The kings against Krishna| Sabha Parva - Section 38 | Mahabharata In Tamil
(அர்க்கியாஹரணப் பர்வத் தொடர்ச்சி)
சகாதேவன் சினம் தீரப் பேசுவது; பூமாரி பொழிவது; அனைத்து மன்னர்களையும் பாண்டவர்களுக்கும் யாதவர்களுக்கும் எதிராக சிசுபாலன் தூண்டுவது
வைசம்பாயனர் சொன்னார், "பெரும் பலம்வாய்ந்த பீஷ்மர் இதைச் சொல்லி முடித்தார். பிறகு சகாதேவன் (சிசுபாலனைப் பார்த்து), "கேசியைக் கொன்ற, பெரும் சக்தி கொண்ட கருப்பு நிற கிருஷ்ணனை நான் வணங்குவதைக் காணச் சகியாத மன்னர்கள் யாரேனும் இங்கே இருப்பின், பெரும் பலவான்களான (சிசுபாலனைப் போன்ற) அவர்களின் தலைகளில் இந்த எனது பாதம் பதிந்ததாக ஆகட்டும். இதை நான் சொல்லும்போது, அப்படிப்பட்ட அவன் எனக்குப் போதிய பதிலைச் சொல்லட்டும். புத்திகூர்மையுள்ள மன்னர்கள் வழிகாட்டியாக, தந்தையாக, குருவாக இருக்கும் கிருஷ்ணனுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டையும், கொடுக்கபட்ட அர்க்கியாவையும் {தீர்த்தத்தையும்} ஏற்கட்டும்.
இப்படி சகாதேவன் தனது பாதத்தைக் காட்டிய போது, அங்கே இருந்த புத்திசாலித்தனமும், ஞானமும், பெருமையும் கொண்ட பலசாலி ஏகாதிபதிகளில் யாரும் எதையும் சொல்லவில்லை. சகாதேவனின் தலையில் பூமாரி பொழிந்தது. ஒரு அரூபமான குரல் "அற்புதம்! அற்புதம்!" என்றது. பிறகு, கருப்பு மானின் தோலை அணிந்த கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் சொல்லும் நாரதர், அனைத்து சந்தேகங்களையும் அகற்றுபவர், அனைத்து உலகங்களையும் அறிந்தவர், கணக்கிலடங்கா உயிர்களுக்கு மத்தியில் தெளிவான தொனியில், "தாமரைக் கண் கிருஷ்ணனை வணங்காத மனிதர்கள் அசைவுள்ளவர்களானாலும் இறந்தவர்களாகவே கருதப்பட வேண்டும், அவர்களிடம் எப்போதும் எந்தச் சந்தர்பத்திலும் பேசுதல் கூடாது", என்றார் {நாரதர்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மனிதர்களில் தெய்வமான சகாதேவன், அந்தணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்தவன், வழிபடத் தகுந்தவர்களை வழிபட்டு விழாவினை முடித்து வைத்தான். ஆனால், முதல் மரியாதையை கிருஷ்ணன் ஏற்றதை விரும்பாத சுனிதன் (சிசுபாலன்), அந்த எதிரிகளை அறுப்பவன், கோபத்தால் தாமிரம் போலக் கண்கள் சிவக்க, அந்த மனித ஆட்சியாளர்களிடம் {மற்ற மன்னர்களிடம்}, "உங்களுக்குத் தலைமையேற்க நான் இருக்கும்போது, நீங்கள் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? கூடியிருக்கும் விருஷ்ணிகளுக்கும் {யாதவர்களுக்கும்} பாண்டவர்களுக்கும் எதிராக போரில் வரிசையாக நிற்கலாமா?" என்று கேட்டான். பிறகு அந்த சேதிகளில் {சேதி நாட்டவரில்} காளை {சிசுபாலன்}, மன்னர்களைத் தூண்டிவிட்டு, வேள்வி நிறைவடையாமல் தடுப்பது எப்படி என்று அவர்களுடன் ஆலோசனை செய்ய ஆரம்பித்தான். அந்த வேள்விக்கு அழைக்கப்பட்டு அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும், சுனிதனைத் {சிசுபாலனைத்} தங்கள் தலைவனாகக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் முகம் மங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும், "யுதிஷ்டிரனால் செய்யப்பட்ட வேள்வியின் கடைசி சடங்கையும், கிருஷ்ணனுக்கு செய்த மரியாதையையும் மறுப்பின்றி நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படாது", என்று கூறினர். தங்கள் பலத்தின் மீதிருந்த அதீத நம்பிக்கையாலும், கோபத்தால் மதியிழந்ததாலும் அவர்கள் இப்படிப் பேச ஆரம்பித்தனர். தன்னம்பிக்கையால் அசைக்கப்பட்டு, தங்களுக்கு நேர்ந்த அவமானத்தைக் கருதி, அந்த ஏகாதிபதிகள் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களது நண்பர்கள் அவர்களைச் சமாதானப் படுத்த முயற்சித்தாலும், அவர்களது முகங்கள் கோபத்தால் கர்ஜனை செய்யும் சிங்கம் தனது இரையை விரட்டிவிடுவது போல விரட்டப்பட்டனர். பெருங்கடலென இருந்த மன்னர்கள், கணக்கிலடங்கா அலைகளான தங்கள் துருப்புகளுடன் பயங்கரமான மோதலுக்குத் தயாராகிறார்கள் என்பதைக் கிருஷ்ணன் புரிந்து கொண்டான்.
![]() |
![]() |
![]() |