண்டு சகாதேவனும் மகிழ்ச்சியுடன் தன் அண்ணனின் மகனான பப்ருவாகனனுக்கு ரத்தினங்களைப் பெரும் அளவில் அளித்து, அர்ஜுனன் மாமனும், திராவிட நாட்டுக்கும், மணலூர் நகரத்திற்கும் மன்னனுமான மலயத்வஜப் பாண்டியனைத் தூதர்கள் மூலம் வசப்படுத்தி, அவனிடத்திலிருந்து ரத்தினங்களைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களால் சூழப்பட்டவனாக அகஸ்தியருக்கு இருப்பிடமும், தேவலோகத்துக்குச் சமானமுமான சிறந்த மலையை அடைந்தான்.[10]
[10] கங்குலியின் பதிப்புப் படி சித்திராங்கதை மணிபுரத்தைச் சேர்ந்தவள். அவளது தந்தையின் பெயர் சித்திரவாகனன்.
ஓ ஜனமேஜயா, அந்த மலையை வலம் வந்த சகாதேவன், தெளிவானதும், குளிர்ச்சியானதும், தீர்த்தத்தைக் கொண்டதும், மனத்தைக் கவர்வதுமான தாம்ரபர்ணி என்கிற ஆற்றைக் கடந்து கடற்கரையை அடைந்தான்.
ஓ பாரதா, ஓ மன்னர்மன்னா, ஓ ஜனமேஜயா, சிறந்த கரங்களைக் கொண்ட மன்னன் சகாதேவன் புத்திமான்களில் சிறந்தவர்களும், நல்ல ஆலோசனை வழங்கக்கூடியவர்களுமான அமைச்சர்களுடன் ஆலோசித்து, தன் அண்ணன் பீமனின் மகனான கடோத்கசனை நினைத்தான். நினைத்த மாத்திரத்திலேயே அந்த ராட்சசனும் {கடோத்கசனும்} அங்கே வந்தான். நெடும் உயரமும், பெருங்கைகளும் கொண்ட அவன் இருண்ட மேகத்தைப் போல இருந்தான். அவன் பொன்குண்டலங்களையும், விசித்திரமான முத்தாரங்களையும், தோள்வளைகளையும், ரத்தினச்சதங்கைகளையும், பொன் மாலையையும், அரைக்கட்டையும், கடகங்களையும், தோள்வளைகளையும், கிரீடத்தையும் அணிந்திருந்தான். அவன் நீண்ட கோரப்பற்களையும், சிவந்த கூந்தலையும், செம்பட்டை நிறமான மீசையையும் கொண்டிருந்தான். பயங்கரமான உடல் படைத்த அவன் மேனியில் செஞ்சந்தனஞ்சூடி, மெல்லிய ஆடை தரித்திருந்தான். பெரும்பலசாலியான அந்தக் கடோத்கசன் தன் வலிமையினால் பூமியை நடுங்கச் செய்தபடி அங்கே வந்தான். மலை போல இருந்த அந்தக் கடோத்கசனைக் கண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் சிங்கத்தைக் கண்ட அற்ப விலங்குகளைப் போல அஞ்சி ஓடினர். புலஸ்தியரிடம் செல்லும் ராவணனைப் போல சகாதேவனிடம் அவன் வந்தான்.
ஓ மன்னா, சகாதேவனைக் கண்ட கடோத்கசன் கரங்குவித்து அவனை வணங்கிப் பணிந்து, "நான் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான்.
மேரு மலையின் சிகரம் போல வந்து நின்ற அந்தக் கடோத்கசனைக் கண்ட சகாதேவன் அவனை இருகைகளாலும் வாரி அணைத்து, உச்சிமுகர்ந்து, அமைச்சர்களுடன் சேர்ந்து அவனைக் கௌரவித்து, அன்புடன், "பெரும்பலம் கொண்ட குழந்தாய், கப்பத்தின் பொருட்டு அனுப்பப்படும் நீ, லங்காபுரிக்குச் சென்று, ராட்சசர்களின் மன்னனும், உயர் ஆன்மா கொண்டவருமான விபீஷணனைக் கண்டு ராஜசூய வேள்விக்கு வேண்டிய பல வகையான ரத்தினங்களைப் பெரும் அளவில் பெற்றுக் கொண்டு திரும்பி வருவாயாக" என்றான்.
ஓ ஜனமேஜயா, சகாதேவனால் இவ்வாறு சொல்லப்பட்ட கடோத்கசன், மனமகிழ்ந்து, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தென்திசை நோக்கிச் சென்றான். ஓ மன்னா, சகாதேவனை வலம் வந்து, லங்கையை நோக்கிப் புறப்பட்ட அந்தக் கடோத்கசன், ஆமைகளும், முதலைகளும், சிறுமீன்களும், பெருமீன்களும், நீர்யானைகளும், சிப்பிகளும், சங்குகளும் மிகுதியாக நிரம்பியிருக்கும் கடலைக் கண்டான். ஓ மன்னர்களுக்கு மன்னா, அந்தக் கடோத்கசன் ராமன் கட்டிய அணையை {பாலத்தைக்} கண்டு, அவனுடைய சக்தியை நினைத்துக் கொண்டே கடலின் தென்கரையைச் சேர்ந்தான்.
சுற்று மதில்களைக் கொண்டதும், அழகான கோபுர வாயில்களைக் கொண்டதும், வெண்மையும், செம்மையுமான பல மாட மாளிகைகளால் நிறைந்திருப்பதும், அழகிய மிருதங்க ஒலி நிறைந்ததும், எக்காலத்திலும் காய்த்துப் பூத்திருக்கும் மரங்களைக் கொண்ட தோட்டங்களால் அழகாயிருப்பதும், மலர்களின் மணம் நிரம்பிய அரச சாலைகளைக் கொண்டதும், இந்திரனின் அமராவதிக்கு நிகரானதுமாக பேரெழிலுடன் திகழ்ந்த லங்கா நகரத்திற்குள் கடோத்கசன் நுழைந்தான். சூலம், பராஸம் முதலிய ஆயுதங்களைத் தரித்துப் பலவித அலங்காரங்களுடன் இருக்கும் பல ராட்சசர்களையும், தேவலோகத்து மலர்மாலைகளைச் சூடி, தெய்வீக ஆபரணங்களை அணிந்து கொண்டு, மதுவினால் சிவந்த கண்களையும், பருத்த பின்புறங்களையும், கொங்கைகளையும் கொண்ட அழகிய பெண்களையும் அங்கே கடோத்கசன் கண்டான். பீமசேனன் மகனான கடோத்கசனைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியும், வியப்புமடைந்தனர்.
இந்திரனின் மாளிகைக்கு நிகரான அரச மாளிகையை அடைந்த கடோத்கசன், அங்கே இருந்து வாயிற்காப்போனிடம், "கௌரவர்களில் சிறந்தவரும், பெரும்பலசாலியும் பாண்டுவென்ற பெயர் படைத்தவருமான மன்னன் ஒருவர் இருந்தார். அவருடைய இளைய மைந்தர் சகாதேவனைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். நான் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரால் கப்பத்தின் பொருட்டு அனுப்பப்பட்ட தூதனாவேன். மன்னர்களுக்கு மன்னரான விபீஷணரைப் பார்க்க விரும்புகிறேன். விரைவில் சென்று என்னைக் குறித்து அவரிடம் தெரிவிப்பாயாக" என்றான். ஓ ஜனமேஜயா, அந்தச் சொல்லைக் கேட்ட வாயிற்காப்போன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அரண்மனைக்குள் சென்றான். விபீஷணனிடம் தூதன் வந்திருப்பதைக் குறித்துத் தெரிவித்தான். விபீஷணன் "அந்தத் தூதனை என்னிடம் அழைத்து வருவாயாக" என்றான்[11].
[11] இதன்பிறகு கடோத்கசன், விபீஷணனைச் சந்திக்கிறான். பாண்டவர்களின் வரலாறை ஆதிமுதல் அந்தவரை சுருக்கமாக அவனுக்குத் தெரிவித்து, அப்படிப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ராஜசூயம் செய்வதாகவும், அதற்கு விபீஷணன் கப்பம் அளிக்க வேண்டும் என்றும் கடோத்கசன் சொல்கிறான். விபீஷணன் உடன்படுகிறான். பெருஞ்செல்வத்தைக் கப்பமாக கடோத்கசனிடம் கொடுத்து அனுப்புகிறான். ஐந்து பக்கங்களில் மிக விரிவான பகுதியாக இருப்பதால் அதை இங்கே தவிர்த்திருக்கிறேன்.
ஓ ஜனமேஜயா, ராட்சசர்களோடு கூடிய கடோத்கசன் ரத்தினங்களை எடுத்துக் கொண்டு லங்கையிலிருந்து சகாதேவனிடம் விரைவாகச் சென்றான். கடலைக் கடந்து ரத்தினங்களைக் கொண்டு வந்திருக்கும் பயங்கரமான ராட்சசர்களையும், கடோத்கசனையும் சகாதேவன் கண்டான். அங்குள்ள தமிழர்கள் அரக்கர்களைக் கண்டு அஞ்சி ஓடினர். பிறகு கடோத்கசன் சகாதேவனை அடைந்து கரங்குவித்து நின்றான். சகாதேவன், ரத்தினக் குவியலையும், கடோத்கசனையும் கண்டு களிப்புற்று அவனை ஆறத்தழுவிக் கொண்டு அரக்கர்களிடம் அன்பு பாராட்டினான். தமிழர்களனைவருக்கும் விடைகொடுத்தனுப்பின பிறகு தான் புறப்படத் தொடங்கினான். இவ்வாறு ஆற்றலினாலும், இனிய சொல்லினாலும் வெற்றிச் செல்வம் பொருந்திருப்பதனால் மன்னர்களை வென்று, கப்பம் கட்டச் செய்த அந்த வீரன், ராட்சசர்களுடன் சேர்ந்து, ரத்தினமயமான பனைமரங்களை எடுத்துக் கொண்டு பூமியை அதிரச் செய்கிறவன் போல இந்திரப்ரஸ்தத்தில் நுழைந்தான்.
ஓ ஜனமேஜயா, சகாதேவன் யுதிஷ்டிரனைக் கண்டு கரங்குவித்து வணங்கித் துதித்து, அவனால் பாராட்டப்பட்டான். யாருக்கும் கிடையாத மிகுதியான செல்வக்குவியல்கள் இலங்கையிலிருந்து வந்தனவற்றைக் கண்டு நீதிமானான மன்னன் பெரும் மகிழ்ச்சியையும், பெரும் வியப்பையும் அடைந்தான். ஓ பாரதா, ஓ ஜனமேஜயா, ஆயிரங்கோடிகளுக்கும் மேற்பட்ட பொன்களையும், பல வகை ரத்தினங்களையும், பசுக்களையும், வெள்ளாடு, செம்மறியாடு, எருமைகளையும், உயர் ஆன்மாவும், நீதிமானுமான மன்னனிடம் ஒப்படைத்து, தன் காரியத்தை நிறைவேற்றி சகாதேவன் சுகமாக வசித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.[12]
[12] 78ம் சுலோகத்திற்குப் பின் சுலோக எண்கள் குறிக்கப்படாமல் இருக்கும் பகுதி அனைத்தும் கும்பகோணம் பதிப்பில் இரண்டு அத்தியாயங்களாக இருக்கும் அதிக பாடமாகும். தென்னாடு குறிப்பிடப்படுவதால், தகவலுக்காக மட்டுமே அந்தப் பகுதி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |