Saunaka's sermon | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
யுதிஷ்டிரன் தங்களைத் தொடர்ந்து வந்த அந்தணர்களைத் திரும்பிச் செல்ல சொல்லுதல்; சௌனகர் யுதிஷ்டிரனுக்கு சில அறிவுரைகள் கூறல்…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}சொன்னார், "இரவு வெடித்து பகல் உதித்த போது, இரந்துண்டு {பிச்சையெடுத்து} தங்களைத் தாங்கிவந்த அந்தணர்கள் {அந்தணர்கள்}, செயற்கரிய செயல்களைச் செய்து கானகத்திற்குள் நுழையக் காத்திருந்த பாண்டவர்கள் முன்பு நின்றனர். குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அவர்களிடம், "எங்கள் செல்வங்களும், நாடும், அனைத்தும் எங்களிடம் இருந்து களவாடப்பட்டு, பெரும் துயரத்தில் இருக்கும் நாங்கள், கனிகளையும் கிழங்குகளையும் மட்டுமே உணவாகக் கொண்டு காட்டுக்குள் நுழையப்போகிறோம். இந்தக் கானகம் முழுவதும் ஆபத்துகளும், கணக்கிலடங்கா ஊர்வனவும், இரை தேடி அலையும் விலங்குகளும் நிறைந்தது. அங்கே நீங்கள் நிச்சயமாக பெரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்றே எனக்குத் தோன்றுகிறது. அந்தணர்களின் பாதிப்புகள் தேவர்களைக் கூட சக்தி இழக்கச் செய்யக்கூடும். எனது சக்தியையும் அது இழக்கச் செய்யும் என்பது நிச்சயமே. ஆகையால், ஓ அந்தணரே, நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கே செல்லுங்கள்" என்று சொன்னான்.
அதற்கு அந்த அந்தணர்கள், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நீ செல்லும் பாதையே எங்கள் பாதை! ஆகையால், உனக்காகத் தங்களை அர்ப்பணித்து உன்னைப் போற்றி, உண்மை அறம் பயின்று வருபவர்களைக் கைவிடாதே! தேவர்கள்கூட தங்களை வழிபடுபவர்கள் மீது இரக்கம் கொண்டுள்ளனர். அதுவும் குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்வு வாழும் அந்தணர்கள் மீது சிறப்பான இரக்கம் கொண்டுள்ளனர்" என்றனர்.
யுதிஷ்டிரன், "மறுபிறப்பாளர்களே {அந்தணர்களே}, நானும் என்னை அந்தணர்களுக்கு அர்ப்பணித்தவன்தான்! ஆனால் இந்தச் சூழ்நிலை என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது! திரௌபதியின் துயரத்தாலும், நாட்டை நாங்கள் இழந்ததாலும் பழங்கள், கிழங்குகள் மற்றும் மான்களைச் சேகரிக்கும் எனது இந்தத் தம்பிகள், மதி மயங்கி பிரம்மித்திருக்கின்றனர். ஐயோ, இப்படித் துயர்கொண்டிருக்கும் அவர்களை வலிநிறைந்த பணிகளில் என்னால் ஈடுபடுத்த முடியாது" என்றான்.
அதற்கு அந்த அந்தணர்கள், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, எங்களைப் பாதுகாப்பதில் துயர் கொள்ளாதே! உனது இதயத்தில் எங்களுக்கு இடத்தைத் தேடு! எங்கள் உணவை நாங்களே சம்பாதித்துக் கொண்டு, தியானத்தாலும், உனக்கான வழிபாடுகளாலும் நாங்கள் உன்னைத் தொடர்ந்து வருகிறோம். இனிமையான உரையாடல்கள் மூலம் உன்னை மகிழ்விக்கிறோம்" என்றனர்.
யுதிஷ்டிரன், "சந்தேகமில்லாமல் நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கவேண்டும். மறுபிறப்பாளர்களின் {அந்தணர்களின்} சினேகிதத்தில் நான் எப்போதும் மகிழ்ந்தே இருக்கிறேன்! ஆனால், நான் வீழ்ந்த இந்தச் சூழ்நிலையில் நிந்திக்கப்படும் பொருளாக நானே இருக்கிறேன். துன்பப்படத் தகாதவர்கள் என் மீது கொண்ட அன்பால் துன்பப்படுவதையும், உங்கள் உணவை நீங்களே சம்பாதித்துக் கொள்வதையும் நான் எப்படிக் கண்டு சகித்துக் கொள்வேன்? ஓ, திருதராஷ்டிரரின் தீய மகன்களுக்கு நிந்தனை ஏற்பட்டதே!" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொல்லிவிட்டு அழுது கொண்டிருந்த மன்னன் {யுதிஷ்டிரன்} தரையில் அமர்ந்தான். சாங்கிய யோகம் அறிந்த, கற்ற அந்தணரான சௌனகர் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "துயரத்தின் காரணம் ஆயிரம், அச்சத்தின் காரணம் நூறு ஆகியன நாளுக்கு நாள் மூடனையே மூழ்கடிக்கும். ஆனால் ஞானமுள்ளவனை மூழ்கடிக்காது. நிச்சயமாக, உன்னைப் போன்ற உணர்வுள்ள மனிதர்கள் இது போன்ற உண்மை அறிவுக்கு எதிரான அனைத்துவிதமான தீய மற்றும் மோட்ச அழிவை ஏற்படுத்தும் செயல்களால் ஏமாற்றப்பட மாட்டார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தீயவற்றுக்கு எதிராக நிற்கும் தகுதியான எட்டு குணங்களை {கேட்டுக் கொள்ள விருப்பம், கேட்டல், புரிந்து கொள்ளுதல், உபயோகித்தல், ஊகித்தல், தீயவை விலக்குதல், பொருளை நன்கு உணர்தல், உண்மையை அறிதல் ஆகிய எட்டு குணங்களை} சுருதி (வேத) மற்றும் சாத்திர கல்வி உனக்கு கொடுத்திருக்கின்றன. உன்னைப் போன்ற மனிதர்கள், ஏழ்மை அதிகமாவதாலோ, நண்பர்களுக்கு ஏற்படும் துக்கத்தினாலோ, உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புகளாலோ மதி மயங்குவதில்லை.
சுயத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்புமிக்க ஜனகர் பழங்காலத்தில் சொன்ன பாடல்களைச் {ஸ்லோகங்களைச்} சொல்கிறேன் கேள். இந்த உலகம் உடல் ரீதியான மன ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகிறது. அதைத் தணிப்பதற்கான வழிகளை சுருக்கமாகவும் விவரமாகவும் நான் குறிப்பிடும்போது கேட்டுக் கொள். நோய், வலிநிறைந்த பொருட்களின் தொடர்பு {முள்}, உழைப்பு, வேண்டிய பொருளின் மீது கொண்ட ஆசை ஆகிய நான்கும் உடலுக்கு துன்பத்தைக் கொடுக்கின்றன. நோயைப் பொறுத்தவரை, மருந்தைக் கொள்வதால் அதைத் தணித்து விட முடியும். அதே நேரத்தில் மனரீதியான நோயை யோக தியானத்தின் மூலம் அதை மறக்கச் செய்ய முடியும். இந்தக் காரணத்திற்காகத்தான், நோயாளி ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசியும், ஆசைப்பட்ட பொருளைக் கொடுப்பதாகக் கூறியும், மருத்துவர்கள் முதலில் நோயாளிகளின் மனரீதியான பாதிப்புகளை தணிக்க முயல்வர்.
சூடான இரும்புப்பட்டையை ஒரு குடத்தில் நுழைக்கும்போது, அதில் இருக்கும் நீர் சூடாவது போல, மனத்துயரம், உடல் வேதனையை ஏற்படுத்தும். நீர் தீயை அடக்குவது போல, உண்மை அறிவு மனக்கலக்கத்தைத் தணிக்கும். மனம் அமைதியுற்றால், உடலும் அமைதி பெறும். பற்றே {பற்று} மனத்துயரத்திற்கான வேர் என்று தெரிகிறது. இந்தப் பற்றே அனைத்து உயிரினங்களுக்கும் துன்பத்தையும், அனைத்துவிதமான துயரங்களையும் கொடுக்கிறது. பற்றே எல்லா துயரங்களுக்கும், எல்லா அச்சங்களுக்கும், இன்பம், துன்பம் ஆகிய அனைத்துக்கும், அனைத்துவிதமான வலிகளுக்கும் வேராக இருக்கிறது. பற்றின் காரணமாகவே அனைத்து காரியங்களும் தோன்றுகின்றன. பற்றே உலக நன்மைகளின் மீது நாம் ஆசைப்படக் காரணம். முதல்வகை இரண்டாவதைவிட மோசமானதாக இருந்தாலும் இவை இரண்டுமே தீமையின் ஊற்றுக் கண்கள்.
மரப்பொந்துக்குள் நுழையும் (சிறு அளவு) நெருப்பு எப்படி வேர் வரை முழு மரத்தையும் உட்கொண்டுவிடுகிறதோ, அதே போல பற்று சிறியதாக இருப்பினும் அது அறத்தையும் பொருளையும் அழித்துவிடும். உலகப் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால் மட்டும் ஒருவன் அனைத்தையும் துறந்தவன் ஆகிவிடமாட்டான். இருப்பினும், உலகத்தொடர்புகளில் இருந்து கொண்டே அதன் குறைகளை அறிந்தவனே உண்மையில் உலகத்தைத் துறந்தவன் ஆவான். தீய ஆசைகளில் இருந்து விடுபட்டு, எதையும் நம்பியிராத ஆன்மாவைப் பெற்ற ஒருவனே உண்மையில் உலகைத் துறந்தவனாவான்.
ஆகையால், ஒருவன் நண்பர்களிடமோ, தான் சம்பாதித்த செல்வத்திடமோ பற்று வைக்கக்கூடாது. அதே போல, தன்மீது வைத்திருக்கும் பற்றை, அறிவின் மூலம் களையவேண்டும். நீருக்குள் முக்கினாலும் தாமரை இலை நனையாமல் இருப்பது போல, ஒருநாள் மட்டும் நீடித்திருப்பவைக்கும், எப்போதும் நிலைத்து இருப்பவைக்கும் உள்ள வித்தியாசத்தை காணத்தெரிந்த ஆன்மா கொண்ட மனிதன், சாத்திரங்களை அறிந்து, அறிவால் சுத்திகரிக்கப்பட்டு, பற்றால் பாதிக்கப்படாதவனாக இருப்பான். பற்றால் பாதிக்கப்பட்ட மனிதன் ஆசையால் சித்திரவதை செய்யப்படுகிறான். அப்படி உண்டாகும் ஆசை, உலகப் பொருட்கள் மீது அவன் கொண்டிருக்கும் தாகத்தை அதிகரிக்கச் செய்கிறது. நிச்சயமாக இந்தத் தாகம் பாவகரமானது.
இது துயரங்களின் ஊற்றுக் கண் என்று கருதப்படுகிறது. இந்தக் கொடுமையான தாகமே, பாவத்துடன் கலந்து அறமற்ற செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. இந்த தாகத்தைத் துறப்பவர்கள் இன்பத்தை அடைகிறார்கள். உடல் அழிந்தாலும் தீயவர்களின் தாகம் அழியாது. தீயவர்களால் அதைத் துறக்கவே முடியாது. அது உண்மையில் மரண நோயே! அதற்கு தொடக்கமும் முடிவும் கிடையாது. இதயத்தில் {மனதில்} குடியிருக்கும் உருவமற்ற நெருப்பைப்போல அது உயிரினங்களை அழிக்கிறது. ஒரு விறகில் ஏற்பட்ட நெருப்பினால், ஒரு கட்டு விறகே அந்த நெருப்பால் உட்கொள்ளப்படுவது போல, அசுத்த ஆன்மா கொண்ட மனிதன் தனது இதயத்தில் பிறந்த பேராசையினால் அழிவைச் சந்திக்கிறான்.
உயிருள்ள உயிரினங்கள் அனைத்தும் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சுவது போல, செல்வந்தர்கள், மன்னனிடமும், திருடனிடம், நீர், நெருப்பு, ஏன் உறவினர்களிடம் கூட நிலையான அச்சம் கொண்டுள்ளனர். இறைச்சித் துண்டு காற்றில் இருந்தால் பறவைகளால் விழுங்கப்படும்; நிலத்தில் இருந்தால் இரைதேடும் விலங்குகளாலும்; நீரில் இருந்தால் மீன்களாலும் விழுங்கப்படுவது போல, செல்வந்தனும் அவன் எங்கிருந்தாலும் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறான். பலருக்கு அவர்களின் செல்வமே மரணத்தைக் கொடுக்கும் நஞ்சாகிறது, செல்வத்தில் இன்பம் காணும் ஒருவன் அதற்கு அடிமையாகி உண்மை இன்பத்தை அறியாமல் இருக்கிறான். பேராசையையும் மூடத்தனத்தையுமே செல்வம் அதிகரிக்கச் செய்கிறது.
கஞ்சத்தனத்திற்கும், பகட்டுக்கும், தற்பெருமைக்கும், அச்சம் மற்றும் துயரத்துக்கும் செல்வமே வேராகும். இவையே ஞானமுள்ளோர் செல்வந்தர்களிடம் காணும் துன்பங்களாகும். செல்வத்தைக் கையகப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் மனிதர்கள் பல துயரங்களை அடைகின்றனர். செல்வம் செலவழிந்தாலும் அதுவும் துயரத்தையே கொடுக்கும். அல்லாமலும், செல்வத்தின் பொருட்டு ஒருவனின் வாழ்வே {உயிரே} பறிபோகிறது. செல்வத்தைக் கைவிடுவதாலும் துயரமே மிஞ்சுகிறது. ஒருவனின் செல்வத்தால், பேணி வளர்க்கப்பட்ட மற்றொருவன், அந்தச் செல்வத்தின் பொருட்டு அவனுக்கு எதிரியாகிவிடுகிறான். ஆகையால், செல்வத்தை வைத்திருத்தல் இவ்வளவு துயரங்களைக் கொடுப்பதால், அதன் அழிவைக் கண்டு ஒருவன் துயர் கொள்ளலாகாது. அறியாமை கொண்டோர் மட்டுமே திருப்தியடையாமல் இருப்பார்கள். இருப்பினும், ஞானமுள்ளோர் எப்போதும் திருப்தியுடனேயே இருப்பார்கள்.
செல்வத்தின் மீதிருக்கும் தாகத்தை மட்டுப்படுத்தவே முடியாது. திருப்தியுடன் இருப்பதே உயர்ந்த இன்பமாகும்; ஆகையால், மனநிறைவையே ஞானமுள்ளோர் பின்பற்றக்கூடிய உயர்ந்த பொருளாகக் கருதுகின்றனர். இளமை, அழகு, வாழ்வு, செல்வக்குவியல், செழுமை, அன்பானவர்களின் துணை ஆகிவற்றின் நிலையாமையை உணர்ந்த ஞானமுள்ளோர் அவற்றுக்காக ஆசைப்படுவதில்லை. ஆகையால், வலியை உணர்ந்து செல்வத்தைக் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும். எந்தச் செல்வந்தரும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, அதன்காரணமாகவே அறம்சார்ந்தோர் செல்வத்தின் மீது ஆசையில்லாதவர்களை மெச்சுகிறார்கள். அறம் சார்ந்த காரியங்களுக்காக செல்வத்தைத் தொடர்பவர்கள்கூட அத்தகைய செயல்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக, சேறு பட்ட கைகளைக் கழுவிக் கொள்வதைக் காட்டிலும், சேற்றைத் தொடாமல் இருப்பது நல்லது இல்லையா? ஓ யுதிஷ்டிரா, நீ ஆசைப்படாமல் இருக்க வேண்டும்! அறம் உனக்கு வேண்டும் என்றால், உலக உடைமைகள் மீதிருக்கும் ஆசைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்" என்றார் {அந்தணரான சௌனகர்}.
![]() |
![]() |
![]() |