The words of Bhishma | Sabha Parva - Section 37 | Mahabharata In Tamil
(அர்க்கியாஹரணப் பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் சிசுபாலனைச் சமாதானப்படுத்துவது; பீஷ்மர் அதைத் தடுப்பது; கிருஷ்ணனின் பெருமையை விளக்குவது...
வைசம்பாயனர் சொன்னார், "பின்பு மன்னன் யுதிஷ்டிரன் சிசுபாலனுக்குப் பின்பு விரைவாக ஓடி, சமாதானம் செய்யும் தொனியில் இனிமையான வார்த்தைகளால்,(1) "ஓ பூமியின் தலைவா, நீ சொல்லும் அனைத்தும் உனக்குத் தகுந்ததல்ல. ஓ மன்னா {சிசுபாலா}, இது அதிக பாவம் நிறைந்ததும், தேவையில்லாத கொடூரம் நிறைந்ததும் ஆகும்.(2) பீஷ்மரை அவமதிக்காதே, ஓ மன்னா {சிசுபாலா}, அப்படிச் செய்யும் காரியம் அறம் சாராதது ஆகும்.(3) இந்த மன்னர்களைப் பார், இவர்கள் அனைவரும் உன்னை விட வயதில் மூத்தவர்கள். இவர்கள் அனைவரும் கிருஷ்ணனுக்கு செலுத்தப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களைப் போல நீயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(4) ஓ *சேதி நாட்டு ஆட்சியாளனே {சிசுபாலனே}, பீஷ்மர் கிருஷ்ணனை உண்மையில் அறிவார். ஆனால், நீ இந்த குரு குலத்தவரை {பீஷ்மரை} நன்கு அறிய மாட்டாய்", என்றான் {யுதிஷ்டிரன்}.(5)
இதன்பிறகு பீஷ்மர், "அண்டத்தில் பழமையானவனான கிருஷ்ணனுக்கு செய்யப்பட்ட மரியாதையை ஏற்காதவன் மென்மையான வார்த்தைகளுக்கும் சமாதானத்துக்கும் அருகதையற்றவனாவான்.(6) க்ஷத்திரிய குல வீரர்களுக்கு தலைவர்களாக இருப்பவர்கள் போர்களத்தில் இன்னொரு க்ஷத்திரியனை வென்று, அவனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவனை விடுவித்துவிட்டால், அவன் வீழ்த்தப் பட்டவனுக்கு குருவாகிறான்.(7) நான் இந்த சபையில் உள்ள மன்னர்களில், இதம சத்வதகுல மகனுடைய {கிருஷ்ணனுடைய} சக்தியால் போர்க்களத்தில் வீழ்த்தப்படாத யாரையும் நான் காணவில்லை.(8) இங்கிருக்கும் இவன் (கிருஷ்ணன் என்ற பொருளில்), கறைபடாத புகழ் கொண்டவன், நம்மால் மட்டும் வழிபடத்தகுந்தவன் அல்ல. மாறாக, மூன்று உலகங்களாலும் வழிபடத் தகுந்தவன்.(9) கணக்கிலடங்கா க்ஷத்திரிய வீரர்கள் போர்க்களத்தில் கிருஷ்ணனால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த எல்லையில்லா முழு அண்டமும் இந்த விருஷ்ணி குலத்தவனாலேயே {யாதவ குலத்தவனாலேயே} நிறுவப்பட்டது.(10) எனவே நாம் பழைமையானவனும், சிறந்தவனுமான இந்தக் கிருஷ்ணனை வழிபடுகிறோமையன்றி வேறு எவரையுமல்ல. இப்படிச் சொல்வது உனக்குத் தகாது. உனது புரிதல் இப்படி இருக்கக் கூடாது.(11)
ஓ மன்னா {சிசுபாலா}, நான் ஞானத்தால் முதிர்ந்தவர்கள் பலரை வழிபட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட ஞானமுள்ளோர் அனைவரும் பேசிக்கொள்வதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர்களில் பலர் அனைத்தையும் சாதித்த சௌரியை {கிருஷ்ணனை} மதிப்புடன் நினைவு கூர்கிறார்கள். கிருஷ்ணன் பிறந்ததிலிருந்தே செய்த பெரும் புத்திகூர்மை நிறைந்த செயல்களைக் குறித்து மக்கள் பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். ஓ சேதியின் மன்னா {சிசுபாலா}, நாங்கள் ஏறுக்குமாறாக மனம் போன போக்கிலோ, எங்களுக்குள் இருக்கும் உறவு நிலையைக் கருத்தில் கொண்டோ, கிருஷ்ணனால் கிடைக்கும் நன்மைகளுக்காகவோ ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} வழிபடவில்லை. அவன் உலகத்தின் நல்லவர்களால் வழிபடப்படுகிறான், அவன் அனைத்துயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கிறான்.(12-15)
அவனது புகழுக்காகவும், ஆற்றலுக்காகவும், அவன் அடைந்த வெற்றிகளுக்காகவுமே நாங்கள் அவனுக்கு முதல் மரியாதையை அளித்தோம். நாங்கள் இச்சபையில் இருக்கும் இளம் வயதினரைக்கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இல்லை.(16) அறம் செய்யும் அனைவரைக் காட்டிலும் முதன்மையானவனாக, முதல் மரியாதைக்குத் தகுதியுடையவனாக ஹரியையே {கிருஷ்ணனையே} கருதினோம். பிராமணர்களில் ஞானத்தாலும், க்ஷத்திரியர்களில் பலத்தாலும்,(17) வைசியர்களில் செல்வத்தாலும், சூத்திரர்களில் மூத்தவனாகவும் இருக்கும் அவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். கோவிந்தனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை அளிக்கப்பட்டதில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.(18) அவை வேதங்களிலும் அதன் கிளைகளிலும் உள்ள ஞானமும், அதீத ஆற்றலுமாகும். கேசவன் தனித்துவமானவன் என்பதை உலகத்தில் உள்ள எந்த மனிதரால் நிராகரிக்க முடியும்?(19) தயாளம், புத்திசாலித்தனம், வேத ஞானம், ஆற்றல், அடக்கம், சாதனைகள், அற்புதமான புத்திகூர்மை, பணிவு, அழகு, உறுதி, மனநிறைவு, செழிப்பு ஆகிய அனைத்தும் அச்யுதனில் {கிருஷ்ணனில்} தங்கியிருக்கின்றன.(20)
எனவே மன்னர்களே, தனது சாதனைகளுக்காகவும், ஆசானாக, தந்தையாக, குருவாக, அர்க்கியாவை {தீர்த்தத்தை} பெரும் தகுதி படைத்த, அனைவரின் வணக்கத்திற்கும் உரிய கிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த முதல் மரியாதையை ஏற்பதே உங்களுக்குத் தகும்.(21) ரிஷிகேசனே {கிருஷ்ணா} வேள்விப் புரோகிதர், அவனே குரு, ஒருவரின் மகளை திருமணத்தில் ஏற்கும் தகுதி படைத்த ஸ்நாதகன், மன்னன், நண்பன் என அனைத்தும் அவனே. எனவே அச்யுதன் {கிருஷ்ணன்} நம்மால் வழிபடத்தகுந்தவன்.(22) கிருஷ்ணனே அண்டத்தின் ஆதிமூலமாகவும். அண்டம் எதில் கரையுமோ அதுவுமாக இருக்கிறான். நிச்சயமாக, அண்டத்தில் உள்ள அசைவன அசையாதன ஆகியன கிருஷ்ணனிடம் இருந்தே தோன்றின.(23) வெளிப்படுத்தப்படாத மூல காரணம் அவனே (அவ்யாக்த பிராக்ரிதி), அவனே படைப்பாளி, அவனே நிலைத்தவன், அனைத்து உயிர்களின் காட்சி எல்லைக்கும் அப்பாற்பட்டவன். அதனால் மங்காப் புகழ் கொண்ட அவன் {கிருஷ்ணன்} உயர்ந்த வழிபாட்டிற்குத் தகுதியானவனே.(24)
பேரறிவு, உணர்வுகளின் தொகுப்பு, ஐந்து பூதங்கள், காற்று, வெப்பம், நீர், வானம், பூமி, நால்வகை உயிரினங்கள் (முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் உயிரினங்கள், முட்டையில்லாமல் உயிருள்ள குட்டிகளை ஈனும் உயிரினங்கள், ஈரம் செறிந்த கழிவுப் பொருட்களில் உயிர்பெறும் உயிரினங்கள் {புழு பூச்சிகள்}, தாவரவகை ஆகியன) அனைத்தும் கிருஷ்ணனில் நிறுவப்பட்டவையே.(25) சூரியன், சந்திரன், விண்மீன்கூட்டம், கோள்கள், அனைத்து முக்கிய திசைகள், இடையேயுள்ள திசைகள், அனைத்தும் கிருஷ்ணனில் நிலைத்திருப்பவை.(26) அனைத்து வேத வேள்விகளிலும் அக்னிஹோத்ரம் முதன்மையானதைப் போல, அனைத்து மந்திரங்களிலும் காயத்ரி முதன்மையானதைப் போல, மனிதர்களில் முதன்மையான மன்னர்களைப் போல, ஆறுகளில் முதன்மையான கடலைப் போல, விண்மீன்களில் முதன்மையான சந்திரனைப் போல, பிரகாசமானவற்றில் முதன்மையான சூரியனைப் போல, மலைகளில் முதன்மையான மேருவைப் போல, பறவைகளில் முதன்மையான கருடனைப் போல,(27-28) இந்த அண்டத்தின் மேல் எல்லை, கீழ் எல்லை, பக்கவாடு ஆகியவற்றில் உள்ள தேவர்களையும் உள்ளடக்கிய அனைத்து உலகங்களிலும் கேசவனே {கிருஷ்ணா} முதன்மையானவன்.(29)
இந்த சிசுபாலன் சிறுவன். எனவே, எங்கும் எப்போதும் கிருஷ்ணனைக் குறித்து மக்கள் இவ்வாறே பேசுகிறார்கள் என்பதை இவன் அறியவில்லை.(30) உயர்ந்த தகுதியை அடைய விரும்பும் ஒருவன் காணும் காட்சியை, அதிலிருக்கும் அறத்தை இது போன்ற வெளிச்சத்தில் இந்த சேதி நாட்டு ஆட்சியாளன் {சிசுபாலன்}[1] ஒருபோதும் காண மாட்டான்.(31) மூத்தவர்களிலோ இளையவர்களிலோ, சிறப்புமிகுந்த பூமியின் தலைவர்களிலோ கிருஷ்ணனை மதிக்காத யார் இருக்கிறார்? அல்லது கிருஷ்ணனை வழிபடாத யார்தான் இருக்கிறார்கள்?(32) இந்த வழிபாடு தகுதியானது அல்ல என்று சிசுபாலன் கருதினால், இவ்விஷயத்தில் அவனுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்து கொள்ளட்டும்",[2] என்றார் {பீஷ்மர்}".(33)
[1] சேதி நாடு, பார்க்க: உபரிசரன் (எ) வாசு | ஆதிபர்வம் பகுதி 63அ, 63ஆ, 63இ
[2] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகும் பீஷ்மர் கிருஷ்ணனின் பெருமைகளை உரைக்கிறார். அது மொத்தம் ஐம்பது பக்கங்கள் நீண்ட விவரிப்பாகும். அதன் விபரம் சுருக்கமாகப் பின்வருமாறு: உலக சிருஷ்டியையும், நாராயண வடிவத்தையும் கூறுவது; நாராயணன் உலகத்துக்குப் பரம பாட்டன் என்றது; மதுகைடவவதம்; பூமி மேதினி என்று பெயர் பெற்ற வரலாறு; வராஹாவதார வரலாறு; யஜ்ஞவராஹர் பெருங்கடலில் இருந்து பூமியைத் தூக்கி நிலைநிறுத்தியது; நரசிம்மாவதார வரலாறு; ஹிரண்யகசிபு பிரம்மனிடம் வரம்பெற்றது; ஹிரண்யகசிபுவை விஷ்ணு வதம் செய்வானென தேவர்களுக்குச் சொன்ன பிரம்மன்; மூவுலகங்களையும் பீடித்த ஹிரண்யகசிபு; அவனைக் கொல்லுமாறு பிரம்மன் முதலிய தேவர்கள் நாராயணனை வேண்டியது; நரசிம்ம வடிவத்தில் ஹிரண்யகசிபுவிடம் வந்த நாராயணன்; ஹிரண்யகசிபு வதம்; வாமனாவதார வரலாறு; வாமனன் மஹாபலியிடம் மூன்றடி நிலம் இரந்தது; விஷ்ணு உலகளந்தது; விஷ்ணுவின் பாதச் சுவட்டில் ஏற்பட்ட பிளவில் உண்டான ஆறு; அசுரர்களின் செல்வத்தையும், மூவுலகத்தையும் இந்திரனுக்குக் கொடுத்த விஷ்ணு; தத்தாத்ரேயாவதார வரலாறு; கார்த்தவீரியன் தவமும், பெற்ற வரமும்; பரசுராமாவதார வரலாறு; கார்த்தவீரியன் வதம்; க்ஷத்திரியர்களை அழித்த பரசுராமர்; பித்ரு தர்ப்பணம் செய்த பரசுராமர்; பூமியைக் காசியபருக்குக் கொடுத்தது; கன்னிகைகள் பரசுராமரை ஸௌபனோடு எதிர்க்க வேண்டாமென்றது; பரசுராமர் ஆயுதங்களை விட்டுத் தவஞ்செய்தது; ராமாவதார வரலாறு; தசரதன் மகனாகப் பிறந்த திருமால்; ராமன் சீதையை மணந்தது; ராமனின் வனவாசம்; ராமன் சீதையைப் பிரிந்தது; ராமன் சுக்கிரீவனையும், ஆஞ்சனேயரையும் நேசித்தது; வாலி வதம்; ராவண வதன்; விபீஷணன் பட்டாபிஷேகம்; ராம்பிரான் பட்டாபிஷேகம்; கிருஷ்ணாவதார வரலாறு; கல்கி அவதாரம்; கிருஷ்ணனின் வரலாற்றை விரிவாகச் சொல்லுமாறு பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; தாரகாமய யுத்தம்; காலநேமி வதம்; கிருஷ்ணாவதாரத்திற்கு முன் ஏற்பட்ட யோகநித்திரை; பூமியில் பிறந்த தேவர்கள்; விஷ்ணு யது குலத்தில் அவதரித்தது; கிருஷ்ணன் தேவ காரியங்களைச் செய்யப் போகிறான் என்று சொன்ன இந்திரன்; சகடாஸுரன் வதன்; பூதனை வதம்; மருத மரங்களை வீழ்த்துவது; பாண்டீர மரத்தடியில் விளையாடியது; காளியநர்த்தனம்; தேனுகாசுரனைப் பலராமன் கொன்றது; கோவர்த்தன பூஜையில் பாயஸம் பருகிய கிருஷ்ணன்; கோவர்த்தன கிரியைத் தூக்கியது; கிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்த இந்திரன்; அரிஷ்டன், கேசி, சாணூரன், ஸுதாமன் ஆகியோர் வதம்; பலராமன் முஷ்டிகனைக் கொன்றது; பலராமனும் கிருஷ்ணனும் குருகுல வாசஞ்செய்தது; வேதவேதாங்கங்களைக் கற்றது; வில்வித்தை கற்றது; ஸாந்தீபனி முனிவர் பலராமன் மற்றும் கிருஷ்ணனிடம் குருதக்ஷிணை கேட்டது; பலராமனும், கிருஷ்ணனும் மீன் வடிவத்தில் இருந்து அசுரனைக் கொன்றது; பலராமனும், கிருஷ்ணனும் ஸாந்தீபனிக்கு குருதக்ஷிணை கொடுத்து; கிருஷ்ணன் ஜராசந்தனை வென்றது; நரகாஸுரன் தோற்றம்; துவாரகைக்கு வந்த இந்திரன்; அதிதியின் வேண்டுகோளைக் கிருஷ்ணனுக்குச் சொன்னது; முரன், நிசும்பன், ஹயக்ரீவன், விரூபாக்ஷன், நரகன் ஆகியோரைக் கிருஷ்ணன் கொன்றது; பூமிதேவி கிருஷ்ணனிடம் குண்டலங்களைக் கொடுத்து நரகனுடைய ஸந்ததிகளைக் காப்பாற்றும்படி வேண்டியது; நரகனைக் கொன்றது; நரகனுடைய அரண்மனையைப் பார்த்தது; மணிக்குன்றிலிருந்த பெண்கள் தங்களுக்கு நாரதரும், வாயு தேவனும் சொன்னதைக் கிருஷ்ணனுக்குச் சொன்னது; தங்களுக்குக் கணவராகும்படி அவர்கள் கிருஷ்ணனைக் கேட்டது; செல்வங்களையும், பெண்களையும், மணிக்குன்றையும் கருடன் மேலேற்றி தேவலோகம் சென்ற கிருஷ்ணன்; அதிதி தேவிக்குக் குண்டலங்கொடுத்தது; அதிதி தேவி சத்தியபாமைக்கு வரமளித்தது; கிருஷ்ணன் துவாரகை திரும்பியது; துவாரகா நகரச் சிறப்பு, கிருஷ்ணன் பலராமரோடும், இந்திரனோடும் தன் அரண்மனைக்குள் நுழைந்தது; கிருஷ்ணனுடைய வரலாற்றுச் சுருக்கத்தை இந்திரன் சொன்னது; இந்திரன் தேவலோகம் சென்றது; கிருஷ்ணனுடைய தாய்மாரும், மனைவியரும் கிருஷ்ணனைக் கண்டது; பாணாசுரன் வரலாறு; அநிருத்தன் உஷையை அடைந்தது; பாணன் அநிருத்தனைச் சிறையிலிட்டது; கிருஷ்ணன் பாணனுடைய நகரத்திற்குச் சென்றது; பாணனுடய நகரத்தைக் காத்த சிவன்; பாணனுடைய கைகளை அறுத்த கிருஷ்ணன்; அநிருத்தனையும், உஷையையும் கருடனில் ஏற்றி வந்த கிருஷ்ணன்; கிருஷ்ணன் பெற்ற வேறு பல வெற்றிகள் ஆகியவற்றைச் சொல்லி கிருஷ்ணனுக்கு மேலானவர் வேறு யாருமில்லை என்று யுதிஷ்டிரனிடம் சொல்லி முடித்தார் பீஷ்மர். கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் பதிப்புகளில் மேற்கண்ட கதைகள் சொல்லப்படவில்லை. இவை ஹரிவம்சத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் | In English |