Offer Arghya to the kings | Sabha Parva - Section 35 | Mahabharata In Tamil
(அர்க்கியாஹரணப் பர்வம்)
பழையன நினைவுகூரும் நாரதர்; பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் மன்னர்களுக்கு அர்க்கியா கொடுக்கக் கட்டளையிடல்; யுதிஷ்டிரன் யாருக்கு முதலில் அர்க்கியா கொடுப்பது என்று கேட்டல்; பீஷ்மர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கச் சொல்லல்; சகாதேவன் முதல் அர்க்கியாவை கிருஷ்ணனுக்கு கொடுத்தல்; சேதி நாட்டு மன்னன் கோபப்படல்
வைசம்பாயனர் சொன்னார், "வேள்வியின் கடைசி நாளில் தவசி நீரை மன்னன் மேல் தெளிக்க வேண்டிய நேரத்தில், நன்கு மதிக்கப்பட வேண்டிய அந்தண முனிவர்கள் அழைக்கப்பட்டிருந்த மன்னர்களுடன் சேர்ந்து வேள்வி மண்டபத்தின் உள் இணைப்புக்குள் சென்றனர். அங்கே வசதியாக அமர்ந்த அந்தச் சிறப்புமிக்க முனிவர்கள் நாரதரை தங்களில் முதன்மையாகக் கொண்டு, அந்த அறையில் தேவலோக முனிவர்களைப் போல அமர்ந்திருந்த அந்த முனிவர்கள், பிரம்மனின் மாளிகையில் அம்ந்திருந்த தெய்வீக முனிவர்கள் போல வீற்றிருந்தனர். அம்முனிவர்கள் பலதரப்பட்ட தலைப்புகளில் தங்கள் பேச்சை ஆரம்பித்தனர். சில காலத்தை இன்னும் விரையமாக நினைத்த முனிவர்கள், பிரம்மனின் அவையில் அமர்திருந்த தேவர்களைப் போலத் தங்களை நினைத்துக் கொண்டு விவாதத்தை ஆரம்பித்தனர், "இது இப்படித்தான்"" என்றும், "இது இப்படி இல்லை'' என்றும் "இதுவும் இப்படித்தான்" என்றும் "இது வேறுமாதிரியாக இருக்க முடியாது" என்றும் பலபேர் இப்படித் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
வாதப்போர் புரிந்து கொண்டிருந்தவர்களில் சிலர், தங்கள் பேச்சுத்திறமையால் பலவீனமான கட்சியை பலமானதாகவும், பலமானதை பலமற்றதாகவும் ஆக்கினர். கறித்துண்டைத் தூக்கியெறியும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பருந்து அது ஆகாயத்தில் இருந்து விழுமுன்னரே அதைப் பிடிப்பது போல, அந்த வாதப் போராளிகள் பெரும் புத்திசாலித்தனத்துடன் எதிராளிகள் பேச்சில் உள்ள குறைகளைக் கண்டுபிடித்துப் பேசினர். அவர்களில் சிலர் அறவிதிகளிலும், கடும் நோன்புகளிலும், பல உரைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் அவர்களது பேச்சு இனிமையாக இருந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, வேள்வி மேடை தேவர்களாலும், அந்தணர்களாலும், பெரும் முனிவர்களாலும் சூழப்பட்டும் விண்ணில் பதிக்கப்பட்டிருக்கும் நட்சத்திரங்களைப் போல பெரும் அழகுடன் இருந்தது. ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அந்த மேடையின் அருகில் சூத்திரரோ அல்லது நோன்பு நோற்காதவரோ யாரும் இல்லை.
வேள்வியால் பிறந்த வளமையை அடையும் யுதிஷ்டிரனின் அதிர்ஷ்டத்தைக் கண்ட நாரதர், பெரிதும் திருப்தியடைந்தார். அந்த க்ஷத்திரியர்களின் பெரும் கூட்டத்தைக் கண்ட நாரத முனிவர், ஓ மனிதர்களின் மன்னா {ஜனமேஜயா}, சிந்தனையில் ஆழ்ந்தார். ஓ மனிதர்களில் காளையே {ஜனமேஜயனே}, அவர் {நாரதர்} பழங்காலத்தில் பிரம்மனின் மாளிகையில், *அனைத்து தேவர்களின் உயிர் பகுதிகளும் பூமியில் அவதரித்திருப்பது குறித்து தான் கேள்விப்பட்டதை நினைத்துப் பார்த்தார். ஓ குரு குலத்தின் மகனே{ஜனமேஜயனே}, அந்தக் கூட்டம் (அவதாரம் செய்திருக்கும்) தேவர்களின் கூட்டம் என்பதை அறிந்த நாரதர், தனது மனதில் தாமரை இதழ் போன்ற கண்களையுடைய ஹரியை {விஷ்ணுவை} நினைத்துப் பார்த்தார். அனைத்துப் பொருட்களின் படைப்பாளியும, அனைத்து தேவர்களிலும் மேன்மையானவனுமான நாராயணன் தேவர்களை அழைத்து, "பூமியில் நீங்கள் பிறந்து, ஒருவரை ஒருவர் கொன்று, மீண்டும் விண்ணுலகம் வாருங்கள்," என்று கட்டளையிட்ட நாராயணன், அந்த தேவர்களின் எதிரிகளைக் கொல்பவன், எதிரி நகரங்களை அடக்குபவன், தனது வாக்கைத் தானே காக்க, க்ஷத்திரிய குலத்தில் பிறந்திருக்கிறான் என்பதை நாரதர் அறிந்திருந்தார். அண்டத்தின் தலைவனான சம்பு என்று அழைக்கப்படும் மேன்மையான புனிதமான நாராயணன், தேவர்களுக்கு இப்படிக் கட்டளையிட்டு, தானும் யது குலத்தில் பிறந்து, குலத்தை தழைக்க வைப்பதில் முதன்மையானவனாக இருந்தான் என்பதையும், பெரும் நற்பேறு பெற்ற அந்தக-விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} அவதரித்து, நட்சத்திரங்களுக்கு மத்தியில் மின்னும் சந்திரனைப் போல இருக்கிறான், என்பதையும் நாரதர் அறிந்திருந்தார். எதிரிகளை வாட்டும் ஹரி {விஷ்ணு}, தனது கரத்தின் பலத்திற்காக இந்திரனுடன் கூடிய தேவர்களால் எப்போதும் புகழப்படுபவன், மனித உருவத்தில் இந்தப் பூமியில் வாழ்கிறான் என்பதையும் நாரதர் அறிந்திருந்தார். அந்த சுயபிறப்பாளனே பெரும் பலம் கொண்ட இந்த க்ஷத்திரியக் கூட்டத்தை பூமியில் இருந்து எடுத்துக் கொள்வான் என்றும், வேள்வியில் அனைவராலும் வழிபடப்படும் எல்லையற்ற பேரறிவாளனான ஹரியே அல்லது நாராயணனே ஒப்பற்ற தலைவன் என்றும் அறிந்திருந்தார். பெரும் புத்திக்கூர்மையை கொடையாகக் கொண்ட நாரதர், அனைவரிலும் முதன்மையானவர், அறமறிந்தவர், இவையாவும் நினைத்துப் பார்த்து, அந்த ஞானமுள்ள மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வியில் அதிர்ச்சிகர உணர்வுகளுடன் அமர்ந்திருந்தார்.
பிறகு பீஷ்மர், ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னன் யுதிஷ்டிரனிடம், "ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப மன்னர்களுக்கு அர்க்கியா (மரியாதைக்குரிய பொருள்) வழங்கப்படட்டும். ஓ யுதிஷ்டிரா! கேள், குரு, வேள்விப் புரோகிதர், உறவினர், ஸ்நாதகர், நண்பர், மன்னர், ஆகிய அறுவரும் அர்க்கியா பெற தகுதியுடையவர்கள். இவர்களில் யாரும் ஒருவனுடன் ஒரு முழு வருடத்திற்கு இருப்பாரானால், அவர் அர்க்கியா கொடுத்து வழிபடத்தகுந்தவரே. இந்த மன்னர்கள் நம்முடன் சில காலமாக தங்கி வருகின்றனர். ஆகையால், ஓ மன்னா, இவர்கள் அனைவருக்கும் கொடுக்க இங்கே அர்க்கியா கொண்டு வரப்படட்டும். இங்கு இருப்பவர்களிலேயே முதன்மையானவருக்கு முதல் அர்க்கியா கொடுக்கப்படட்டும்," என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ பாட்டா {பீஷ்மரே}, ஓ குரு குலத்தவரே, இங்கிருப்பவர்களில் யார் முதன்மையானவர் என்பதையும், யாருக்கு நம்மால் அர்க்கியா கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் எனக்குச் சொல்லும்," என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, சந்தனுவின் மகன் பீஷ்மர், தனது புத்திகூர்மையால், கிருஷ்ணனே அனைவரிலும் முதன்மையானவன் என்பதைத் தீர்மானித்து, "(கிருஷ்ணன் என்ற பொருளில்)ஒளிர்வனவற்றில் சூரியனைப் போல (சூரியனைப் போல ஒளிர்பவன்) தனது சக்தியாலும், பலத்தாலும், வீரத்தாலும் நம்மிடையே ஒளிர்பவன் அவன். இந்த நமது வேள்வி மேடை சூரியனற்ற பகுதியில் சூரியன் இருப்பது போல அல்லது அசைவற்ற இடத்தில் திடீர்த் தென்றலைப் போல அவனாலேயே பிரகாசமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கிறது," என்றார். பீஷ்மரால் இப்படி கட்டளையிடப்பட்டதும், பெரும் வீரம் கொண்ட சகாதேவன், அற்புதமான பொருட்களின் கலவையான முதல் அர்க்கியாவை விருஷ்ணி குலத்தின் கிருஷ்ணனுக்குக் கொடுத்தான். கிருஷ்ணனும் முறைப்படி அதை ஏற்றுக் கொண்டான். ஆனால், வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} வழங்கப்பட்ட வழிபாடுகளைக் கண்டு சிசுபாலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பலம் வாய்ந்த அந்த சேதி நாட்டு மன்னன், சபையின் மத்தியில் பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் திட்டி, அதன்பிறகு வாசுதேவனைப் {கிருஷ்ணனை} பழித்தான்.
........................................................................................................................................
* பார்க்க: அவதாரங்களின் உயிர்பகுதிகள்- ஆதிபர்வம் பகுதி-67ஆ
........................................................................................................................................
* பார்க்க: அவதாரங்களின் உயிர்பகுதிகள்- ஆதிபர்வம் பகுதி-67ஆ
![]() |
![]() |
![]() |