O Vidura, your speech is crooked | Vana Parva - Section 4 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
திருதராஷ்டிரன் விதுரனை அழைத்து ஆலோசனை கேட்டல்; விதுரன் பாண்டவர்களை அழைக்கச் சொல்லல்; திருதராஷ்டிரன் விதுரனை நிந்திப்பது; விதுரன் பாண்டவர்களிடம் செல்வது
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற பிறகு, தனது கண்ணைப் போன்ற ஞானம் கொண்டவனும் அம்பிகையின் மகனுமான திருதராஷ்டிரன் மிகுந்த சோகத்துக்கு உள்ளானான். வசதியாக அமர்ந்திருந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஆழமான அறிவு கொண்ட அறம் சார்ந்த விதுரனிடம், "உனது புரிதல் பார்கவனைப் {Bhargava -சுக்கிரனைப்} போன்று தெளிவானது. அனைத்து நுட்பங்களையும், நீதிகளையும் நீ அறிவாய். அனைத்து கௌரவர்களையும் சமமான பார்வையில் பார்ப்பவன் நீ. எனக்கும் அவர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பதைச் சொல். ஓ விதுரா, இப்படி காரியங்கள் நடந்திருக்கும் வேளையில், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? குடிமக்களிடம் நல்லெண்ணத்தை நான் எப்படிப் பெறுவேன்? நம்மை குடிமக்கள் வேர் வரை அழித்திடாமல் இருக்க, நான் எப்படி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவது? உகந்த அற்புதமான காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பதால், எங்கள் அனைவருக்கும் சொல்" என்றான் {திருதராஷ்டிரன்}.
விதுரன், "ஓ மன்னா {திருதராஷ்டிரா} மூன்று நெறிகள் (பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியன) அறத்திலேயே தங்கள் அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றன. நாடுகளின் அடித்தளங்களும் அறத்தை அடிப்படையாகக் கொண்டவையே என்று முனிவர்கள் சொல்கிறார்கள். ஆகையால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, உமது பலத்தில் சிறந்ததைக் கொண்டு, அறவழியில் உனது மகன்களையும், பாண்டுவின் மகன்களையும் பேணும். உனது மகன்கள் நீதிமானான யுதிஷ்டிரனை அழைத்து, பகடை ஆட்டத்தில் அவனை வீழ்த்திய போது, சுபலனின் மகனைத் {சகுனியைத்} தலைமையாகக் கொண்ட தீய ஆன்மாக்களுக்கு அந்த அறம் கிட்டியிருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இந்த முழு அநீதியை நான் நேராக்கப் பார்க்கிறேன். ஓ குருக்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, உமது மகன் பாவங்களில் இருந்து விடுபட்டு, நல்ல மனிதர்களிடம் தனது நிலையை மீட்டெடுக்கப் பார்க்கிறேன். உம்மால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அத்தனையையும் பாண்டுவின் மகன்கள் அடையட்டும். ஒரு மன்னன் தன் உடைமைகளில் திருப்திகொண்டு மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப்படக்கூடாது என்பது நிச்சயம் உயர்ந்த அறநெறியாகும். உமது நற்பெயர் பாதிக்கப்படாது. குடும்பத்துக்குள் வேற்றுமைகள் நிலவாது. நீர் நியாயமற்றவனாக இருக்க மாட்டீர். பாண்டவர்களைத் திருப்திப்படுத்தி, சகுனியைச் சிறுமைப்படுத்துவதே இப்போது உமது முக்கிய கடமையாகும். உமது மகன்களுக்கு, அவர்கள் தொலைத்த நற்பேறை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நீர் நினைத்தீரானால், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, இந்த நடத்தையை விரைவாக மேற்கொள்ளும். நீர் அப்படிச் செய்யவில்லை என்றால், குருக்கள் நிச்சயம் அழிவைச் சந்திப்பர். பீமசேனனோ அர்ஜுனனோ கோபப்பட்டால் எதிரிகளைக் கொல்லாமல் விட மாட்டார்கள். போரில் வல்லவனான சவ்யசச்சினையும் {அர்ஜுனனையும்}, உலகத்தின் ஆயுதங்களில் மிக வலிமையான காண்டீவத்தையும், பெரும் பலம்வாய்ந்த பீமனையும் கொண்டவர்களால் இந்த உலகத்தில் எதைத்தான் அடைய முடியாது? முன்பு, உமது மகன் {துரியோதனன்} பிறந்த காலத்தில் நான் உமக்கு *"இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது" என்று சொன்னேன். ஆனால் நீர் அதன்படி நடந்து கொள்ளவில்லை. ஓ மன்னா, இப்போதும் உமது நன்மைக்கான வழியையே குறிப்பிடுகிறேன். நான் சொல்வது போல நீர் நடந்தால், பின்னால் நீர் வருந்தத் தேவையில்லை. பாண்டுவின் மகன்களுடன் சேர்ந்து உமது மகனும் {துரியோதனனும்} ஒன்றாக ஆள மகிழ்ச்சியாகச் சம்மதிப்பானானால், பிற்பாடு நீர் வருந்த வேண்டியிருக்காது. வேறு மாதிரியாகச் செய்ய வேண்டுமானால், உமது மகிழ்ச்சிக்காக உமது மகனைக் கைவிடும். துரியோதனனை ஒதுக்கி, பாண்டுவின் மகனை ஆட்சி உரிமையில் நிறுவும். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆசையற்ற அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, இந்தப் பூமியை அறம் சார்ந்து ஆளட்டும். பிறகு, பூமியின் மன்னர்கள் அனைவரும் வைசியர்களைப் போல நமக்குத் தாமதமில்லாமல் காணிக்கை தருவார்கள். ஓ மன்னா {திருதராஷ்டிரா}, துரியோதனன், சகுனி மற்றும் கர்ணன் ஆகியோர் ஆயத்தத்துடன் பாண்டவர்களுக்காகக் காத்திருக்கட்டும். துச்சாசனன், திறந்த சபையில் பீமசேனனிடமும், துருபதனின் மகளிடமும் மன்னிப்பு கேட்கட்டும். அனைத்து அதிர்ஷ்டக்குறிகளும் கொண்ட யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தி அவனை நீர் தணிக்க வேண்டும். நீர் கேட்டதலா, நான் வேறு என்ன ஆலோசனை கூற முடியும்? இவற்றைச் செய்வதால், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, நீர் செழுமையை அடைவீர்" என்றான் {விதுரன்}.
திருதராஷ்டிரன், "ஓ விதுரா, இந்தச் சபையில் பாண்டவர்களைக் குறித்தும், என்னைக் குறித்தும் நீ சொல்லிய இவ்வார்த்தைகள், அவர்களுக்கு நன்மையே தவிர எங்களுக்கு இல்லை. எனது மனம் அதை ஏற்கவில்லை. இவற்றையெல்லாம் உனது மனத்தில் எப்படி தீர்மானம் செய்தாய்? நீ பாண்டவர்களின் சார்பாகப் பேசியதால், நீ என்னுடன் நட்பாக இல்லை என்பதைக் காண்கிறேன். பாண்டுவின் மகன்களுக்காக எனது மகன்களை நான் எப்படிக் கைவிடுவேன்? சந்தேகமற அவர்கள் எனது மைந்தர்கள்தான். ஆனால் துரியோதனன் எனது உடலில் இருந்து உதித்தவன். பாகுபாடு பார்க்காத எவன்தான் எனது உடலை மற்றவர்களுக்காகக் கைவிடச் சொல்வான்? ஓ விதுரா, உன்னை நான் உயர்ந்த மதிப்பில் வைத்திருந்தாலும், நீ சொல்வது அனைத்தும் கபடமாக இருக்கிறது. நீ விரும்பியவாறு இங்கு இருக்கவோ அல்லது இங்கிருந்து நீ போகவோ செய்யலாம். என்னதான் மகிழ்ச்சியூட்டப்பட்டாலும், கற்பற்றவள் கணவனை ஏமாற்றத்தான் செய்வாள்" என்றான்.
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயனே}, இதைச் சொன்ன திருதராஷ்டிரன், திடீரென எழுந்து, உள் அறைகளுக்குள் சென்றான். விதுரன், "இந்தக் குலம் அழிந்தது" என்று சொல்லி, பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} இருக்கும் இடத்திற்குச் சென்றான்.
---------------------------------------------------------------------------------------------
*"இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது"........
மேலும் விவரங்களுக்கு:
அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் ஒரு மகனையும் பெற்றான். பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் ரதவீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்."
ஜனமேஜயன், "ஓ அந்தணர்களில் சிறந்தவரே, எப்படி காந்தாரி அந்த நூறு மகன்களையும் பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்?...........
---------------------------------------------------------------------------------------------
*"இந்த அதிர்ஷ்டமற்ற குழந்தையைக் கைவிடும். இதில் தான் உமது குலத்தில் நன்மை இருக்கிறது"........
மேலும் விவரங்களுக்கு:
அரசனே! துரியோதனனைக் கைவிடு! - ஆதிபர்வம் பகுதி 115
வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா, அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் ஒரு மகனையும் பெற்றான். பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் ரதவீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்."
ஜனமேஜயன், "ஓ அந்தணர்களில் சிறந்தவரே, எப்படி காந்தாரி அந்த நூறு மகன்களையும் பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்?...........