Did Karna perquisite in virtue? | Vana Parva - Section 7 | Mahabharata In Tamil
(ஆரண்யக பர்வத் தொடர்ச்சி)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
விதுரன் திரும்பி வந்ததை அறிந்த துரியோதனன் பாண்டவர்களை திரும்ப அழைத்து வரப் போகிறார் மன்னர் என்று துயர் கொள்வது; கர்ணன், துச்சாசனன், சகுனி ஆகியோரை அழைத்து துரியோதனன் ஆலோசனை செய்தல்; பாண்டவர்கள் திரும்பி வந்தால் தக்க ஆலோசனை செய்வோம் என்று சகுனி சொல்வது; பாண்டவர்கள் திரும்பி வந்தால் மறுபடியும் பகடையில் வீழ்த்து என்று கர்ணன் சொல்வது; அவர்கள் திரும்பி வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று துரியோதனன் சொல்வது; கோபம் கொண்ட கர்ணன், மூவரையும் அழைத்துக் கொண்டு பாண்டவர்களைக் கொல்ல கிளம்பியது. வியாசர் அவர்களைத் தடுத்தது....
வைசம்பாயனர் சொன்னார், "விதுரன் திரும்பி வந்ததையும், மன்னன் {திருதராஷ்டிரன்} அவனைச் சமாதானப் படுத்தியதையும் கேள்விப்பட்ட, திருதராஷ்டிரனின் தீய மனம் கொண்ட மகன் {துரியோதனன்} துயரால் எரிய ஆரம்பித்தான். அறியாமை எனும் மேகத்தால் ஞானம் மறைக்கப்பட்ட அவன் {துரியோதனன்}, சுபலனின் மகன் {சகுனி}, கர்ணன் மற்றும் துச்சாசனனை அழைத்து அவர்களிடம், "கற்றவரும், திருதராஷ்டிரரின் ஞானமுள்ள அமைச்சருமான விதுரர் திரும்பிவிட்டார்! பாண்டு மகன்களின் நண்பரான அவர், எப்போதும் அவர்களுக்கு நன்மை செய்வதிலேயே ஈடுபட்டு வருகிறார்.
இந்த விதுரர், அவர்களைத் {பாண்டவர்களைத்} திரும்ப அழைக்கும் வகையில் மன்னனை {திருதராஷ்டிரனை} மயக்குவதில் வெற்றிபெறும் முன்னர், எனக்கு நன்மையைச் செய்ய நினையுங்கள். எனது பாதையில் வேறு எந்தத் தடையும் இல்லை என்றாலும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் திரும்பி வருவதை நான் கண்டால், உணவையும், நீரையும் தவிர்த்து மீண்டும் மெலிந்தவனாகிவிடுவேன். விஷத்தை உட்கொள்வேன் அல்லது தூக்கு மாட்டிக் கொள்வேன், அல்லது நெருப்புக்குள் நுழைவேன் அல்லது எனது ஆயுதங்களைக் கொண்டே என்னை நான் கொன்று கொள்வேன். ஆனால் பாண்டுவின் மகன்கள் செழிப்பாக இருப்பதை என்னால் காண முடியாது’’, {என்றான் துரியோதனன்} .
சகுனி, "ஓ மன்னா, பூமியின் தலைவா, ஏன் இப்படி அறியாமையில் இருக்கிறாய்? ஒரு குறிப்பிட்ட சபதத்தை ஏற்று பாண்டவர்கள் கானகம் சென்றுவிட்டார்கள். ஆகையால் நீ நினைப்பது நடக்காது. அகையால், அவர்கள் உனது தந்தையின் {திருதராஷ்டிரனின்} வார்த்தைகளை ஏற்கமாட்டார்கள்! இருப்பினும், அவர்களின் சபதத்தை மீறி மன்னனின் உத்தரவுக்கிணங்கி அவர்கள் தலைநகருக்குத் திரும்பினாலும், நாம் நடுநிலையாக ஏகாதிபதியின் {திருதராஷ்டிரரின்} உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து இருப்பது போலக் காண்பித்து, பாண்டவர்களை நெருக்கமாகக் கவனித்து, நமது ஆலோசனைகளைத் தொடர்வோம்" என்றான்.
துச்சாசனன், "ஓ பெரும் புத்திகூர்மை கொண்ட மாமா {சகுனி}, நீர் சொல்வது போலத் தான் இது இருக்கிறது! நீர் உச்சரிக்கும் ஞானத்தின் வார்த்தைகள் எனக்குப் புரிகிறது" என்றான்.
கர்ணன், "ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிடம் ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும் தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.
கர்ணன், "ஓ துரியோதனா, நாம் அனைவரும் உனது விருப்பத்தைச் சாதிக்கவே முயல்கிறோம். ஓ மன்னா {துரியோதனா}, நான் இப்போது நம்மிடம் ஒருமித்த நிலை நிலவுவதைப் பார்க்கிறேன். ஆசைகளைத் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாண்டுவின் மகன்கள், உறுதி ஏற்றுக் கொண்ட காலத்தைக் கழிக்காமல் திரும்பி வரமாட்டார்கள். இருப்பினும் தோல்வி மனப்பான்மையில் அவர்கள் திரும்பி வந்தால், அவர்களை மீண்டும் பகடையில் வீழ்த்து" என்றான்.
வைசம்பாயனர் சொன்னார், "கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியற்ற இதயத்துடன், தனது ஆலோசகர்களிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். இதையெல்லாம் குறித்துக் கொண்ட கர்ணன், தனது அழகான கண்களை விரித்து, கடுமையான கோபத்துடன் தனது உறுப்புகளை {உடலை} அசைத்து, அலட்சியத்துடன் துரியோதனன், துச்சாசனன் மற்றும் சுபலனின் மகனிடம் {சகுனிடம்}, "இளவரசர்களே, எனது கருத்தை அறிந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் மன்னனின் (துரியோதனனின்) நலத்தை விரும்பி, கூப்பிய கரங்களுடன் அவனுக்காகக் காத்திருக்கும் பணியாட்கள். ஆகையால், நாம் அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும்!
ஆனால், நம்மால் எப்போதும் அவனது நலத்தைக் காக்க (நாம் திருதராஷ்டிரரை நம்பி இருப்பதால்) உடனே செயல்பட முடியவில்லை. நாம் இப்போது, கவசங்களைத் தரித்து, ஆயுதங்களைத் தாங்கி, நமது ரதங்களில் ஏறி, ஒன்றுசேர்ந்து சென்று, காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களைக் கொல்லச் செல்வோம். பாண்டவர்களை அமைதிப்படுத்தி, அறியமுடியா பயணத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தால்தான், நாம் இருவரும், திருதராஷ்டிரரின் மகன்களும் அமைதியை அடைய முடியும். அவர்கள் {பாண்டவர்கள்}, துயரத்தில் இருக்கும்வரை, சோகத்தில் இருக்கும் வரை, உதவியற்று இருக்கும் வரை, அந்தக் காலம் வரை மட்டுமே நாம் அவர்களுக்குச் சமமானவர்கள்! இதுவே என் மனம் {கருத்து}" என்றான்.
தேரோட்டி மகனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் தொடர்ந்து அவனைப் பாராட்டி, "நன்று" என்று உரக்கச் சொல்லி, ஒவ்வொருவரும் தங்கள் ரதங்களில் ஏறி, இரத்தச் சிவப்பான வெற்றிக்காக ஒருங்கிணைந்து, பாண்டுவின் மகன்களைக் கொல்ல விரைந்தனர். தனது ஆன்மப் பார்வையால், அவர்கள் வெளியேறியதை அறிந்த சுத்தமான ஆன்மா கொண்ட கிருஷ்ண துவைபாயனர்{வியாசர்} அவர்களிடம் வந்து, அவர்களைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டார். அவர்களைத் திருப்பி அனுப்பிய அந்தப் புனிதமானவர் {வியாசர்}, அவனது கண்பார்வையைப் போன்ற புத்திகூர்மை கொண்ட மன்னனின் {திருதராஷ்டிரனின்} முன்பு விரைவாகத் தோன்றினார். வசதியாக அமர்ந்திருந்த மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} அந்தப் புனிதமானவர் {வியாசர்} பேச ஆரம்பித்தார்.