The kings who came to the sacrifice! | Sabha Parva - Section 33 | Mahabharata In Tamil
(ராஜசூயீக பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தில் இருந்து கௌரவர்கள் வேள்விக்கு வருவது; வேள்விக்கு வந்திருந்த மன்னர்கள் பட்டியல்; அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகள்…
ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியைக் கேள்விப்பட்டு, வேள்வியின் இயல்பை அறிந்த நூற்றுக்கணக்கான பிற க்ஷத்திரியர்கள், பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்திரனின் வேள்வி மண்டபத்தைக் காண மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் பல்வேறு நாடுகளில் இருந்து பல விலையுயர்ந்த நகைகளுடன் வந்தனர்.(3,4) திருதராஷ்டிரன், பீஷ்மர், உயர்ந்த புத்திகூர்மையுடைய விதுரன், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட கௌரவச் சகோதரர்கள், காந்தார மன்னன் சுபலனும் பெரும் பலம் படைத்த சகுனியும்,(5,6) அசலன், விருஷகன், தேர்வீரர்களில் முதன்மையான கர்ணன், பெரும் பலம் வாய்ந்த சல்லியன், பலம் நிறைந்த பாஹ்லீகன்,(7) ஸோமதத்தன், குரு குலத்தின் பூரி, பூரிஸ்ரவஸ் {பூரிச்ரவன்}, சலன், அச்வத்தாமன், கிருபர், துரோணர், சிந்துவின் ஆட்சியாளன் ஜெயத்ரதன்,(8) தனது மகன்களுடன் கூடிய யக்ஞசேனன் {துருபதன்}, பூமியின் அதிபதியான சல்லியன் {சால்வனாக இருக்க வேண்டும்}, கடல்சார் நிலங்களின் மிலேச்ச இனக்குழுக்களுடன் கூடிய பெரும் தேர்வீரரனான பிராக்ஜோதிஷ நாட்டின் பகதத்தன்,(9) கடற்கரையின் சதுப்புநிலங்களில் வாழும் மிலேச்சர்கள், மலை சார் நிலங்களைச் சார்ந்த பல மன்னர்கள், மன்னன் பிருஹத்பலன்,(10) பௌண்ட்ரர்களின் மன்னன் வாசுதேவன் {கிருஷ்ணன் அல்ல}, வங்க மற்றும் கலிங்க நாட்டு மன்னன், ஆகர்ஷன், குந்தலன், மால்வ மன்னர்கள், ஆந்திரகர்கள்,(11) திராவிடர்கள் {த்ரமிடர்கள்}, சிங்களர்கள், மன்னன் காஷ்மீரன், பெரும் சக்தி கொண்ட மன்னன் குந்திபோஜன், மன்னன் கௌரவாஹனன்,(12) பாஹ்லீக வீரர்களான பிற மன்னர்கள், தனது இரு மகன்களுடன் கூடிய விராடன், பெரும் பலம் கொண்ட மாவேல்லன் ஆகியோரும்,(13) பல நாடுகளில் இருந்து பல்வேறு மன்னர்களும், இளவரசர்களும் அங்கே வந்தனர்.
ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில், அந்த ஏகாதிபதிகள் அனைவருக்கும், மாளிகைகள் ஒதுக்கப்பட்டன.(18) அந்த மாளிகைகளில் பல்வேறு பொருட்களும், குளங்களும், பெரும் மரங்களும் இருந்தன. தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அனைத்து ஏகாதிபதிகளையும் அவர்களது தகுதிகளுக்கு ஏற்ப வழிபட்டான்.(19) மன்னனால் {யுதிஷ்டிரனால்} வழிபடப்பட்ட அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளில் ஓய்ந்திருக்கச் சென்றனர். அந்த மாளிகைகள், காண்பதற்கு இனியனவாகும், அனைத்து அறைகலன்களுடனும், {வெள்ளையாக உயர்ந்து இருக்கும்} கைலாச மலைப்பாறைகள் போல இருந்தன.(20)
அவை {மாளிகைகள்} அனைத்துப் புறங்களிலும், நன்கு கட்டப்பட்ட உயர்ந்த வெண்சுண்ணம் பூசப்பட்ட சுவர்களுடனும், தங்க வலை பின்னப்பட்ட ஜன்னல்களுடனும், அறையின் உள்கட்டுகள் வரிசையான முத்துகளால் அலங்கரிக்கப்பட்டும்,(21) எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும், விலையுயர்ந்த தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டும் அழகாக இருந்தன. அவை {மாளிகைகள்} அனைத்தும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அற்புதமான நறுமணப்பொருட்களால் மணமாக்கப்பட்டும் இருந்தன.(22) அவற்றின் {மாளிகைகளின்} வாயில்களும் கதவுகளும் ஒன்று போல அமைக்கப்பட்டு, ஒரு யோஜனை தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் இருந்தன. அவை மக்கள் கூட்டமாக வர ஏதுவாக அகன்று இருந்தன.(23) பல விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, பல உலோகங்களால் கட்டப்பட்டு, அவை {மாளிகை} இமயமலைச் சிகரங்களைப் போல இருந்தன. சிறிது காலம் அந்த மாளிகையில் ஓய்ந்திருந்த அந்த ஏகாதிபதிகள், பல சதஸ்யர்களால் (வேள்விப் புரோகிதர்களால்) சூழப்பட்டு, பிரமாணர்களுக்கு பெரும் பரிசுகளை வழங்கிய வேள்வியைக் கண்டனர். மன்னர்களும், பிராமணர்களும், முனிவர்களும் இருப்பதைக் கண்ட போது, ஓ மன்னா {ஜனமேஜயா}, தேவர்களால் நிறைந்த விண்ணுலகம் போல அந்த வேள்வி மண்டபம் காட்சியளித்தது" {என்றார் வைசம்பாயனர்}.(24,25)
ஆங்கிலத்தில் | In English |