Citizens followed the Pandavas | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : நாட்டை விட்டு சென்ற
பாண்டவர்களைத் தொடர்ந்து குடிமக்களும் செல்லுதல்; யுதிஷ்டிரன் அவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் நாட்டுக்கு
அனுப்புதல்; பாண்டவர்கள் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அந்த இரவைக் கழித்தல்; பிராமணர்கள் அங்கு வந்து அவர்களை
ஆதரித்தல்...
ஓம்! மனிதர்களில் மேன்மையானவர்களாகிய {புருஷோத்தமர்களாகிய} நாராயணன் மற்றும் நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
ஜனமேஜயன் சொன்னான், "ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, பகடையில் திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் அவர்களது ஆலோசகர்களால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டவர்களும், அந்தத் தீயவர்களால் கோபம் தூண்டப்பட்டவர்களும், அவர்களால் கடும் மொழிகளில் பேசப்பட்டவர்களும், எனது மூதாதையர்களும், குரு இளவரசர்களுமான அந்தப் பிருதையின் மகன்கள் (அதன்பிறகு) என்ன செய்தார்கள்?(1,2) வல்லமையில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவர்களும், செல்வாக்கு இழந்தவர்களும், திடீரெனத் துன்பத்தில் மூழ்கியவர்களுமான பிருதையின் மகன்கள், காட்டில் தங்கள் நாட்களை எவ்வாறு கடத்தினர்?(3) கடும் துயரத்தில் மூழ்கி இருந்த அந்த இளவரசர்களின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் யாவர்? அந்த உயர்ந்த ஆன்மாக்கள் எப்படித் தங்களைத் தாங்கிக் கொண்டார்கள்? தங்கள் வாழ்வாதாரத்தை எங்கே அடைந்தார்கள்?(4)
ஓ சிறப்புமிக்கத் தவசியே {வைசம்பாயனரே}, பிராமணர்களில் முதன்மையானவரே, எதிரிகளைக் கொல்பவர்களான அந்த வீரர்களின் பனிரெண்டு {12} வருடங்கள் காட்டில் எவ்வாறு கழிந்தது?(5) துன்பத்திற்குத் தகாதவளும், பெண்களில் சிறந்தவளும், கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்தவளும், அடக்கமும் அறமும் கொண்டவளும், எப்போதும் வாய்மை பேசுபவளுமான அந்த இளவரசி {திரௌபதி}, துன்பம் நிறைந்த அந்தக் காட்டு வாழ்க்கையை எவ்வாறு பொறுத்துக் கொண்டாள்? ஓ தவ வாழ்வையே செல்வமாகக் கொண்டவரே, ஓ பிராமணரே, இவை அனைத்தையும் எனக்கு விரிவாகச் சொல்வீராக.(6,7) பேராற்றலும், காந்தியும் கொண்ட அந்த வீரர்களின் வரலாற்றை நீர் உரைக்கும்போது கேட்க விரும்புகிறேன். உண்மையில் நான் பேராவலுடன் இருக்கிறேன்" என்றான் {ஜனமேஜயன்}.(8)
வைசம்பாயனர் சொன்னார், "இவ்வாறு திருதராஷ்டிரன் மகன்களாலும் அவர்களது ஆலோசகர்களாலும் பகடையில் வீழ்த்தப்பட்டு, கோபம் தூண்டப்பட்டவர்களான பிருதையின் மகன்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினர்.(9) அப்போது அந்தப் பாண்டவர்கள், ஆயுதங்களைத் தாங்கியபடியே திரௌபதியுடன் அந்த நகரத்தின் வர்த்தமான வாயில்[1] வழியே வடதிசை நோக்கி சென்றனர்.(10) இந்திரசேனனும் {பாண்டவர்களின் தேரோட்டி} மற்றவர்களும், தங்கள் பதினான்கு பணியாட்களுடனும், தங்கள் மனைவியருடனும் தங்கள் வேகமான தேர்களில் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்[2].(11) அவர்கள் வெளியேறியதை அறிந்த குடிமக்கள் துயரம் கொண்டு பீஷ்மரையும், விதுரனையும், துரோணரையும், கௌதமரையும் {கிருபரையும்} நிந்திக்கத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் சந்தித்த அவர்கள் {குடிமக்கள்} அச்சமில்லாதவர்களாக இவ்வாறு பேசிக் கொண்டனர்.(12)
[1] கும்பகோணம் பதிப்பில், "வர்த்தமானபுரமென்னும் கிராமத்துக்கு நேரேயுள்ள வாயிலில் வெளிப்பட்டு வடக்கு முகமாகச் சென்றார்கள்" எஎன்றிருக்கிறது.
[2] கும்பகோணம் பதிப்பில், "இந்திரசேனன் முதலிய பதினால்வருக்கதிகமான வேலைக்காரர்கள் எல்லா ஸ்திரீகளையும் அழைத்துக் கொண்டு வேகமாகச் செல்லும் தேர்களுடன் இவர்களைப் பின்தொடர்ந்தனர். பாரதரே, பிறகு, அந்தப் புருஷஸ்ரேஷ்டர்கள் ரதங்களிலேறிச் சென்று கங்கைக் கரையில் ப்ரமாணமென்ற பெயருள்ள பெரிய ஆலமரத்தைப் பார்த்தார்கள்" என்றிருக்கிறது.
{அந்தக் குடிமக்கள்}, "ஐயோ, சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன், துச்சாசனன் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட தீயவனான துரியோதனன் நாட்டை அடைய விரும்புவதால், நம்முடன் சேர்ந்து, நமது குடும்பங்களும், நமது வீடுகளும் அழியப்போகின்றன.(13) பாவிகளால் ஆதரிக்கப்படும் பாவம் நிறைந்தவனான இந்தப் பாவி {துரியோயதனன்) நாட்டை விரும்பியதால் நமது குடும்பங்கள், நமது (மூதாதையர்கள்) பொருள்கள், நமது அறம், பொருள் அனைத்தும் அழியப் போகின்றன. இவர்கள் {பாண்டவர்கள்} இல்லாத இடத்தில் மகிழ்ச்சி எவ்வாறு இருக்கும்?(14) பெரியவர்கள் அனைவரையும் அவமதிக்கும் துரியோதனன், நன்னடத்தையைத் துறந்து, குருதியால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சண்டையிடுகிறான். பேராசையும், குறுகியபுத்தியும் கொண்ட அந்த வீணன் இயற்கையிலேயே கொடூரனாக இருக்கிறான்.(15) பூமிக்குத் தலைவனாகத் துரியோதனன் இருக்கும்போது, அந்த மொத்த பூமியும் அழியும். எனவே, கருணை கொண்டவர்களும், உயர்ந்த மனம் கொண்டவர்களுமான பாண்டுவின் மகன்களுடன் நாமும் செல்வோம்.(16) அவர்கள் தற்கட்டுப்பாடு உடையவர்கள், எப்போதும் எதிரிகளை வெல்பவர்கள், அடக்கமும் புகழும் கொண்டவர்கள். நற்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள். எனவே உடனே அவர்களுடன் செல்வோம்." என்றனர்".(17)
வைசம்பாயனர் சொன்னார், "இதைச் சொல்லிக் கொண்ட குடிமக்கள், பாண்டவர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவர்களைச் சந்தித்துத் தங்கள் கரங்களைக் குவித்தவாறு, குந்தி மற்றும் மாத்ரியின் மகன்களான அவர்களிடம்,(18) "அருளப்பட்டிருப்பீராக. பெரும் துயரில் இருக்கும் எங்களை விட்டுவிட்டு, நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்?(19) நீங்கள் செல்லுமிடமெங்கும் நாங்களும் உங்களைப் பின்தொடர்வோம்! கொடூரர்களான பகைவர்களால் வஞ்சகமாக நீங்கள் வீழ்த்தப்பட்டீர்கள் என்பதை அறிந்த நாங்கள் பெரும் துயரடைந்திருக்கிறோம்.(20) அன்பான குடிமக்களான எங்களையும், உங்கள் நலனை விரும்பி அர்ப்பணிப்புடன் இருக்கும் நண்பர்களையும், நீங்கள் விரும்பியவாறு செயல்கள் செய்தவர்களையும் நீங்கள் கைவிடுவது தகாது. தீயவனான குரு மன்னனின் ஆளுகையில் அழிவைச் சந்திக்க நாங்கள் விரும்பவில்லை.(21)
மனிதர்களில் காளைகளே, நன்மையிலும், தீமையிலும் கொள்ளும் தொடர்பால் உண்டாகும் நன்மை தீமைகளைக் குறித்து நாங்கள் சொல்வதைக் கேட்பீராக.(22) துணி, நீர், நிலம், எள் ஆகியன மலர்களுடன் தாங்கள் கொள்ளும் தொடர்பால் மணப்பதைப் போல, குணங்களும் தாங்கள் தொடர்பு கொள்ளும் பொருள்களால் உண்டாகுபவையே ஆகும்.(23) உண்மையில் மூடர்களுடன் கொள்ளும் தொடர்பானது மனத்தைச் சிக்க வைக்கும் ஒரு மாயையை உண்டாக்கிறது, நல்லோருடனும், ஞானிகளுடனும் நாள்தோரும் கொள்ளும் தொடர்பானது அறப்பயிற்சிக்கு {நல்லொழுக்க நடைமுறைக்கு} வழிவகுக்கிறது.(24) எனவே, பேறு பெற விரும்புவோர், ஞானமுள்ளவர்களும், முதியவர்களும், நேர்மையானவர்களும், தூய்மையான நடத்தையுள்ளவர்களும், தவத்தகுதி உடையவர்களுமான மக்களுடன் பழக வேண்டும்.(25)
மூன்றுவகை உடைமைகளான (வேத) அறிவு, தோற்றம் {பிறப்பு}, செயல்கள் ஆகியன அனைத்தும் எவரிடம் தூய்மையாக இருக்கின்றனவோ, அவர்களுடன் தொடர்பு கொள்வது சாத்திரங்களை (சாத்திரக் கல்வியை) விட மேன்மையானதாகும்.(26) அறச்செயல்களைச் செய்யாதவர்களான எங்களைப் போன்றோர், அறவோருடன் கொள்ளும் தொடர்பால் அறத்தகுதியையும், பாவம் நிறைந்தவர்களுக்குச் செய்யும் பணிவிடையால் பாவத்தையும் அறுவடை செய்வோம்.(27) பாவிகளைப் பார்ப்பதாலும், தீண்டுவதாலும், அவர்களுடன் உரையாடுவதாலும், தொடர்பு கொள்வதாலும் நம் அறத்திற்கு அழிவு ஏற்படுகிறது. அத்தகைய மனிதர்களால் ஒருபோதும் ஆன்மத்தூய்மையை அடையமுடியாது.(28) உண்மையில், இழிந்தவர்களுடன் கொள்ளும் தொடர்பானது புத்தியை அழிக்கிறது, அக்கறையற்றோருடன் கொள்ளும் தொடர்பு புத்தியை ஈடுபாடற்றதாக்குகிறது, நல்லோருடன் கொள்ளும் தொடர்பு புத்தியை நலமடையச் செய்கிறது.(29) அறத்தகுதிகளுக்கு ஊற்றுக்கண்ணாக, மக்களால் கருதப்படுபவையும், நன்னடத்தை உள்ளவர்களால் ஏற்கப்படுபவையும், வேதங்களால் கொண்டாடப்படுபவையும், உலகத்தில் பேசப்படுபவையுமான அத்தனை குணங்களும், உலகச் செல்வங்களும், புலன்நுகர் இன்பங்களும் உங்களில் தனித்தனியாகவும் மொத்தமாகவும் இருக்கிறது. எனவே, எங்கள் நன்மை கருதி, இவ்வளவு குணங்களையும் கொண்டிருக்கும் உங்களுக்கு மத்தியிலேயே நாங்கள் வாழ விரும்புகிறோம்" என்றனர்.(30,31)
யுதிஷ்டிரன், "நாங்கள் அருளப்பட்டவர்களே, பிராமணர்களைத் தலைமையாகக் கொண்டிருக்கும் எங்கள் குடிமக்களாகிய நீங்கள், எங்கள் மீது கொண்ட அன்பாலும், இரக்கத்தாலும், இல்லாத தகுதிகளைக் கொண்டு எங்களைப் புகழ்கிறீர்கள்.(32) எனினும், என் தம்பிகளுடன் கூடிய நான், உங்களை ஒன்று செய்யச் சொல்வேன். எங்களிடம் கொண்ட அன்பினாலும், எங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும் நீங்கள் வேறுவகையில் செயல்படக்கூடாது.(33) எங்கள் பாட்டானாகிய பீஷ்மர், மன்னர் (திருதராஷ்டிரர்), விதுரர், எங்கள் தாய் {குந்தி} மற்றும் என் நலன் விரும்பிகள் அனைவரும் ஹஸ்தினாபுர நகரத்திலேயே இருக்கிறார்கள்.(34) எனவே, உங்கள் மனம் எங்கள் நலனை நாடினால், நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து கவலையிலும், துன்பங்களிலும் மூழ்கியிருக்கும் அவர்களைக் கவனத்துடன் பேணிக் காப்பீர்களாக.(35) நாங்கள் புறப்பட்டு வந்ததில் வருத்தமடைந்து வெகுதொலைவிற்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். திரும்பிச் செல்வீராக, பற்றுறுதியாக நான் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் உறவினர்களிடம் உங்கள் இதயங்கள் மென்மையாக இருக்கட்டும்.(36) அனைத்தையும் விட, என் இதயம் நிலைத்திருக்கும் இந்தச் செயலைச் செய்வதே நீங்கள் எனக்கு அளிக்கும் பெரும் நிறைவாகவும், {நீங்கள் எனக்குத் தெரிவிக்கும்} சிறந்த வாழ்த்தாகவும் அமையும்", என்றான் {யுதிஷ்டிரன்}".(37)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "நீதிமானான யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட மக்கள் ""ஐயோ, மன்னா" என்று ஒரே குரலில் பெரிதாக ஒப்பாரி வைத்தனர்.(38) துயரில் மூழ்கியவர்களும், துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான அவர்கள், பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, அந்தப் பிருதையின் மகன்களுடைய {பாண்டவர்களின்} நற்குணங்களை நினைவு கூர்ந்தபடியே விருப்பமில்லாமல் தங்கள் பாதச்சுவடுகளை மீண்டும் பின்பற்றிச் சென்றார்கள்.(39)
குடிமக்கள் தொடர்வது நின்றதும், பாண்டவர்கள் தங்கள் தேர்களில் ஏறி கங்கைக் கரையில் உள்ளதும், பிரமாணம் என்று அழைக்கப்பட்டதுமான பெரும் ஆல மரத்தை வந்தடைந்ததனர்.(40) நாளின் முடிவில் அந்த ஆல மரத்தை அடைந்த பாண்டுவின் வீர மகன்கள், புனித நீரைத் தொட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த இரவை அங்கே கழித்தனர்.(41) பெருந்துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} நீரை மட்டுமே உண்டு அந்த இரவைக் கழித்தனர். வேள்வி செய்பவர்கள் மற்றும் வேள்வி செய்யாதவர்கள் என்ற இரு பிரிவையும் சேர்ந்த குறிப்பிட்ட பிராமணர்கள், பாண்டவர்கள் மீதிருந்த அன்பினால் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுடன் அன்று இரவைக் கழித்தனர். பிரம்மத்தை ஓதும் அந்தப் பிராமணர்களால் சூழப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருந்தான்.(42,43) அந்தப் பிராமணர்கள், தங்கள் (புனித) நெருப்புகளை மூட்டி, வேதங்களை ஓதவும், ஒருவருக்கொருவர் விவாதிக்கவும் தொடங்கியதும் பயங்கரமான அந்த மாலைப் பொழுது உடனடியாக அழகானது.(44) அன்னம்போன்ற இனிய குரல்களைக் கொண்ட அந்த முதன்மையான பிராமணர்கள், குருக்களில் சிறந்தவனான மன்னனை ஆறுதலளித்தபடியே இரவைக் கழித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(45)
ஆங்கிலத்தில் | In English |