செப்டம்பர் 9, 2013 அன்று சபா பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கினேன். அன்று விநாயகர் சதுர்த்தி. சபா பர்வத்தில் கதையோட்டம் அதிகம் இருக்காது, கதாபாத்திரங்கள் பேசும் மொழிகளே அதிகம் இருக்கும். பல புரியாத சொற்களுக்கு அகராதியைத் தேடி மொழி பெயர்க்க வேண்டியிருக்கும். ஆகையால், சபாபர்வத்தை ஆரம்பித்த போது, இதை முடிக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று எண்ணினேன்.
ஆனால், என் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள், "அவ்வளவு நாளெல்லாம் ஆகாதுங்க... சீக்கிரம் முடிங்க... ஒரு மாசத்துல முடிச்சிருவீங்க பாருங்க. ஆயுத பூஜைக்குள் முடிக்கிறதுனு மனசுல முடிவு பண்ணி முடிங்க" என்றார்.
நானும் என்னால் முடிந்த மட்டும் மற்ற அலுவலகப் பணிகளுக்கிடையில் பகலிலும் சிறிது நேரம் ஒதுக்கி மொழிபெயர்த்தேன். இருப்பினும், நான் எதிர்பார்த்தது போலவே சற்று சிரமமாகத் தான் இருந்தது. ஐம்பதாவது பகுதி வந்த போது தேதி அக்டோபர் 9, 2013 ஆகியிருந்தது. 13-அக்டோபர்-2013 அன்று ஆயுத பூஜை. கண்டிப்பாக அதற்குள் முடிக்க முடியாது. அதுவும் இனிமேல் வரப்போகும் முப்பது பகுதிகளும் கதை நகராது. அனைத்திற்கும் அகராதியை நாட வேண்டியிருக்கும். கண்டிப்பாக இன்னும் முப்பது நாளாவது ஆகும். இதை நான் நினைத்துக் கொண்டிருந்த போதே அதற்கு முந்தைய நாள் எழுதிய பதிவின் தலைப்பு என் நினைவுக்கு வந்தது.
தலைப்பின் பெயர், "திரௌபதி சிரித்தாளா?". ஆம் திரௌபதி சிரிக்கத்தான் செய்தாள். "நீங்கள் திட்டம் போட்டு முடிக்க, இது நீங்கள் நினைத்தது போல எழுதும் காப்பியமா? இதை முடிக்க பேரருள் வேண்டாமா? இது மனித முயற்சியால் மட்டும் நடக்கக்கூடிய காரியமா? மகாபாரதத்தைப் பெயர்க்கத் தொடங்கிய போதுதான் விளையாட்டாக ஆரம்பித்தாய்... முடிப்பதும் நீ நினைத்தது போன்ற விளையாட்டா? முடிப்பது உன் கையில் இல்லை மகனே!" என்று என் கண் முன்னே வந்து நின்று சிரித்தாள்.
அகங்காரத்துடன் பாண்டவ மாளிகைக்குள் நுழைந்த துரியோதனன், நீருக்குள் விழுந்து கர்வபங்கப்பட்ட போது திரௌபதி சிரித்தாள். இப்போதும் நம் முன்னே வந்து சிரிக்கிறாளே. "ஆம்! நாமும் துரியோதனன் போலத் தானே இருக்கிறோம். பெரும் நதியில் ஒரு கையளவு நீரை அள்ளிப் பருகிவிட்டு. இதை முழுவதும் குடிக்க எத்தனை நாள் ஆகும் என்று திட்டம் போட்ட கதையாக அல்லவா இருக்கிறது. இதற்குள் எவ்வளவு கர்வம் வந்து விட்டது நமக்கு. இனி நாளெல்லாம் குறிக்கக்கூடாது. அது போகிற போக்கில் போகட்டும். என்று முடியுமோ! அன்று அதுவாகவே முடியும்.
இன்று நாம் துரியோதனனாகத் தான் இருக்கிறோம். இந்தக் காப்பியம் பெயர்த்து முடிக்கப்படும் போது, நிச்சயம் பரமனுக்குப் பிடித்த அகங்காரமற்ற உண்மையான மனிதனாக இருக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டேன். என்ன ஆச்சரியம், அடுத்த சில நாட்களிலேயே {18 நாட்கள்} எண்பது பகுதிகளும் நான் எதிர்பார்த்தைவிட விரைவாக முடிந்தது.
இன்று காலை திரு.ஜெயவேலன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். சபா பர்வத்தை முடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள். மஹாபாரதப் பதிவுகளின் பக்க பார்வைகள் {page views} 2 லட்சம் கடந்து விட்டது. பார்த்தீர்களா? என்று கேட்டார். ஆம் பார்த்தேன் என்றேன். ஆதிபர்வம் முடித்த போது 1 லட்சம் பார்வைகள் பெற்றிருந்தது நமது வலைப்பூ. ஆனால் சபா பர்வத்துக்கு மிக விரைவாக மேலும் 1 லட்சம் பார்வைகள் கிடைத்தன.
அதற்கு பெரிதும் காரணமானவர் திரு.ஜெயவேலன் அவர்கள். நமது வலைப்பூவில் நான் செலவிட்ட நேரத்தைவிட அதிகம் செலவிட்டவர் அவர்தான். நேரத்தை மட்டுமல்ல பொருளையும் செலவளித்தார். முகநூலில் நமது பதிவுகளைப் பகிர்ந்து கொண்டே இருந்தார். அந்தப் பதிவுகளை ஊக்கப்படுத்த முகநூலுக்கு கட்டணமும் செலுத்தினார். முகநூலில் 12,000 likeகள் கிடைத்திருக்கிறது.
தொலைபேசியைத் துண்டித்தபோது, நான் இன்று உங்களை வந்து சந்திப்பேன். வெளியில் செல்லும் எண்ணம் எதுவும் இல்லை அல்லவா என்று கேட்டுவிட்டுத்தான் துண்டித்தார். காலை 11 மணி அளவில் எனது அலுவலகத்திற்கு வந்தார். வரும்போதே ஒரு பை நிறைய புத்தகங்களை அள்ளி வந்தார். "அனைத்தும் புராணங்கள். அனைத்தையும் முடிந்த வரை படிங்க. மஹாபாரத மொழியாக்கத்துக்கு இவை உங்களுக்குப் பயன்படும்" என்று சொல்லி கொடுத்தார். பிறகு, மேலும் முழு மஹாபாரத வலைப்பூவை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பது குறித்து விவாதித்தோம்.
"வனபர்வத்தையும் விரைவாகப் பெயர்க்கவேண்டும். எவ்வளவு நாட்கள் ஆகும் என்று கேட்டார். அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த திரௌபதியை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. நான் கண்டேன். மனதிற்குள் திரௌபதியை வணங்கினேன். கண்ணை மூடிக்கொண்டு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்றேன். அவ்வளவு நாள் எல்லாம் ஆகக்கூடாதுங்க. பாருங்க ஆறு மாதத்தில் முடிச்சுடுவீங்க என்றார். அதை திரௌபதியின் வாக்காகவே கருதி, "நம்ம கையில என்ன இருக்கு, நீங்க சொன்ன காலத்துக்குள்ள முடிக்க நான் கண்டிப்பா முயற்சிப்பேன்" என்றேன். கண்திறந்து பார்த்தேன். திரௌபதி அங்கில்லை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை.
அவர் கிளம்பும் நேரம் வந்தது. "ஐயோ மறந்துட்டேங்க என்று பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து எனது கைகளில் கொடுத்தார். "பணம் தானே" என்றேன். "இல்லைங்க பரிசு" என்றார். "எனக்குத்தான் தெரியுதே. இது பணம் தான்" என்றேன். "உங்களுக்குப் பணம், எனக்கு பரிசுங்க" என்றார். "சீக்கிரம் வனபர்வத்தை ஆரம்பிங்க" என்று சொல்லிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் பறந்தார்.
கவரைப் பிரித்துப் பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே எட்டாயிரம் ரூபாய் இருந்தது. ஒரு வாரமாக உடம்பு முடியாமல் வீட்டில் படுத்திருந்தவர். சபா பர்வம் முடிந்தது என்று தெரிந்ததுமே, புத்தகங்களை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்து விட்டார். நான் திரு.ஜெயவேலன் அவர்களிடம் கடன் பட்டுக் கொண்டே இருக்கிறேன். எப்படி அடைக்கப் போகிறேன்? தெய்வங்களை வேண்டிக் கொள்வதைவிட என்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை.
திரு.செல்வராஜ் ஜெகன் என்ற நண்பர் ஒருவர், சபா பர்வம் ஐம்பது பகுதிகள் முடிந்ததுமே. அந்த ஐம்பது பகுதிகள் வரை ஒரு Ms word கோப்பாக படங்களுடன் சேகரித்து அனுப்பி வைத்து, இதை மின்னூலாக்கி வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சபாபர்வம் மொத்தம் 80 பகுதிகள் தானே, ஆகையால் முழுவதுமாகவே போட்டுவிடலாம் என்று அவருக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்.
வன பர்வத்தில் இருபது பகுதிகள் சென்ற பிறகு சபா பர்வம் மின்னூலை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். உடனே வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள், அனைத்துப் பகுதிகளையும் சேகரித்து உடனே அனுப்பி விடுவார். ஆனால், அப்படி உடனே வெளியிட்டால் வலைப்பூவின் பக்க பார்வைகள் {page view} குறைகின்றன. பக்க பார்வைகளுக்காக திரு.ஜெயவேலன் நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆகையால், வனபர்வத்தில் சில பகுதிகள் சென்ற பிறகே சபா பர்வம் மின் நூல் வெளி வரும்.
மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கும் ஆதிபர்வம் மின்னூலில் பல பிழைகள் இருக்கின்றன. அந்த மின்னூலை வெளியிட்ட பிறகு, திரு.ஜெயவேலன் அவர்கள் நிறைய திருத்தங்களைச் செய்திருக்கிறார். மின்னூல் வெளியிட்டு விட்டால், அதுவே இறுதியானது என்று வாசகர்கள் யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். பிழைகள் சுட்டிக்காட்டப்படும் போதெல்லாம், முழு மஹாபாரதப் பதிவுகள் திருத்தத்துக்கு உட்பட்டே தீரும். ஆகையால் மின்னூலை பதிவிறக்கி வைத்துக் கொண்டாலும், வலைப்பூவில் செய்யப்படும் திருத்தங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கவனித்துக் கொள்ள வசதியாகத் தான் நமது வலைப்பூவில் மஹாபாரத ஆக்கம் - நாட்குறிப்பு என்ற ஒரு பகுதியை ஆரம்பித்திருக்கிறோம்.
மேலும் புதிய சேர்க்கைகளாக மகாபாரத நீதிமொழிகள் , மஹாபாரத பாத்திரங்களின் பெயர்க்காரணங்கள் , மஹாபாரத வரைபடங்கள் (Maps from Mahabharatha) போன்ற பகுதிகளை திரு.ஜெயவேலன் அவர்கள் தொடங்கி பராமரித்து வருகிறார். மேலும் நான் எனது பங்கிற்கு, www.hindunet.org என்ற வலைத்தளத்தில் Dr.K.N.S.பட்நாயக் The Mahabharata Chronology என்று ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதை , நமது வலைப்பூவில், மஹாபாரதம் கால அட்டவணை என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன்.
நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் சொல்லிவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்துகிறேன். இதுவரை ஆதரவளித்த நண்பர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தர வேண்டும். இந்தப் பதிவுகள் அனைத்து தமிழர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆகையால், முழு மஹாபாரதப் பதிவுகளைப் படிக்கும் வாசக நண்பர்கள், முகநூல் {Facebook}, கீச்சு (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பிற வலைத்தளங்களிலும் இப்பதிவுகளைப் பகிர்ந்து, தங்கள் ஆதரவை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
நன்றி.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
30.10.2013