Sisupala reproving| Sabha Parva - Section 36 | Mahabharata In Tamil
(அர்க்கியாஹரணப் பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : சிசுபாலன் யுதிஷ்டிரனையும், பீஷ்மரையும், கிருஷ்ணனையும் நிந்தித்தல்….
சிசுபாலன், "ஓ குரு குலத்தவனே, இந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதிகள் அனைவருக்கும் மத்தியில் இந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, ஒரு மன்னனைப் போன்ற அரச வழிபாட்டுக்குத் தகுதியற்றவன்.(1) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, தாமரைபோன்ற கண்களை உடைய இவனை {கிருஷ்ணனை} வலிந்து வழிபடும் இந்நடத்தை சிறப்பு மிக்க பாண்டவர்களுக்குத் தகாதது.(2) பாண்டுவின் மகன்களே, நீங்கள் குழந்தைகளாக இருக்கிறீர்கள். அறம் மிக நுட்பமானதென்பதால், நீங்கள் அஃதை அறியவில்லை. கங்கையின் மகன் பீஷ்மரும் குறைந்த அறிவுடனேயே இருக்கிறார். அதனால் தான் (உனக்கு இப்படி அறிவுரை வழங்கி) அறவிதிகளை மீறி நடக்கிறார்.(3) ஓ பீஷ்மரே, உம்மைப்போல அறம் மற்றும் ஒழுக்கத்தை அறிந்தும் விருப்பப்படி {இஷ்டப்படி} நடப்பவன், நேர்மையானவர்கள் மற்றும் ஞானவான்களுக்கு மத்தியில் இருந்து விலக்கப்பட வேண்டியவனாவான்.(4) ஒரு மன்னனாகக் கூட இல்லாத இந்த தசார்ஹா குலத்தவன் இந்த மன்னர்களுக்கு மத்தியில் எப்படி இந்த வழிபாட்டை ஏற்கலாம்? மேலும் அவன் எப்படி உம்மால் வழிபடப்படலாம்?(5)
ஓ குரு குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணன் வயதில் மூத்தவன் என்று நீ மதிப்பிட்டிருந்தால், இதோ வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை} இருக்கிறார், எப்படி அவர் {வசுதேவர்} முன்னிலையில் அவரது மகனை {கிருஷ்ணனை} நீ வழிபடலாம்?(6) வாசுதேவனை {கிருஷ்ணனை} உன் நலம் விரும்பியாகவோ, ஆதரவாளனாகவோ மதிப்பிட்டிருந்தால், இதோ துருபதன் இருக்கிறார்; எப்படி மாதவன் {கிருஷ்ணன்} (முதல் மரியாதையான) வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான்?(7) ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரனே}, கிருஷ்ணனை குருவாக மதிக்கிறாயா? துரோணர் இங்கிருக்கும்போது விருஷ்ணி குலத்தவன் எப்படி வழிபடப்படலாம்?(8)
ஓ குருவின் மகனே, கிருஷ்ணனை ரித்விஜனாக மதிக்கிறாயா? துவைபாயனர் {வியாசர்} இங்கிருக்கும்போது கிருஷ்ணன் உம்மால் எப்படி வழிபடப்படலாம்?(9) சந்தனுவின் மகனும், விரும்பிய போது இறக்கும் வரம் பெற்றவருமான கிழவன் பீஷ்மர் இங்கிருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(10) ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்த வீரன் அஸ்வத்தாமன் இருக்கும்போது, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(11) மனிதர்களில் முதன்மையானவனும், மன்னர்களின் மன்னனுமான துரியோதனனும், பாரத இளவரசர்களின் குருவான கிருபரும் இங்கிருக்கும்போது, கிருஷ்ணன் உன்னால் ஏன் வழிபடப்பட்டான்?(12) ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, கிம்புருஷர்களின் குரு துருமனையும் தாண்டி கிருஷ்ணன் ஏன் வழிபடப்பட்டான்? ஒப்பற்ற பீஷ்மகனும், அனைத்து நற்குறிகளும் கொண்ட மன்னன் பாண்டியனும், மன்னர்களில் முதன்மையான ருக்மியும், ஏகலவ்யனும்[1], மத்ர மன்னன் சல்யனும் இங்கிருக்கும்போது, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா} நீ ஏன் கிருஷ்ணனுக்கு முதல் வழிபாட்டைச் செலுத்தினாய்?(13,14)
[1] யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வியில் ஏகலவ்யனும் கலந்து கொண்டிருக்கிறான்.
அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் தனது பலத்தைக் குறித்து செருக்கு கொண்டவனும், பெரும் பலத்துடன் கூடியவனும், பல மன்னர்களைத் தனது சொந்த பலத்தால் மட்டுமே வென்றவனும், பிராமணர் ஜமதக்னேயரின் {பரசுராமரின்} விருப்பத்திற்குரிய சீடனுமான கர்ணன் இருக்கிறான். ஓ பாரதா {யுதிஷ்டிரா} அவனையும் தாண்டி நீ ஏன் முதல் வணக்கத்தை கிருஷ்ணனுக்குச் செலுத்தினாய்?(15,16)
மதுவைக் கொன்றவன் {மதுசூதனன் / கிருஷ்ணன்}, வேள்விப் புரோகிதனும் அல்ல, குருவும் அல்ல, மன்னனும் அல்ல. இவற்றை எல்லாம் அறிந்தும், ஓ குருக்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, என்ன லாபத்தைக் கருதி நீ இக்காரியத்தைச் செய்தாய்?(17) ஓ பாரதா {யுதிஷ்டிரா} மதுசூதனனுக்கு முதல் மரியாதை செய்வதுதான் உனது விருப்பமென்றால், இத்தனை மன்னர்களை இங்கே அழைத்து அவர்களை ஏன் அவமதித்தாய்?(18) குந்தியின் சிறந்த மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அச்சத்தாலோ, லாப விருப்பத்தாலோ சமாதானத்தால் வெல்லப்பட்டோ நாங்கள் கப்பம் கட்டவில்லை.(19) மறுபுறம் ஏகாதிபத்திய மாட்சிமைக்கான அவனது {யுதிஷ்டிரனின்} விருப்பத்தில் இருந்த அற நோகத்திற்காகவே கொடுத்தோம். அப்படியிருந்தும் அவன் {யுதிஷ்டிரன்} எங்களை அவமதித்து விட்டான்.(20)
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வேறு எந்த செயலால் எங்களை இவ்வளவு அவமதிக்க முடியும்? திரண்டிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில் அரச லட்சணம் இல்லாத கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை வழங்கபட்டதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?(21) உண்மையில் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, அறத்துக்கான பொது மதிப்பைக் காரணமே இல்லாமல் அடைந்திருக்கிறான். இல்லையென்றால் தகுதியில்லாத ஒருவனுக்கு மரியாதை செய்து அறத்தின்கண் வீழ்வானா?(22) விருஷ்ணி குலத்தில் {யாதவ குலத்தில்} பிறந்த இந்த இழிந்தவன் {கிருஷ்ணன்}, நியாயமற்ற முறையில் மன்னன் ஜராசந்தனைக் கொன்றான்.(23) யுதிஷ்டிரன் நேர்மையைக் கைவிட்டுவிட்டான். அர்க்கியத்தை {தீர்த்தத்தை} முதலில் கிருஷ்ணனுக்குக் கொடுத்து தனது அற்பத்தனத்தைக் காட்டிவிட்டான்.(24)
ஓ ஜனார்த்தனா, ஆதரவற்ற குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்சம் கொண்டவர்களாகவும், அற்பர்களாகவும் இருக்கிறார்கள். ஓ மாதவா {கிருஷ்ணா}, உனக்கு முதல் மரியாதை செய்யும் போது, அதற்கு நீ தகுதியில்லாதவன் என்று அவர்களுக்கு நீயாவது சொல்லியிருக்க வேண்டாமா?(25) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அற்பமான இளவரசர்களால் {பாண்டவர்களால்} கொடுக்கப்படும் போதும், உனக்குத் தகுதியில்லாத மரியாதையை ஏன் நீ ஏற்றாய்?(26) தூய்மையாக்கப்பட்ட நெய் கிடைக்கப்பட்ட நாய், அதைத் தனிமையில் உண்பதைப் போலவே உனக்குத் தகுதியில்லாததை ஏற்றுக் கொண்டு பெரும் மரியாதை கிடைத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்.(27) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இதில் இந்த ஏகாதிபதிகளுக்கு எந்த அவமானமுமில்லை; மறுபுறம் நீயே குருக்களை {கௌரவர்களை} அவமதித்து இருக்கிறாய்.(28) நிச்சயமாக, ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா / கிருஷ்ணா}, ஆண்மையைற்றவனுக்கு மனைவி எவ்வாறானவளோ, கண்ணில்லாதவனுக்கு அற்புதமான காட்சி எவ்வாறானதோ, மன்னனல்லாத உனக்கு செய்யப்பட்ட அரச வழிபாடும் அவ்வாறானதேயாகும்.(29) யுதிஷ்டிரன் யார் என்பதும், பீஷ்மன் யார் என்பதும் காணப்பட்டது. இந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} யார் என்பதும் காணப்பட்டது. நிச்சயமாக, அவரவர்கள் எப்படியோ அப்படியே காணப்பட்டது" என்றான் {சிசுபாலன்}.(30)
இந்த வார்த்தைகளைப் பேசிய சிசுபாலன், தனது சிறந்த இருக்கையில் இருந்து எழுந்து, மன்னர்களையும் அழைத்துக் கொண்டு, சபை விட்டு வெளியேறினான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
ஆங்கிலத்தில் | In English |