The reprehension of Vyasa | Vana Parva - Section 8 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
திருதராஷ்டிரனைச் சந்தித்த வியாசர், துரியோதனன் செயல்களைக் குறித்து கண்டித்தது.
வியாசர் சொன்னார், "ஓ ஞானமுள்ள திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள்! அனைத்து கௌரவர்களுக்கும் பெரும் நன்மையானது எது என்பது குறித்து நான் உனக்குச் சொல்கிறேன். ஓ பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே, துரியோதனனும் மற்றவர்களும் பாண்டவர்களை நேர்மையற்ற முறையில் (பகடையில்) வீழ்த்தி காட்டுக்கு அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.
ஓ பாரதா {திருதராஷ்டிரா}, பதிமூன்று {13} வருடங்கள் முடிந்ததும், அவர்கள் {பாண்டவர்கள்} தங்கள் துன்பங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, கடும் விஷம் போன்றதும் மரணத்தைத் தருவதுமான ஆயுதங்களை மழையென கௌரவர்கள் மீது பொழிவார்கள். இதயத்தில் தீமை கொண்ட உனது பாவகர மைந்தன் {துரியோதனன்} எப்போதும் சினம் கொண்டு, ஏன் பாண்டு மகன்களின் நாட்டை அடைய அவர்களைக் கொல்ல முயல்கிறான்? அந்த முட்டாள் {துரியோதனன்} தடுக்கப்பட்டிருக்கட்டும்; உனது மகன் {துரியோதனன்} அமைதியாக இருக்கட்டும். நாடு கடந்து இருக்கும் பாண்டவர்களைக் கொல்ல முனைந்தால், அவன் {துரியோதனன்} தனது உயிரைத் தான் இழப்பான்.
நீ ஞானமுள்ள விதுரனைப் போல, பீஷ்மனைப் போல, எங்களைப் போல, கிருபனைப் போல, துரோணனைப் போல நேர்மையுடையவன். ஓ பெரும் ஞானம் கொண்டவனே, உனது பிள்ளைகளுக்குள் பாகுபாடு பார்ப்பது தகாது. அது பாவகரமானது. கண்டிக்கத்தக்கது! ஆகையால், ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீ இதுபோன்ற காரியங்களில் இருந்து விலகியிரு!
ஓ பாரதா {திருதராஷ்டிரா}, நீ தலையிடவில்லை என்றால், பாண்டவர்கள் மீது துரியோதனன் கொண்டிருக்கும் பொறாமை, பெரும் நாசத்தையே விளைவிக்கும். அல்லது ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, உனது தீய மகன் {துரியோதனன்}, கானகத்திற்குச் சென்று பாண்டுவின் மகன்களுடன் வாழட்டும். அப்படிச் செய்தால், இப்படி ஏற்படும் தொடர்பினால், பாண்டவர்களுக்கு துரியோதனன் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படலாம். அப்படி நடந்தால் நற்பேறு உனதாகும். (இருப்பினும், இப்படி நடக்காது). ஒருவனின் பிறவிக்குணம், மரணம் வரை அவனைவிட்டு நீங்காது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் {இவ்விஷயத்தில்} பீஷ்மன், துரோணன், விதுரன் ஆகியோர் என்ன நினைக்கிறார்கள்? நீ என்ன நினைக்கிறாய்? காலம் இருக்கும்போதே நன்மைக்கான காரியங்களைச் செய்துவிட வேண்டும். இல்லையென்றால், உனது காரியங்களுக்கு தீர்வு கிடைக்காது" என்றார் {வியாசர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.