Yudhishthira divide thy property | Vana Parva - Section 1 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
விதுரன் பாண்டவர்களைக் காம்யக வனத்தில் சந்தித்தல்; விதுரன் திருதராஷ்டிரன் சொன்னவற்றை பாண்டவர்களுக்குச் சொல்லல்...
வைசம்பாயனர் சொன்னார், "காட்டில் வாழ விரும்பிய அந்த பாரத குலத்துக் காளைகளான பாண்டவர்கள், தங்களைத் தொடர்பவர்களுடன், கங்கைக் கரையில் இருந்து குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றனர். சரஸ்வதி, திரிசத்வதி மற்றும் யமுனையில் {நதிகளில்} தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, ஒரு கானகத்தை விட்டு மற்றொரு கானகத்திற்கு மேற்கு நோக்கிப் பயணித்தனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அவர்கள், முனிவர்கள் அடிக்கடி செல்லும் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள காம்யக வனத்திற்குச் சென்றனர்.
ஓ பாரதா {ஜனமேஜயா}, பறவைகளும் மான்களும் நிறைந்த அந்தக் கானகத்தில் அந்த வீரர்கள் முனிவர்களால் உற்சாகமும் ஆறுதலும் அடைந்து அங்கேயே வசிக்கத் தொடங்கினர். பாண்டவர்களைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த விதுரன், அனைத்து நற்பொருட்களும் நிரம்பிய காம்யக வனத்திற்கு தனி ரதத்தில் நுழைந்தான். வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட ரதத்தில் காம்யக வனத்தை அடைந்து, நீதிமானான யுதிஷ்டிரன் திரௌபதியுடன் ஓய்வாக இருப்பதையும், தம்பிகளும் அந்தணர்களும் சூழ்ந்திருப்பதையும் கண்டான். வேகமான எட்டுகளுடன் நடந்து வந்த விதுரனைக் கண்ட அறம்சார்ந்த மன்னன் {யுதிஷ்டிரன்} தனது தம்பியான பீமசேனனிடம், "என்ன செய்தியுடன் க்ஷத்தா {விதுரர்} இங்கு வருகிறார்? சகுனியால் அனுப்பப்பட்டு, மீண்டும் பகடையாட நம்மை அழைக்க வருகிறாரா? சிறு மனம் கொண்ட சகுனி நமது ஆயுதங்களையும் பகடையின் மூலம் வெல்லலாம் என நினைக்கிறானா? ஓ பீமசேனா, நான் சவாலுக்கு அழைக்கப்பட்டால், என்னால் இங்கு தங்க முடியாது. நீ வா. காண்டீவத்தின் இருப்பு சந்தேகத்துக்கிடமானால், நாம் நமது நாட்டை அடையவே முடியாது" என்றான்.
வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் எழுந்திருந்து விதுரனை வரவேற்றனர். அவர்களால் வரவேற்கப்பட்ட அஜமீட குலத்தைச் சேர்ந்தவன் (விதுரன்) அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, வழக்கமான விசாரிப்புகளை விசாரித்தான். சிறிது நேரம் விதுரன் ஓய்வெடுத்த பிறகு, அந்த மனிதர்களில் காளைகள், அவன் {விதுரன்} வந்த காரணத்தைக் கேட்டனர். விதுரன் அவர்களுக்கு அம்பிகையின் மகன் திருதராஷ்டிரன் சொன்னது தொடர்பான அத்தனையும் விவரமாகச் சொன்னான்.
விதுரன், "ஓ அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, திருதராஷ்டிரன், அவரை நம்பியிருக்கும் என்னை அழைத்து தக்க மரியாதைகள் செய்து, "காரியங்கள் இப்படி நடந்திருக்கின்றன. இப்போது, பாண்டவர்களுக்கும் எனக்கும் எது நல்லது என்பதைச் சொல்." என்று கேட்டார். நான் கௌரவர்களுக்கு திருதராஷ்டிரனுக்கும் நன்மை பயக்கும் காரியங்களைச் சொன்னேன். நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. ஓ பாண்டவர்களே, நான் கூறிய ஆலோசனைகள் மிகுந்த நன்மை பயக்கத்தக்கவை, ஆனால் அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்} அவற்றை கவனிக்கத் தவறிவிட்டார். நோய்வாய்ப்பட்டவனுக்கு மருந்து எப்படிப் பிடிக்காதோ அப்படி எனது வார்த்தைகள் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} தோற்றன. ஓ எதிரிகள் அற்றவனே {யுதிஷ்டிரனே}, சுத்தமான வழியில் வந்த குடும்பத்திலுள்ள அனைத்து கற்பற்ற தந்திரசாலிகளையும் அறத்தின் பாதைக்குக் கொண்டு வர முடியாது. ஆகையால் என்னால் திருதராஷ்டிரனைத் திருப்ப முடியவில்லை. மூன்று இலக்க வயது அடைந்தவனை இளம் பெண்ணுக்குப் பிடிக்காதது போல, திருதராஷ்டிரருக்கு எனது வார்த்தைகள் பிடிக்கவில்லை. நிச்சயம் குருக்களின் குலத்துக்கு அழிவு ஏற்படப்போகிறது. நிச்சயம் திருதராஷ்டிரர் நற்பேறை அடையமாட்டார். எப்படி தாமரை இலையில் விழுந்த தண்ணீர் அப்படியே நிற்கிறதோ, அதே போல எனது ஆலோசனைகள் அத்தனையும் திருதராஷ்டிரரிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பிறகு கோபம் கொண்ட திருதராஷ்டிரர், "ஓ பாரதா {விதுரா}, நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கே செல். இனிமேல் இந்த பூமியையோ அல்லது நகரத்தையோ ஆள உனது துணையை நாட மாட்டேன்" என்று சொன்னார். ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவனே {யுதிஷ்டிரனே}, மன்னர் திருதராஷ்டிரனால் கைவிடப்பட்டு, நல்ல ஆலோசனைகளை வழங்கவே உன்னிடம் வந்தேன். நான் அந்தத் திறந்த சபையில் என்ன சொன்னேன் என்பதை மறுபடியும் கூறுகிறேன். நான் சொல்வதைக் கேட்டு மனதில் வைத்துக் கொள். பகைவர்களால் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டவன், பொறுமையுடன் இருந்து தனக்கு ஆதரவுகளைத் தேடிக்கொண்டு, சிறு நெருப்பை உண்டாக்கிய மனிதர்கள், அதை பெரும் நெருப்பாக மாற்றி விடுவது போல மொத்த உலகையும் தனியாக ஆள்வான். ஒருவனின் செல்வத்தை துணைவர்களுக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், அதுவே துணைவர்களை அடையும் சிறந்த வழியாகும். துணைவர்களைக் கொண்டவன், உலகத்தின் அரசுரிமையை வெல்கிறான் என்று சொல்லப்படுகிறது. ஓ பாண்டவனே {யுதிஷ்டிரனே}, உனது செல்வத்தை உனது துணைவர்களுக்கு பகிர்ந்து கொடு. எப்போதும் அவர்களுடன் உண்மையாக நடந்து கொள். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசு. உனது உணவைக் கூட அவர்களுடன் பகிர்ந்து கொள். அவர்கள் எதிரில் தற்பெருமை பேசாதே! இந்த நடத்தை மன்னர்களின் செழுமையை வளர்க்கிறது!" என்றான்.
யுதிஷ்டிரன், "ஆசையில் சபலமடையாமல், இந்த உயர்ந்த அறிவை அறிந்து, நீர் அறிவுறுத்துவது போலவே நடந்து கொள்கிறேன்! காலம், இடம் குறித்து என்ன ஆலோசனை சொல்கிறீரோ அதன்படியே கவனமாக நடந்து கொள்கிறேன்" என்றான்.