Kirmira stood like a mountain | Vana Parva - Section 11a | Mahabharata In Tamil
(கிர்மீரவத பர்வம்)
கிர்மீர வதம் குறித்து திருதராஷ்டிரன் விதுரனிடம் கேட்டல்; விதுரன் திருதராஷ்டிரனுக்கு கிர்மீரன் மற்றும் பாண்டவர்கள் சந்திப்பை விவரித்தல்
திருதராஷ்டிரன் சொன்னான், "ஓ க்ஷத்தா {விதுரா}, கிர்மீரனின் அழிவைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்! அந்த ராட்சசனுக்கும் பீமசேனனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து எனக்குச் சொல்!"
விதுரன், "மனித சக்தியை விஞ்சிய பீமசேனனின் சாதனைக் கதையைக் கேளும்! பாண்டவர்களுடன் நான் (அவர்களுடன் இருந்து) உரையாடிக் கொண்டிருந்த போது, இதை நான் கேள்வியுற்றேன்!
"ஓ மன்னர்களின் முதன்மையானவனே {திருதராஷ்டிரா}, பகடையில் தோல்வியுற்று, இங்கிருந்து வெளியேறிய பாண்டவர்கள் பகலும் இரவுமாக மூன்று நாட்கள் பயணித்து, காம்யகம் என்ற பெயர் கொண்ட வனத்தை அடைந்தனர். ஓ மன்னா, கொடூரமான நடு இரவில், இயற்கை உறங்கிக் கொண்டிருந்த போது, கொடும் செயல்கள் புரியும் மனிதரை உண்ணும் ராட்சசர்கள் உலவ ஆரம்பித்த போது, தவசிகளும், இடையர்களும், கானகத்தில் திரிபவர்களும், நர மாமிச உண்ணிகளுக்குப் பயந்து காம்யக வனத்தைத் தவிர்த்து தூரமான இடங்களுக்கு ஓடினர்.
ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்த நேரத்தில் பாண்டவர்கள் அந்த வனத்தில் நுழைந்த போது, சுட்டெரிக்கும் கண்களுடன் ஒரு பயங்கரமான ராட்சசன், எரிகொள்ளியுடன் அவர்கள் {பாண்டவர்கள்} கண் முன் தோன்றி அவர்களது பாதையைத் தடுத்துக் கொண்டு நின்றான். நீண்ட கரங்களும், பயங்கரமான முகமும், கொண்ட அவன் அந்த குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களின் {பாண்டவர்களின்} வழியில் அவர்களைத் தடுத்துக் கொண்டு நின்றான். எட்டு பற்கள் வெளியே தள்ளிக் கொண்டு, தாமிரச் சிவப்பான கண்களுடன், சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் மின்னலுடன் கூடிய பெரும் மேகங்களுக்கு அடியில் கூட்டமாக நிற்கும் கொக்குகள் போல, மேல் நோக்கி நின்ற நெருப்பு போன்ற தலைமுடியுடன் நின்றிருந்தான்.
மழைநீர் நிறைந்த மேகம் கர்ஜிப்பது போல, தனது வகை உயிரினங்களின் தன்மைக்கேற்ப மாயத் தோற்றம் கொண்டிருந்தான் அந்தப் பேயுரு கொண்டவன். அந்தப் பயங்கரமான கர்ஜனையைக் கேட்ட பறவைகளும் மற்ற நீர் வாழ் நில வாழ் விலங்குகள் அனைத்தும் பயத்தால் கதறி எல்லா புறங்களிலும் விழ ஆரம்பித்தன. மான்களும் சிறுத்தைகளும், எருமைகளும், கரடிகளும் எல்லா திக்குகளுக்கும் ஓடும் நிலையில், அந்தக் கானகமே நகர்வது போல காட்சி அளித்தது. அந்த ராட்சசனின் பெரும் மூச்சால் உண்டான காற்றில் ஆடி கொடிகள் அனைத்தும் தங்கள் தாமிர வண்ண இலைகள் கொண்ட கரங்களால் மரங்களை அணைத்துக் கொண்டு தவித்தன.
அந்த நேரத்தில் அங்கு கடுமையான பெருங்காற்று வீசியது. வானம் இருட்டி, தூசிப்படலம் அந்த வானத்தை மூடியது. ஐம்புலனுக்கும் பெரும் எதிரி துக்கமானது போல, பாண்டவர்கள் முன்னிலையில் அவர்கள் அறியாத எதிரியான அந்த ராட்சசன் தோன்றினான். கருப்பு நிறத்தில் இருந்த மான் தோலை உடுத்தியிருந்த பாண்டவர்களைத் தூரத்திலேயே கண்ட ராட்சசன் அவர்களது பாதையைப் பெரும் மைனக மலை தடுத்து நிற்பது போல நின்றான்.
இதுவரை இதுபோன்றவனைக் கண்டிராத தாமரைக் கண் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி} அவனைக் கண்ட பயத்தால், தனது கண்களை மூடிக் கொண்டாள். துட்சாசனனால் கலைந்த கூந்தலுடன் பாண்டவர்களுக்கு மத்தியில் ஐந்து மலைகளுக்கு நடுவே வெட்டிச் செல்லும் ஊற்று போல இருந்தாள். பயத்தில் மூழ்கிய அவளைக் கண்ட ஐந்து பாண்டவர்களும், ஆசையால் உந்தப்பட்ட ஐம்புலன்களும் புலன் நுகர் பொருட்களைப் பின்பற்றி இருப்பது போல அவளைத் {திரௌபதியைத்} தாங்கினர்.
பெரும் (தவ) சக்தி கொண்ட தௌமியர், பாண்டுவின் மகன்களுக்கு முன்னிலையில், அந்த ராட்சசனால் பரப்பப்பட்டிருந்த பயங்கரமான மாயையை பல மந்திரங்களால் அழித்து, அந்த ராட்சசனையும் அழிக்க கணக்கிட்டார். நேர்மையற்ற வழிகளைப் பின்பற்றுபவனும், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவனுமான அந்தப் பலம் வாய்ந்த ராட்சசன், மாயை அகன்றதைக் கண்டு, கோபத்தால் தனது கண்களை அகல விரித்து, மரணத்தைப் போல காட்சியளித்தான்.
பிறகு மன்னன் யுதிஷ்டிரன் பெரும் விவேகத்துடன் அவனிடம், "நீ யார், யாருடையவன் (யாருடைய மகன்)? நாங்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்" என்று கேட்டான். இப்படிச் சொல்லப்பட்ட ராட்சசன், நீதிமானான யுதிஷ்டிரனிடம், "நான் பகனின் தம்பி, எல்லோராலும் கொண்டாடப்படும் கிர்மீரன் {Kirmira}. இங்கே வரும் மனிதர்களை வீழ்த்தி எனது உணவைச் சம்பாதித்து, யாருமற்ற இந்த காம்யக வனத்தில் வசதியாக வசிக்கிறேன். எனது உணவின் உருவில் எனது அருகில் வந்திருக்கும் நீங்கள் யார்? உங்கள் அனைவரையும் சண்டையில் வென்று, இன்பமாக உங்களை உண்பேன்" என்றான் {கிர்மீரன்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்தப் பாவியின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், யுதிஷ்டிரன் தனது பெயரைச் சொல்லி, தனது குல வழியைச் சொல்லத் தொடங்கினான், "நான் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகன். நீ என்னைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். நாட்டை இழந்த நான், எனது தம்பிகள் பீமசேனன், அர்ஜுனன், மேலும் மற்றவர்களுடன் சுற்றித் திரியும்போது, எனது வனவாச காலத்தைக் கழிக்க உனது ஆளுகைக்குட்பட்ட இந்தப் பயங்கரமான கானகத்திற்குள் வந்தேன்" என்றான்.
விதுரன் தொடர்ந்தான், "கிர்மீரன் யுதிஷ்டிரனிடம், "நல்ல அதிர்ஷ்டத்தாலேயே, விதி இன்று எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வந்திருக்கிறது! ஆயுதம் ஏந்திய நிலையிலேயே, இந்தப் பூமி முழுவதும் பீமனைக் கொல்லும் நோக்கத்தில் தொடர்ந்து சுற்றி வருகிறேன். ஆனால் நான் பீமனைக் காணவில்லை. நல்ல அதிர்ஷ்டத்தாலேயே, எனது சகோதரனைக் கொன்றவனும், நீண்ட நாள் நான் தேடி வந்தவனும் என்னிடம் வந்திருக்கிறான். அந்தண வேடத்தில் இருந்த அவனே எனது அன்புச் சகோதரனான பகனை, தான் கற்ற அறிவியலின் அறத்தால் வெட்ராக்கிய வனத்தில் {Vetrakiya forest} வைத்து கொன்றான்.
அவனுக்கு உண்மையில் கரத்தில் வலுவில்லை! முன்பொரு சமயம், அந்தத் தீய ஆன்மாவே இந்தக் கானகத்தில் இருந்த எனது அன்பு நண்பனான ஹிடிம்பனைக் கொன்று, அவனது தங்கையை {ஹிடிம்பையைக்} கற்பழித்தான். அந்த முட்டாள் இப்போது இந்த எனது ஆழ்ந்த கானகத்திற்குள், பாதி இரவு கழிந்து, அதுவும் நாங்கள் உலவ ஆரம்பிக்கும் சமயத்தில் வந்திருக்கிறான். இன்று நான் எனது நீண்ட நாள் பழியை இவனை {பீமனைத்} தண்டித்துத் தீர்த்துக் கொள்வேன். இன்று இவனிடம் {பீமனிடமிருந்து} இருந்து நிறைய இரத்தத்தை எடுத்து பகனைத் (பகனின் ஆவியை) திருப்திப்படுத்துவேன். ராட்சசர்களின் எதிரியைக் கொல்வதன் மூலம், எனது நண்பனுக்கும் {ஹிடும்பனுக்கும்}, எனது சகோதரனுக்கும் {பகனுக்கும்} நான் பட்ட கடனில் இருந்து விடுபட்டு மேலான மகிழ்ச்சியை அடைவேன். முன்பு பீமசேனன் பகனால் விடப்பட்டிருந்தாலும், இன்று உன் முன்னிலையில், ஓ யுதிஷ்டிரா, நான் அவனை {பீமனை} விழுங்குவேன். பெரும் அசுரனை (வாதாபியை) உண்டு செரித்த அகத்தியரைப் போல, நானும் இந்த பீமனை உண்டு செரித்துவிடுவேன்!" என்றான் {கிர்மீரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.