Arjuna's fierce austerity | Vana Parva - Section 38 | Mahabharata In Tamil
(கைராத பர்வம்)
அர்ஜுனன் கடுந்தவத்தை மேற்கொள்வது; அந்த தவத்தால் ஏற்படும் அனலைத் தாங்க முடியாமல் முனிவர்கள் அனைவரும் பரமசிவனிடம் சென்று அர்ஜுனன் குறித்து முறையிடுவது; பரமசிவன் தக்கது செய்வதாக வாக்களிப்பது.
*ஜனமேஜயன் சொன்னான், "ஓ சிறந்தவரே {வைசம்பாயணரே}, களங்கமற்ற சாதனைகள் கொண்ட அர்ஜுனன் ஆயுதங்கள் அடைந்த வரலாற்றை நான் விவரமாகக் கேட்க விரும்புகிறேன். மனிதர்களில் புலியான பெரும் பலம் வாய்ந்த கரங்களும், பெரும் சக்தியும் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்தக் கானகத்தில் தனிமையாக எப்படி நுழைந்தான். வேதமறிந்தவர்களில் முதன்மையானவரே, அங்கே வசிக்கும்போது அர்ஜுனன் என்ன செய்து கொண்டிருந்தான்? சிறப்பு வாய்ந்த ஸ்தானுவும், தேவர்கள் தலைவனும் அவனால் {அர்ஜுனனால்} எப்படி திருப்திசெய்யப்பட்டார்கள்? ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} சிறந்தவரே, உமது உதவியால் நான் அவற்றைக் கேட்க விரும்புகிறேன். நீரே அனைத்தையும் அறிந்தவர்; தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் நீர் அறிவீர். ஓ அந்தணரே, பழங்காலத்தில் தோல்வியைக் கண்டிராத தாக்குபவர்களில் முதன்மையான அர்ஜுனனுக்கும், பவாவுக்கும் இடையில் நடைபெற்ற பெருமளவில் இயல்புக்கு மிக்க, இணையற்ற போரைக் குறித்துச் சொல்லும். அதைக் கேட்கும் போது மயிர்க்கூச்சம் ஏற்பட்டு விரைத்துக் கொள்ளும். மனிதர்களில் சிங்கம் போன்றவர்களின் இதயங்களும், பிருதையின் {குந்தியின்} வீர மைந்தர்களின் {பாண்டவர்களின்} இதயங்களும் கூட, இதைக்கேட்டவுடன், தங்கள் தாழ்மையை உணர்ந்து ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியால் நடுக்கமுற்றன. அர்ஜுனன் வேறு என்னவெல்லாம் செய்தான் என்று எனக்கு முழுமையாகச் சொல்லும். ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} வரலாற்றைக் கேட்கும்போது மிகச்சிறிய அளவுகூட நிந்திக்கப்படத்தக்க செயல்கள் எனக்குத் தெரியவில்லை. ஆகையால் அந்த வீரனின் வரலாற்றை முழுமையாக எனக்குச் சொல்லும்," {என்றான் *ஜனமேஜயன்}
வைசம்பாயனர் சொன்னார், "ஓ குருக்களில் புலியே {ஜனமேஜயனே}, அற்புதமானதும், நீளமானதும், நிகரற்றதுமான அந்த சிறந்த வீரன் சம்பந்தமானதை நான் உனக்கு விவரிப்பேன். ஓ பாவங்களற்றவனே, குறிப்பாக, தேவர்களுக்குத் தேவனான முக்கண்ணனை {சிவனை} அர்ஜுனன் சந்தித்தது தொடர்பாகவும், அந்த சிறந்த தேவனுடன் அவனுக்கு ஏற்பட்ட மோதலையும் பற்றி கேள்.
"யுதிஷ்டிரனின் கட்டளையின் பேரில், அளவற்ற வீரம் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்} தேவர்களின் தலைவனான சக்ரனையும் {இந்திரனையும்}, தேவர்களுக்குத் தேவனான சங்கரரையும் {சிவனையும்) பார்க்கக் (காம்யக வனத்தைவிட்டு) கிளம்பினான். வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட பலம் வாய்ந்த அர்ஜுனன், தனது நோக்கம் வெற்றியடைவதற்காக தெய்வீக வில், தங்கப்பிடி கொண்ட வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வடக்கே இமயம் நோக்கி சென்றான். ஓ மன்னா {ஜனமேஜயா}, மூவலகத்திலும் போர்வீரர்களில் முதன்மையான அந்த இந்திரனின் மகன் {அர்ஜுனன்}, அமைதியான மனமும், காரியங்களில் உறுதியும் கொண்டு தன்னை முழுதாக அக்காரியத்திற்கு அர்ப்பணித்து நேரத்தை இழக்காமல் தவ நோன்புகள் நோற்றான். முட்செடிகளும், மரங்களும், மலர்களும், பலதரப்பட்ட பழங்களும் நிறைந்த, பலவகையான் சிறகு கொண்ட உயிரினங்கள் வசித்த, பல்வேறு வகைப்பட்ட விலங்குகள் உலவும், சித்தர்களும் சாரணர்களும் ஓய்ந்திருக்கும் பயங்கரமான கானகத்துள் அவன் {அர்ஜுனன்} தன்னந்தனியாக நுழைந்தான். மனிதர்களற்ற அந்த வனத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} நுழைந்த போது, சொர்க்கத்தில் சங்கநாதங்களும், பேரிகைகளும் கேட்கப்பட்டன. அடர்த்தியான பூமழை பூமியின் மீது விழுந்தது. வானத்தில் பரவிய மேகங்கள் கனமான நிழலை உண்டாக்கின. பெரும் மலைகளின் அடிவாரத்தில் இருந்த அந்தக் கடினமான வனப்பகுதிகளைத் தாண்டிய அர்ஜுனன், விரைவில் இமயத்தின் மார்பை அடைந்தான். அங்கே சிறிது நேரம் தங்கி பிரகாசிக்க ஆரம்பித்தான். அங்கு சிறகுள்ள பாடகர்கள் {பறவைகளின்} இனிய இசையைக் கேட்டான். ஏராளமான விரிவடைந்த பசுமையான மரங்களையும் கண்டான். கடுமையான எதிர் சுழிப்புகளால் ஆங்காங்கே முறிந்த, வைடூரியம் போன்ற நீர்ச்சுழல்கள் கொண்ட நதிகளையும் கண்டான். அந்த நதிகளில் அன்னங்களும், வாத்துகளும், கொக்குகளும் இசையை எதிரொலித்துக் கொண்டு சென்றன. அந்த நதிக்கரைகளில் ஆண் கோகிலப் பறவைகளின் {குயில்களின்} பொங்கி வரும் கீதமும், மயில்கள் மற்றும் கொக்குகளின் இனிய இசையும் நிறைந்திருந்தது. அந்தப் பெரும்பலம்வாய்ந்த போர் வீரன் {அர்ஜுனன்}, சுத்தமான, புனிதமான, அருந்துவதற்கு சுவையான அந்த நதிகளையும், அழகான அதன் கரைகளையும் கண்டு மிகவும் மகிழ்ந்தான். அப்படி மகிழ்ந்த கடும் சக்தி கொண்ட உயர்ந்த ஆன்மாவான அர்ஜுனன், அந்த மகிழ்ச்சிகரமான கானகப் பகுதியில் தன்னை கடுமையான தவத்திற்கு அர்ப்பணித்தான்.
கரிய மான் தோலையும், ஒரு குச்சியையும் கொண்ட புல்லாலான கந்தலுடை அணிந்து, தரையில் உதிர்ந்து விழும் இலைகளை உண்டிருந்தான். மூன்று இரவுகளுக்குள்ளான இடைவெளியில் பழங்கள் உண்டு தனது முதல் மாதத்தைக் கடத்தினான். இரண்டாவது மாதத்தை ஆறு நாள்களுக்கு ஒரு முறை உண்டும், மூன்றாவது மாதத்தை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை உண்டும் கடத்தினான். நான்காவது மாதம் வந்தது. அப்போது பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.
பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, "பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்" என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, "பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்" என்றார் {சிவன் பெருமான்}.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "உண்மை பேசும் அந்த முனிவர்கள், மகாதேவனின் {சிவனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
***************************************************************************
*ஜனமேஜயன்
"மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ
***************************************************************************
*ஜனமேஜயன்
"மஹாபாரதம் சொல்லவா?" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ
*விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன். அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்தே இந்த மகாபாரதம். வைசம்பாயனர் உரைத்ததை கேட்ட புராணங்களில் சிறந்த ஞானம் கொண்ட “சௌதி” என்பவர் நைமிசாரண்யம் சென்று அங்கு கூடியிருந்த முனிவர்களுக்கும் தவசிகளுக்கும் உரைத்ததே நாம் இன்று படிக்கும் இந்த மகாபாரதம்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.