Krishna washing the feet of Brahmanas | Sabha Parva - Section 34 | Mahabharata In Tamil
(ராஜசூயீக பர்வத் தொடர்ச்சி)
யுதிஷ்டிரன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணியில் நியமிப்பது; வேள்விக்கு வந்த மன்னர்கள் பெரும் செல்வத்தைக் கொண்டு வருவது; அச்செல்வங்களை ஏற்கும் பணியில் துரியோதனன் இருப்பது; வேள்வி இனிமையாக ஆரம்பிக்கப்படுவது
வைசம்பாயனர் சொன்னார், "பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, யுதிஷ்டிரன், தனது பாட்டனையும் {பீஷ்மரையும்}, குருவையும் {துரோணரையும்} அணுகி வழிபட்ட பிறகு, பீஷ்மரிடமும், துரோணரிடமும், கிருபரிடமும், துரோணரின் மகனிடமும் {அஸ்வத்தாமனிடமும்}, துரியோதனனிடமும், விவிங்சதியிடமும், "இந்த வேள்வி காரியங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு உதவ வேண்டும். இங்கே இருக்கும் பெரும் செல்வம் அனைத்தும் உங்களுடையதே. நீங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசித்து, நீங்கள் விரும்பியபடி என்னை வழிநடத்துங்கள்," என்றான் {யுதிஷ்டிரன்}.
வேள்வியில் நிறுவப்பட்ட பாண்டு மகன்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, இப்படிச் சொல்லிவிட்டு, அனைவரையும் அவர்களுக்குத் தகுந்த அலுவல்களில் நியமித்தான். அவன் துட்சாதனனை உணவுத்துறை மற்றும் இன்பம் அனுபவிக்கத்தக்க பொருட்களை சேகரித்தல் ஆகியவற்றில் நியமித்தான். அஸ்வத்தாமன் அந்தணர்களைக் கவனித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டான். மன்னர்களை பதில் மரியாதையுடன் அழைத்துவர சஞ்சயன் நியமிக்கப்பட்டான். பெரும் புத்திகூர்மையுடைய பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும், எது இதுவரை நடந்திருக்கிறது, எது நடக்க வேண்டும் என்று கவனிக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். வைரங்கள், தங்கம், முத்துக்கள், ரத்தினங்கள் ஆகியவற்றைக் கவனித்துக் கொள்ளவும், அந்தணர்களுக்கு பரிசுகளை விநியோகிக்கவும் கிருபர் நியமிக்கப்பட்டார். அதே போல மற்ற மனிதர்களில் புலிகளும் ஒவ்வொரு அலுவலில் நியமிக்கப்பட்டனர். பால்ஹிகன், திருதராஷ்டிரன், சோமதத்தன், ஜெயத்ரதன், நகுலனால் அழைத்துவரப்பட்டு, வேள்வியின் தலைவர்களாக இருந்து அனைத்தையும் அனுபவித்தனர். அறவிதிகள் அனைத்தையும் அறிந்த க்ஷத்தன் என்று அழைக்கப்பட்ட விதுரன், செலவுகளைக் கவனிப்பவனாக நியமிக்கப்பட்டான். மன்னர்களிடம் இருந்து பரிசுகளையும் கப்பங்களையும் வசூலிக்கும் பொறுப்பை துரியோதனன் ஏற்றுக் கொண்டான். உலகத்தின் மையமாக இருந்து, யாரைச் சுற்றி அனைத்து உலகமும் நகர்ந்து கொண்டு இருக்கின்றனவோ அந்தக் கிருஷ்ணன், அற்புதமான கனிகளை {பலன்களை} அடைய விரும்பி, தனது சுயவிருப்பத்தின் காரணமாக அந்தணர்களின் கால்களைக் கழுவும் பணியை ஏற்றுக் கொண்டான்.
அந்த வேள்வி மண்டபத்தையும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனையும் காண வந்த யாவரும், (எண்ணிக்கையில், நிறையில் அல்லது அளவில்) ஆயிரத்துக்குக் குறையாத காணிக்கைகளுடனேயே வந்தனர். அனைவரும் மன்னன் யுதிஷ்டிரனுக்கு பெரும் நகைக் குவியல்களைப் பரிசாகக் கொண்டு வந்து மரியாதை செய்தனர். தங்கள் செல்வங்களில் ஒரு பகுதியைப் பரிசாகக் கொண்டு வந்த மன்னர்கள், தாங்களே குருகுல மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியை முடிக்கும் அளவும் நகைகளைக் கொடுத்ததாக இறுமாந்து இருந்தனர். மேலும், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த சிறப்புமிகுந்த குந்தியின் மகனுடைய வேள்வி மண்டபம், அங்கிருந்த பல அரண்மனைகளாலும், அதைச் சூழ்ந்திருந்த பாதுகாவலர்கள் மற்றும் வீரர்களாலும் மிகவும் அழகாகக் காட்சியளித்தது. அந்த வேள்வியைக் காண வந்த தேவர்களின் ரதங்களை முட்டி நின்றன அம்மாளிகைகள். அந்த வேள்வியைக் காணவந்த மன்னர்களுக்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த மாளிகைகள், அங்கே அந்தணர்களும் வசித்ததால் தேவர்களின் ரதங்களைப் போல இருந்தன. அவை, ரத்தினங்களாலும், அனைத்துவகை செல்வங்களாலும் நிரம்பியிருந்தன. கடைசியாக அங்கே வந்த மன்னர்களும் நன்கு அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை செல்வங்களுடனும் அழகுடனுமே இருந்தார்கள். வருணனுடன் போட்டியிடும் வகையில் செல்வம் கொண்டிருந்த யுதிஷ்டிரனின் (ராஜசூய) வேள்வி, ஆறு நெருப்புகளால் வித்தியாசப்படுத்தப்பட்டு, அந்தணர்களுக்கு நிறைந்த செல்வங்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அனைவரையும் பெரும் மதிப்பிலான பரிசுகளாலும் ஒவ்வொருவர் விரும்பும் அனைத்து பொருட்களையும் கொடுத்து திருப்தி செய்தான். அபரிமிதமான அரிசி சோறாலும், அனைத்து வகை உணவுகளாலும், காணிக்கையாகக் கொண்டு வரப்பட்ட நகைகளாலும், அங்கே வந்திருந்த பெரும் கூட்டம் நிறைவாக உபசரிக்கப்பட்டது. தேவர்களும், வேள்வியின் மந்திரங்களாலும், அதன் உச்சரிப்புகளையும் நன்கு அறிந்த முனிவர்களால் இடப்பட்ட ஐடா, தெளிந்த நெய், ஹோமம், படையல்களாலும் மிகுந்த திருப்தியடைந்தனர். தேவர்களைப் போல அந்தணர்களும் வேள்விப் பரிசுகளாலும், உணவாலும் பெரும் செல்வத்தாலும் மிகுந்த திருப்தியடைந்தனர். நான்கு வகை மனிதர்களும் அந்த வேள்வியால் திருப்தியடைந்து மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர்.
![]() |
![]() |
![]() |