Yudhishthira attained Akshayapathra | Vana Parva - Section 3b | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
யுதிஷ்டிரன், "ஓ சூரியனே, நீ இந்த அண்டத்தின் விழியாக இருக்கிறாய். அனைத்து உடல்களுக்கும் நீயே ஆன்மாவாக இருக்கிறாய். நீயே அனைத்திற்கும் மூலமாக இருக்கிறாய். நீயே அறம் சார்ந்தவர்களின் செயல்களில் இருக்கிறாய். சாங்கிய தத்துவத்தை (ஆன்மாவின் புதிர்களை) அறிந்தவர்களுக்கு நீயே புகலிடமாக இருக்கிறாய். {மோட்சமடைய} தாழில்லாத கதவாக நீயே இருக்கிறாய். {அடிமைத்தனத்திலிருந்து} விடுதலை விரும்புவோருக்கு நீயே புகலிடமாக இருக்கிறாய். உனது தூய இரக்கத்தால், உலகத்தை நிலைக்க வைத்து, கண்டறியப்பட வைத்து, புனிதப்படுத்தி நீயே ஆதரவுமளிக்கிறாய். வேதங்களை அறிந்த அந்தணர்கள் உனது முன்னால் தோன்றி, குறிப்பிட்ட நேரத்தில் உன்னை வழிபட்டு, குறிப்பிட்ட (வேதங்களின்} கிளைகளில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர்.
முனிவர்களால் நீயே வணங்கப்படுகிறாய். சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், குஹ்யர்கள், நாகர்கள் ஆகியோர் வரங்களைப் பெற விரும்பி வானத்தில் உலவும் உனது ரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர். உபேந்திரனுடன் (விஷ்ணுவுடன்) கூடிய முப்பத்து மூன்று {33} தேவர்களும் {எட்டு {8} வசுக்கள் , பதினோரு {11} ருத்திரர்கள், பனிரெண்டு {12} ஆதித்யர்கள், பிரஜாபதி மற்றும் வஷத்கரன் ஆகியோரும்}, மகேந்திரனும், வைமானிகங்களின் {தேவர்களின்} வரிசைகளும் உன்னை வழிபட்டு, வெற்றியடைந்திருக்கின்றனர். தெய்வீக மந்தார மலர்களால் ஆன மாலைகளை உனக்குப் படைத்து, வித்யாதரர்களில் சிறந்தவர்கள் தங்கள் ஆசைகள் அத்தனையும் அடைந்தனர்.
குஹ்யர்களும், தெய்வீக மற்றும் மனிதத் தன்மையிலான பித்ருக்களின் ஏழு வகைகளும் உன்னை மட்டுமே வழிபட்டு மேன்மை அடைந்தனர். வசுக்கள், மனிலங்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மாரிசிபர்கள், வாலஹில்யர்கள், சித்தர்கள் ஆகியோர் உன்னை வணங்கியே உயர்ந்த புகழை அடைந்தனர். ஏழு உலகங்கள் மொத்தத்திலும், பிரம்மனையும் சேர்த்து உன்னை விஞ்சிய ஒன்றை நான் காணவில்லை. சக்தியும் பெருமையும் கொண்ட மற்றவை இருப்பினும், அவை அனைத்தும் உனது பிரகாசத்திற்கும் சக்திக்கும் ஈடற்றவையாகும். அனைத்து ஒளியும் உன்னுள் இருக்கிறது. நீயே அனைத்து ஒளிகளின் தலைவன். உனக்குள்ளேயே (ஐந்து) பூதங்களும், அனைத்து புத்திசாலித்தனமும், ஞானமும், தவமும், தவத்தன்மைகளும் {அணிமா, லகிமா ஆகியன} இருக்கின்றன.
அசுரர்களின் கர்வத்தை அடக்குபவனான சாரங்கத்தைத் தாங்குபவனின் {விஷ்ணுவின்} கைகளில் இருக்கும் சக்கரத்தை, உனது சக்தியை உள்ளடக்கியே விஸ்வகர்மன் செதுக்கினான். கோடை காலத்தில் உனது கதிர்களால் அனைத்து உடல்களில் இருந்தும், செடிகள் மற்றும் நீர்ப் பொருட்களில் இருந்தும் நீர்மையை எடுத்து, மழைக்காலத்தில் அவற்றை மழையாகப் பொழிகிறாய். உனது வெப்பம் மிகுந்த கதிர்களே மேகங்களாகி, மின்னலுடன் கர்ஜித்து உரிய காலத்தில் மழையாகப் பொழிகிறது. குளிரால் பாதிக்கப்பட்டவனுக்கு நெருப்போ, உறைவிடமோ, கம்பளி ஆடைகளோ உனது கதிர்களை விட மேலான சுகத்தைக் கொடுக்க முடியாது. பதிமூன்று தீவுகள் கொண்ட இந்த முழு உலகத்துக்கும் நீயே ஒளியூட்டுகிறாய்.
நீ எழவில்லையென்றால் அண்டமே குருடாகிறது. அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் கற்றவர்களால் ஈடுபட முடியாது. அந்தணர்கள், க்ஷத்திரியர்கள் வைசியர்கள் ஆகிய மூன்று வகையினரும் தங்கள் தினசரிக் கடமைகளையும், வேள்விகளையும் உனது கருணையாலேயே செய்ய முடிகிறது. நீயே பிரம்மாவின் ஆயிரம் யுக காலத்தின் ஆதியும் அந்தமுமான நாளாக இருக்கிறாய் என்று காலவரிசை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். மனுக்கள், மனுக்களின் மகன்கள், அண்டம், மனிதன், மன்வந்தரம் மற்றும் அவற்றின் தலைவர்கள் ஆகிய அனைத்துக்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். பிரளய காலத்தின் போதும் உனது கோபத்தால் சம்வர்தகம் என்ற நெருப்பு உண்டாகி மூன்று உலகத்தையும் எரித்த பிறகு, நீ மட்டுமே எஞ்சியிருப்பாய். உனது கதிர்களில் இருந்து பல வண்ணங்களில் மேகங்கள் உற்பத்தியாகி, ஐராவதம் மற்றும் இடியின் துணை கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட பிரளயம் வந்து சேரும். நீயே இந்திரன் என்று அழைக்கப்படுகிறாய். நீயே விஷ்ணு, நீயே பிரம்மா, நீயே பிரஜாபதி, நீயே நெருப்பு, நீயே நுட்பமான மனது. நீயே தலைவன், நீயே நித்தியமான பிரம்மா. நியே ஹன்சா, நீயே சாவித்ரி, நீயே பானு, நீயே அன்சுமாலின், நீயே பிருஹஸ்பதி, நீயே விஸ்வஸ்வான், மிஹிரா, புஷா, மித்ரா, மற்றும் தர்மனுமாவாய். நீயே ஆயிரம் கதிர்கள் கொண்ட ஆதித்யன், தபனன் மற்றும் கதிர்களின் தலைவனும் ஆவாய். நீயே மார்த்தாண்டன், ஆர்க்கன், ரவி, சூரியன், சாரண்யன் மற்றும் நாளை உண்டாக்குபவன், திவாகரன், சுப்தசஸ்ப்தி, தூமகேசின், விரோசனன். நீயே வேகமானவன், இருளை அழிப்பவன், மஞ்சள் குதிரைகள் கொண்டவனாக இருக்கிறாய்.
ஆறாவது அல்லது ஏழாவது சந்திர நாளில் {சஷ்டி அல்லது சப்தமியில்} உன்னை மரியாதையுடன் வழிபடுபவன், பணிவுடனும், மன அமைதியுடனும், லட்சுமியின் அருளுடனும் இருப்பான். பிரிந்து போகா கவனத்துடன் உன்னை வழிபடுபவன், அனைத்து அச்சம், துன்பம் மற்றும் பாதிப்புகளில் இருந்து உன்னால் விடுவிக்கப்படுகிறான். உன்னை அனைத்திலும் காண்பவர்கள் நீடூழி வாழ்ந்து, பாவங்களில் இருந்து விடுதலை பெற்று, நோயற்ற வாழ்வு வாழ்ந்து, இன்புற்று இருப்பர். ஓ அனைத்து உணவுகளின் தலைவனே, எனது விருந்தினர்களுக்கு மரியாதையுடன் உணவு வழங்க விரும்பும் எனக்கு, அபரிமிதமான உணவை அளிப்பாயாக. உனது பாதத்தைப் புகலிடமாகக் கொண்டு உன்னைத் தொடர்பவர்களான மதரன், அருணன், தண்டன் மற்றும் அசனி, க்ஷூவா உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். க்ஷூவா மற்றும் மைத்திரி ஆகிய அனைத்து உயிர்களின் தெய்வீகத் தாய்மாரையும், மற்றவர்களையும் வணங்குகிறேன். அவர்கள் அனைவரும் தங்கள் பங்கை எனக்குக் கொடுக்கட்டும்" என்று வேண்டினான்.
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா, இப்படியே உலகைச் சுத்தப்படுத்தும் சூரியன், (யுதிஷ்டிரனால்} வணங்கப்பட்டான். தன்னொளி கொண்டு நாளை உண்டாக்குபவன், இந்தப் பாடலால் திருப்தியடைந்து, பாண்டுவின் மகன் முன்னிலையில் தகிக்கும் தனலெனத் தன்னை வெளிப்படுத்தினான். விவஸ்வான் {சூரியன்}, "நீ விரும்பியது அனைத்தையும் அடைவாய். பனிரெண்டு வருடங்களுக்குத் தேவையான உணவை நான் உனக்குத் தருகிறேன். ஓ மன்னா, நான் உனக்குக் கொடுக்கும் இந்தத் தாமிரப் பாத்திரத்தைப் பெற்றுக் கொள். ஓ அற்புதமான நோன்புகள் கொண்டவனே, பாஞ்சாலி, இந்தப் பாத்திரத்தை, அதன் உள்ளடக்கங்களுடன், அதாவது உனது சமையலறையில் சமைக்கப்பட்ட பழங்கள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறிகளுடன் வைத்திருக்கும்வரை, இந்த நான்கு வகையான உணவுகளும் இந்த நாள் முதல் வற்றாமல் இருக்கும். இன்றிலிருந்து பதினான்காம் வருடத்தில் நீ உனது நாட்டை அடைவாய்" என்றான்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்தத் தேவன் பிறகு மறைந்து போனான். வரம் வேண்டி இந்தப் பாடலை {hymn} மன ஒருங்கிணைப்புடன், பாடினால் நினைக்கும் வரம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நிச்சயம் அதை அடையலாம். மனிதர்களில் ஆணோ பெண்ணோ, தினமும் இதைப் பாடினாலோ, கேட்டாலோ, அந்த அவனோ அவளோ, மகனை விரும்பினால், அதை அடைவார்கள். செல்வத்தையும் கல்வியையும் விரும்பினாலும் அதையும் அடைவார்கள். ஆணோ பெண்ணோ இந்தப் பாடலை தினமும் இரு சந்திகாலத்திலும் {பொழுது உதிக்கும் அதிகாலையிலும், பொழுதுசாயும் மாலையிலும்}, பாடி வந்தால், ஆபத்துகளில் இருந்தும் கட்டுகளில் இருந்தும் விடுபடுவார்கள். இந்தப்பாடலை, சிறப்பு மிகுந்த சக்ரனுக்கு {இந்திரனுக்கு} பிரம்மனே சொல்லியிருக்கிறார். சக்ரனிடமிருந்து நாரதரும், நாரதரிடம் இருந்து தௌமியரும், தௌமியரிடம் இருந்து யுதிஷ்டிரனும் இதை அடைந்து, தங்கள் விருப்பங்களை அடைந்தனர். இந்தப் பாடலின் அறத்தாலேயே ஒருவன் போரில் வெற்றியை அடையலாம், பெரும் செல்வத்தையும் அடையலாம். இதைப் படிப்பவர்களை அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவித்து, சூரிய பகுதிக்கு அழைத்துச் செல்கிறது இந்தப் பாடல்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "வரத்தை அடைந்த குந்தியின் அறம் சார்ந்த மகன், நீரில் இருந்து எழுந்து, தௌமியரின் பாதங்களில் விழுந்து, தனது தம்பிகளை ஆரத்தழுவிக் கொண்டான். ஓ மேன்மையானவனே, சமையலறையில் இருந்த திரௌபதியிடம் சென்று, அவளால் வழிபடப்பட்ட அந்தப் பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, {அவர்களுக்கான} அன்றைய உணவைச் சமைத்தான். சுத்தமான உணவு, எவ்வளவு குறைவாக இருந்தாலும், அந்தப் பாத்திரத்தில் இட்டதும், நான்கு சுவைகளுடன் {பழங்கள், கிழங்குகள், இறைச்சி மற்றும் காய்கறி}, பல்கிப் பெருகி அளவற்றதானது. அதைக் கொண்டு யுதிஷ்டிரன் மறுபிறப்பாளர்களுக்கு {அந்தணர்களுக்கு} உணவளித்தான். அந்தணர்களுக்கு உணவு அளித்த பிறகு, தனது தம்பிகளுக்கும் கொடுத்தான். அதன் பிறகு, விகாசா என்று அழைக்கப்பட்ட மீத உணவை யுதிஷ்டிரன் உண்டான். யுதிஷ்டிரன் உண்ட பிறகு, மேலும் மீந்திருந்ததை பிரிஷாதனின் மகள் {திரௌபதி} உண்டாள். அவள் உணவை உண்டதும், அன்றைய பொழுதுக்கான உணவு தீர்ந்துவிடும்.
நாளை உண்டாக்குபவனிடம் {சூரியனிடம்} இருந்து, இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} தேவர்களைப் போலப் பிரகாசித்து, அந்தணர்களின் விருப்பத்திற்கேற்ற வகையில் அவர்களை மகிழ்வித்தான். தங்கள் புரோகிதருக்குக் {தௌமியருக்குக்} கீழ்ப்படிந்து நடந்த பிருதையின் {குந்தியின்} மகன்கள், அதிர்ஷ்டகரமான சந்திர நாள், அமாவாசை, பௌர்ணமிகளில் விதிப்படியும், சாத்திரப்படியும் உரிய மந்திரங்களுடன் வேள்விகளைச் செய்தனர். அந்த வேள்விகள் முடிந்ததும், பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, தௌமியரால் சொல்லப்பட்ட அதிர்ஷ்டகரமான சடங்குகளை எல்லாம் செய்து, அவரையும் அழைத்துக் கொண்டு, அந்தணர்களால் சூழ, காம்யக வனத்திற்கு கிளம்பிச் சென்றனர்.