The curse on Duryodhana | Vana Parva - Section 10 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
துரியோதனனுக்கு உபதேசம் செய்யுமாறு திருதராஷ்டிரன் வியாசரிடம் கோரல்; வியாசர் மைத்ரேயர் அதைச் செய்வார் என்று உரைத்தல்; மைத்ரேயர் துரியோதனனுக்கு அறிவுரை கூறல்; தனது ஆலோசனையைக் கேட்காத துரியோதனனை மைத்ரேயர் சபித்தல்;
திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ ஆழ்ந்த ஞானம் கொண்ட முனிவரே {வியாசரே}, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது! இந்த மன்னர்கள் அறிவதைப் போல நானும் இதை அறிவேன்! குருக்களுக்கு நன்மையானவற்றை நீர் எனக்குச் சுட்டிக் காட்டியபடியே, ஓ முனிவரே, விதுரன், பீஷ்மர், துரோணர் ஆகியோரும் சுட்டிக் காட்டினர். நான் உம்முடைய உதவிக்குத் தகுதி வாய்ந்தவனானால், உமக்கு குருக்களிடம் உங்களுக்கு கருணை இருக்குமானால், எனது தீய மகன் துரியோதனனுக்கு உபதேசம் செய்யும்"
வியாசர், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பாண்டவச் சகோதரர்களைக் கண்ட பிறகு, நம்மைக் காண விரும்பி புனிதமான முனிவரான மைத்ரேயர் இங்கு வருகிறார். ஓ மன்னா, அந்தப் பலம் பொருந்திய முனிவர் {மைத்ரேயர்}, உனது குலத்தின் நன்மை கருதி உனது மகனுக்கு உபதேசிப்பார். மேலும், ஓ கௌரவனே {திருதராஷ்டிரனே}, அவர் அறிவுறுத்துவதை சந்தேகத்திற்கிடமில்லாமல் பின்பற்ற வேண்டும். அவர் பரிந்துரைப்பது செய்யப்படவில்லையானால், அந்த முனிவர் {மைத்ரேயர்} உனது மகனைக் கோபத்தால் சபிப்பார்" என்றார் {வியாசர்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொல்லிவிட்டு, வியாசர் புறப்பட்டார், பிறகு மைத்ரேயர் அங்கு வந்தார். மன்னன் {திருதராஷ்டிரன்} தனது மகனுடன் சேர்ந்து அந்த முனிவர்களின் தலைவரை {மைத்ரேயரை} மரியாதையுடன் வரவேற்று, ஆர்கியா கொடுத்து மற்ற சடங்குகளைச் செய்தான். பிறகு அம்பிகையின் மகனான மன்னன் திருதராஷ்டிரன் மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அந்த முனிவரிடம் {மைத்ரேயரிடம்}, "ஓ புனிதமானவரே, குருஜாங்காலத்திலிருந்து உங்களது பயணம் இனிமையாக அமைந்ததா? அந்த வீரர்களான ஐந்து பாண்டவர்களும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? அந்தக் குரு குலத்தின் காளைகள் குறித்த காலம் வரை வெளியே தங்க கருதியிருக்கிறார்களா? கௌரவர்களுக்கிடையே சகோதரப் பாசம் எப்போதும் பலவீனமடையுமா?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.
மைத்ரேயர், "பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்து, நான் குருஜாங்காலத்தை அடைந்தேன். அங்கே நான் நீதிமானான யுதிஷ்டிரனை எதிர்பாராத விதமாக காம்யக வனத்தில் சந்தித்தேன். ஓ மேன்மையானவனே {திருதராஷ்டிரனே}, அங்கே மான் தோல் உடுத்தி, ஜடாமுடி தரித்து, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் காண பல முனிவர்கள் வந்திருந்தனர். ஓ மன்னர் மன்னா {திருதராஷ்டிரா}, அங்கேயே நான் உனது மகன்களின் பெரும்பிழையையும், பகடையாட்டத்தினால் அவர்களைத் தாக்கியிருக்கும் பேரிடரையும் குறித்துக் கேள்விப்பட்டேன். ஆகையால், அதன் காரணமாகவும் கௌரவர்களின் நன்மைக்காகவுமே நான் உன்னிடம் வந்தேன். ஓ மேன்மையானவனே, உன் மீது எனக்கு அதிக அன்பிருக்கிறது. நான் உன்னிடம் மகிழ்ச்சி கொள்கிறேன். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயும் பீஷ்மரும் இருக்கும் போது {வாழ்ந்து கொண்டிருக்கும் போது} எக்காரணம் கொண்டும் உனது மகன்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீயே காளைகள் கட்டி வைக்கப்படும் நடு முளை போன்றவன். தண்டிக்கவும் வெகுமதி கொடுக்கவும் தகுதி உடையவன். எல்லோரையும் தாக்கப்போகும் பெருந்தீங்கை இன்னும் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஓ குரு குல வழி வந்தவனே, சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட பாவிகளின் செயல்களைப் போல உனது சபையில் நடந்த தவறுகளுக்காக, தவசிகள் உன்னை நன்றாக நினைக்கவில்லை.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பின்னர் சீற்றம் நிறைந்த இளவரசன் துரியோதனனிடம் திரும்பிய சிறப்பு மிகுந்த முனிவர் மைத்ரேயர், மெல்லிய வார்த்தைகளில், "ஓ பலம்வாய்ந்த கரம் கொண்ட துரியோதனா, ஓ சொல்திறம் மிக்க மனிதர்களில் சிறந்தவனே, ஓ சிறப்பானவனே, என் {உன்} நன்மைக்காக நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடு { give heed unto the words I utter for my good}. ஓ மன்னா {துரியோதனா}, பாண்டவர்களிடம் சண்டையிட முயலாதே! ஓ மனிதர்களில் காளையே, பாண்டவர்களைப் போல, குருக்களைப் போல, உலகத்தைப் போல உனது நன்மையை நீயே அமைத்துக் கொள். அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் பெரும் பராக்கிரமம் கொண்ட வீரர்கள். பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவர்கள். அவர்கள் உடல் இடியைப் போன்று கடினமானது. தங்கள் வாக்கின் படி நடந்து கொண்டு, தங்கள் ஆண்மையின் மீது கர்வத்தோடு {பெருமையோடு} இருக்கின்றனர். அவர்கள், ஹிடிம்பனையும் கிர்மீரனையும் தலைமையாகக் கொண்ட நினைத்த உரு எடுக்கக்கூடிய, தேவர்களுக்கு எதிரிகளான கடும் ராட்சசர்களைக் கொன்றிருக்கின்றனர். அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்} இங்கிருந்து சென்ற போது, அந்தக் கடும் ஆன்மா கொண்ட ராட்சசன், இரவு நேரத்தில் அவர்களுடைய பாதையைப் பெரும் மலைபோல இருந்து தடுத்தான். சிறு மானைப் புலி கொல்வதைப் போல, போரிடுவதில் மகிழ்ச்சி கொள்பவனும், பலம் பொருந்தியவர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்த மிருகத்தைக் கொன்றான். ஓ மன்னா, பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பெரும் பலம்பொருந்திய வீரனுமான ஜராசந்தனை, ஒரு போட்டியின் போது, பீமன் எப்படிக் கொன்றான் என்பதையும் கருதிப்பார். வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்}, துருபதனின் மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்களைப் போர்க்களத்தில் சந்திக்க பலவீன நிலை மற்றும் மரணத்தை வேண்டாத எவன்தான் துணிவான்? ஓ பாரத குலத்தின் காளையே {துரியோதனா}, உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்படட்டும்! எனது ஆலோசனைகளைப் பின்பற்று. கோபத்திடம் நீ சரணடையாதே!
"ஓ மன்னா {ஜனமேஜயா}, மைத்ரேயரால் இப்படி எச்சரிக்கப்பட்ட துரியோதனன், யானையின் துதிக்கையைப் போல இருந்த தனது தொடைகளைத் தட்டி, சிரித்துக் கொண்டே தரையைத் தனது காலால் தேய்த்து, ஒரு வார்த்தையும் பேசாமல், தலையைத் தொங்கப்போட்டவாறு நின்றான். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, தான் சொன்னதைக் கேட்கவிருப்பமற்ற, பூமியை தேய்த்துக் கொண்ட துரியோதனனைக் கண்ட மைத்ரேயர் கோபம் கொண்டார். விதியால் உந்தப்பட முனிவர்களில் சிறந்த மைத்ரேயர் மிகுந்த சீற்றம் கொண்டு, துரியோதனனைச் சபிக்க தனது மனதில் எண்ணம் கொண்டார். பிறகு, மைத்ரேயர் கண்கள் கோபத்தால் சிவக்க, நீரைத் தொட்டு, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகனிடம் {துரியோதனனிடம்}, "நான் சொல்வதைச் செய்ய முடியாது என்று குறிப்புகளால் உணர்த்திய இழி செயலால், ஏற்படுபடப்போகும் கனியின் பலனை விரைவாக அறுத்தெடுப்பாய். உன்னால் இழைக்கப்பட்ட பெரும் பிழைகளால் உண்டாகும் பெரும் போரில், பலம் பொருந்திய பீமன் உனது தொடையை தனது கதையின் வீச்சால் நொறுக்குவான்" என்று சபித்தார்.
அந்த முனிவர் {மைத்ரேயர்} இப்படிப் பேசி முடித்ததும், மன்னன் திருதராஷ்டிரன், அவர் சொன்னது நடக்காமல் இருக்க, அந்த முனிவரைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் மைத்ரேயர், "ஓ மன்னா, உனது மகன் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால், ஓ குழந்தாய், இந்த எனது சாபம், எந்த விளைவையும் ஏற்படுத்தாது, செய்யவில்லை என்றால் நான் சொன்னது நடந்தே தீரும்" என்றார்.
வைசம்பாயனர் சொன்னார், "பீமனின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பிய மன்னர்களில் முதன்மையான துரியோதனின் தந்தை {திருதராஷ்டிரன்}, மைத்ரேயரிடம், "கிர்மீரன் எப்படி பீமனால் கொல்லப்பட்டான்?" என்று கேட்டான்.
மைத்ரேயர், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, எனது வார்த்தைகளை மதிக்காத உனது மகனால் {துரியோதனனால்}, நான் உன்னிடம் மறுபடியும் பேச மாட்டேன். நான் சென்றதும், விதுரன் உனக்கு யாவையும் விளக்குவான்!" என்றார். இவற்றைச் சொன்ன மைத்ரேயர், தான் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்றார். (பீமனின் கைகளால் ஏற்பட்ட) கிர்மீரனின் மரணச் செய்தியைக் கேட்ட துரியோதனன் அமைதியின்றி வெளியே சென்றான்.
******************ஆரண்யக பர்வம் முற்றிற்று******************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.