Krishna came to Indraprastha! | Sabha Parva - Section 32 | Mahabharata In Tamil
(ராஜசூயீக பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : நண்பர்களும், அதிகாரிகளும் யுதிஷ்டிரனை வேள்வியைத் தொடங்கச் சொல்வது; அதே நேரத்தில் வந்த கிருஷ்ணனிடம் யுதிஷ்டிரன் அனுமதி கேட்பது; கிருஷ்ணன் யுதிஷ்டிரனைப் புகழ்ந்து வேள்வியைத் தொடங்குமாறு அனுமதி அளித்தது; வேள்விக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் பாண்டவர்கள் சேகரித்தல், சகாதேவனை அனுப்பி நாட்டிலுள்ளோரை அழைத்து வர ஏற்பாடு செய்தல்; பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்; நகுலனை அனுப்பி, ஹஸ்தினாபுரத்தில் இருந்து தனது உறவினர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தல்…
சில ஏற்புடைய தொண்டுகளுக்காகவோ, வழிபாடுகளுக்காகவோ, ஏழ்மையை உண்டாக்காத கப்பம் கட்டவோ மட்டுமே (போருக்காக அல்லாமல் மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே) மற்ற மன்னர்கள் யுதிஷ்டிரனை அணுகினர்.(6) அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} பெரிய கருவூலம் {பொக்கிஷ அறை} முழுவதும், அறம் சார்ந்து ஈட்டப்பட்ட செல்வங்கள் குவியலாக நிறைந்து கிடந்தன. நூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்தச் செல்வங்களைப் பயன்படுத்தினாலும் அவை வற்றாத அளவுக்குக் குவிந்து கிடந்தன.(7)
கருவூல நிலையையும் மற்றும் தனது அனைத்து உடைமைகளையும் உறுதி செய்த அந்த குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, வேள்வியைச் செய்வதில் தனது இதயத்தை நிலைபெறச் செய்தான்.(8) அவனது {யுதிஷ்டிரனது} நண்பர்களும் அதிகாரிகளும், தனியாகவும், சேர்ந்தும் வந்து அவனை அணுகி, "ஓ மேன்மையானவனே, வேள்விக்கான நேரம் வந்துவிட்டது. எனவே காலம் கரைந்துபோகும் முன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வாயாக" என்றனர்.(9)
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது, எங்கும் எதிலும் இருப்பவனும், பழமையானவனும், வேதங்களின் ஆன்மாவும், ஞானம் உள்ளவர்களால் விவரிக்கப்படும்படியான ஒப்பற்றவனும், அண்டத்தில் நிலைத்து நிற்கும் இருப்புகளில் முதன்மையானவனும், அனைத்துப் பொருட்களின் ஆதி மூலமும், அனைத்துப் பொருட்களும் எதில் கடைசியாகக் கரையுமோ அத்தன்மை உடையவனும், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலங்களின் தலைவனும், கேசியைக் கொன்ற கேசவனுமான ஹரி (கிருஷ்ணன்) அங்கே வந்தான்.(10,11) விருஷ்ணி குலத்தோரின் {யாதவ குலத்தோரின்} அரணும், துயர் நிறைந்த காலத்தில் அச்சத்தை விரட்டுபவனும், அனைத்து எதிரிகளையும் தாக்குபவனுமான அவன், வசுதேவரை (யாதவ) படைக்குத் தலைவராக நியமித்து, மன்னன் யுதிஷ்டிரனுக்காக பெரும் செல்வத்தைத் தன்னுடன் கொண்டு வந்து, அந்த அற்புதமான நகரங்களின் நகரத்துக்குள் நுழைந்தான். அவனது {கிருஷ்ணனது} பெரும் படையில் இருந்த தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி அந்தக் காண்டவத்தின் சூழ்நிலையையே நிறைத்தது. மனிதர்களில் புலியான மாதவன் {கிருஷ்ணன்}, பாண்டவர்களின் அளவற்ற செல்வத்தை மேலும் அதிகரிக்க,(12-14) வற்றாத கடல் போன்ற ரத்தினங்களைத் தன்னுடன் கொண்டு வந்தான், பாண்டவர்களின் எதிரிகளுக்கு இது துயரை அதிகரித்தது. இருண்ட பகுதி சூரியனால் மகிழ்ச்சியடைவதைப் போல, காற்றற்ற இடத்தில் தென்றலைப் போல கிருஷ்ணனின் இருப்பு அந்த பாரதர்களின் {பாண்டவர்களின்} தலைநகரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.(15) மகிழ்ச்சியாக அவனை {கிருஷ்ணனை} அணுகிய யுதிஷ்டிரன் அவனுக்கு உரிய கௌரவத்தைக் கொடுத்து, அவனது நலனைக் குறித்து விசாரித்தான். கிருஷ்ணன் வசதியாக அமர்ந்த பிறகு,(16) அந்த மனிதர்களில் காளையான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தௌமியருடனும், துவைபாயனருடனும் {வியாசருடனும்}, மற்ற வேள்விப் புரோகிதர்களுடனும் பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்களுடனும் {நகுல,சகாதேவனுடனும்} கிருஷ்ணனிடம் பேசினான்.(17)
யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, உனக்காகவே இந்த உலகம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. ஓ விருஷ்ணி {யாதவ} குலத்தவனே {கிருஷ்ணா}, உனது அருளாலேயே இந்த செல்வம் அனைத்தையும் நான் அடைந்தேன்.(18) ஓ தேவகியின் மகனே {கிருஷ்ணா}, ஓ மாதவா {கிருஷ்ணா}, இந்தச் செல்வங்களை விதிப்படி, மேன்மையான பிராமணர்களுக்கும், வேள்விப்படையல்களைச் சுமந்து செல்பவனுக்கு {அக்னிக்கும்} அர்ப்பணிக்க விரும்புகிறேன்.(19) ஓ தசார்ஹ குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பலம் வய்ந்த கரங்களைக் கொண்டவனே, இந்த வேள்வியை உன்னுடனும் எனது தம்பிகளுடனும் கொண்டாட எனக்கு அனுமதி கொடுப்பாயாக.(20) ஓ கோவிந்தா, ஓ நீண்ட கரங்களைக் கொண்டவனே, ஓ தசார்ஹ குலத்தவனே, இவ்வேள்வியில் உன்னை நீ நிறுவிக் கொள்வாயாக. நீ இந்த வேள்வியைச் செய்தால் நான் பாவங்களில் இருந்து விடுபடுவேன்.(21) அல்லது, ஓ மேன்மையானவனே {கிருஷ்ணா}, உன்னால் அனுமதிக்கப்பட்டு, ஓ கிருஷ்ணா, நானும் எனது தம்பிகளும் வேள்வி மேடையில் அமர்ந்தால், நான் அந்த அற்புத வேள்வியின் மூலம் கிடைக்கும் கனியை அனுபவிக்க முடியும்", என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(22)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "யுதிஷ்டிரன் இவ்வாறு சொன்னதன் பிறகு, கிருஷ்ணன், தன் குணங்கள் பலவற்றைப் புகழடையச் செய்யும் வகையில்,(23) "ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரரே}, ஏகாதிபத்திய கௌரவத்தை அடைய உமக்குத் தகுதி இருக்கிறது. எனவே, நீரே அந்தப் பெரும் வேள்வி செய்வீராக.(24) நீர் அந்த வேள்வியைச் செய்து கனி கிட்டப்பெறும்போது நாங்கள் அனைவரும் வெற்றி மகுடம் தரித்தவர்களாக எங்களை நினைத்துக் கொள்வோம். நான் எப்போதும் உமது நன்மையையே நாடுகிறேன். நீர் விரும்பிய அந்த வேள்வியைச் செய்வீராக.(24) அந்தக் காரியத்திற்காக எனக்கும் ஏதாவது அலுவலை {வேலையைக்} கொடுப்பீராக. நான் உமது கட்டளைகள் அனைத்தையும் ஏற்க வேண்டும்", என்று சொன்னான்.(25)
அதற்கு யுதிஷ்டிரன், "ஓ கிருஷ்ணா, எனது தீர்மானம் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா} எனது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீ இங்கு இருக்கும் போது வெற்றி நிச்சயம் எனதே ஆகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(26)
நீதிமானான யுதிஷ்டிரனால் இச்சொற்கள் சொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான சகாதேவன் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றித் தன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} அவற்றைத் தெரிவித்தான்.(33)
ஓ மன்னா, துவைபாயனர் {வியாசர்}, வடிவம் கொண்டு வந்த வேதங்களைப் போன்ற மேன்மையான பிராமணர்களை வேள்விப் புரோகிதர்களாக நியமித்தார்.(34) அந்த சத்தியவதியின் மகன் {வியாசர்}, தானே அந்த வேள்வியின் பிரம்மாவாக அமர்ந்தார். தனஞ்சய குலத்தின் காளையான ஸுஸாமர், சாம வேத மந்திரங்களை உரைப்பவராகவும்,(35) பிரம்மனுக்குத் தன்னை அர்ப்பணித்த யாஜ்ஞவல்கியர் அதர்யுவாகவும், வசுவின் மகனான பைலரும், தௌமியரும் ஹோத்ரிகளாகவும் {ஹோதாவாக} ஆனார்கள்.(36) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, வேதங்களையும் அதன் அங்கங்களையும் அறிந்த இவர்களின் சீடர்களும் மகன்களும், ஹோத்ரக்தர்கள் ஆனார்கள்.(37) அனைவரும் நல்வாழ்த்துகளைச் சொல்லி, வேள்வியின் பொருளை உரைத்து, அந்தப் பெரிய வேள்வி மண்டபத்தை முறைப்படி வழிபட்டனர்.(38)
பிராமணர்களால் உத்தரவிடப்பட்ட கட்டுமானக் கலைஞர்களும் பிற கலைஞர்களும் தேவர்களின் கோவில்களைப் போல நல்ல நறுமணமிக்க பெரும் இடம் கொண்ட எண்ணிலடங்கா அறைகளைக் கட்டினர்.(39) இவையெல்லாம் முடிந்த பிறகு, அந்த மன்னர்களில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, மனிதர்களில் காளை யுதிஷ்டிரன், தனது தலைமை ஆலோசகனான {அமைச்சனான} சகாதவனை அழைத்து,(40) "நேரங்கடத்தாமல், அனைவரையும் வேள்விக்கு அழைத்து தூதுவர்களை அனுப்புவாயாக", என்றான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சகாதேவன், தனது தூதுவர்களிடம், "நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரையும், நில உடைமையாளர்கள் (க்ஷத்திரியர்கள்) அனைவரையும்,(41) வைசியர்கள் அனைவரையும், மரியாதைக்குரிய அனைத்து சூத்திரர்களையும் இங்கே விரைவாக அழைத்து வாருங்கள்", என்று சொல்லி அவர்களை {தூதுவர்களை} விரைவாக அனுப்பினான்.(42)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும் வேகம் கொண்ட அந்த தூதுவர்கள் இப்படிக் கட்டளையிடப்பட்டு அனைவரையும் அந்த பாண்டவனின் உத்தரவுப்படி நேரத்தைக் கடத்தாமல் அழைத்தனர். பிறகு பல நண்பர்களையும் அந்நியர்களையும் அவர்களுடன் அழைத்துவந்தனர்.(43) ஓ பாரதா {ஜனமேஜயா}, பிராமணர்கள் சரியான நேரத்தில் குந்தியின் மகனான யுதிஷ்டிரனை ராஜசூய வேள்வியில் நிறுவ அமர்த்தினார்கள்.(44) அவனை {யுதிஷ்டிரனை} வேள்வியில் நிறுவும் சடங்கு முடிந்ததும், அந்த தர்ம தேவனே மனித வடிவம் கொண்டு வந்தது போல இருந்தவனும், மனிதர்களில் சிறந்தவனும், நீதிமானுமான அறம் சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், அந்த மனிதர்களில் சிறந்தவன், ஆயிரக்கணக்கான பிராமணர்களும், தனது தம்பிகளும் நண்பர்களும் உறவினர்களும் ஆலோசகர்களும் {அமைச்சர்களும்}, பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த க்ஷத்திரிய மன்னர்களும் சூழ வேள்வி மண்டபத்துக்குள் நுழைந்தான்.(45,46)
ஞானத்தில் திறம் கொண்டவர்களும், வேதங்களிலும் வேறு பல கிளைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுமான பல பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வரத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான கைவினைக் கலைஞர்களும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அந்த பிராமணர்களுக்கும் அவர்களது பணியாட்களுக்கும் தனித்தனியே வாழ்விடங்களை {தங்குமிடங்களைக்} கட்டிக் கொடுத்தனர். அந்த வாழ்விடங்கள் உணவும், ஆடைகளும், கனிகளும், அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற மலர்களாலும் நிரம்பியிருந்தன.(47-49)
ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியால் முறையாக வணங்கப்பட்ட அந்த பிராமணர்கள் தொடர்ந்து அங்கே வசித்து பல தலைப்புகளில் பேசியும், ஆடற்கலைஞர்கள் மற்றும் நடனக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டும் தங்கள் பொழுதை கழித்தனர்.(50) அந்த உயரான்ம பிராமணர்கள் மகிழ்வுடன் உண்டு கொண்டிருக்கும் ஒலி இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.(51) "கொடுங்கள்", "உண்ணுங்கள்" போன்ற வார்த்தைகள் அங்கே அனுதினமும் கேட்டுக் கொண்டே இருந்தன.(52) ஓ பாரதா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரன் அந்த பிராமணர்களுக்கு ஆயிரம் பசுக்களையும், படுக்கைகளையும், பொற்காசுகளையும், மங்கையரையும் அளித்தான்.(53) இப்படியே பாண்டுவின் மகனான அந்த ஒப்பற்ற வீரனின் {யுதிஷ்டிரனின்} வேள்வி, விண்ணுலகில் செய்யப்படும் சக்ரனின் {இந்திரனின்} வேள்வியைப் போல நடத்தப்பட்டது.(54) பிறகு அந்த மனிதர்களில் காளையான மன்னன் யுதிஷ்டிரன், பாண்டுவின் மகனான நகுலனை, பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், விதுரன், கிருபர், தனது பங்காளிகள் ஆகியோரை நல்ல முறையில் ஹஸ்தினாபுரத்தில் இருந்து அழைத்து வர அனுப்பினான்" {என்றார் வைசம்பாயனர்}.(55,56)
ஆங்கிலத்தில் | In English |