Show greater affection towards the weak | Vana Parva - Section 9 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
வியாசர் திருதராஷ்டிரனுக்கு சுரபியின் கதையைச் சொல்லி, துரியோதனனைப் பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்கச் சொன்னது.
திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ புனிதமானவரே {வியாசரே}, நான் சூதாட்டத்தை விரும்பவில்லை. ஆனால், ஓ முனிவரே {வியாசரே}, நான் விதியால் ஈர்க்கப்பட்டு சம்மதித்தேன் என்று நினைக்கிறேன். பீஷ்மரோ, துரோணரோ, விதுரனோ, காந்தாரியோ இந்தப் பகடையாட்டத்தை விரும்பவில்லை. சந்தேகமில்லாமல், அறியாமையால் {முட்டாள்த்தனத்தால்} இவை நடந்துவிட்டன. ஓ நோன்புகள் நோற்பதால் மகிழ்பவரே, ஓ சிறந்தவரே, அனைத்தையும் அறிந்தும், பிள்ளை பாசத்தால், எனது புத்திகெட்ட மகனான துரியோதனனை என்னால் கைவிட முடியவில்லை!" என்றான்.
வியாசர், "ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஓ விசித்திரவீரியனின் மகனே, நீ சொல்வது உண்மைதான்! அனைத்துப் பொருட்களைவிடவும் மகனே சிறந்தவன் என்பதையும், மகனைக் காட்டிலும் மேன்மையானது எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிவோம். சுரபியின் {காமதேனுவின்} கண்ணீர் போதனையால், மதிப்பு நிறைந்த பொருட்களைவிட மகனே மேன்மையானவன் என்பதை இந்திரன் அறிய வந்தான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, இது தொடர்பாக அற்புதமானதும் கதைகளில் சிறந்ததுமான, இந்திரனுக்கும் சுரபிக்கும் நடந்த உரையாடலை இப்போது சொல்கிறேன். பழங்காலத்தில் பசுக்களின் தாயான சுரபி தேவ லோகத்தில் அழுது கொண்டிருந்தாள். ஓ குழந்தாய் {திருதராஷ்டிரா}, இந்திரன் அவளிடம் {சுரபியிடம்} இரக்கம் கொண்டு, அவளிடம், "ஓ மங்களகரமானவளே, நீ ஏன் அழுகிறாய்? தேவர்கள் நன்றாக இருக்கிறார்களா? மனிதர்களின் உலகிலோ, நாகங்களின் உலகிலோ ஏதும் தீயூழ் {துரதிர்ஷ்டம்} விழுந்ததா?" என்று கேட்டான். அதற்கு சுரபி, "உனக்கு {தேவர்களுக்கு} எந்தத் தீங்கையும் நான் காணவில்லை. ஆனால் எனது மகன் நிமித்தமாக துயரத்தில் இருக்கிறேன். ஓ கௌசிகா {இந்திரா}, அதனால்தான் அழுகிறேன். ஓ தேவர்கள் தலைவனே {இந்திரனே}, அதோ அங்கிருக்கிற கொடுமைக்கார உழவன், மரக்குச்சியால் என் பலவீனமான மகனை நையப்புடைக்கிறான். மேலும் (எடை அதிகமான) கலப்பையால் அவனைக் கொடுமைப்படுத்துகிறான். அதன் காரணமாக எனது பிள்ளை வேதனையால் துடித்து, தரையில் விழுந்து மரணத் தருவாயில் இருக்கிறான். இந்தக் காட்சியால், ஓ தேவர்கள் தலைவனே, நான் பாசத்தால் துடிக்கிறேன். அந்த ஜோடியில் வலுத்தவன் அதிக சுமையைத் தாங்கிக் கொள்கிறான். ஓ வாசவா {இந்திரா}, இருப்பினும் மற்றவன் மெலிந்து பலவீனமாகி, உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் தெரியும் வண்ணம் இருக்கிறான். அவன் தனது சுமையைச் சிரமத்துடன் சுமக்கிறான். அவனுக்காகவே நான் வருந்துகிறேன். ஓ வாசவா, சாட்டையடியாலும் மிகவும் துன்புறுத்தப்பட்டு சுமையைச் சுமக்க முடியாமல் அவன் இருப்பதைப் பார். அவனுக்காகவே துயரத்தால் ஆட்கொள்ளப்பட்டு, இதய பாரம் தாங்காமல், கண்களில் நீர் கொட்ட பாசத்தால் அழுகிறேன்" என்றாள் {பசுக்களின் தாயான சுரபி எனும் காமதேனு}.
அதற்கு சக்ரன் {இந்திரன்}, "ஓ அழகானவளே, ஆயிரக்கணக்கான உனது மகன்கள் (தினமும்) ஒடுக்கப்படுகின்றனர். இருப்பினும் துன்பப்படும் இவன் ஒருவனுக்காக ஏன் வருந்துகிறாய்?" என்று கேட்டான். சுரபி, "எனக்கு ஆயிரம் வாரிசுகள் இருந்தாலும், எனது பாசம் அனைவரிடமும் சமமாகவே இருக்கிறது! இருப்பினும், ஓ சக்ரா {இந்திரா}, பலவீனமாக அப்பாவியாக இருப்பவன் மேல் அதிக பாசத்தை உணர்கிறேன்" என்றாள்.
வியாசர் தொடர்ந்தார், "சுரபியிடம் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் மிகவும் ஆச்சரியப்பட்டான். ஓ குரு குலத்தவனே {திருதராஷ்டிரனே}, அவன் {இந்திரன்}, மகனே ஒருவனின் உயிரைவிட மேலானவன் என்று உணர்ந்து சமாதானமானான். பகனைத் தண்டித்த அந்த சிறப்புமிக்கவன், அடர்த்தியான மழையைப் பொழிந்து, அந்த உழவனின் வேலைக்கு தடையை விளைவித்தான். சுரபி சொன்னது போலவே, ஓ மன்னா {திருதராஷ்டிரா} உனது மகன்களிடம் சமமான பாசம் இருக்க வேண்டும். அந்தப் பாசம் பலவீனமானவர்கள் மீது அதிகம் இருக்கட்டும். எனது மகன் பாண்டு எனக்கு எப்படியோ அதேபோலத்தான் எனக்கு நீ. ஓ மகனே {திருதராஷ்டிரா}, அதே போலத்தான் ஆழமான ஞானம் கொண்ட விதுரனும். பாசத்தாலேயே இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன்! ஓ பாரதா, நீ நூறு {100} மகன்களைப் பெற்றிருக்கிறாய். ஆனால் பாண்டுவுக்கோ ஐந்துதான். மேலும் அவர்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள். தங்கள் நாட்களைக் கவலையுடன் கடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் உயிரை எப்படிக் காத்துக் கொள்வார்கள் என்றும், எப்படி விருத்தியடைவார்கள் என்றும் பிருதையின் {குந்தியின்} மகன்களைக் குறித்த நினைவுகள் எனது ஆன்மாவை கலக்குகின்றன! ஓ பூமியின் மன்னா {திருதராஷ்டிரா}, அனைத்து கௌரவர்களும் வாழ வேண்டும் என்று நீ விரும்பினால், உனது மகன் துரியோதனனை பாண்டவர்களுடன் சமாதானமாக இருக்கச் சொல்" என்றார் {வியாசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.