Bhishma's critic on Sisupala | Sabha Parva - Section 39 | Mahabharata In Tamil
(சிசுபால வத பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : மன்னர்கள் சினமடைவதைக்
கண்ட யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சமாதானம் கூறி, சிசுபாலனையும் மற்ற
மன்னர்களையும் விமர்சிப்பது...
வைசம்பாயனர் சொன்னார், "அந்தப் பெரும் கூட்டமான மன்னர்கள், அண்ட அழிவின் போது காற்றில் கொந்தளிக்கும் கடலென கோபத்தில் கொந்தளிப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், எதிரிகளைக் கொல்லும் புருஹிதன் (இந்திரன்) பெரும் சக்தி படைத்த பிருஹஸ்பதியிடம் சொல்வது போல அந்தக் குருகுல பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, அந்தப் புத்திசாலி மனிதர்களின் தலைவரான முதிர்ந்த பீஷ்மரிடம், "கடல்போன்ற இந்த மன்னர்க்கூட்டம் கோபத்தால் கொந்தளிக்கிறது. ஓ பாட்டா, நான் இக்காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக.(1-3) ஓ பாட்டா, எனது வேள்வி தடைபடாதவாறும், எனது குடிகளுக்குக் காயம் ஏற்படாதவாறும் நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(4)
அறவிதிகளை அறிந்த நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இதைச் சொன்னதும், குருக்களின் பாட்டன் பீஷ்மர்,(5) "அஞ்சாதே, ஓ குருக்களின் புலியே {யுதிஷ்டிரனே}, நாயால் சிங்கத்தைக் கொல்ல முடியுமா? இதற்கு முன்பே நான் வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். அது நன்மையானதாகவும் கொள்கைக்கு இணக்கமானதாகவும் இருக்கும்.(6) உறங்கும் சிங்கத்திடம் சென்று நாய்கள் கூட்டமாக குலைப்பதைப் போலவே, இந்தப் பூமியின் அதிபதிகள் {மன்னர்கள்} செயல்படுகின்றனர்.(7)
உண்மையாகவே, ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, சிங்கத்தின் முன் நிற்கும் நாய்கள் போலவே இவர்கள் {இந்த ஏகாதிபதிகள்}, உறங்கிக் கொண்டிருக்கும் விருஷ்ணி குல சிங்கத்தின் {கிருஷ்ணனின்} முன்பு நின்று கொண்டு கோபத்தில் குலைத்துக் கொண்டிருக்கின்றனர்.(8) அச்யுதன் {கிருஷ்ணன்} இப்போது உறங்கும் சிங்கமாக இருக்கிறான். அவன் விழிக்கும் வரை, மனிதர்களில் சிங்கமான இந்தச் சேதியின் தலைவன் {சிசுபாலன்}, இந்த ஏகாதிபதிகளைச் சிங்கங்கள் போல காட்சி அளிக்கச் செய்கிறான்.(9)
ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, அற்ப புத்தி கொண்ட இந்த சிசுபாலன், அண்டத்தின் ஆன்மாவுடன் முரண்பட்டு, தன்னுடன் சேர்த்து இந்த மன்னர்களையும் யமனின் உலகத்திற்கு அழைத்துப் போக விரும்புகிறான்.(10) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, உறுதியாக, தனது சக்திகளில் ஒன்றான சிசுபாலனைத் தனக்குள் எடுத்துக் கொள்ள விஷ்ணு விரும்புகிறான்.(11) ஓ புத்திசாலி மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரா}, ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, சேதி மக்களின் மன்னனான இந்தத் தீய மனம் படைத்தவனும், மற்ற ஏகாதிபதிகளும், வேண்டுமென்றே தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர்.(12) உண்மையில் இந்த மனிதர்களில் புலி {சிசுபாலன்} தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கும் இவர்களும் இந்தச் சேதியின் மன்னனைப் போலவே வேண்டுமென்றே தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர்.(13) ஓ யுதிஷ்டிரா மாதவனே {கிருஷ்ணா} படைப்பாளன், அதே போல அவனே மூன்று உலகில் இருக்கக்கூடிய நான்கு வகையான உயிர்கள் அனைத்தையும் அழிப்பவனுமாவான்" என்றார் பீஷ்மர்".(14)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அந்தச் சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவரிடம், ஓ பாரதா {ஜனமேஜயா}, கடினமான வார்த்தைகளைப் பேசினான்".(15)
ஆங்கிலத்தில் | In English |